Thursday, October 31, 2013

"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

•குழந்தைக்குப் பெயர் வைப்பவர் யார்?


  

குழந்தைக்குப் பெயர் வைப்பவர் யார்?
குழந்தைக்குப் பெயர் வைப்பவர் யார்?
 
(சக்தி விகடன்: 3.9.2005)
வசிஷ்டரின் பெருமை
- சுகி.சிவம்
ந்தக் கூட்டணியும் ரொம்ப நாள் நீடிப்பதில்லை. உண்மைதான்! எலும்பு, நரம்பு, சதை... இப்படி உதிரிக் கட்சிகள் 'உயிர்’ என்கிற தனிக் கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டணிதான் நாம். நாம் எவ்வளவு நாள் நீடிக்க முடியும்?
உடம்பையும் உயிரையும் பிரித்து, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க, 'மரணம்’ என்கிற எதிர்க்கட்சி தவியாகத் தவிக்கிறது. எப்படியும் ஜெயிக்கிறது! ஆனால், மரணம் ஜெயிக்கிற வரை, உடம்பு ப்ளஸ் உயிர் கூட்டணி ஆட்சி நடக்கத்தான் செய்கிறது! இந்தக் கூட்டணி ஆட்சிக்கு - அதாவது, மனிதனுக்கு ஏதாவது ஒரு பேர் வைக்க வேண்டியுள்ளது!
ராமசாமி, கிருஷ்ணசாமி, பிரமிளா, ஜானகி... இப்படி ஏதாவது பெயர் வைத்தாக வேண்டி உள்ளது. பெயர் வைக்காமல், காருக்கு நம்பர் பிளேட் போடுகிற மாதிரி மனித ஜென்மங்களுக்கு நம்பர் போட முடியாது!
இந்துக்கள் கெட்டிக்காரர்கள். பரப்பிரம்மமாகிய கடவுள்தான், இப்படி மனித வடிவத்தில் பிறந்து, வாழ்க்கை நாடகம் நடத்துகிறார் என்று முடிவு கட்டி, 'பரம்பொருளுக்குப் பெயர் வைக்கிறோம்’ என்ற எண்ணத்தில், இறைவன் நாமாக்களையே பெயர்களாக வைத்தனர்.
விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் லலிதா சகஸ்ரநாமத்திலும் உள்ள பெயர்களைச் சூட்டும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. பகவானின் நாமத்தை உச்சரிக்க, இதுவும் ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தால் செய்தவர்கள் சிலர். 'மனிதன் பரப்பிரம்மத்தின் துளி’ என்று உணர்ந்து செய்தவர்கள் சிலர்.
இப்போதெல்லாம் கதை மாறிவிட்டது! 'பப்லு, ஷம்மி’ என்று நாகரிகமாக நாய்க்குட்டிகள் மாதிரி பெயர் வைத்தால்தான் பலருக்குப் பிடிக்கிறது.
முன்பெல்லாம் ஒருவர் பெயர் சொன்னால், உடனே நட்சத்திரம் சொல்லிவிடலாம். சு, சே, சோ - என்கிற எழுத்துக்களில் பெயர் ஆரம்பமானால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார். அ, இ, உ, எ - என்றால் கிருத்திகை. தி, து, தெ, தொ - என்றால் விசாகம் என்று ஒரு பட்டியல் உண்டு.
முன்பு பல குழந்தைகள் பெற்றதால், எல்லா தாத்தா, பாட்டி பெயர்களையும் வைக்க வசதியாக இருந்தது. இப்போது ஒன்றிரண்டு என்பதால், எந்த தாத்தா, பாட்டி பேர் என்பது முதல் பிரச்னை! தாத்தா, பாட்டி பேர் வைத்தால், ஏன்  வைத்தாய் என்று குழந்தைகள் வளர்ந்ததும் படுபிரச்னை.

ஆண் குழந்தைக்கு 'சிவசாமி’ என்று தன் அப்பா பேர் வைக்க, தகப்பனார் ஆசைப்பட்டார். 'கிருஷ்ணசாமி’ என்ற தன் அப்பா பேர் சூட்ட, மனைவி ஆசைப்பட்டார். ஆசை, சண்டை வரை போனது. எதிர்வீட்டுக்காரர் உள்ளே வந்தார். பிரச்னைக்குத் தீர்வு சொன்னார். 'சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தால் சிவசாமி, கிருஷ்ணசாமி இரண்டு சாமியும் வந்துவிடுவார்கள்!’ என்றார். ஒரே சந்தோஷம்!
ஒரு வாரம் கழித்து கணவன் - மனைவி பேசிக்கொண்டிருந்தபோது, 'சிவராமகிருஷ்ணன்’ என்ற பேரைப்பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.
''சிவசாமி எங்க அப்பா. கிருஷ்ணசாமி உங்க அப்பா. நடுவுல ராமசாமி வந்துட்டாரே? அவரு...'' என்று கணவர் இழுத்தார்.
''அதுவா... ராமசாமி, எங்க அப்பா!'' என்று எதிர் வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.
ஒரு குழந்தைக்கு யார் பேர் வைக்கலாம்? அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அப்பா-அம்மாவைப் பெற்ற அவர்கள் அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அவர்கள் ஸ்தானத்தில் இருக்கிற மாமா, பெரியப்பா, சித்தப்பா பெயர் சூட்டலாம். கண்டவனும் பெயர் வைக்கலாமோ?
பெற்றவர்களைத் தவிர வேறு யார் பேர் வைக்கலாம் என்றால், அவர்களின் குரு, குலகுரு, ஆச்சார்யர்களுக்கு இந்த உரிமை உண்டு.
உயிர் அல்லது ஆன்மாவை நமக்குப் புரிய வைப்பவர் குரு, ஆச்சார்யர். 'உயிர் இறைவனே’ என்று உணர்த்தி, முக்திக்கு வழிகாட்டும் குரு, இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கத் தகுதி உடையவர்.
உடம்பு ப்ளஸ் உயிர் சேர்ந்த கூட்டணிக்கு, உடம்புக்கு உரிமை உடைய பெற்றோர் அல்லது உயிருக்கு உடைமை உடைய குரு... இவர்கள்தான் பெயர் வைக்கலாமே ஒழிய, தெருவில் போகிற, வருகிறவர் எல்லாம் பெயர் வைப்பது நல்ல கலாசாரமாகத் தோன்றவில்லை.
ராமாயணத்தில் ராமனுக்குப் பேர் வைத்தவர் யார் தெரியுமோ? வசிஷ்டர். பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று தசரதன் பிள்ளைகளுக்குக் குலகுரு வசிஷ்டர்தான் பேர் வைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் தலைவனுக்குக்கூட குருதான் பேர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?
இராமன் எனப் பெயர் ஈந்தான்...
பரதன் என்று பன்னினான்...
இலக்குவன் என்று இசைத்தனன்...
சத்ருகனன் என்று சாற்றினான்...
என்கிறது கம்ப ராமாயணம்.
நான்கு வேதம் மாதிரி பிறந்த நான்கு அரச குடும்பத்துத் தலைவர்களுக்கும் நான்மறை பயின்ற குலகுரு வசிஷ்டர் பேர் வைத்தார். அதனால்தான், இன்றுவரை அந்தப் பெயர்கள் நிலைத்து நின்றுள்ளன.
ஞானம், தவம், சீலம், நிறைநலம் மிக்க குருமார்கள், பிறந்த சிசுக்களைத் தீண்டி, செவிவழி உரக்கச் சொல்லி, உடம்பும் உயிரும் சேர்ந்த கூட்டணிக்குப் பெயர் வைக்கும் பாரத மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

உலகிலுள்ள நாடுகளிலெல்லாம்ஒரு நாடு சிறந்து விளங்குவது எதனால் ?

உலகிலுள்ள நாடுகளிலெல்லாம்ஒரு நாடு சிறந்து விளங்குவது எதனால் ? என்று கேட்டால், ஒரு சிலர் சொல்வார்கள் நீர் வளம், நில வளம், பொருள் வளம் ஆகிய வளங்கள் எந்த நாட்டில் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடே சிறந்த நாடு என்பார்கள். வேறு சிலர் சொல்வார்கள் பொருள் வளமும் மற்ற வளமும் இருந்து பிரயோஜனமில்லை, நல்ல ஆட்சி செய்கிற அரசு அமைந்தால் மட்டுமே ஒரு தேசம் சிறந்த நாடாகத் திகழும் என்பார்கள். ஆனால், இவையெல்லாம் ஒரு நாட்டுக்கு சிறப்பையும், பாதுகாப்பையும் தந்து விடுமா ? வானம் பொய்த்து விட்டால், நீர்வளம் குன்றி, நிலம் வறண்டு, பொருள் வளம் சிதைந்து போகும். நம்மை விட பலம் பொருந்தியவன் வந்தால் நம் படைகளைக் கூண்டோடு அழித்து நம் தேசத்தைபடிமைப்படுத்தி விடுவான்.
ஒரு தேசம் சிறப்புடன் திகழ்வதற்கு அரசு மட்டுமே காரணமாகாது. அஞ்சி, அஞ்சி வாழ்வது வாழ்வாகாது. அடக்கம், பணிவு, பெறுமை, அன்பு, அறிவு, ஊக்கம், உழைப்பு, ஒழுக்கம், நேர்மை ஆகிய அறப்பண்புகளைப் பெற்று, அவற்றைத் தாமாகவே வாழ்வில் கடைபிடித்து வாழ்கின்ற மக்கள் பரவலாக வாழ்கிற தேசமே சிறந்த தேசமாக விளங்கும். மற்றவர் அடக்க அடங்குவது சான்றாண்மை ஆகாது. தம்மைத் தாமே அடக்கிக் கொண்டு, கட்டுப்படுத்திக் கொண்டு நெறி தவறாமல் வாழ்வதே சான்றான்மையாகும். அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி, உறுவது உலகு உவப்பச் செய்வதே சான்றோர்களின் சால்பு நெறி. அப்படிப்பட்ட நெறியோடு வாழும் சான்றோர்களைப் பெற்ற தேசமே சிறந்த தேசமாகும். மற்ற எந்த தேசத்திலும் இல்லாத ஒரு நம்பிக்கை நம் பாரத தேசத்தில் உண்டு. ஒரு மனிதனின் வாழ்வு என்பது இந்த உலக வாழவோடு முடிந்து விடுவதில்லை. அது மேலும் இரு வாழ்வுகளை உள்ளடக்கியதாகும் என்பதே அந்த நம்பிக்கை. உலக வாழ்வு, மேலுலக வாழ்வு, வீடு பேறு வாழ்வு என்று மூன்று நிலைகளாகச் சொல்லப்பட்டுள்ளது. சான்றாண்மை நெறிகளையும், ஆன்மிக நெறிகளையும் கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே மற்ற வாழ்க்கை நிலைகளை அடைய முடியும். அல்லாதவர் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பல பிறவிகள் எடுத்து துன்பமடைவார்கள்என்ற பயம் மக்களுக்கு உண்டு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
என்கிறார் வள்ளுவர். இந்த உலக வாழ்வு அல்லாது மற்ற இரண்டு வாழ்வுகளில் மேலுலக வாழ்வை ஒருவன் பெற விரும்பானால், அவன் சிறந்த ஒழுக்கத்தைக் கடை பிடித்து வாழ வேண்டும் என்கிறார்.
வானுக வாழ்வு எனும் வானவர் உலக வாழ்வையும் தாண்டியது வீடு பேறு உலகு எனும் முக்தி வாழ்வு. நான் எனும் செருக்கறுத்தவர்வானுலக வாழ்விற்கும் மேலான வீடுபேறு வாழ்வாகிய மோட்ச உலகை அடைவார்கள்.
யான்என தென்னும் செருக்கறுப்பான்வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
அப்படியானால் மோட்ச உலக வாழ்வு என்றால் என்ன ? சிந்தையாலும், மொழியாலும், விவரிக்க முடியாத ஆனந்த நிலை அது. சுய அனுபவத்தால் மட்டுமே ஒருவன் பெறக் கூடிய அரிய நிலை. அந்த நிலையை அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இத்தகைய வாழ்வைப் பெற முனைந்தவர்களையேமுனிவர்கள், துறவிகள், யோகிகள், ஞானிகள் என்றெல்லாம் அவர்கள் முயற்சியின் படித்தரங்களுக்கு ஏற்ப அழைக்கிறோம்.
ஞானிகள் எப்போதும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். பூமிக்குள் புதைந்து கொண்டு பெரிய மரத்தையே நிலை நிறுத்தும் ஆணிவேர்களாக விளங்குபவர்களே ஞானிகள். அது போலவே ஞானிகளும் தங்களை மறைத்துக் கொண்டு சொல்லாமல் சொல்லி மனித சமுதாயத்தை வழிநடத்துவார்கள். அத்தகைய ஞானிகள் எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் தோன்றுவதில்லை. சில தேசங்களுக்கே அந்த நற்பேறு வாய்த்திருக்கிறது. அத்தகைய நாட்டினையே புண்ணிய பூமி என்றும், ஞான பூமி என்றும் சொல்கிறோம்.
அத்தகைய ஞானிகளை அதிகம் பெற்றது நம் பாரதமே அன்றி வேறு தேசமில்லை. எனவேதான் சுவாமி விவேகானந்தர் ''நமது பாரத தேசம், சமய பூமி. ஆன்மிகத்தில் பெரியவர்கள் தோன்றிய பூமி. தத்துவ பூமி. துறவுக்கு பெரிதும் மதிப்பளிக்கும் பூமி. மிகப் புராதான காலம் முதல் இன்றளவும் மனித வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை உபதேசித்து வரும் ஒரே பூமி நமது பாரத பூமி என்கிறார். அப்படிப்பட்ட ஞான பூமியில் பிறந்த நாம், நம் தேசம் மட்டுமல்ல இந்த உலகமே நன்மை அடையும் பொருட்டு நம் சான்றோர்களும், ஆன்றோர்களும் காட்டிய இலட்சியப்பாதையில் நம் வாழ்வை நெறி முறையோடு அமைத்துக் கொண்டு வாழ்ந்து மேன்மை அடைவோமாக

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்

இருகடன் பெற்ற பெரும் கடன்காரன்" !
மறைந்த கவியரசு கண்ணதாசன் கடனில் தத்தளித்தது அனைவரும் அறிந்ததே. தினமும் காலையில் அவர் வீட்டு வாசலில் நான்கைந்து கடன்காரர்கள் காத்துக்கிடப்பது வழக்கம்.
இப்படித்தான் ஒரு நாள் கண்ணதாசனை அவரது உதவியாளர் காலையில் எழுப்பி " வாசலில் ஒரு கடன்காரர் காத்திருக்கிறார்" என்றார். அந்த கஷ்டத்திலும் அவர் இதை கவிதையாகப் பாடினார்.
" உயிர் கடன் கொடுத்தவன் உச்சியில் உள்ளான்
பொருட்கடன் கொடுத்தவன் வாசலில் உள்ளான்...
நான் - இருகடன் பெற்ற பெரும் கடன் காரன்" !
உண்மைதானே. இந்த உயிரே நமக்கு கடனாக
வந்ததுதானே! உயிரை கொடுத்த கடவுள் அதை ஒரு நாள் திரும்பி எடுக்கத்தானே போகிறார்!.

நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும்

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான்.
நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான்.
""டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய். உன் பக்திக்குப் பரிசாக, கடவுள் உன் காலை உடைத்து விட்டார். நான், கருவறை பக்கமே தலைகாட்டவில்லை. எனக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. இப்போதாவது புரிந்து கொண்டாயா! கடவுளை வணங்கிய உனக்கு தொல்லை தான் மிஞ்சியதென்று!'' என்று கேலி செய்தான்.
ஆஸ்திகனுக்கு மிகுந்த வருத்தம்.அன்றிரவு, கனவில்தோன்றிய கடவுள், ""பக்தா! கவலைப்படாதே! நீ கோயிலுக்கு வராமல், வேறு பணியாக வெளியே போயிருந்தால் விபத்தில் இறந்திருப்பாய். உன் நண்பன், கோயிலுக்கு வராமல், வெளியே இருந்திருந்தால் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அவரவர் பூர்வஜென்ம பலாபலன்களையே அனுபவிக்கிறார்கள். புரிகிறதா!'' என்றார்.
நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும். சரிதானே!

இயற்கையை மாற்ற முடியாது!

ஒரு சமயம் மூன்று ரிஷிகள் வான் வழியே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து ஒரு கருடன் பறந்து சென்றது. அதன் வாயில் ஒரு பாம்பு சிக்கியிருந்தது.
""அடடா...இந்த கருடனுக்கு கொஞ்சமாவது இரக்கமிருக்கிறதா! பாம்பை இந்தப் பாடு படுத்துகிறதே!'' என்றார் ஒரு ரிஷி. அவ்வளவு தான்! பறந்து கொண்டிருந்தவர் கீழே விழுந்து விட்டார்.
இன்னொருவர், ""இந்த பாம்பு இதுவரை எத்தனை பேரைத் தீண்டி உயிரைப் பறித்திருக்கும். இதற்கு இது தேவை தான்!'' என்றார். அவரும் கீழே விழுந்தார்.
மூன்றாவது ரிஷியோ, ""இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். கருடன் பாம்பைப் பிடிப்பதும், பாம்பு மனிதனைத் தீண்டுவதும் அவற்றுக்கென கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தர்மங்கள். அதை அவை தவறாமல் கடைபிடித்தன. அதை, தர்மத்தையே கடைபிடிக்காத மனிதர்கள் கேலி செய்தார்கள். தண்டனை அடைந்தார்கள்,'' என்று சிந்தித்து கடவுளை வணங்கினார்.
சற்றுநேரத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்தார். இயற்கையை விமர்சிக்கவோ, அதன் போக்கை மாற்றவோ முயற்சித்தால், நமக்கும் தண்டனை தான் கிடைக்கும்.

ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது

கண்ணன் அர்ஜுனனிடம் "அப்படியா!' என்றான்.
ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்?
குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.
பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.
தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை.
""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது.
அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம்.
சொன்னதோடு நின்றானா!
""அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,'' என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ""மாருதி! வா போகலாம்,'' என்றான்.
ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.
இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான்.
""என்னப்பா இது! இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!'' என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான்.
அவனிடம் கண்ணன்,""அர்ஜுனா! ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா...யோசி,'' என்றார்.
அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்

இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே!

ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின் பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம்.
இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான்.
பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, ""இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,'' என்று உத்தரவிட்டான்.
புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,""சரி...போய் வருகிறீர்களா?'' என்றார்.
""அமைச்சரே! அரசன் தரச்சொன்ன பணம் எங்கே? அதைக் கொடுங்கள், புறப்படுகிறேன்,'' என்றார்.
""அதெல்லாம் தர முடியாது, கிளம்பலாம்,'' என்றார்.
அதிர்ந்து போன புலவர், அரசனிடமே திரும்பச்சென்று, அவரது உத்தரவை அமைச்சர் நிறைவேற்ற மறுப்பது பற்றி புகார் செய்தார்.
""புலவரே! நான் பரிசு தருவதாக அறிவித்ததும், உம் மனநிலை எப்படி இருந்தது?'' என்று கேட்டான் அரசன்.
""மிக மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றார் புலவர்.
""நீர் பாடிய போது நான் மகிழ்ந்தேன். பரிசு அறிவித்த போது, நீர் மகிழ்ந்தீர். ஆக, மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சரியாய் போயிற்று. கிளம்புகிறீரா?'' என்றானே பார்க்கலாம்.
இந்த விசித்திர விளக்கம் கேட்ட புலவர் வெளியேறி விட்டார். இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே!

தானத்திலும் கருமித்தனம் கூடாது.

ஒரு பணக்காரர் துறவியிடம் போனார்.
அவரிடம், ""மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,'' என்றார்.
பணக்காரரோ பெரிய கருமி.
""பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?'' என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து,
""நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,'' என்றார்.
அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான்.
அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர்.
""வீட்டுக்கு போவதற்குள் இந்த பழங்கள் அழுகி விடுமே! இதைப் போய் தானம் செய்கிறாராக்கும்,'' என்று எண்ணிய வேலைக்காரி, அங்குள்ள பண்ணையில் இருந்த பால் கறப்பவனிடம் கொடுத்து, ""இவற்றை மாட்டுக்கு கொடுங்கள்,'' என்றாள்.
""அழுகும் நிலையிலுள்ள பழத்தை மாட்டுக்கு கொடுத்தால் ஆகாது,'' என்ற அவன் அவற்றை விட்டெறிந்தான்.
தன் கருமித்தனத்தால் பணக்காரரும் செல்வத்தை இழந்தார்.
மற்றவர்கள் மனம் குளிரும் வகையில் தானம் செய்தால் தான் புண்ணியம். தானத்திலும் கருமித்தனம் கூடாது. புரிகிறதா!

நான்... எனது

நான்...' என்பது ஆணவம். எனது என்பது அகங்காரம். நமக்கென்று இந்த பூமியில் எதுவுமே இல்லை. பிறக்கும் போது, உடலில் ஆடை கூட இல்லை. போகும்போது, சிதை சுட்டவுடன் முதலில் பொசுங்கிப்போவதும் ஆடை தான்!
எதையும் கொண்டு வரவுமில்லை. கொண்டு போகப் போவதுமில்லை. ஆனாலும், இந்த பூமியில் ஏதோ ஒன்றைத் தேடி நாம் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையின் சூட்சுமம் நமக்கு புரியவில்லை என்பதற்காக, அந்த ஆண்டவன் போடுவதை தப்புக்கணக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறோம்.
இப்படித்தான் இருந்தார் சுகதேவர் என்ற முனிவர். முனிவர் என்பவருக்கு எந்த வித கெட்ட குணமும் இருக்கக்கூடாது. ஆனால், இவருக்கு "பொறாமை' என்கிற கெட்ட குணம் இருந்தது. யார் மீது தெரியுமா? சீதையின் தந்தை ஜனகர் மீது.
""இந்த ஜனகரை எல்லாரும் "ராஜரிஷி' என்கிறார்களே! ராஜாவாக இருப்பவர் எப்படி ரிஷியாக முடியும்! அவரை சோதித்துப் பார்த்து விட வேண்டியது தான்,'' என்று மிதிலைக்கு கிளம்பி விட்டார்.
ஜனகர் அவரை மிகுந்த பணிவுடன் வரவேற்றார். ""சுகதேவரே! தங்கள் வருகையால் தேசம் பெருமை பெற்றது. தாங்கள், அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும். வாருங்கள் உணவருந்தலாம்,' 'என உ<பசரித்தார்.
அவர்கள் உணவருந்தி முடிக்கவும், ஒரு அமைச்சர் வந்தார். ஜனகரின் காதில் ஏதோ சொன்னார்.
""முனிவரே! தாங்கள் இளைப்பாறிக் கொண்டிருங்கள்! ஒரு பணியின் காரணமாக, நான் வெளியே செல்ல வேண்டியுள்ளது. வந்தவுடன், நான் தங்களுடன் உரையாடுகிறேன். தங்கள் அனுமதி வேண்டும்,'' என்றார். முனிவரும் அனுமதியளித்தார்.
சிறிது நேரம் கழித்து, ஜனகர் திரும்பினார். இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசியபடியே நடந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில், அவர்கள் நீண்டதூரம் சென்று விட்டனர். அப்போது, குதிரையில் ஒரு வீரன் வேகமாக வந்தான்.
""மகாராஜா...மகாராஜா...தாங்கள் அவசரமாக அரண்மனைக்கு வர வேண்டும். அரண்மனையில் தீப்பிடித்து, தங்கள் உடமைகள் எரிந்து விட்டன,'' என்று பதட்டமாகச் சொன்னான்.
""எனது உடமைகளா! அப்படி ஏதும் அங்கு இல்லையே!'' என்று அமைதியாகச் சொன்னார் ஜனகர்.
சுகதேவரோ, ""ஐயையோ! தீப்பிடித்து விட்டதா! எனது கமண்டலத்தையும், ஆடைகளையும் அங்கே வைத்திருந்தேனே! அவை எரிந்திருக்குமே!'' என்று பதறினார்.
சற்றுநேரம் கழித்து நிதானித்தார்.
""ஆம்...நான் என்ன பதில் சொன்னேன்! சாதாரண கமண்டலத்திற்கும், உடைகளுக்குமே பதறிப்போனேன். இந்த மன்னரோ,
அரண்மனையே எரிந்தும் பதட்டமில்லாமல் இருக்கிறார். தனக்கென்று அங்கே எதுவுமில்லை என்கிறார். நிஜத்தில் இவர் தான் ரிஷி,'' என்று தன்னையறியாமலே மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
இப்படியெல்லாம் ஆட்சி நடந்த நம் பாரததேசத்தில்... இன்றைய நிலை...!

எப்போதும் நல்லவனாயிரு

ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான்.
""முனிவரே! நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்?'' என்று கேட்டான்.
முனிவர் சிரித்தார்.
""அது உன் முன்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது,'' என்றார்.
பதிலுக்கு அவன்,""அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனையை, அப்போதே அல்லவா தர வேண்டும்....! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய் இருந்தாலும், நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்...இது நியாயமா?'' என்று கேட்டான்.
""உன் வாதம் ஒரு வகையில் வாஸ்தவம்,'' என்ற முனிவர் தொடர்ந்தார்.
""மகனே! மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு. அவனது மனம் நிலையற்றது. முதல் சில பிறவிகளில் நன்றாய் நடப்பவன், அடுத்து வரும் பிறவிகளில் நல்லவனாயிருக்க உத்தரவாதமில்லை. ஆக, தண்டனைகள் மாறி மாறி வரும். ஆனால், எந்நிலையிலும் எப்பிறவியிலும், நல்லவராய் இருப்பவர் மிகச்சிலரே. அவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் பரமனின் பாதமடைவர். இது என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்,'' என்றார்.
நேர்மையாளருக்கு இப்போது தெளிவு பிறந்தது. உங்களுக்கு....?

வெள்ளையந்தீவு என்ற புதிய தீவு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

வெள்ளையந்தீவு என்ற புதிய தீவு பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது எங்கிருக்கிறது என்று குழம்ப வேண்டாம்.
திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலையே "வெள்ளையந்தீவு' என்பர். இங்கு, ஆதிசேஷன் என்னும் பாம்புப்படுக்கையில்
ஸ்ரீதேவியும், பூமிதேவியும் பாதத்தை வருடிக் கொண்டிருக்க பெருமாள் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். இந்த உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்தபடி துயில் கொண்டிருப்பதே அறிதுயில். அசுரர்களால் துன்பம் நேரும் போதெல்லாம், தங்களைக்
காப்பாற்றும்படி தேவர்கள் பாற்கடலின் கரையில் நின்று பெருமாளிடம் சப்தமாக முறையிடுவர். அதனால், இதற்கு "கூப்பாடு கேட்கும் உலகம்' என்றும் பெயருண்டு.
வெள்ளையந்தீவுக்கு சென்று திருமாலைத் தரிசிக்கும்பேறு வேண்டுமானால், "எட்டு' எழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய'
மந்திரத்தை மனதார உச்சரிப்பது தான் வழி.

ஆளுக்கொரு அறிவுரையாக மாற்றி மாற்றி சொன்னது ஏன்

ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான்.
பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், ""நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்,'' என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான்.
இந்த சம்பவத்தை பெருமையாக குருவிடம் வந்து சொன்னார் விவேகானந்தர். உடனே, ராமகிருஷ்ணர் அவரைக் கடிந்து கொண்டார்.
''துறவிகளுக்கு பொறுமை வேண்டும். துறவு ஏற்ற நீ இப்படி செய்யலாமா?'' என்றார்.
அவர் சென்ற பிறகு மற்ற சீடர்கள், ""குருவே! நீங்கள் ஆளுக்கொரு அறிவுரையாக மாற்றி மாற்றி சொன்னது ஏன்? புரிந்து கொள்ள முடியவில்லையே,'' என்றனர்.
""பிரும்மானந்தர் அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன். விவேகானந்தர் உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு மேலும் உணர்ச்சியை ஊட்டி கோபக்காரனாக்கக்கூடாது. அவரவர், குணத்திற்கேற்பவே புத்திமதி சொல்ல வேண்டும். புரிகிறதா?'' என்றார்.
சீடர்கள் அவரது அறிவுத்திறன் குறித்து வியந்தனர்.

குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது

கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார்.
அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை, தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ
பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள்.
அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் அவளை மணம் முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட அவர், குருவின் பேச்சைக் கேட்காத சீடனுடன் போரிட்டார்.
அவரிடம் வில்வித்தை கற்றிருந்த பீஷ்மர், அவரையே வெற்றி கொண்டார். தோல்வியடைந்த பரசுராமர், அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார்.
குருவே சொன்னாலும்கூட, ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

நீதியை நிலைநாட்டியவள்

தீபாவளி ஒரு தியாகத்திருநாள். பெற்றவளே மகனை அழித்து நீதியைக் காத்த நன்னாள்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்ற போது, அவரது ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்த பிள்ளையே நரகாசுரன். "வாத்தியார் பிள்ளை படிக்காது' என்று கிராமத்திலே ஒரு சுலவடை சொல்வார்கள்.
அது மாதிரி, கடவுளின் பிள்ளையாகவே இருந்தாலும், அவன் கெட்டவனாக இருந்தான். பிரம்மாவை நினைத்து கடும் தவமிருந்து தனக்கு யாராலும் அழிவு வரக் கூடாது என்று வரம் கேட்டான். "பிறந்தால் மரணமுண்டு' என்ற அவர், "யாரால் அழிவு வர வேண்டும்?' என்று அவனையே முடிவு செய்து கொள்ளச் சொன்னார்.
புத்திசாலியான நரகாசுரன்,""என்னைப் பெற்றவளைத் தவிர யாரும் என்னை அழிக்கக்கூடாது,'' என்று நிபந்தனை விதித்தான். பிரம்மாவும் ஒப்புக்கொண்டு விட்டார். பெற்றவள் பிள்ளையைக் கொல்லமாட்டாள் என்று தைரியத்தில் தான், இவ்வாறு நரகாசுரன் வரம் பெற்று வைத்திருந்தான்.
கடவுளின் பிள்ளை, சாவு இல்லை என்ற திமிரில் இந்திரலோகத்துக்குள் புகுந்து தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தான். அவர்கள் பயந்து போனார்கள். ஒரு வழியாக பகவானிடம் புகார் சென்றது. பிள்ளையென்றும் அவர் பார்க்கவில்லை. பூமாதேவி அப்போது சத்யபாமாவாக அவதரித்திருந்தாள். அவள் அறியாமலே அவளைக் கொண்டே நரகாசுரனை அழித்தார் பரமாத்மா.
உண்மையறிந்த அவள் பெருமாளிடம், ""என் மகன் கொடியவனே ஆயினும், என் கையாலேயே அவனை அழித்தது வருத்தமாக இருக்கிறது. அதேநேரம், அவன் அழிந்த நாள் தேவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகம் முழுமைக்கும் கிடைக்கட்டும். அவன் இறந்த நாளில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும். அவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால மரணம், கோர மரணம் ஆகியவை ஏற்படக்கூடாது,'' என்று வரம் பெற்றாள்.
விசேஷ நாளன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது சாஸ்திரத்துக்கு பொருந்தாததாக இருக்கிறது. ஆனால், பூமாதேவி அந்தக் குளியலின் போது, நீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் வந்து குடியேற வேண்டும் என்றும் வரம் பெற்றாள். இந்தக்குளியலுக்கு "கங்கா ஸ்நானம்' என்றும் பெயர் வந்தது. கங்கைக்கு போய் குளிக்க முடியாதவர்கள், தீபாவளியன்று வீட்டில்
குளித்தாலே, அது கங்கைக்குளியல் ஆகி விடுகிறது.
பெற்ற மகன் இறந்த நாளைக் கூட, ஒரு திருநாளாக கொண்டாட அனுமதி தந்தவள் பூமாதேவி. இதனால் தான், பூமாதேவியைப் போல் பொறுமை வேண்டும் என்று பெரியவர்கள் இளையவர்களுக்கு புத்திமதி சொல்கிறார்கள்.

காசியின் கருணை மரம்

தீபாவளிக்கு, கருணைக் கடலான காசி விஸ்வநாதரை தரிசிப்பது சிறப்பு. அவர் மட்டுமல்ல! காசியில் வசிக்கும் தாவரங்கள் கூட கருணை மிக்கவையே. காசியை ஆண்ட பிரம்மதத்தன், புதிய அரண்மனை கட்ட முடிவெடுத்தான். ஒரே மரத்தைக் கொண்டு தூண்கள், ஜன்னல், நிலை எல்லாம் அமைக்க முடிவு செய்தான். அந்தளவுக்குரிய பெரிய மரத்தைத் தேடிப்பிடித்தான்.
அன்றிரவு அரசன் கனவில் தோன்றிய மரம்,""மகாராஜா! நான் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கிறேன். என் நிழலில் ஆயிரக்கணக்கான மக்கள் இளைப்பாறுகிறார்கள். என் கீழே முளைத்து கிடக்கும் பல செடிகளும் வெப்பத்தில் தவிக்காமல் உ<ள்ளன. எனவே, என்னை வெட்டும் எண்ணத்தை விடுங்கள்,' 'என்றது.
பிரம்மதத்தன் மறுத்தான்.
உடனே அந்த மரம், ""பரவாயில்லை! உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். ஆனால், ஒரு வேண்டுகோள். முதலில் என் இலைகளை உதிர்த்து விடுங்கள். பிறகு கிளைகளை வெட்டுங்கள், அதன் பிறகு அடிமரத்தை சாயுங்கள்,'' என்றது.
""ஏன் இப்படி கேட்கிறாய்?'' என்றான் ராஜா.
""மன்னா! என்னை அடியோடு சாய்த்தால், கனம் தாங்காமல், கீழே நிற்கும் பல குட்டித்தாவரங்கள் ஒரேயடியாக அழிந்து போகும். கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டினால், சேதம் அந்தளவுக்கு இருக்காது. பிறருக்கு நம்மால் முடிந்தவரை துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்,'' என்றது மரம்.
காசியில் பிறந்த இந்த மரத்திற்கே இவ்வளவு கருணை இருக்கிறதென்றால், அதை ஆளும் ராஜாவான எனக்கு எவ்வளவு கருணை இருக்க வேண்டும்! வேண்டாம், இந்த மரத்தை வெட்ட வேண்டாம்... என்ற முடிவுக்கு வந்தான் மன்னன்.

கங்கைக்கு போய் குளித்தால் தான் "கங்கா ஸ்நானம்' என்பதில்லை. அவளை மனதார நினைத்தாலே போதும்

தீபாவளிக்கு கங்கைக்கு போய் குளித்தால் தான் "கங்கா ஸ்நானம்' என்பதில்லை. அவளை மனதார நினைத்தாலே போதும்! குளித்ததற்குரிய பலன் கிடைத்து விடும்.
ஒரு அந்தணர் கங்கை நீராடலுக்கு சென்றார். செருப்பு அறுந்து விட்டதால், அங்கிருந்த ரைதாஸ் என்ற தொழிலாளியிடம் தைக்கக் கொடுத்தார். ""ஏனப்பா! இன்று கங்கையில் நீராடி விட்டாய் அல்லவா?'' என்றார்.
""சாமி! அதுக்கெல்லாம் எனக்கேது நேரம்! ஏதோ பத்து பதினைஞ்சு செருப்பை தைச்சா தான், கால் வயித்து கஞ்சியாவது கிடைக்கும்,'' என்றார் ரைதாஸ்.
""அடப்பாவி! காசியில் இருந்து கொண்டு, கங்கையில் குளித்ததில்லை என்கிறாயே! அது சரி...அதன் அருமை உனக்குப் புரியவில்லை!'' என்றவரிடம், சில பாக்குகளை கொடுத்த ரைதாஸ், ""சாமி! இதை கங்கையில் சேர்த்து விடுங்கள்,'' என்றார்.
அந்தணர் பாக்குகளை கங்கையில் போட முயன்ற போது, உள்ளிருந்து அழகிய பெண்ணின் கைகள் வெளிப்பட்டன. அவரது கையில், ஒரு வளையலைக் கொடுத்து ரைதாசிடம் ஒப்படைக்கும்படி குரல் கேட்டது. அந்தணரும் அவ்வாறே செய்ய, ""இது கங்கா மாதா உங்களுக்கு தந்தது. எனக்கு தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார் ரைதாஸ்.
அந்தணர் அது கேட்டு நெகிழ்ந்து போனார்.

நாம் நல்வழியில் நம் செயல்களில் வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும்

வடமாநிலங்களில் நவராத்திரியை ராமலீலாவாகக் கொண்டாடுவர். புகழுடன் வாழ்வது குறித்து, இந்த சமயத்தில் ஒரு கதை சொல்வது வழக்கம்.
ராவணன் ஆயுதங்களை இழந்து நின்ற சமயத்தில், அவனைக் கொல்லாத ராமன், ""நீ சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டால் போதும். போர் வேண்டாம். போரைத் தொடர விரும்பினால், மீண்டும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வா. இப்போது உயிருடன் செல்ல அனுமதிக்கிறேன்,' 'என்றார்.
ராவணனுக்கு அவமானமாக இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. சீதையை ராமனிடம் ஒப்படைத்தால் "கோழை ராவணன்' என்று உலகோர் எதிர்காலத்தில் பழிப்பார்கள் என்பதால், வீரனாக மடியவே எண்ணினான். ஆயுதங்களுடன் மீண்டும் வந்தான். ராமனுடன் போரிட்டு மடிந்தான். கடைசி வரை முயற்சித்து தோற்றவன் என்ற புகழை அடைந்தான். ராவணன் கெட்ட காரியத்திற்காக முயற்சி எடுத்தான். நாம் நல்வழியில் நம் செயல்களில் வெற்றி பெற முயற்சி எடுக்க வேண்டும். புகழ்தானாக வந்து சேரும்.

கடவுளின் பெயர்களைச் சொல்லி வணங்க வேண்டும்

கிருஷ்ணர் "பன்றி' எனப்படும் வராக அவதாரமாக தோன்றினார். ஒரு அரக்கனால் மறைத்து வைக்கப்பட்ட பூமிப்பந்தை தன் மூக்கில் சுழலவிட்டு எடுத்து வந்தார். பூமியின் அதிபதியான பூமாதேவி இதற்காக நன்றி கூறினாள். ""சுவாமி! நீங்கள் இப்போது எனக்கு காட்சி தந்து காப்பாற்றியது போல, பூமியான என் மீது வசிக்கும் மனிதர்கள் கஷ்டப்படும் போதும் காட்சி தந்து காப்பாற்றுவீர்களா!'' என்றாள்.
அதற்கு பதிலளித்த வராகர், ""நிச்சயமாக! நல்ல மனம், உடம்பில் பலம் இதெல்லாம் இருக்கிற போதே, என் பெயர்களை பக்தியுடன் உரக்கச் சொல்லி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு காட்சி அளிப்பேன்,'' என்றார்.
உடம்பில் பலம் இருக்கும் வயது இளவயது தான். எனவே, குழந்தைகள், இன்றுமுதலே கடவுளின் பெயர்களைச் சொல்லி வணங்க வேண்டும். பெரியவர்களும் அவ்வாறு சொல்ல அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.

தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம் செய்பவனே ஒவ்வொரு பிறவியிலும் உயர்கதியை அடைய முடியும்

ஒரு ஏழை விவசாயி தனது குடும்பத்துக்குப் போக, மீதி காய்கறிகளை தானமாக வழங்கி வந்தான். இது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. மீதி காய்கறியை விற்றால், பணம் கிடைக்குமே! கஷ்டநிலை தீருமே!'' என்றாள்.
""அடியே! தானம் செய்வது நமது சாஸ்திரம் வகுத்த விதி. எல்லாவற்றையும் நாமே தின்று விட்டால், எப்படி மோட்சத்தை அடைவதாம்! இந்தப் பிறவிக் கடலுக்குள்ளே தானே கிடந்து உழல வேண்டும்,'' என்று பதில் சொன்னான். அவளுக்கு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. அதற்கு மேல், அவளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்த பிறவியில், அந்த விவசாயி, தன் தர்மத்தின் பலனாய் அரசனாகப் பிறந்தான். அவனுக்கு முற்பிறவியில் வாய்த்த மனைவியே அமைந்தாள். ஒருமுறை, அவளுக்கு முன்ஜென்ம நினைவு வந்தது.
அந்த அடிப்படையில்,""நீங்கள் போன பிறவியில் காய்கறி தானம் செய்ததால், அரசனாகப் பிறந்தீர்கள்! இந்தப்பிறவியிலும் அதையே செய்யலாமே!'' என்றாள். அவள் சொன்னதற்கு காரணம் பேராசை. அடுத்த பிறவியில், இதை விட வசதியாக வாழலாம் என்று நினைத்தாள். அரசனும் அப்படியே செய்தான்.
ஆனால், அரசனும், அரசியும் இறந்து மீண்டும் ஏழையாகவே பிறந்தார்கள். ஒரு துறவியிடம் தங்கள் நிலை பற்றி சொன்னார்கள்.
""மகனே! ஏழையாய் இருந்த போது காய்கறி தானம் செய்தது சரியே! அரசனாய் இருந்த போது, உன் வசதிக்கேற்ப தங்கமும், வைரமுமாய் தானம் செய்திருக்கலாமே! தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம் செய்பவனே ஒவ்வொரு பிறவியிலும் உயர்கதியை அடைய முடியும்,'' என்றார்.

பிள்ளைகளும் பெற்றவர்களை மதித்து வாழ வேண்டும்.

ஆதிசங்கரர் காலடியில் தன் தாயுடன் வசித்து வந்தார். துறவறம் ஏற்ற சமயத்தில் கூட அம்மாவின் சொல்லைத் தட்டாமல் கேட்டவர் அவர். அவரது தாய் ஆர்யாம்பாள், வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள நதிக்கு தினமும் நீராடச்செல்வார். ஒருநாள் கடும் வெயிலில் மயங்கி விழுந்து விட்டார். ஆதிசங்கரர், அவருக்கு மயக்கம் தெளிவித்து எழுப்பி வந்தார். உடனே, அந்த நதித்தாயிடம் சென்று மனமுருக வேண்டினார்.
""கங்கைக்கு நிகரான தேவியே! நீ எங்கள் வீட்டருகே வர வேண்டும். என் அம்மா தொலைதூரம் நடந்து வந்து, உன்னில் நீராட சிரமப்படுகிறாள். வருவாயா?'' என உருகிக் கேட்டார்.
என்ன ஆச்சரியம்! அந்த நதி தன் திசையை அவர் வீட்டுப்பக்கமாகத் திருப்பி விட்டது. தாய் வெயிலில் நீண்ட தூரம் நடந்து சிரமப்படக்கூடாது என்று எண்ணியது அந்த திருமகனாரின் உள்ளம்.
அவருக்கு சிறுவயதிலேயே துறவறம் பூண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், அவருக்கு ஆயுள் குறைவு என்று வேறு ஒரு மகான், அவரது தாயாரிடம் சொல்லி விட்டார். தன் மகனுக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது என்று அவர் எண்ணினார்.
மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்.
துறவற எண்ணத்தில் இருந்த சங்கரரோ, ""அம்மா! இல்லற வாழ்வு வேண்டாம் தாயே! என்னை துறவுபூண அனுமதியுங்கள்,'' என்றார். அம்மாவின் மனம் ஒப்பவில்லை.
ஒருநாள், அவர் தன் தாயுடன் நதியில் நீராடச் சென்றார். அப்போது, சங்கரருக்கு வயது 8. ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது.
மகனைக் காப்பாற்றியாக வேண்டுமே! அம்மா அலறிக் கொண்டிருந்தார். இதுதான் சமயமென, சங்கரர் தன் தாயிடம்,""அம்மா! தாங்கள் என்னைத் துறவு பூண அனுமதித்தால், இந்த முதலை என் காலை விட்டு விடும்,'' என்றார். எந்தத்தாய்க்கு தான் தன் மகன் உயிர்வாழ ஆசையிருக்காது! தாயாரும் சம்மதித்தார்.
தாயின் மனம் கோணாமல் துறவுக்கான சம்மதம் பெற்றுவிட்டார் சங்கரர். அவர் துறவறம் பூண்டு சிருங்கேரி கிளம்பிய போது, ""மகனே! எனக்கு நீ ஒரே மகன். என் இறுதிக்காலத்தில், கிரியைகள் செய்ய வந்து விட வேண்டும்,'' என்றார்.
ஒருவர் துறவியான பிறகு, தாயாருக்குரிய இறுதிக்கிரியைகள் செய்ய விதிமுறைகள் அனுமதிக்காது. ஆனால், சங்கரர் ஒப்புக்கொண்டார். அவரைப் இதுபோன்ற விதிமுறைகள் கட்டுப்படுத்தாது. காரணம், அவர் எல்லாவற்றையும் துறந்தவர். பற்றின்றி வாழ்பவர். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியையே பூமிக்கு வரவழைத்தவர். இறைதரிசனம் கண்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர், "பாதுகா ஸித்தி' என்ற வித்தையை அறிந்திருந்தார். இதன்மூலம், ஒருவர் நினைத்த இடத்தை விரைவில் அடைய முடியும். தன் அன்னையின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர், அந்த ஸித்தியின் மூலம் காலடியை அடைந்தார்.
துறவிக்கு இறுதிக்கிரியை செய்ய அனுமதியில்லை என உறவினர்கள் எதிர்த்தனர். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், தானே காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி, அம்மாவின் உடலைத் தகனம் செய்தார். அம்மாவுக்காகவே வாழ்ந்த ஆதிசங்கரரைப் போல, நம் அன்பு பிள்ளைகளும் பெற்றவர்களை மதித்து வாழ வேண்டும்.

தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை...

ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க...
முறுக்க என ஒரே சத்தம்!
அவ்வழியே ஒரு ஞானி சென்றார்.
அவரிடம் தாய் முறையிட்டாள்.
""சுவாமி.....! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்....?
நீங்களே சொல்லுங்கள்... தாயின் பாசம் தானே பெரிது....?''
மருமகளும் அவ்விதமே முறையிட்டாள்.
ஞானி சிரித்தபடிச் சொன்னார்.
""தாயின் பாசம் சிறந்தது. ; ஆனால், தாரத்தின் அக்கறையே பெரிது. தாய், தன் மகன் தன்னைப் போலிருப்பான்; துணையிருப்பான் என்ற நோக்கம் கொண்டே வளர்க்கிறாள். இருபது வருடங்கள் வளர்த்துப் பழகியதாலான பாசமும் அதில் உண்டு. தாரமோ, இருபது வருடங்கள் எங்கோ வளர்ந்து, யாருடனோ வாழ்ந்து மணமாகிய பின் புகுந்த வீடு வருகிறாள். இவர் தான் புருஷன் என இதுவரை அறியாதவனோடு வாழ்வை ஆரம்பிக்கிறாள்.
தன் தேவை எல்லாம் பெற்றோரால் நிறைவேற்றப்பட்ட நிலையிலிருந்து, தன் கணவனின் தேவை, விருப்பம், உணவு என சகலத்துக்கும் அக்கறை கொள்கிறாள். ஆக, தாயை விட தாரத்தின் அக்கறைக்கு சற்று மதிப்பு கொடுப்பதில் தவறில்லை...''
இதைக் கேட்டதும், தானும் ஒரு காலத்தில் தாரமாக இருந்தவள் தானே என நினைத்த அந்த தாயின் மனம் அமைதியானது.

குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா

ஒரு மாற்றுத் திறனாளி; காது கேளாதவர், கடவுளின் மேல் கோபம் கொண்டார்.
திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டார்.
அங்கிருந்து வெளியே வரும்போது, ஒரு கை இழந்த மனிதன், தன்னாலான பூக்களை நந்தவன மரத்தில் இருந்து பறிக்க முயல்வதைக் கண்டார்; கேட்டார்.
""எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. இப்படி குறைபாட்டைக் கொடுத்த ஆண்டவனுக்கேன் வஞ்சம்...?''
ஒரு கை மனிதர் சொன்னார்.
""உங்களால் எழுத முடியும்; பூ பறிக்கலாம். என்னால் உங்கள் குரலைக் கேட்க முடியும். அதோ.. அந்த மனிதருக்கு பார்வையே இல்லை. மற்றொருவருக்கு ஒரு கால் இல்லை. ஆக, நமக்கும் கீழே பார்க்கையில் நாம் பரவாயில்லை அல்லவா...? ஆக, கடவுளுக்கு நாம் நன்றியே சொல்ல வேண்டும்..''
ஓசையற்றவர் கேட்டார்.
""நன்றாய் இருப்பவர் கோடி பேர் இருக்க, நன்றாக இல்லாதவர்களை ஏன் ஒப்பிட வேண்டும். நாமும் நல்லபடி இருந்திருக்கலாமே...?''
ஒரு கை மனிதர் சிரித்தார்.
""இக்கோயில் மடப்பள்ளியின் சர்க்கரைப் பொங்கல் வெகு பிரசித்தம். அதை தயாரிப்பவர்... எக்குறையுமற்றவர். ஆனால், அவருக்கு சர்க்கரைநோய்; ஒரு துளி இனிப்பு கூட உண்ண முடியாது. நாமோ எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.
உடல்குறை இல்லார்க்கு மனக்குறையிருக்கும். ஆரோக்கியக் குறையிருக்கும். ஆக, குறையில்லாத மனிதன் உலகிலேயே கிடையாதப்பா....'' ஓசையற்றவருக்கு தெளிந்தது

நடப்பதை கவனி!

சிவகாமி ஒரு சிவபக்தை. அவளது கணவன் சிதம்பரம் விவசாயி. அவன் வயலில் இருந்து மாலையில் களைப்புடன் வீடு திரும்புவான். அந்நேரத்தில், வீட்டுக்கதவை சாத்திவிட்டு, அவள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குப் போயிருப்பாள்.
சிதம்பரத்துக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். "கணவன் சோர்ந்து வரும் விஷயத்தில் வீட்டில் இருந்தோமா! அவன் குடிக்க, குளிக்க ஏதாவது ஏற்பாடு செய்தோமா என்றில்லாமல், இப்படி கோயில் குளமென சுற்றுகிறாளே! சாமி...என்ன கணவனை கவனிக்காமல் கோயிலுக்கு வா என்றா சொன்னது' என்று நினைத்துக் கொள்வான். ஆனால், மனைவியைக் கண்டிக்கும் தைரியம் இல்லை. கண்டித்தால் சண்டை வரும். கோபித்துக் கொண்டு தாய் வீடு போய்விடுவாள், கிடைக்கிற கஞ்சிக்கும் ஆபத்து வந்து விடும்.
எனவே, அவனாகவே குளித்து விட்டு, பொங்கி வைத்திருக்கும் சோற்றை தானாகவே அள்ளிப்போட்டு சாப்பிடுவான். ஒரு கட்டத்தில், தன் கஷ்டத்துக்கு காரணமான, சிவன் மீது கோபம் வந்து விட்டது.
"சிவன் என ஒருவன் இருப்பதால் தானே மனைவி கோயிலுக்கு போகிறாள்!'
மறுநாள், அவன் வயலுக்குப் போகும் வழியில், சிவன் கோயில் முன்பு தன் வண்டியை நிறுத்தினான். அங்கே சிவபார்வதி சிலையாய் சிரித்தபடி காட்சி தந்தனர்.
""அடேயப்பா சிவபெருமானே! நீ மட்டும் உன் பெண்டாட்டியை ஒரு நிமிஷம் கூட பிரியாம சந்தோஷமா பக்கத்திலேயே வச்சுகிட்டு இருப்பே! என் பெண்டாட்டி, என்னை வுட்டுட்டு <உன்னை பாக்க வந்துடுறா! இதுலே ஏதாச்சும் நியாயம் இருக்காப்பா! அம்மா பார்வதி தாயே! உன்னை கருணையுள்ள தாயுன்னு சொல்றாங்க! நீயாச்சும் எடுத்துச் சொல்லக்கூடாதா <உன் புருஷன்கிட்டே!'' என்று புலம்பினான்.
பிறகு, ""அது சரி...நான் ஒரு பைத்தியக்காரன்! கல்லுகிட்டே பேசி என்னாகப் போகுது... சரி...வரேன்,'' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, வண்டியைக் கிளப்பினான்.
அவன் சென்றதும் பார்வதி, சிவனிடம்,""அந்த விவசாயி சொல்வது நியாயம் தானே! நம் பக்தை சிவகாமி இங்கே வந்து விட்டால், சிதம்பரம் வேலை முடிந்து வந்து, யார் <உதவியுமின்றி என்ன செய்வான்! அவனுக்கு வயலிலும் கொளுத்தும் வெயிலில் வேலை! வீட்டுக்குப் போனால் நிம்மதி யில்லை. உம்...அவனுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்களேன்,'' என்றாள்.
சிவன் சிரித்தார். "நடப்பதைக் கவனி' என்று இரண்டே வார்த்தைகளில் பதிலளித்தார்.
மறுநாள், சிவகாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், கடும் காற்றடித்தது. காற்று மணலை வாரி வீசியதால், அவளால் நடக்க முடியவில்லை. மேகங்கள் சூழ, பெரும் மழையும் வந்து விட்டது. சூறாவளியில், ஒரு மரக்கிளை ஒடிந்து அவள் மேல் விழுந்தது. வசமாகச் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
அப்போது, வீடு திரும்பிக் கொண்டிருந்த சிதம்பரம், மனைவியைத் தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் ஓடினான்.
கை எலும்பு முறிந்து விட்டது. ரத்தமும் வெளியேறி விட்டதால், அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பினார். அன்றுமுதல், ஒருவாரம் வயலுக்கே போகாமல், மனைவியின் அருகில் இருந்து அவளுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது முதல் எல்லாமே பார்த்துக் கொண்டான் சிதம்பரம்.
அப்போது, அவள் மனதில் உதித்த எண்ணம் இதுதான். ""இவர் வேலை முடிந்து வரும் வேளையில், ஒருநாள் கூட நான் வீட்டில் இருந்ததில்லை. இவரோ, தன் வேலையைப் போட்டு விட்டு, எனக்காக இவ்வளவு சேவை செய்கிறார். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்! கணவனுக்கு செய்யும் சேவையே சிவசேவை. இனி இவரது <உயிராய் இருப்பேன்,''.
கோயிலில் இருந்த சிவனும் பார்வதியும், அவளை அங்கிருந்தபடியே ஆசிர்வதித்தனர்

மனம் புண்படுமே!


பிறரை அவதூறாகப் பேசி மனதைப் புண்படுத்துவதில் சிலருக்கு அலாதி பிரியம். இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் தெரியுமா!
ஒரு ராஜாவுக்கு தான் மட்டுமே சிறந்த அறிவாளி, வீரன், சூரன், அழகன் என்றெல்லாம் நினைப்பு. தன்னைத் தேடி வருபவர்களை அவமானமாக பேசி, அவர்கள் முகம் குறுகிப் போவதைக் கண்டு மகிழ்ச்சியடைவான்.
ஒருமுறை துறவி ஒருவர் வந்தார். வயதான அவரால் நிமிர்ந்து நடக்க முடியவில்லை.
""சாமியாரே! <உம்மைப் பார்த்தால் ராமாயணக் கூனி மாதிரி இருக்கிறது. நடையைப் பார்த்தால் கழுதை நடப்பது போல் இருக்கிறது,'' என்று கேலி செய்தான்.
துறவி சிரித்தார்.
""நல்லது அரசனே! ஆனால், உன்னைப் பார்த்தால் என் கண்ணுக்கு பேரழகன் முருகப்பெருமானாகத் தெரிகிறது,'' என்றார்.
தான் அவரை இகழ, அவரோ நம்மை புகழ்கிறாரே என்று அரசனுக்கு இடித்தது.
""துறவியே! நான் உம்மை இகழ்ந்தேன். நீரோ புகழ்கிறீர்! என்ன காரணமோ!'' என்று அவரிடமே கேட்டான்.
""மகராஜனே! நம்மைப் போலவே இந்த உலகிலுள்ள ஜீவன்களும் மற்றவர்களுக்கு காட்சி தருமாம். நான் பார்க்கின்ற எல்லாமே எனக்கு, என் அப்பன் முருகனைப் போலவே காட்சி தருகின்றன,'' என சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.
அரசன் முகத்தில் ஈயாடியிருக்குமா என்ன!

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று!

ஒரு ஞானியை மூன்று இளைஞர்கள் சந்தித்தனர்.
""சுவாமி! எங்களை உங்கள் சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றனர்.
""சரி...நான் ஒரு செய்முறை தேர்வு வைக்கிறேன், இதற்கு பதில் சொல்ல ஒரு மாத அவகாசமும் தருகிறேன். தேர்வு பெறுபவர்கள் என் சீடர்கள் ஆகலாம்,'' என்றார். மூவரும் தயாராயினர்.
அவர் ஒரு பழத்தோட்டத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே கிடந்த அரிவாளை எடுத்தார், அழகிய பழமரங்களை வெட்டிச் சாய்த்தார். பழங்களை குத்திக் கிழித்தார். இளைஞர்கள் ஏதும் புரியாமல் விழித்த வேளையில்,""எனது இந்தச் செயல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மாதம் கழித்து பதிலுடன் வாருங்கள்,'' என சொல்லி அனுப்பி விட்டார்.
ஒருமாதம் கழித்து மூவரும் வந்தனர்.
முதலாமவன்,"" ஞானியே! எதெல்லாம் அழகாக இருக்கிறதோ, அதெல்லாம் சிறந்ததாக இருக்க முடியாது. அதனால் அவற்றை நீங்கள் வெட்டியதாக கருதுகிறேன்,'' என்றான்.
இரண்டாமவன்,""ஒரு மனிதன், தன்னை மற்றவர்களை விட <உயர்ந்தவர்களாகக் கருதக்கூடாது என்பது என் அபிப்ராயம்,'' என்றான்.
மூன்றாமவன்,""அறிவற்றவர்கள் அறிவாளிகளுக்கு துன்பம் விளைவிக்க முடியும் என்பது என் கருத்து,'' என்றான்.
ஞானியின் முகத்தில் மலர்ச்சி...""சபாஷ், நான் வைத்த தேர்வில் மூவருமே தேர்வு பெற்று விட்டீர்கள். இனி நீங்கள் என் சீடர்கள்,'' என்றார்.

வாமனனாய் வந்து, ஓங்கி உலகளந்த அந்த உத்தமனிடம் நம்மையே யாசகப்பொருளாய் ஒப்படைப்போம்

மகாபலி சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் நர்மதை நதிக்கரை. நர்மதை சாதாரண நதியல்ல. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், நர்மதையை இதுவரை பார்க்காதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை...அந்த நதியை மனதார நினைத்தாலே போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும். பாம்பு, தேள் முதலான விஷப்பூச்சிகள் இந்த நதியை நினைப்பவர்களை அண்டாது. நர்மதையை தினமும் வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்களும் சொல்கின்றன.
அப்படிப்பட்ட புண்ணிய நதிக்கரையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது யாகம். சுக்ராச்சாரியார் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் அங்கே அமர்ந்திருக்கின்றனர். அப்போது, குறள் போன்ற குறுகிய வடிவில், மகாதேஜஸ்வியாக வருகிறார் ஒரு அந்தணர். அவர் வேறு யாருமல்ல! சாட்சாத் மகாவிஷ்ணுவே தான்! மகாபலி அவரை வரவேற்றான்.
""யாகம் நடக்கும் இந்த நல்வேளையில் வரும் தங்களை வரவேற்கிறேன். தாங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா?'' என கேட்கிறான் அவன்.
""நானா...நான் அபூர்வமான வன். இதற்கு முன் என்னை நீ பார்த்திருக்க முடியாது,'' மகாவிஷ்ணு துடுக்குத்தனமாய் பதிலளிக்கிறார்.
""இப்போது பார்க்கிறேனே! தங்கள் ஊர் எது?'' என கேட்கிறான் மகாபலி.
""எந்த ஊர் என்றவனே! எனக்கென்று எந்த ஊரும் இல்லை. பிரம்மா ஸ்தாபித்த எல்லா ஊரும் எனது ஊர் தான்,''... அடுத்து வந்த பதிலிலும் அதே துடுக்குத்தனம்.
""சரி ஐயா! தங்களின் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்? அவர்களைப் பற்றியாவது நான் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?''
இதற்கு, குள்ளவடிவான மகாவிஷ்ணுவிடமிருந்து பதில் இல்லை. கையை மட்டும் விரிக்கிறார்.
""ஓ...இவர் பெற்றவர்களையும் இழந்து விட்டார் போலும்! பாவம்...அநாதையாய் தவிக்கும் அந்தணர். ஒரு அடி இடம் கூட தனக்கென சொந்தமாக இல்லாதவர்...'' மகாபலியின் அசுர மனதுக்குள் இப்படித்தான் இரக்க எண்ணம் ஓடியது.
அதே நேரம் கர்வமும் தலை தூக்குகிறது.
""யாக வேளையில், தானம் பெறுவதற்கு தகுதியான ஆள் வேண்டும். ஆம்...இவர் பரம ஏழை...ஏதுமே இல்லாதவர். அநாதையும் கூட...இவருக்கு தர்மம் செய்தால், யாகத்தின் நோக்கம் நிறைவேறும்...'' இப்படி எண்ணியவாறே, வெகு தோரணையுடன்,
""சரி...இப்போது உமக்கு என்ன வேண்டும், கேளும், கேட்டதைத் தருவேன்,'' என்கிறான் மகாபலி.
குறுகிப் போய் நின்ற விஷ்ணு, தன் சின்னஞ்சிறு காலை தூக்கி, ""இந்த காலடிக்கு மூன்றடி நிலம் தந்தால் போதும்,'' கேட்டு விட்டு அமைதியாகி விட்டார்.
மகாபலிக்கு குழப்பம். சின்ன காலடியால் மூன்றடி நிலம்...இவர் யாராக இருக்கும்! இந்த சிந்தனை மகாபலிக்கு ஓடியது போல, நமக்குள்ளும் ஓடும்.
பகவான் விஷ்ணு, அநாதியானவர். அவருக்கு தாய் தந்தை ஆதி அந்தம் ஏதுமில்லை என்பது உண்மை. ஆனால், பூலோகத்தில் அவதாரம் செய்யும் போது மட்டும் தாய் தந்தையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அவர் வாமனராய் பூமிக்கு வந்த போதும் அவ்வாறே செய்தார்.
ஒரு காலத்தில், பிருச்னி என்ற பெண்ணையும், சுதபஸ் என்பவரையும் படைத்த பிரம்மா, ""நீங்கள் போய் உலகத்தை விருத்தி செய்யுங்கள்,'' என்று சொல்லி அனுப்பினார். அவர்களோ, அதைச் செய்யாமல், விஷ்ணுவை எண்ணி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டனர். பத்தாயிரம் ஆண்டுகள் தவம் சென்றது.
மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் கருடசேவை தந்து, ""உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்றார்.
""பகவானே! நீயே எங்கள் பிள்ளையாக வேண்டும்<'' என்றனர் இருவரும்.
விஷ்ணுவும் அதை ஏற்று "பிருச்னி கர்பன்' என்ற பெயருடன் அவர்களின் பிள்ளையானார். அடுத்து வந்த மற்றொரு பிறவியில் அதிதி என்ற பெயரில் பிருச்னியும், கஷ்யபர் என்ற பெயரில் சுதபஸும் பிறந்தனர். அவர்களுக்கு வாமனன் என்ற பெயரில் அவதாரம் செய்தார் பரமாத்மா.
அதன்பிறகு வந்த மற்றொரு பிறவியில் இருவரும் தேவகி, வசுதேவராகப் பிறந்து கண்ணனைப் பெற்றெடுத்தனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது ராமாவதாரத்தில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்து. இங்கே, எத்தனை பிறவிகள் மாறினாலும் பிருச்னி-சுதபஸ் தம்பதிகள் ஒன்றாகவே பிறந்து கணவன், மனைவி ஆனார்கள். அந்யோன்யமாய் இருக்கும் தம்பதிகளுக்கு மட்டுமே இத்தகைய பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வேறொருவருக்கு தான் வாழ்க்கைப்பட நேரிடும் என்பது வாமனர் வரலாறு மூலம் நாம் அறியும் செய்தி.
இந்தக் கதையெல்லாம் மகாபலிக்கு புரியவில்லை.
""மூன்றடி நிலம் கேட்கிறீரே! இது போதுமா உமக்கு!'' என்று இளக்காரமாக கேட்டான். இருந்தாலும் தருவதற்கு சம்மதித்து விட்டான்.
தன் மனைவி விந்த்யாவளியை அழைத்து, தாரை வார்த்து கொடுக்க தயாராகிறான். தானம் செய்யும்போது, மனைவியுடன் இணைந்து செய்தால் தான் பலனுண்டு.
மகாபலியின் குரு சுக்ராச்சாரியாருக்கு வந்திருப்பது யாரென்பது புரிந்து விட்டது. அவர் மகாபலியைத் தடுத்தார். அவனிடம் உள்ள எல்லா சொத்துகளுமே சுக்ராச்சாரியார் ஆலோசனையின் பேரில் சம்பாதிக்கப்பட்டவை. அந்த உரிமையுடன், ""மகாபலி...கொடுக்காதே'' என தடுக்கிறார். அவன் கேட்கவில்லை.
""அடேய்! குரு வார்த்தையை நிந்தித்த உனக்கு ஒன்றுமே இல்லாமல் போகட்டும்,'' என்று சாபம் கொடுத்து விட்டார்.
பகவான் எதிர்பார்த்ததும் இந்த சாபத்தைத் தான்!
மகாபலி அசுரன். அவன் நினைத்திருந்தால், கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்க வேண்டாம். உலகமும் அவனைத் தூற்றி இருக்காது. ஏனெனில், அசுரபுத்தி உள்ளவன் அப்படித்தானே செய்வான் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்!
ஆனால், அந்த அசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நல்ல புத்தி எப்படி வந்தது என்றால், அவனது தாத்தா பிரகலாதனால் வந்தது!
இரணியன் விஷ்ணுவை தூஷித்தவன். அவனது பிள்ளை பிரகலாதனோ அவரை நரசிம்மராகத் தரிசித்த பாக்கியவான். அவரது
திருவடியால் தீட்சை பெற்றவன். அப்போது, பிரகலாதன் கேட்கிறான்.
""சுவாமி! என் தந்தையோடு போகட்டும்! இனி என் வம்சத்தில் வருபவர்களை நீ அழிக்கக்கூடாது,'' என்று. விஷ்ணுவும் சம்மதித்து விட்டார்.
பிரகலாதனின் மகன் விரோசனன். அவனது பிள்ளை மகாபலி.
அதனால் தான் குள்ளமாய் வந்தவர், விக்ரமனாய் வளர்ந்து இரண்டடியால் உலகளந்து, மூன்றாம் அடியால், மகாபலியை பாதாள லோகத்துக்கு உயிருடன் அனுப்பி வைத்தார்.
வாமன அவதாரம் யாசிக்க வந்த அவதாரம். பகவான் நம்மிடம் சோறு கொடு, கறி கொடு, பால் பாயாசம் நைவேத்யம் போடு என்றெல்லாம் கேட்கவில்லை. "உன்னையே கொடு' என்று யாசிக்கிறான். ஆம்...வாமனனாய் வந்து, ஓங்கி உலகளந்த அந்த உத்தமனிடம் நம்மையே யாசகப்பொருளாய் ஒப்படைப்போம். அவனது திருவடி நிழலில் வாழும் பேறு பெறுவோம்

கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கும் யாரும் நினைத்ததை அடையலாம், ஜெயித்துக் காட்டலாம்

ஒரு ராஜகுமாரன் லட்சுமிதேவியை வேண்டி தவமிருந்தான். தேவியும் பிரசன்னமாகி, ""மகனே! என்ன வரம் வேண்டும், கேள்,'' என்றாள்.
""அம்மா! என் தந்தை பெரிய சக்கரவர்த்தி. உலகம் அனைத்தையும் பிடிப்பதற்காக, ராஜதர்மத்தின் படி, அஸ்வமேத யாகம் நடத்தினார். யாகம் நடக்கும் வேளையில், அவர் இறந்து விட்டார். நான் பதவிப்பொறுப்பேற்று, யாகத்தைத் தொடர்ந்தேன். அப்போது அனுப்பிய குதிரையை யாரோ திருடிச் சென்று விட்டனர். அதைக் கண்டுபிடித்து தர வேண்டும். யாகம் வெற்றியடைய வாழ்த்த வேண்டும்,'' என்றான்.
லட்சுமியும் அவ்வாறே அருளி,""நீ இவ்வூர் எல்லையில் இருக்கும் மகானைப் பார். அவர் உனக்கு வழிகாட்டுவார்,'' என்றாள்.
ராஜகுமாரனும் மகானைச் சந்தித்தான். அவர் தன் ஞானசக்தியால், குதிரை இந்திரனிடம் இருப்பதை அறிந்து, சக்திமிக்க சீடர்களை அனுப்பி அதைக் கொண்டு வந்து விட்டார்.
அவரது மகிமையை அறிந்த ராஜகுமாரன், ""முனிவரே! என் தந்தையின் உடலை தைலங்கள் இட்டு பாதுகாத்து வைத்துள்ளேன். அவரை உயிரோடு எழுப்பினால், அவரது அஸ்வமேத யாகக்கனவு பலித்து விடும், தாங்கள் அருள்வீர்களா?'' என பணிவுடன் கேட்டான்.
அவன் கேட்டபடியே சக்கரவர்த்தியை உயிருடன் எழுப்பினார் மகான்.
ராஜகுமாரன் அவரிடம், ""முனிவரே! இந்த சக்தி தங்களுக்கு எப்படி கிடைத்தது?'' என்று கேட்டான்.
""மகனே! கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கும் யாரும் நினைத்ததை அடையலாம், ஜெயித்துக் காட்டலாம்,'' என்றார்.
வீட்டுக்கு வீடு இனி கீதை புத்தகம் இருக்கும் தானே!

நினைத்ததை முடிப்பவன்

தன் பக்தனுக்கு நன்மை செய்ய நினைத்து விட்டால், கண்ணபிரான் என்ன தகிடுதத்தம் செய்தாவது அதைச் செய்து விடுவான்.
தன்னையே கதியென சரணடைந்த பாண்டவர்களுக்கு வெற்றி தேடித்தர அவன் ஒருமுறை என்ன செய்தான் தெரியுமா?
குரு÷க்ஷத்திரப் போரின் முடிவு அர்ஜுனனின் வில்லாற்றலைப் பொறுத்திருந்தது. அர்ஜுனன் வில்லுக்கு எதிராக அதே திறனுடன் விடுக்கும் ஆற்றல், துரியோதனனின் சித்தப்பாவான விதுரருக்கு மட்டுமே இருந்தது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று கண்ணன் யோசித்தான்.
விதுரரும் கிருஷ்ண பக்தர். அவனே கதியென சரணடைந்தவர். தன் பக்தனின் வில்லும், அம்பும் நன்மையைக் கருதி மட்டுமே விடப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட கண்ணன், அவருக்கும் நன்மை செய்ய எண்ணினான்.
ஒருமுறை விதுரர் கண்ணனைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் சூரியனைக் காட்டி மேலே நோக்கி கை நீட்டி ஏதோ பேசினார். விதுரரும் அதே போல கை உயர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இதை தூரத்தில் இருந்து துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சந்தேகம் வந்து விட்டது. ""இந்த விதுரர், கண்ணனிடம் சூரியனைக் காட்டி சத்தியம் செய்து ஏதோ சொல்கிறார். இவரிடம் அதுபற்றி விசாரிக்க வேண்டும்,'' என்று எண்ணிக் கொண்டான். கண்ணன் சென்றதும், அதுபற்றி சித்தப்பாவிடம் ஆவேசமாகப் பேசினான். தனக்கு எதிராக நடந்ததாகக் குற்றம் சாட்டினான்.
விதுரருக்கு கோபம் வந்து விட்டது. தன் வில்லை ஒடித்து, ""போரில் நான் யார் பக்கமும் போரிடமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டார். கண்ணனின் திட்டம் எளிதாகப் பலித்து விட்டது.

"ஏலாப்பொய்கள் உரைப்பானை'----- ஆண்டாள்

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!''
என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும், "ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.
ஆம்...இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.
இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான். ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள், ""ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே! உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே! ஒருவேளை நெய் முறுக்கு இருக்குமென நம்பி வந்தாயோ! உனக்கு மட்டும் தானா! இல்லை.... வாலுப்பசங்களான உன் நண்பர்களுக்கும் சேர்த்து திருடவா?'' என்றெல்லாம் மிரட்டுகிறாள்.
அந்தக் கண்ணன் என்ன சாதாரணமானவனா? தவம் செய்த முனிவர்களாலேயே, அவனது செயலைப் புரிந்து கொள்ள முடியாதே! இந்த ஆய்ச்சியை ஏமாற்றுவதா அவனுக்கு பெரிய கலை!
""தாயே! இது என் வீடு என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்,'' என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம்.
""ஏய்! இதை என்னை நம்பச் சொல்கிறாயா? உண்மையைச் சொல்,'' என்று மீண்டும் மிரட்டுகிறாள் அந்த ஆய்ச்சி. காதில்பிடி மேலும் இறுகுகிறது.
""அம்மா! பிருந்தாவனத்தில் நான் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன் இல்லையா! அதில், ஒரு கன்றுகுட்டியைக் காணவில்லை. ஒருவேளை, இந்த பானைக்குள் ஒளிந்திருக்கிறதோ என கையை விட்டு துழாவினேன்,'' என்கிறான்.
இப்படி மழலை பொய்யால், நம்மை மகிழ்வித்தவன் சின்னக்கண்ணன். அதனால் தான் ஆண்டாள் அவனை "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று பாடினாளாம்.

கண்ணா!உன் கபடம் எல்லாரையும் ரசிக்க வைக்கிறதே

கண்ணன் ருக்மிணியின் மாளிகையில் சயனித்திருந்தான்.
""ஒன்றுமே தெரியாதவர் போல் உறங்குவதைப் பார்! "இவர் அறிதுயில் கொள்கிறார்' என்பது எனக்கு தெரியாதா என்ன! <அப்படியானால் என்ன! உறங்குவது போல் பாசாங்கு செய்வான். ஆனால், இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாமே அவனுக்கு தெரியும். எல்லாம் "அறிந்தபடியே' துயில் கொள்வது தான் அறிதுயில்,''...இப்படி எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள் ருக்மிணி.
அப்போது, அங்கே நாரதர் வந்தார்.
""கண்ணா! ஞாபகமில்லையா! இன்று ருக்மிணியை மணந்தநாள் என்பதற்காக இங்கே வந்து விட்டாய். இன்றுதானே பாமாவுக்கும் பிறந்தநாள்! அங்கேயும் போகாவிட்டால், எரிமலை வெடித்து விடுமே! என்ன செய்யப் போகிறாய்?''
""அங்கும் தான் போவேன்''...
""அதெப்படி முடியும்! நீ இங்கிருந்து காலை வெளியே வைத்தாலே அவள் கண்களில் அனல் பறக்குமே!''
கண்ணன் இதற்கு பதில் சொல்லவில்லை, சிரித்தான்.
நாரதர் கலகமூட்ட பாமா வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
அங்கே போனால், கண்ணனின் திருவடிகளை ரசித்தபடியே, அவன் அறிதுயில் கொள்வதை பாமா ரசித்துக் கொண்டிருந்தாள்.
அடடா...இந்தக் கபடன் இங்கே எப்போது வந்தான்! கண்ணிமைக்கும் நேரத்தில் நான் இங்கே வந்து விட்டேன், இவன் அதற்கும் முன்னதாக இங்கே...''நாரதருக்கு தலை குடைந்தது. பாமா எழுந்து நாரதரை வரவேற்றாள்.
""அமருங்கள்! பருக பாயாசம் கொண்டு வருகிறேன், இன்று என் பிறந்தநாள்...''
""அறிவேன் தாயே...சரி...<உன் கணவர் எப்போது இங்கே வந்தார்!''
""என்ன நாரதரே! இவரை எங்கோ பார்த்த மாதிரியல்லவா பேசுகிறீர்கள்! நேற்றையில் இருந்தே இவர் இங்கு தான் இருக்கிறார்!''
""இல்லையே! இவரை சற்று முன் ருக்மிணி இல்லத்தில் பார்த்தேனே..'' நாரதர் லேசாக அவள் காதில் போட்டார்.
பொறுமையின் சின்னம் பூமாதேவி. அந்த பூமாதேவி தான் சத்யபாமாவாக பூமிக்கு வந்திருக்கிறாள். அந்த பொறுமைசாலிக்கே கண் சற்று சிவந்து விட்டது.
""நாரதரே! வேண்டாம்...என் பிறந்தநாளும் அதுவுமாக கலகம் வேண்டாம் என நினைக்கிறேன்! இந்த "அரி' இங்கு தான் துயில் கொண்டிருக்கிறார்,''.
"அறிதுயில்...<அரிதுயில்...' இந்த வார்த்தை ஜாலத்தை அந்த குழப்பமான நேரத்திலும் ரசித்தார் நாரதர். அரி (ஹரி) என்னும் கிருஷ்ணன் துயில் கொண்டிருக்கிறான்...எல்லாம் அறிந்தபடி "அறிதுயில்' கொண்டிருக்கிறான்...!
கலகம் செய்பவனிடமே கலகமா...! நாரதர் கண்ணன் அருகே சென்றார். "நாராயணா... நாராயணா...'' என்றார். கண்ணன் கண் விழித்தான்.
""மகாவிஷ்ணுவே! இதென்ன கபடம்...அங்கும் இருக்கிறீர்! இங்கும் இருக்கிறீர்!''...என்றவரை
இடைமறித்த கண்ணன், ""இந்த ஊரெல்லாம் போய் பாரும். என்னை அழைத்த எல்லா கோபியர் வீட்டிலும் கூடத்தான் இருக்கிறேன்...என் பக்தர்கள் வீட்டில் எல்லாம் கூட இருக்கிறேன்...எங்கும் இருப்பவன் தானே நான்...அதை விடும்... உம் மனதில் கூட நான் தான் இருக்கிறேன்! அதனால்தான் நாராயண நாமத்தை விடாமல் சொல்லும் பாக்கியம் உமக்கு கிடைத்திருக்கிறது!''
நாரதர் கண்ணனிடம் விடைபெற்று வெளியே கிளம்பினார். எல்லா கோபியர் வீட்டிலும் கண்ணன் இருந்தான்.
""கண்ணா! உலகத்தார் கபடு செய்தால், அது மற்றவர்களைப் பாதிக்கிறது. உன் கபடம் எல்லாரையும் ரசிக்க வைக்கிறதே! அது எப்படி! புரியாத இந்தக்கேள்விக்கு விடை தெரியாத அந்த திரிலோக சஞ்சாரி "நாராயண' என உச்சரித்தபடியே வானில் நடந்தார்.

நன்றி மறந்தவர்க்கு பேரிழப்பு

ஒரு பணக்காரர் தன் வீட்டைப் பாதுகாக்க நாய் வளர்த்தார். தினமும் மாமிச சாப்பாடு. அதுவும், ஒருவரைக் கூட வீட்டுக்குள் அனுமதிக்காமல் கடுமையாகக் காவல் காத்தது. ஒரு கட்டத்தில், நாய் தளர்ந்து விட்டது. பணக்காரர் அதை வெளியே துரத்தி விட்டார். இன்னும் சில நாட்களில் புதுநாய் வாங்கி விடலாம் என நினைத்தார். இதற்குள், அந்த வீட்டில் நாய் இல்லாதது பற்றி தகவலறிந்த திருடர்கள் உள்ளே புகுந்து பணத்தைக் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தன் பழையநாய் வீட்டில் இருந்திருந்தால் கூட, இந்த சம்பவம் நடந்திருக்காதே என பணக்காரர் வேதனைப்பட்டார்.
நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது. நன்றி மறந்தவர்க்கு பேரிழப்பு

மத்தவங்க வாழட்டுமே

ஒருவன் மாட்டு வண்டியில், கிராமத்து சரக்குகளை ஏற்றி பட்டணத்துக்குப் போவான். சரக்குகளை அங்கே இறக்கி விட்டு, கிடைக்கிற கூலியை வாங்கி வருவான். கிடைத்த கூலி மாடுகளுக்கு தீவனத்துக்கே சரியாகி விட்டதே தவிர, இவனோ அரசாங்கம் தந்த இலவச அரிசியை கஞ்சியாக்கித் தான் குடித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள், துறவி ஒருவர் வந்தார்.
""சுவாமி! நான் என்ன தான் உழைத்தாலும், பணம் கையில் மிஞ்சலே! குடும்பத்துடன் கஞ்சிதான் குடிக்கிறோம்,'' என்றான்.
அவர் அவன் கையைப் பிடித்துப் பார்த்தார்.
""தம்பி! உன் ஜாதகம் அப்படி! ஒருவேளை, நீ பணக்காரனாகி விட்டால் செத்துப்போவாய் என்று உன் கைரேகை சொல்கிறது.
நீ இப்படியே இரு,'' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
தன் விதியை நொந்தவனாய், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அவன், ஒருநாள் வரும் வழியில், பெட்டி ஒன்று நடுரோட்டில் கிடப்பதைப் பார்த்தான்.
பெட்டியை திறந்து பார்த்தால், உள்ளே எக்கச்சக்கமான பணம்.ஒரேநாளில், தான் பணக்காரனாகி விட்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்த அதேசமயம், துறவி சொன்னது ஞாபகத்துக்கு வரவே, முகம் வாடிப்போய் விட்டது.
இருந்தாலும் பெட்டியுடன் ஊருக்கு வந்த அவன், ""நான் பணக்காரன் ஆனால் தானே பிரச்னை! இதை தன்னைப் போன்ற ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்போம்,'' என்று வழங்கினான்.
ஊரார் அவனை வாழ்த்தினர். அவன் மரணமடைந்த பிறகு, எமதூதர்கள் அவனை சொர்க்கத்தில் கொண்டு சேர்த்தனர்.

ஆபத்தான ஆசை!

காம்ய நாட்டில் வசித்த தேவசேனை என்னும் பருவமங்கையை பலரும் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். அழகில் அவளை மிஞ்ச யாருமில்லை. அவள் ஒரு வணிகரின் மகள். நூறு கோடி பொற்காசுகளுக்கு அதிபதி. அழகும், பணமும் உள்ள தேவசேனையின் வீட்டை மாப்பிள்ளை கூட்டம் மொய்த்தது. அவர், அந்நாட்டு சேனாதிபதிக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.
ஒருமுறை, அவ்வூர் கோயில் திருவிழா வந்தது. அரசன் அந்த விழாவுக்கு வருவது வழக்கம். அப்போது, பெண்கள் தங்கள் வீட்டு உப்பரிகையில் நின்று அரசனுக்கு மலர்மாரி பொழிந்து வரவேற்பர். சேனாதிபதியின் மனைவி என்ற முறையில், தேவசேனையும் மலர் மழை பொழிந்தாள். தற்செயலாக அவளைப் பார்த்து விட்ட மன்னன், ""இது யார் வீடு? இப்படியொரு அழகான பெண் நம் ஊரில் இருக்கிறாளா?'' என்று அவளைப் பற்றி விசாரித்தான்.
அவள் சேனாதிபதியின் மனைவி என்று தெரிந்த பிறகும், அவள் மீது ஆசை கொண்டான். இந்த விஷயம் சேனாதிபதிக்கு தெரிந்து விட்டது. தன் மனைவியை மன்னனிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு உபாயம் செய்தான்.
அவ்வூரில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அந்த மரத்திலுள்ள புதரில் ஒரு ஆண் தேவதை இருப்பதாக மக்கள் நம்பினர்.
அந்த தெய்வத்தின் மூலம் தன் மனைவியைக் காத்து விடலாம் என சேனாதிபதி முடிவெடுத்தான்.
தன் நண்பன் ஒருவனை அழைத்து, விஷயத்தை விளக்கமாகச் சொல்லி,""நீ அந்த மரத்தின் புற்றுக்குள் போய் மறைந்திரு. நான் அரசனுடன் வந்து சில கேள்விகளைக் கேட்பேன். இப்போது சொல்லிக் கொடுக்கிற பதில்களைச் சொல்லு,'' என்றான். அந்த உயிர் நண்பனும் சம்மதிக்கவே, அரசனை தற்செயலாக வெளியே அழைத்துச் செல்வது போல, அந்த மரத்தின் பக்கமாக கூட்டிச்சென்றான் சேனாதிபதி.
அந்த தெய்வத்தின் மீது அரசனுக்கு அதீத பக்தியுண்டு. மரம் அருகே சென்ற போது, ""அரசனே, நில்! உன் வேலைக்காரனின் மனைவி மீது ஆசைப்படுபவன் நீதானே,'' என்றது குரல்.
அரசன் அதிர்ந்து விட்டான்.
""தெய்வமே! ஆம்...தயவுசெய்து இதற்கு மேல் அதுபற்றி பேசாதே. எதுவும் சொல்வதாக இருந்தால் என் கனவில் தனியே வந்து சொல். மற்றவர் முன்னால் அவமானப்படுத்தி விடாதே!'' என்று பதைபதைப்புடன் சொன்னான்.
""நாட்டின் ராஜா குடிமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அதிகாரமும், செல்வமும் கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக, ஊரி<<லுள்ள பொருளையெல்லாம் உன்னுடைய உடமை என நினைக்கக் கூடாது. காட்டிலிருக்கும் சிங்கராஜாவுக்கு அங்குள்ள மிருகங்கள் உடமை. அது மிருகம். நீ மனிதனல்லவா! உனக்கு பகுத்தறியும் திறன் உள்ளதே! நீ நினைத்தால் ஆயிரம் கன்னியரைக் கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், பிறன் மனைவியை, அதிலும் உன்னை நம்பி வேலை செய்பவனின் மனைவி மீது ஆசைப்படுவது அநியாயம் அல்லவா? நீதி தவறிய நீ உயிரோடு இருக்கலாமா,'' என்றான் மரத்துக்குள் தேவதையின் வடிவில் இருந்தவன்.
"இந்த விஷயம் சேனாதிபதி மூலம் ஊருக்குள் தெரிந்து விடும்! மக்கள் தன்னை கேவலமாகப் பேசுவார்களே!' என நினைத்த அரசன், அங்கிருந்து வேகமாக கடலை நோக்கி தேரைச் செலுத்தினான். தேவதையின் உத்தரவைமதித்து கடலில் விழுந்து மாண்டு போனான்.
மன்னனுக்கு வாரிசு இல்லாததால், சேனாதிபதியிடமே ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தனர் மக்கள்.

குழந்தைகள் முன் சண்டை போடாதீர்

கணவன், மனைவியான ராஜனும், ராஜமும் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுவார்கள். அவன் பிள்ளையார் கோயிலுக்கு போக வேண்டுமென்றால், இவள் முருகன் கோயிலுக்கு போகணும் என்பாள். இவர்களுக்கு சந்திரன் என்ற ஐந்து வயது மகன். அவனை அழைக்கும் அப்பா,""டேய்! நீ அம்மா சொல்லைக் கேட்கக்கூடாது. கேட்டே முதுகெலும்பை முறிச்சு புடுவேன்,'' என்பார்.
அம்மா, இதையே கொஞ்சம் மாற்றி "காலை ஒடித்து விடுவேன்,' என்பாள்.
ஒருநாள், ரோட்டில் கிடந்த நூறு ரூபாய் தாளை அந்தச்சிறுவன் எடுத்தான். மீண்டும் கீழே வீசி விட்டான்.
இதை ஒரு துறவி கவனித்தார்.
""பணத்தை ஏனப்பா வீசினாய். உனக்கு புத்தகம் வாங்க பயன்படுமே!'' என்றார்.
""சாமி! நான் இதை வீட்டுக்குக் கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்தாலும் அடி வாங்குவேன், அம்மாவிடம் கொடுத்தாலும் அடி வாங்குவேன்,'' என்று தன் வீட்டு நிலையைச் சொன்னான். அங்கே தற்செயலாக வந்திருந்த தாய், தகப்பனுக்கு தன் குழந்தை வருந்திப் பேசுவது கேட்டது. குழந்தையின் மனநிலையை தங்கள் சண்டை எந்தளவு பாதித்துள்ளது என்பதை உணர்ந்த அவர்கள் ஒற்றுமையுடன் வாழத் தொடங்கினர்

சிலர் தாங்களும் வாழ மாட்டார்கள், மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள்

நமக்கு தேவைப்படாத பொருட்கள், புத்தகங்கள் இடத்தை அடைத்துக்கொண்டு ஷெல்பில் குவிந்து கிடக்கும். அவற்றில் சில, மற்றவர்களுக்கு தேவைப்படலாம். நாம் அவற்றை வீணாக்காமல், அவர்களுக்கு கொடுத்து உதவலாம். ஒரு கதையைக் கேளுங்க!
மாட்டுத்தொழுவத்திற்கு வந்த ஒரு நாய், அங்கே குவிந்திருந்த வைக்கோல் போர் மீது படுத்து தூங்கி விட்டது. வெளியே சென்றிருந்த மாடு திரும்பி வந்து, வைக்கோலை சாப்பிட ஆரம்பித்தது. வைக்கோலின் அசைவில் நாய் விழித்துக் கொண்டது.
""மட மாடே! என் தூக்கத்தை ஏன் கெடுத்தாய்?'' என்றது.
""இது என் இடம். என் முதலாளி எனக்களித்த உணவு இது. இதன் மேல் படுத்து இதை அசுத்தப்படுத்தியதும் இல்லாமல், கேள்வி வேறா கேட்கிறாய். போ...போ.. நீ வழக்கமாய் படுக்கும் குப்பை மேட்டில் போய் படு,'' என்று கடிந்து கொண்டது.
கோபமடைந்த நாய், மாட்டின் மீது பாய்ந்து கடிக்க ஆரம்பித்தது. கடி தாங்காத மாடு ஒதுங்கிப் போய் விட்டது.
நாயால் வைக்கோலை சாப்பிட முடியாது. இருந்தாலும், அதை விட மறுத்தது. இதுபோல் தான், சிலர் தாங்களும் வாழ மாட்டார்கள், மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள்.
இந்தக் கதையில் வரும் நிகழ்வைப் போல் இல்லாமல், உங்களுக்கு பயன்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து புண்ணியத்தை சேருங்களேன்!

வன்முறை தோற்றுப்போகும்

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது.
""என்னுடைய பலத்தால் பெரிய மரங்களைச் சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன்,'' என்றது காற்று.
சூரியன் தன் பங்கிற்கு, ""நான் இருந்தால் தான் உலகமே இருக்கும். மாலையில் நான் மறைந்ததும் மக்கள் இருளில் தடுமாறுவதைப்
பார்த்தாயா! தாவரங்கள் என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை,'' என்று பெருமை பேசியது.
இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான்.
""சூரிய வாயுக்களே! உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,'' என்றான். இரண்டும் ஒப்புக்கொண்டன.
"" நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டி, அதோ போகிறானே ஒருவன், அவனது சட்டையை அவிழுங்கள், பார்க்கலாம்,'' என்றான்.
காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனோ கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளைக் காத்து விட்டான். அடுத்து. சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. ஆனாலும், விசிறியால் தன்னைக் காத்துக் கொண்டான்.
புரிந்து கொண்டீர்களா! வன்முறை தோற்றுப்போகும் என்பதை

அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்

குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, ""டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,'' என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
ஒரு வீட்டில் இருந்த கோழியை திறமைசாலியென நினைத்த மரங்கொத்தி, வாத்து, குயில் ஆகியவை அதனிடம் பாடம் படிக்க வந்தன. ஒருமுறை, அவை பயிற்சிக்காக வெளியே கிளம்பின.
செல்லும் வழியில் கோழியிடம் குயில், ""களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடட்டுமா!'' என்றது.
""ஐயையோ வேண்டாம்! பாடினால் தொண்டை கட்டிக்கொள்ளும். பிறகு உன் அம்மாவிடம் என்னால் பதில் சொல்ல முடியாது,'' என்றது.
அவை ஒரு ஆற்றங்கரையை அடைந்தன. வாத்து கோழியிடம்,""எனக்கு நன்றாய் நீந்தத் தெரியும்! நான் இதில் நீந்தட்டுமா!'' என்றது.
''சரியாப் போச்சு! தண்ணி உன்னை அடிச்சுட்டு போயிட்டா, உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது! கப்சிப்! பேசாமல் என்னுடன் வா,'' என கண்டித்தது.
மரங்கொத்தி கோழியிடம், ""நீங்க குயிலிடமும், வாத்திடமும் சொன்னது வாஸ்தவம் தான். ஆனால், நான் என் அலகால் இந்த மரத்திலுள்ள புழுக்களைக் கொத்திப் போடுகிறேன். எல்லாரும் விருந்துண்ணலாமே!'' என்றது.
""அதுவும் வேண்டாம்'' என்ற கோழி, ""மரத்தில் கொத்தும்போது, உன் அழகான அலகு உடைஞ்சு போனா, அதுக்கு யார் பொறுப்பு?'' என்றது.
அந்தந்த பறவைகள் அதனதன் சுபாவத்தில், திறமை வாய்ந்தவையாக இருந்தும், கோழி தன்னைப் போலவே அவற்றையும் நினைத்துக் கொண்டதால், அதனதன் துறையில் மிளிர விடாமல் தடுத்து விட்டது.
இந்தக் கோழியைப் போல் இல்லாமல், அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.
புரிகிறதா!

இப்படி நம்ப முடியாத அதிசயத்தை, தினமும் நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டிருப்பவன் தான் கடவுள்

நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை. அரசவையைக் கூட்டினான்.
""அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,'' என்று உத்தர விட்டான்.
அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார். ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர். அமைச்சர் வீட்டில் பக்தி மிக்க சமையல்காரன் ஒருவன் இருந்தான். தைரியசாலியான அவன், இதற்கு பதிலளிக்க முன்வந்தான்.
""அமைச்சரே! ஒருயோசனை! பண்டிதர் வேடத்தில் நான் அவைக்கு வருகிறேன். எனக்கு தெரிந்ததை மன்னனுக்கு எடுத்துச் சொல்கிறேன். அனுமதிப்பீர்களா? '' என்றான்.
""ஆபத்திற்கு பாவமில்லை'' என்ற எண்ணிய அமைச்சரும் சம்மதித்தார்.
சமையல்கார பண்டிதரும் அவைக்கு வந்தார்.
""மன்னா! ஒரு குவளை நிறைய பால் வர ஏற்பாடு செய்யுங்கள்!'' என்றார் பண்டிதர்.
மன்னரும் பணியாளனிடம் உத்தரவிட்டார்.
பண்டிதரிடம் பால் வழங்கினான் பணியாளன்.
பண்டிதர் பணியாளனிடம், ""தம்பி! என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ இங்கிருந்து போகலாம்!'' என்றார்.
இதைக் கேட்ட அவையோர் சிரித்து விட்டனர்.
அமைச்சர் அவரிடம்,""உங்களைப் பார்த்தால் கற்ற பண்டிதரைப் போல இருக்கிறது. மன்னரின் கேள்விக்கு விடையளிக்க வந்தவர் என நினைத்தோம். ஆனால், நீங்களே எங்களிடம் கேள்விக்கணை தொடுத்தால் எப்படி?'' என்றார்.
ஆனால், மன்னனோ, ""கேட்கட்டும், கேட்கட்டும்'' என்று அனுமதியளித்தான்.
பண்டிதர் பணியாளனிடம் கேள்விகளைத் தொடுத்தார்.
""பாலின் நிறம் என்ன?''
""வெண்மை!'' .
பண்டிதர், ""இந்த பாலைக் கொடுத்தது எது?''
""அரண்மனை காராம்பசு''.
காராம்பசு என்றால்.....என இழுத்தார் பண்டிதர்
"கருப்பு நிற பசு' என்றான் பணியாளன்.
சட்டென்று காராம்பசுவுக்கு உணவாக என்ன கொடுப்பாய்?
"பச்சைப்புல் அதன் அன்றாட உணவு'
""தம்பி! நன்றாக விடையளித்தாய்'' என்றார் பண்டிதர்.
பண்டிதர் நிமிர்ந்தபடி, ""மன்னா! பசு தின்பது பச்சைநிறப் புல். அதன் நிறமோ கருப்பு. தருவதோ வெள்ளை நிறப்பால். ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கிறதா? இப்படி நம்ப முடியாத அதிசயத்தை, தினமும் நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டிருப்பவன் தான் கடவுள். அவனால், தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. உயிர்கள் நிற்பதும், நடப்பதும் அவன் அருளால் தான். அகிலத்தில் அவன் அன்றி ஓர் அணு கூட அசைய முடியாது. முதலுக்கும், முடிவுக்கும் காரணகர்த்தா அவனே. அவனுக்கே கடவுள் என்று உருவம் கொடுத்து கோயில்களில் வணங்குகிறோம். அவனுக்கு பெயரும் இல்லை. ஊரும் இல்லை. ஆனால், ஆயிரமாயிரம் திருநாமங்களைச் சொல்லி, திருத்தலங்களை நாடித் துதிக்கிறோம். அவன் அருளை உள்ளத்தால் உணரமுடியுமே ஒழிய, இதுதான் என்று யாராலும் ஒருபோதும் காட்ட முடியாது,'' என்று சொல்லி அவையை வணங்கினார்.
மன்னன் பண்டிதரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்தான். அனைவரும் கரகோஷம் எழுப்பினர். உணவு பரிமாறுபவன், நல்லுணர்வையும் பரிமாறியதைக் கண்ட அமைச்சர் மெய் மறந்தார்

சில சமயங்களில் பேசுவதை விட பேசாமல் இருப்பது நன்மையைத் தந்து விடுகிறது

சில சமயங்களில் பேசுவதை விட பேசாமல் இருப்பது நன்மையைத் தந்து விடுகிறது.
நியாயத்தைக் கூட, சூழ்நிலை அறிந்து பேசுவது தான் நல்லது.
இரண்டு நண்பர்கள் ஒரே நாளில் இறந்தனர். அவர்கள் நிறைய புண்ணியம் செய்திருந்ததால், ஒரே புஷ்பக விமானத்தில் ஏற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு பாம்பு தவளையைப் பிடிப்பதைப் பார்த்த ஒருவர்,""ஏ பாம்பே! அந்த தவளையைக் கொல்வது உனக்கு அநியாயமாகத் தெரியவில்லையா! அதை விட்டுவிடேன்,'' என்றார்.
கோபமடைந்த பாம்பு,"" அடேய்! தவளையை விழுங்குவது எனக்கு இயற்கையால் வகுக்கப்பட்ட நியதி. அதை மீறியா பேசுகிறாய். நீ நரகத்துக்குப் போ,'' என சாபமிட்டது.
இதைப் பார்த்த இன்னொரு நண்பன் பயந்து போய், ""பாம்பே! நீ செய்வது முற்றிலும் சரி..இயற்கைக்கு உட்பட்டு நடப்பதே முறையானது. நீ தவளையை விழுங்குவது சரிதான்,'' என்றான்.
உடனே தவளைக்கு கோபம் வந்து விட்டது.
""இரக்கமற்றவனே! என் சாவு உனக்கு சரியாகப் படுகிறதா! ஒருவரை இன்னொருவர் இம்சை செய்வது கண்டு ஆனந்தப்படுபவனாக இருக்கிறாயே! நீ நரகம் போவாய்,'' என சாபமிட்டது.
பாவம்...சொர்க்கத்துக்கு செல்ல வேண்டிய இருவருமே நரகத்துக்குப் போய் விட்டார்கள். இயற்கையோடு ஒத்துப்போக வேண்டும் என்பது இப்போதாவது புரிகிறதா

சாஸ்திர வல்லுநர்களை "பழைய பஞ்சாங்கம்' என்று ஒதுக்கக்கூடாது

ஒரு திருடன் காவலர்களிடம் சிக்கிக் கொண்டான். அவனை விசாரிக்க அரண்மனை நீதிசபை கூடியது. அரசர் நீதிபதியாக இருந்தார்.
வழக்கறிஞர் அரசரிடம்,""இந்த திருடனிடம் அவன் திருடியதற்கான காரணம் பற்றி விசாரித்தேன். அவன் நல்ல பணியில் இருந்தான். ஏதோ சூழ்நிலையில் வேலையை இழந்து விட்டான். குடும்ப வறுமை காரணமாக அவன் திருடியிருக்கிறான். அவனை விட்டு விடுவதே முறையானது,'' என்று வாதிட்டார்.
அரசுத்தரப்பு வழக்கறிஞர் எழுந்தார்.
""அரசே! திருடனுக்காக வாதிட்டவர் பேசுவது தர்மப்படி போல தோன்றலாம். ஆனால், சட்டப்படி நியாயமல்ல. ஒருவன் திடீரென வேலை இழந்தால், வேறு வேலையைத் தான் தேட வேண்டும். கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். திருட்டில் இறங்குபவர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டியவரே!'' என்று வாதிட்டார்.
அரசரும் அவரது வாதத்தை ஏற்று திருடனுக்கு தண்டனை விதித்தார். இதுபோல் தான், சாஸ்திரங்கள் பல கட்டுப்பாடுகளை மனிதனுக்கு விதித்துள்ளன. அது பழசு என்பதற்காக அதிலுள்ள நியாயங்களை ஒதுக்கி விடக்கூடாது. சாஸ்திர வல்லுநர்களை "பழைய பஞ்சாங்கம்' என்று ஒதுக்கக்கூடாது. சாஸ்திர சம்பிரதாயங்களிலுள்ள நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மனிதனின் கடமை.

மனிதன் பலவீனங்களுக்கு ஆட்பட்டவன். கடவுளோ நிலையான தன்மை உடையவர்.

நான் தான் பெரிய ஆள்...என்னை வெல்ல யாருக்கு சக்தியுண்டு, என் பணமென்ன, அந்தஸ்தென்ன!
மாடமாளிகைகள் என்ன! கூடகோபுரமென்ன!' என்று அகம்பவமாக பேசிக்கொண்டு, இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எத்தனையோ பேர். கடவுள் தான் உலகில் உயர்ந்தவர் என்பதை இவர்கள் ஏனோ மறந்தே போகிறார்கள்.
சுந்தன், உபசுந்தன் என்ற அரக்க சகோதரர்கள், தங்கள் பலத்தைக் கொண்டு தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தினர். பிரம்மாவை எண்ணி கடும் தவத்தில் ஆழ்ந்து, நான்கு முக பிரம்மாவை வரவழைத்தனர்.
""குழந்தைகளே! உங்களுக்கு என்ன வரம் வேண்டும், கேளுங்கள்!'' என்றார் பிரம்மா.
""ஐயனே! நாங்கள் என்றும் சாகாமல் இருக்க வரம் வேண்டும்,'' என்றனர்.
""பிள்ளைகளே! அது நடக்காத காரியம். இயற்கைக்கு புறம்பான ஒன்றை வரமாகத் தர முடியாது. நீங்கள் நினைப்பது போல் நீண்டநாள் வாழலாம். ஆனால், ஏதோ ஒரு வகையில் நீங்கள் மரணத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்,'' என்றார்.
அவர்கள் புத்திசாலித்தனமாக,""எங்கள் மரணம் எந்த தெய்வத்தாலும், தேவராலும், மிருகத்தாலும், இன்ன பிறவற்றாலும் நிகழக்கூடாது. எங்களை நாங்களே தான் அழித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு வரம் தாருங்கள்,'' என்றனர்.
பிரம்மா சம்மதித்தார்.
தங்களுக்கு அழிவில்லை என்று இறுமாந்திருந்த அந்த அசுரர்கள் செய்த கொலைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் அளவே இல்லாமல் போனது. இதுபற்றி பிரம்மாவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர், தேவலோக சிற்பியான மயனை அழைத்தார்.
""சிற்பியே! இவ்வுலகில் இதுவரை பிறக்காத பேரழகுடன் கூடிய ஒரு பெண் சிலையைச் செய்,'' என ஆணையிட்டார். மயனும், அவ்வாறே ஒரு சிலையை வடிவமைத்தார். அந்த சிலைக்கு உயிரூட்டிய பிரம்மா, அவளுக்கு "திலோத்தமா' என்று பெயரிட்டார்.
அவளை அரக்கர்கள் அடிக்கடி நடமாடும் கானகப்பகுதிக்கு செல்லுமாறு பணித்தார். திலோத்தமாவும் காட்டிற்குச் சென்றாள். அப்போது சுந்தனும், உபசுந்தனும் அங்கே வந்தனர். பேரழகு பெட்டகமான திலோத்தமையைக் கண்ட அவர்கள் அவள் மீது ஆசை கொண்டனர்.
சுந்தன், ""இவள் எனக்குத்தான், நீ போய் விடு,'' என உபசுந்தனை விரட்டினான். அண்ணனுக்கே எதிலும் முதல் பங்கு என வாதிட்டான். உபசுந்தனோ, ""தம்பிக்காக விட்டுக்கொடுப்பது தான் அண்ணனின் கடமை. அண்ணன் என்பவன் தந்தைக்குச் சமம்,'' என்றான்.
இருவரது வாய்தகராறும் கைகலப்புக்கு சென்று, கடும் போராக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு மரணமடைந்தனர்.
இப்போது புரிகிறதா! மனிதன் பலவீனங்களுக்கு ஆட்பட்டவன். கடவுளோ நிலையான தன்மை உடையவர். அவரே பெரியவர்.

அம்மாவுக்கு தொந்தரவு தராதீர்!

ஒரு விவசாயி தன் பசுவை வயலுக்கு உழ பயன்படுத்தினான். ஒருநாள், அதன் கன்று உடன் சென்றது. விவசாயி பசுவை ஏரில் பூட்டியதும், கன்று தன் அம்மாவிடம்,"" அம்மா! நானும் உன் கூடவே நடந்து வருகிறேனே!'' என்றது.
தன் மேல் உள்ள பாசத்தால் கன்று தன்னுடன் வர விரும்புகிறது என்று பெருமைப்பட்ட பசுவும் சம்மதித்தது.
உழவு ஆரம்பித்தது. கன்று உடன் வந்தது. மேடு பள்ளமாக இருந்த இடங்களில் கன்று தடுமாறியது. அது கீழே விழுந்து விடுமோ என்ற பயத்தில், பசு நின்று நின்று உழுதது. விவசாயிக்கோ, சீக்கிரமாக உழவை முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம்.
அவன் பசு நிற்கும் போதெல்லாம் அதை நையப் புடைத்தான். வழக்கத்தை விட அதிக அடி வாங்கிய பசு, கன்றுவிடம், ""மகளே! நீ போய் அங்கே இருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிரு. நான் உழவைப் பார்ப்பேனா! உன்னைக் கவனிப்பேனா! இவனோ என்னை நையப் புடைக்கிறான்,'' என்றது.
இந்த கன்றைப் போல, நாமும் நம் அம்மா பரபரப்பாக வேலை பார்க்கும் வேளையில், "பையை எடுத்துக்கொடு, பென்சிலை சீவு, பேனாவில் மை ஊற்றிக்கொடு, ஊட்டி விடு' என்று தொந்தரவு தரக்கூடாது. அது அவர்களின் வேலைப்பளுவை இன்னும் அதிகரிக்கும். புரிந்ததா செல்லங்களே

தலைமைக்கு கட்டுப்பட்ட கூட்டமே கடைசி வரை நிலைத்திருக்கும்

ஒரு போர்ப்பாசறையில், அன்றைய தினம் நடந்த போர் பற்றி வீரர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது படைத்தலைவர் அங்கு வந்தார்.
ஒரு வீரன் அவரிடம்""தலைவரே! இன்றைய போரில் வீரர்கள் ஆற்றிய வீரச்செயல்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்,'' என்றான்.
""அப்படியா! இன்று சாதனை புரிந்தவர் யார்?''
""தலைவரே! நம் வீரன் மல்லமாறன், எதிரிகளுடன் கடுமையாகப் போராடி கடுமையாக காயமடைந்தான். ஆனாலும், வலியைப் பொருட்படுத்தாமல் போரிட்டான். அவனே சாதனையாளன்,'' என்றான் ஒருவன்.
""இது ஒன்றும் பெரிய சாதனையல்ல! வேறு ஏதாவது சொல்லுங்கள்,'' என்ற தலைவரிடம், ""நமது வீரன் குலோத்துங்கன், தன் நண்பனைக் காக்க மார்பில் கத்திக்குத்தை தாங்கி இறந்தான். உயிரைக் கொடுத்ததை விட உயர்ந்தது எதுவாக இருக்க முடியும்,'' என்றான் இன்னொருவன்.
""போர் என்றால் காயம், உயிரிழப்பு சகஜம். வேறு ஏதாவது சொல்லுங்கள்,'' என்றார் தலைவர்.
எல்லாரும் அமைதியாய் இருந்தனர்.
படைத்தலைவரே அதற்கு பதிலளித்தார்.
""இன்றைய தினம் நம் வீரன் மார்த்தாண்டன், எதிரி ஒருவனுடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அந்த எதிரி படுகாயமடைந்து சாகப்போகிற வேளை! அவன் நினைத்தால் அவனைக் குத்திக் கொன்றிருக்கலாம். ஆனால், அந்த வேளையில் போர் நிறுத்த சங்கு ஒலித்தது. சங்கு ஒலித்தால், அந்தக்கணமே போரை நிறுத்தி விட வேண்டும் என்பது எனது கட்டளை. அதை மனதில் கொண்ட அவன், வாளை கீழே போட்டு விட்டு வெளியேறினான். தலைமைக்கு கட்டுப்பட்ட கூட்டமே கடைசி வரை நிலைத்திருக்கும்,'' என்றான்.
போர்வீரன், படைத்தலைவனுக்கு கட்டுப்படுவது போல, கடவுளுக்கு பயந்து, அவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவனே வாழ்வில் உயர முடியும்.

சொர்க்கத்தின் சாவி

பணக்கார தம்பதியான ராஜவேலுவுக்கும், மஞ்சம்மாவுக்கும் பட்டாபிராமன் என்ற மகன். அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்ற போது,""அப்பா! இல்லறத்தில் எனக்கு நாட்டமில்லை. செல்வத்தின் மீதும் பற்றில்லை. நான் துறவியாகப் போகிறேன்,'' என்றான். அதிர்ச்சியடைந்த ராஜவேலு,""நீயோ எங்களுக்கு ஒரே பிள்ளை. ஒற்றைப்பிள்ளை துறவு பூணக்கூடாது என்கிறது சாஸ்திரம். காரணம், வயதான காலத்தில் பெற்றோரை அந்தப் பிள்ளை பேணிக் காக்க வேண்டும் என்பது தான். மேலும், உன்னைப் பிரியும் சக்தி எனக்கில்லை. நீ சந்நியாசம் கொள்ளாதே. அப்படி போய்விட்டால் வயல், வரப்புகளை யார் பார்ப்பார்கள்,'' என்று கெஞ்சினார்.
பட்டாபிராமன் அதைக் கேட்கவில்லை. ஒருநாள், வீட்டை விட்டு வெளியேறி விட்டான். பெற்றோர் அழுது புலம்பினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ராஜவேலு தம்பதியர் சில காலம் தங்கள் நிலபுலன்களைக் கவனித்தனர். வயது ஏற ஏற அவர்களால் முடியாமல் போகவே, வேலைக்காரர்களே மகசூலை அள்ள ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லாவற்றையும் குறைந்த விலைக்கு விற்று செலவழித்து ஏழையும் ஆகி விட்டனர்.
முதுமையும், ஏழ்மையும் அவர்களை புரட்டி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், காட்டிற்கு சென்று தவமிருந்த பட்டாபிராமனை, அவனது ஊரைச் சேர்ந்த இன்னொரு துறவி சந்தித்தார்.
பட்டாபிராமன் ஊர் நிலவரம் பற்றி விசாரித்தான்.
""தம்பி! நீ வந்த பிறகு உன் பெற்றோரால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை. கண்டவர்களும் உங்கள் நிலத்தில் புகுந்து களவாடினர். உன் தந்தை நிலங்களை கைக்கு கிடைத்த விலைக்கு விற்றார். அது செலவாகி விட்டது. இப்போது அவர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்,'' என்றார்.
பட்டாபிராமனுக்கு மனம் நிலை கொள்ளவில்லை. குருவிடம் தனது பெற்@றார் நிலையைச் சொன்னான்.
""மகனே! நீ இத்தனை நாளும் உனக்கு பெற்றோர் இருப்பது பற்றியும், அவர்களை விட்டு வந்தது பற்றியும் ஏன் சொல்லவில்லை. நீ என்னை விட்டு சென்று விடு,'' என்று கடிந்து கொண்டார்.
பட்டாபிராமன் ஊருக்கு வந்தான். அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்த பெற்றோரை சந்தித்தான். துறவிக்குரிய இயல்புடன் பிச்சை எடுத்து பெற்றோருக்கு உணவளித்தான். ஒருநாள், குருவான துறவி ஊருக்குள் வந்தார். அவரிடம் சிலர், ""துறவியாய் இருப்பவர் பிச்சை எடுத்த உணவை உறவினர்களுக்கு தரக்கூடாது என்ற மரபை மீறி செயல்படுவதாக பட்டாபிராமன் மீது குற்றம் சாட்டினர்.
குருவோ அவர்களிடம்,""அப்படி ஏதும் சட்டமில்லை. எந்த நிலையில் இருந்தாலும் பெற்றோரைப் பாதுகாப்பவனே சிறந்த மகன். இந்தக் கடமையில் தவறுபவன் நரகத்தையே அடைவான்,'' என்றார்.
பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி இருப்பவர்கள், உடனே போய் அழைத்து வந்து, சொர்க்க வாசலின் சாவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…!!!!

இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…!!!!

"உங்கள் இந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ?"

" யார் உங்களின் உண்மை கடவுள் ? "...

"சிவனா, விஷ்ணுவா, முருகனா, விநாயகனா ?"

"இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைத்தான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

**முதலில் இந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர்.

** சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன்.

** இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

**கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

**இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான்.அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது.

**நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

**புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

**இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

சிவ வடிவம்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமக...ம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர். சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ! இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில்,நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும்இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல்பெருமான் .

தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?

 
தீர்க்காயுள் என்பது எத்தனை வருடம்?

மனிதனுக்கு முழுமையான ஆயுள் 120 என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதில் 33 வயது வரை அற்பாயுள், 66 வயது வரை மத்திமம், 67 வயதுக்கு மேல் தீர்க்காயுள், 80 வயதுக்கு மேல் மகாதீர்க்கம் என்றும் பிரிக்கின்றனர்

வசியத்திற்கு சீதேவி செங்கழுநீர் மூலிகை..!

 
வசியத்திற்கு சீதேவி செங்கழுநீர் மூலிகை..!

கோணவே சீதேவி செங்கழுநீர் வாங்க
சொல்லுகிறேன் மந்திரத்தைக் கேளு
...
மந்திரம் ஓம் ஸ்ரீம் லட்சுமிதேவி யென்று
மாறாமல் குருகுரு முன் நினைவாய் நீயே
அந்தரமாய் சொல்லியே ஆணி வேரை
அறாமல் பிடுங்கியதைத் தாமரை நூலால்

மந்திரமாய்த் திரியாக்கி வேருங் கூட்டி
இயல்பாகக் கபிலை நெய்யில் மை கூட்டி
தந்திரமாய்த் திலகமிட அரசரெல்லாந்
தாட்சியன்றி வசீகரமா இருக்குந்தானே

- கருவூரார் பலதிரட்டு ...


சீதேவி செங்கழுநீர் இம் மூலிகையை காப்புக் கட்டி, சாப நிவர்த்தி செய்து,"ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி குரு குரு சுவாஹ"என மந்திரம் செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து அதன் மேல் தாமரை
நூலால் சுற்றி காராம் பசு நெய்யில் திரி போட்டு எரித்து மையை சேகரித்து திலகமிட்டுக் (பொட்டு) இட்டுக் கொள்ள அரசரெல்லாம் வசியமாவார். அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம் :

மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம் :

ஒருமுறை, மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி, மகாபலி சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில பூஜை முறைகளை பற்றிச் சொன்னார். ஐப்பசி மாதம் - கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி. மகாபலி சக்கரவர்த்தியின் தயவில் நாம் இந்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை பெறுவோம். தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து வணங்குவது மிக சிறப்பு. நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம் என்கிறது விருக்ஷ் சாஸ்திரம். மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர...ம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம். வடக்கு வாசம் – குபேர வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள். தீபாவளி திருநாள் அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தன் பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன் சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது. தீபதிருநாள் அன்று கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பார்கள். கேதாரேஸ்வரரை வேண்டி கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின் இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம். இதனால் கேதார கௌரி நோம்பை கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலஷ்திதேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள். தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

தீபாவளி

வெளிச்சத்தின் அருமை இருட்டில் இருக்கும் போதுதான் தெரியும். இருட்டில் தட்டுத்தடுமாறும் பொழுது எங்கிருந்தாவது ஒளிர்க்காதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும் போது தீப ஒளி தோன்றாதா, அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என்று எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக ஆகவேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் என்பவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பத்திலிருந்தும், இருளிலிருந்தும் விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் துன்பத்தையே பாதையாக கொண்டு பட்டினி, உடலை வருத்திக்கொண்டு தவம், நேர்ச்சைகள் ஆகியவையாகத் தான் உள்ளன. இது மேலும் மனிதனை துன்பப்படுத்தும் அல்லவா? ஏற்கனவே துன்பப்படும் மனிதன் இன்னும் துன்பத்தை அனுபவித்து தான் நல்வாழ்வைக் காண வேண்டுமா? இதுபோன்ற பாதையைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகிறதா? மனம் மகிழ்ச்சியடைய சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் உடலை வருத்திக்கொண்டு மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகியவற்றை அடக்கும் முறையில்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை.

தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.

கங்கா ஸ்நானத்தின் தத்துவம்: தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

தீபாவளி குளியல்: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியன்று எண்ணெய்யை மனைவி தேய்த்துவிடுவது மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது. வெந்நீரில் குளிக்க வேண்டும்.

பலகாரம் படைப்பது ஏன்?: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட அன்று விடுதலையாகி வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் நரக சதுர்த்தி என்று பெயர் ஏற்பட்டது. தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நான்கு நாழிகை என்றால் 96 நிமிடம். அதாவது 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், அதிகாலை 4.20க்கு குளித்துவிட வேண்டும்.

பாசத் திருவிழா: வட மாநிலங்களில் தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வித்தியாசமான தீபாவளி வழிபாடு: ராஜஸ்தானில் தீபாவளியன்று பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இமாச்சலபிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.

சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினரும் மட்டும் கொண்டாடுவதில்லை, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

தீபாவளிக்கு குபேர பூஜை: செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பது மட்டுமல்ல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கில் கொட்டி வைத்திருக்கும் பணக்காரர்களில் பெரும்பகுதியினர் சாதாரண சர்க்கரை போட்டு டீ குடிக்கக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர். செல்வம் குவிந்து கிடந்தாலும் சாப்பிடக்கூட வழியில்லை. இதே நிலைதான் ரோட்டில் திரியும் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. உழைக்க மனம் வராததால் ஒருவன் பிச்சை எடுக்கிறான். இந்த இரண்டும் இல்லாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜை. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இவனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன். திருப்பதி தலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவன் குபேரன். இந்தக் கடனுக்கு வட்டியாக திருப்பதி கோயிலில் குவியும் உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறான். குபேர பூஜையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. சிலர் தீபாவளிக்கு முதல்நாளும், சிலர் தீபாவளி அன்றும், நடத்துகின்றனர். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் இந்த பூஜையை நடத்துவதே சிறந்தது.  வளர்பிறையில் நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். தீபாவளி அமாவாசை நாளில்தான் பெரும்பாலும் வருகிறது. எனவே, அதற்கு அடுத்த நாள் குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும்.

குபேர பூஜையை ஒட்டி தங்க நகைகள் வாங்கலாம். திருமணங்கள் எல்லா மாதங்களிலும் (சூன்ய மாதங்கள் தவிர) நடந்தாலும் ஐப்பசியில் நடத்துவது விசேஷ அம்சம். ஐப்பசியிலிருந்து குளிர்காலம் துவங்குகிறது. இதிலிருந்து கார்த்திகை, மார்கழி, தை வரை கடும் குளிர் இருக்கும். இந்தக் குளிரால் உடலில் நோய்கள் ஏற்படும். ஐப்பசியில் திருமணம் முடிக்கும் தம்பதிகள் மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பர். மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவனை எந்த நோயும் அண்டுவதில்லை. இதனால்தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர். அது மட்டுமல்ல! ஐப்பசியில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மழலைச் செல்வமும் விரைவிலேயே கிடைத்துவிடும் என்பதும் பொதுவான நம்பிக்கை. பூஜை செய்யும் முறை: கோயில்களில் யாகம் செய்யும்போது ஒரு மந்திரம் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கலாம். ராஜாதி ராஜாய பரஸ்கஞஸாஹினே, நமோ வயம்வை சரவணாய குரம்ஹே ஸமாகா மான்காம காமா யமக்யம் காமேஸ்வரோவை சரவணோததாது - குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம என்பதே அந்த ஸ்லோகம். யாகம் ஒன்றை நடத்தும்போது குபேரனை அந்த இடத்திற்கு அழைக்கின்றனர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் நடப்பதன் மூலம் ஊரே செழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். படத்தின் முன் வாழை இலை போட்டு, சாணப்பிள்ளையாரை வையுங்கள். இலையில் நெல்லை குவியலாக கொட்டுங்கள். வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் படையுங்கள்.

பின்னர் திருவிளக்கேற்றி பூஜை செய்யுங்கள். வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபடுங்கள். எனக்கு கொடுத்த இந்த வாழ்விற்கு நன்றி. இது என்றும் நிலைத்திருக்க உன் அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். வறுமையான நிலையில் இருப்பவர்கள், குபேரனே! எனது குடும்ப வறுமை நீங்கி போதுமான செல்வம் கிடைத்திட அருள் செய் என்று வேண்டுங்கள். பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வற்றாத செல்வம் வீட்டில் தங்கும். லட்சுமி கடாட்சமாய் நம் வீடு என்றும் திகழ குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்; கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா

 
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா
 
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...

"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்'
என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. 'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும்.

ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? "பித்ரூணாம்' என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள். இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக