Friday, July 19, 2013

மனிதனாய் பிறந்தவன் தனது முயற்சியை எப்போதுமே கைவிடக்கூடாது.

பரிமள நாட்டு மன்னன் பவளநிதிக்கு, பஞ்சமி என்ற மனைவி, குணாளன், மணாளன் என்ற மகன்கள் இருந்தனர். பளவநிதியை அடுத்து, குணாளன் அரசனானான். அண்ணன் அரசன் ஆனதில் தம்பி மணாளனுக்கு மகிழ்ச்சியே. ஆனால், மணாளனைப் பிடிக்காத சிலர், அண்ணன் குணாளனிடம், ""அரசே! உங்கள் தம்பி, உங்களைக் கொன்று விட்டு அரசபதவிக்கு வரத்துடிக்கிறார்,'' என்று வத்தி வைத்தனர். இதை நம்பிய குணாளன் தம்பியைக் கொல்லத் துடித்தான். இதையறிந்த தாய் பஞ்சமி, குணாளனுக்கு புத்திமதி சொன்னாள். அவன் கேட்பதாய் இல்லை என்பதால், இளைய மகனுடன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டாள்.
அருகிலுள்ள மகத நாட்டை அடைந்த அவள், அங்கு இரக்கமனம் மிக்க ஒரு வயோதிக பிராமணரைச் சந்தித்தாள். தான், பரிமள நாட்டின் ராணியென்றும், தன் நிலை இப்படி ஆகிவிட்டது என்று பற்றியும் சொன்னாள். அவர், அவளுக்கு தன் வீட்டில் தங்கிக்கொள்ள இடம் கொடுத்தார்.
காலம் சென்றது. மணாளன் வனப்புமிக்க இளைஞன் ஆனான். அவனிடம், பக்கத்து வீட்டு பணக்காரப் பெண், தன் காதலை வெளிப்படுத்தினாள்.
""பெண்ணே! நீயோ பணம் படைத்தவள். நானோ பரமஏழை. உன் வீட்டார் நம் திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள். நான் வெளிநாடு சென்று பொருள் சேர்த்து வருகிறேன். அதன்பின் திருமணம் செய்யலாம். அதற்காக, இன்னும் சிலகாலம் பொறுத்திருப்பாயா?'' என்றான்.
அவளும் சம்மதித்தாள்.
வெளிநாட்டுக்கு பாய்மரக் கப்பலில் புறப்பட்டான் மணாளன். வழியில், கடும் புயல் வீச கப்பல் கவிழ்ந்தது. அவனுடன் சென்றவர்களைசுறாமீன்கள் சூழ்ந்து கடித்தன. தைரியம் மிக்க மணாளன், அவற்றிடமிருந்து தப்பி, ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு நீண்ட தூரம் மிதந்தான். சில நாட்கள் ஆகியும், கரை ஏதும் தெரிகிற வழியைக் காணவில்லை.
அப்போது, ஒரு தேவதை வானில் பறந்து கொண்டிருந்தாள். அவள் கடல்களில் மூழ்கும் முயற்சியாளர்களை பாதுகாக்கும் பணியில் கடவுளால் நியமிக்கப்பட்டவள். மணாளன் முன் தோன்றிய அவள், "" அடேய்! இதென்ன வீண் முயற்சி! நடுக்கடலில் விழுந்த நீ எங்கோ இருக்கும் கரையை நோக்கி இந்தக் கட்டையின் உதவியோடு போய் விடலாம் என நினைக்கிறாயே! இதுநடக்கிற காரியமா? அது மட்டுமல்ல! பசியால் களைத்திருக்கும் நீ, இன்னும் ஓரிருநாளில் இறந்து விடுவாயே!'' என்றாள்.
மணாளன் சிரித்தான்.
""தேவதையே! மனிதனாய் பிறந்தவன் தனது முயற்சியை எப்போதுமே கைவிடக்கூடாது. என்னோடு வந்தவர்கள் பயத்தாலும், முயற்சியின்மையாலும் இறந்தார்கள். அதுபோல், நான் இருக்கமாட்டேன். என்னால் ஆன முயற்சியைச் செய்வேன். முடிவைப் பற்றி எனக்கு கவலையில்லை,'' என்றான்.
அவனது வார்த்தைகள் அவளைக் கவரவே, ""இளைஞனே! உன் மனஉறுதியைச் சோதிக்கவே இப்படி கேட்டேன். உன்னைக் கரையில் சேர்க்கிறேன்,'' என்று கரையில் சேர்த்தாள்.
""அநியாயமாக, உன்னை விரட்டிய சகோதரனை வெற்றி கொண்டு, இழந்த நாட்டை மீண்டும் பெறுவாய்,'' என்று ஆசிர்வதித்தாள். மணாளனும் அவ்வாறே செய்து, தன்னை விரும்பிய பெண்ணையும் திருமணம் முடித்தான்.

No comments:

Post a Comment