Thursday, November 28, 2013

குரு என்பவர் யார் !!

குரு என்பவர் யார் !!

குரு மரணப் படுக்கையில் இருந்தார். அவரிடம் ஒரு சிஷ்யன் கேட்டான்: சுவாமி! உங்கள் குருநாதர் யார்? எனக்கு ஆயிரக்கணக்கான ஆசான்கள்.. இருப்பினும் மூவரைச் சொல்கிறேன். முதல் குரு ஒரு திருடன். ஒரு முறை நான் ஒரு கிராமத்தை அடைந்த போது இருட்டிவிட்டது. வீட்டுக் கதவுகள் எல்லாம் மூடியிருந்தன. கடைசியில் திருடன் ஒருவன் ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக சுவரில் கன்னமிட்டுக் கொண்டிருந்தான். நான் அவனிடம் தங்குவதற்கு இடம் கேட்க, உங்களுக்கு ஒரு திருடனுடன் தங்குவதில் ஆட்சேபணை இல்லையென்றால் என்னுடன் தங்கலாம் என்றான். அவனுடன் ஒரு மாதம் தங்கினேன். தினமும் இரவில் அவன், நான் வேலைக்குப் போகிறேன். நீங்கள் வீட்டில் தியானம் செய்யலாம்; அல்லது ஓய்வெடுக்கலாம் எனச் சொல்லிவிட்டுப் போவான். அவன் திரும்பி வந்ததும் ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன் அவன், இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், நாளை மறுபடியும் முயற்சி செய்வேன்.

கடவுள் அருள் இருந்தால் கிடைக்கும்! என்று நம்பிக்கையுடன் பதில் சொல்வான். நான் தியானம் செய்யும்போது, ஒரு பலனும் இல்லையே என பலமுறை நம்பிக்கை இழந்திருக்கி...றேன். உடனே அந்தத் திருடனின் திட நம்பிக்கை நினைவுக்கு வரும். உடனே, கடவுள் அருள் கிட்டினால் நாளை நமக்கு ஞானம் பிறக்கும் என்று உற்சாகமடைவேன்! என்னுடைய அடுத்த குரு ஒரு நாய். நான் தண்ணீர் பருக ஒரு நதிக்குச் சென்றேன். அங்கு ஒரு நாய் வந்தது. நீர் குடிக்க வேண்டி நதியை நோக்கிக் குனிந்தது. அங்கே தன் பிம்பத்தைப் பார்த்து இன்னொரு நாய் இருப்பதாக எண்ணி பயந்து. குரைத்துக்கொண்டே ஓடியது; மீண்டும் தாகத்தால் வரும், ஓடும். இப்படிப் பலமுறை செய்த பின் நதியில் குதித்தது. பிம்பம் உடனே மறைந்துவிட்டது! பயங்களை வென்று செயலில் இறங்க வேண்டும் என்பது இதன் மூலம் புரிந்தது.

மூன்றாவது ஒரு சிறுவன். நான் ஒரு ஊருக்குள் சென்றபோது, அவன் எரியும் மெழுகுவர்த்தியுடன் வந்து கொண்டிருந்தான். அவனிடம், மெழுகுவர்த்தியின் ஒளி எங்கிருந்து வந்ததென்று உன்னால் சொல்ல முடியுமா? என்று கேட்டேன், உடனே சிறுவன் சிரித்துக்கொண்டே மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்துவிட்டு, ஒரு வினாடி முன் ஒளி இருந்தது; இப்போது இல்லை. அது எங்கே போயிற்று? நீங்கள் சொல்லுங்கள்! என்றான் என்னிடம். நான் அதிர்ச்சியில் பேச்சிழந்து போனேன். மெத்தப் படித்த அறிவாளி என்ற அகங்காரம் ஒரு நொடியில் மாயமாயிற்று! அன்றிலிருந்து அகங்காரப்படுவதை விட்டொழித்தேன். சிஷ்யன் என்றால் கற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, கற்றுக் கொள்ளக் கற்றுக்கொடுப்பதே ஆசிரியரின் தலையாய கடமை என்று குரு சொல்லி முடிக்க, சீடர்கள் தெளிவடைந்தனர்

No comments:

Post a Comment