Friday, July 19, 2013

வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது

வாழ்க்கையே சலித்துப் போனது அந்த இளைஞனுக்கு!
""எப்போ பார்த்தாலும் உளியை எடுத்துக்கிட்டு "டங்! டங்!' என்று பாறையைக் குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வைச்சு பெரிசா என்ன சாதிச்சுட்டோம்'' என்று வருந்தினான்.
உளிபட்ட பாறையிலிருந்து ஒரு பெண்தேவதை வெளிப்பட்டது.
அதை இளைஞன் வணங்கினான். அவனுக்கு நினைத்த வடிவெடுக்கும் மந்திரத்தை அந்த தேவதை உபதேசித்தது. ""மகனே! இந்த அபூர்வ சக்தி ஒருவாரம் மட்டும் உனக்கிருக்கும். அதற்குள், நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். ஆனால், ஏழாவது நாளில் நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவே ஆயுள் முழுவதும் நீடிக்கும். அதனால் சிந்தித்து செயல்படு,'' என்று சொல்லி மறைந்தது.
சந்தோஷக் களிப்பில் தலைகால் புரியாமல் கூத்தாடினான் இளைஞன்.
சுட்டெரிக்கும் வெயிலில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
""இப்படி வெந்து நொந்து போறதுக்கு பதிலா நானே சூரியனா இருக்கப்போறேன்,'' என்று நினைத்து மந்திரம் சொன்னான்.
என்ன ஆச்சர்யம்! கணப்பொழுதில் சூரியனாக வானமண்டலத்தில் பிரகாசிக்கத் தொடங்கினான். மகிழ்ச்சியும், தலைக்கனமும் அதிகரித்தது.
"இனி ஒருவனும் தன்னை அசைக்க முடியாது' என்று சந்தோஷப்பட்டான்.
ஒரிரு நாளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. வானத்தில் கருமேகம் கூடியது. சூரியனின் பிரகாசத்தை மேகம் மறைத்தது.
"சூரியனை மறைக்கிறப்போ மேகம் தானே உசத்தி. அப்போ இப்பவே மேகமா மாறிடப் போறேன்'' என்று தேவøதையை தியானித்து மந்திரத்தை ஜெபித்தான்.
மேகமாக மாறிய இளைஞன், உல்லாசமாக வானத்தில் மிதந்து திரிந்தான். மேகத்திலிருந்து மழையைக் கொட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.
நினைத்தபடியே மழைநீராக மாறி வெள்ளமாய் பெருக்கெடுத்தான். மரம், செடி, கொடி என ஒன்றையும் விடாமல் இழுத்துக் கொண்டு சென்றான். . ஆனால், ஒரு பெரியபாறை மட்டும் அவன் எவ்வளவு முயற்சித்தும் சிறிதும் அசையவே இல்லை.
""இந்த பாறைக்கு தான் எவ்வளவு பலம். பெருமழையில் கூட அசையாமல் நிற்கிறதே'' என்ற எண்ணினான். மந்திரம் ஜெபித்து தானும் பாறையாக மாறினான்.
அப்போது அரண்மனைச்சிற்பி சேவகர்களுடன் அந்தப் பகுதிக்கு வந்தார்.
புதிய பாறையைப் பார்த்த சிற்பி, உளியால் தட்டிப்பார்த்தார். ""இந்தக்கல் நல்லா வேலைக்காகும்,'' என்று தெரிவித்தார். திறமை மிக்க அந்த சிற்பியைக் கண்டதும், ""ஜடம் போல பாறையா இருக்கிறதை விட சிற்பியா இருந்தா அழகான சிலை வடித்து மகிழலாம்'' என்று
முடிவெடுத்தவனாய் மந்திரம் ஜெபித்தான்.
பழைய படி தானும் சிற்பியாக மாறினான்.
தேவதை அவன் முன் தோன்றி,""மகனே! இன்றோடு ஒருவாரம் முடிந்து விட்டது. நீ இனி சிற்பியாகவே இருந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்து,''என்று வாழ்த்தியது.
இருக்கிற வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்த சிற்பி, தன் வேலையை மகிழ்வுடன் கவனிக்க ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment