Friday, July 19, 2013

ஆன்மிக கதை

கொளுத்துற வெயில், நா வறட்டும் தாகம். எங்காவது போய் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற கட்டாயம்...'' என்று யோசிக்கிற வேளையில், ஒரு நண்பனின் வீடு எதிர்ப்படுகிறது. நிம்மதி...அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என நுழைந்தாயிற்று.
நண்பன் ஆபீசுக்கு போயிருந்தான். அம்மா தான் இருந்தார்.
""வாடா செல்வம்! என்ன இந்த நேரத்துலே! உன் பிரண்ட் ஆபீஸுக்கு போயிருப்பான்னு உனக்கு தெரிஞ்சிருக்குமே!''
""இல்லம்மா! நானும் ஆபீஸ் வேலையாத்தான் வெளியே வந்தேன். வெயில் தூக்கிடுச்சு. தாகமா இருக்கு! தண்ணீர் கொடுங்கம்மா!''
""அஞ்சே அஞ்சு நிமிஷம் பொறு,'' என்றார் அம்மா.
""அம்மா! நா வறளுது. தண்ணீர் கொடுங்க!'' என்றவனிடம், மீண்டும் அம்மா,""செல்வம்! வெளியே இருந்து வீட்டுக்குள் வர்றவங்க, உடனே தண்ணீர் குடிக்கக்கூடாதுன்னு உனக்கு தெரியுமில்லையா. அதனால் தான் கொஞ்சம் பொறுக்கச்சொல்றேன்,'' என்றவர்
அதற்கான காரணம் தெரியுமா?'' என்றார்.
""அம்மா! எங்க சயன்ஸ் டீச்சர் சின்ன வயசிலே சொல்லிக்கொடுத்தது ஞாபகமிருக்கு! வெளியிலே இருக்கிற வெப்பநிலையும், வீட்டுக்குள் இருக்கிற வெப்பநிலையும் மாறுபடும். அதே போல காற்றழுத்தமும் மாறுபடும். நம்ம உடம்பு அதற்கேற்றாற் போல் தயார் செய்துக்க கொஞ்ச நேரம் எடுக்கும். அதற்குள் தண்ணீர் குடித்தால் தலைவலி, காய்ச்சல், தோல் பிரச்னைகள் கூட வருமுன்னு சொன்னாரு!''
""பின் ஏன் அவசரப்படுறே! நீ சொன்னது அறிவியல் காரணம். நான் எங்க காலத்தைச் சொல்றேன்! பெரியபுராணம் எழுதினாரே சேக்கிழார். அவர் திங்களூரில்(தஞ்சாவூர் அருகில்) அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் பற்றி சொல்லியிருக்கார்!
அந்த தண்ணீர் பந்தல் இப்போது வெட்டவெளியில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல் போல் இல்லை. வெயிலில் வருபவர்கள் ஓலைக்கூரையின் கீழ் நின்று சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு, தண்ணீர் குடிக்கும் வகையில் இருந்தது. தாமரை மலர்கள் நிறைந்த குளம்போல குளிர்ச்சியாய் இருந்ததாம் அந்தப் பந்தல்,'' என்ற அம்மாவிடம்,""அம்மா... இப்ப நம்ம பேச்சிலேயே அஞ்சு நிமிஷம் கழிஞ்சாச்சு! இனியாச்சும் தண்ணீர் கொடுப்பீங்க இல்லியா!'' என்று சிரித்த செல்வத்திடம் அம்மா மண்பானை நீரைக் கொடுத்தார்.

No comments:

Post a Comment