Thursday, July 4, 2013

வாஸ்து ரகசியங்கள்

வாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து சாஸ்திரப்படியும் துல்லியமாக அமைந்து விட்டால் எல்லா வகையான பேறுகளையும் பெற்று வாழ முடியும்.

இந்த வாஸ்து சாஸ்திரம் என்கிற மெய்ஞானத்தைப் பற்றி இன்று பல நூல்கள் வந்து விட்டாலும் மனை அடி சாஸ்திரத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கும் ஆதிகால நூல் சர்வார்த்த சிற்ப சிந்தாமணியே. சிற்ப சாஸ்திரம் என்பது மிகச் சிறிய சிலைகளை வடிக்கும் நுட்பங்களைக் கூறுவது.

சிலா சாஸ்திரம் என்பது மிகப்பெரிய ஆலயங்கள், விண்முட்டும் கோபுரங்கள் ஸ்தூபிகள் அமைப்பதைப் பற்றி கூறுவதாகும். வீட்டைக் கட்டுபவர் மேஸ்திரி என்றும் என்ஜினீயர் என்றும் ஆலயம் கட்டுபவர்கள் ஸ்தபதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மனையடி சாஸ்திரத்தின்படி வீடு கட்டுபவர்கள், வீடு கட்டப்படுகிற நிலப்பரப்பின் நீளம் மற்றும் அகல அளவுகளை அடிகள் கணக்கீட்டால் அளந்து பார்க்கப்பட்டு வீடு அமைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

உத்தமமான மனையின் நீள அகல அளவு 16 அடிகளுக்கு மேலும், மத்தியமான மனையின் நீள அகல அளவு ஒரு குறிப்பிட்ட அளவும், தீயதான (அதமமான) மனையின் நீள அகல அளவுகள் தற்செயலாக அமைந்து விட்டால் அதைச் சரி செய்து விட வேண்டும் என்றும் மனை அடி சாஸ்திரம் விதிகள் கூறுகிறது.

ஒரு வீட்டைக் கட்டுவதில் குழப்பமில்லாத மனநிலை இருக்க வேண்டும். தரம் கொண்ட தகுதியான நிலப்பரப்பிலும், விதியோடு கூடிய நீள அகல உயர அடிகள் அளவிலும் அமைத்து நல்ல நாள் நேரம் பார்த்து வீடு கட்ட ஆரம்பிப்பதும் சுபநாளில் வேதமுறைப்படி கிரகபிரவேஷம் செய்வதும் நம் வாழ்வில் நிம்மதியான தருணங்களை உருவாக்கும்.

உங்கள் வீடு லட்சுமி கரமாயத் திகழ்கிறது என்று மற்றவர்களால் பாராட்டப்படவும் வாழ்த்துப் பெறவும் பொறுமையாகச் செய்யப்பட்டு யோகமான வீட்டைக் கட்டுங்கள்.

No comments:

Post a Comment