Friday, July 19, 2013

வாழ்க்கை என்பது வியாபாரம்

குசேலப்பட்டினம் நகரில் ஜாம்பவான் என்பவன், தனது தங்கை சுப்ரியாவுடன் வாழ்ந்து வந்தான். தங்கை என்றால் அவனுக்கு உயிர். அவள் எது கேட்டாலும், கடுமையாக உழைத்து சம்பாதித்து வாங்கிக் கொடுத்து விடுவான். ஒருநாள், அந்தப்பெண் தன் தோழிகளுடன் ஆற்றிற்கு நீராடச் சென்றாள்.
தோழிகள் ஆரவாரத்துடன் நீச்சலடித்து கொண்டிருந்தனர். சுப்ரியாவும், தோழி சுபாவும் ""அதோ...அக்கரை வரை நாம் செல்வோம்.
வெற்றி பெறுபவர் இன்னொருத்தியின் குடத்தை பரிசாக வைத்துக்கொள்ளலாம்,'' என்று பந்தயம் கட்டினர். மற்ற தோழிகள் நடுவராக இருக்க, சுப்ரியாவும், சுபாவும் மின்னல் வேகத்தில் ஆற்றைக் கடந்தனர். ஓரிடத்தில் சுழல் ஒன்று இருக்க, இருவரும் சிக்கினர். சுபாவின் நல்ல நேரம்...எப்படியோ சமாளித்து அதிலிருந்து தப்பி தள்ளி வந்து விட்டாள். சுப்ரியாவால் அதிலிருந்து மீள முடியவில்லை. சுழலுக்குள் அமிழ்ந்து போனாள். அவளது உயிர் பிரிந்து விட்டது.
தன் அன்புத்தங்கை மரணமடைந்த செய்தியறிந்து, ஜாம்பவான் அழுது புலம்பினான். தங்கை இல்லாத உலகம் அவனுக்கு சூன்யமாகவே தெரியவே, தற்கொலைக்கு முயற்சித்தான். சிலர், அவனைக் காப்பாற்றி அறிவுரை வழங்கினர்.
அந்த சமயத்தில் துறவி ஒருவர் அவ்வூருக்கு வந்தார். அவரிடம், தன் நிலையைச் சொல்லி அழுதான் ஜாம்பவான்.
""மகனே! நீ புத்தர் சொன்ன அறிவுரைகளைப் படித்ததில்லையா! உலகில் யார் தான் கடைசிவரை உயிர் வாழ முடியும். மனிதனால் எல்லாவற்றையும் அறிய முடியும்...ஒன்றே ஒன்றைத் தவிர! அதுதான் அவனது கடைசிநாள். மரணம் திடீரென்று வந்தே அவனை அழிக்கும். இதோ! புத்தர் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன். கவனமாய்க் கேள். ஆறுதலடைவாய்,'' என்றவர், புத்தரின் பொன்மொழிகளைக் கூறினார்.
""பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல், மனிதர்களும் இறந்து தான் போவார்கள். மரணத்திற்கு இளைஞன், முதியவன், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அது எல்லாருக்கும் நிச்சயமானது. காலையில் நீ உன் தங்கையைப் பார்த்தாய், இப்போது அவள் இல்லை. எல்லா மனிதர்களின் நிலையும் அப்படித்தான். இதற்கு நீயும், நானும், உன் தங்கையும் விதிவிலக்கல்ல. அழுவதால் ஒருவரது உயிர் மீட்கப்படும் என்றால், எல்லாருமே அழ ஆரம்பித்து
விடுவார்கள். ஆனால், ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இறப்பும், பிறப்பும் இயற்கையானது. பிறப்பு, இறப்பு குறித்த நூல்களை நீ ஆழ்ந்து படிக்க வேண்டும். அவற்றிலுள்ள கருத்துகளை அறிந்து விட்டால், மரணம் பற்றிய பயம் இருக்காது. எனவே, நீ சென்றவளுக்காக கவலைப்படாதே. இருக்கிற உறவினர்களுக்காக வேலை செய்.
அவர்களைக் காப்பாற்று,'' என்றார்.
ஜாம்பவானின் மனதில் தெளிவு பிறந்தது.

No comments:

Post a Comment