Friday, January 31, 2014

பெற்றவர்களே, கெட்ட வழக்கங்களை உடையவராக இருந்தால், பிள்ளைகளும் அப்படித்தான் வளரும்.

ஒரு ராஜாவுக்கு எதிரி ஒருவன் இருந்தான். அவனை ஆரம்பத்திலேயே அழித்து விடுங்கள் என்று மந்திரி யோசனை சொன்னார். ராஜா கேட்கவில்லை. ""இவனெல்லாம் ஒரு ஆளா! என் தகுதிக்கு முன்னால் இவன் தூசு,'' என்றார்.
இருப்பினும், மந்திரி வற்புறுத்தியதால், அவன் மீது போர் தொடுத்துச் சென்றார். அந்த எதிரி அவனைக் கண்ட மாத்திரத்தில் காலில் விழுந்து விட்டான். இப்படி பயப்படுபவனா என்னோடு மோதுவான் என்ற தைரியத்தில் ராஜா திரும்பி விட்டார்.
மந்திரியோ விடவில்லை. அவனைக் கொன்றே தீர வேண்டும் என்றார். ராஜா திரும்பவும் போருக்குப் போனார். அப்போது அவன் காலில் விழவில்லை. தலை குனிந்து நின்றான். ராஜா விட்டு விட்டார். இப்படியே, நான்கைந்து தடவைகள் அவனைக்
கொல்லும் நோக்கில் போக, அவனோ பணிந்து போனதால் கொல்லும் எண்ணத்தை விட்டு விட்டார்.
கடைசியாக, ஒருநாள் அவன் ராஜாவின் அரண்மனைக்குள் புகுந்து விட்டான். ராஜாவை போருக்கு அழைத்தான்.
""நான் இப்போது உம்மை விட வலிமையானவன் ஆகிவிட்டேன். முடிந்தால் போரிட்டு பாரும்,'' என்றான்.
மந்திரியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ராஜா உணர்ந்தார். அவனோடு போரிட்டார். அவனோ கடுமையாகப் போராடி, அவரது கை, கால்களை வெட்டி விட்டான்.
யார் அந்த எதிரி தெரிகிறதா?
கெட்ட பழக்கங்கள் தான் அந்த எதிரி. ராஜா கெட்ட வழக்கங்களுக்கு ஆளாகியிருந்தார். அந்த வழக்கங்களை எதிரியாக உருவகம் செய்து, மந்திரி எச்சரிக்கை விடுத்தார். ராஜாவோ கேட்கவில்லை. கடைசியில், அந்த வழக்கங்களே அவரை ஊனமுள்ளவராக்கி விட்டது. இதுபோல் தான், குழந்தைகளை கெட்ட வழக்கங்கள் அண்டாமல், பெற்றவர்கள் இளமையிலேயே கவனித்துக் கொள்ள வேண்டும். பெற்றவர்களே, கெட்ட வழக்கங்களை உடையவராக இருந்தால், பிள்ளைகளும் அப்படித்தான் வளரும்.
"டிவி பார்க்காதே' என்று பிள்ளைகளைக் கண்டிப்பவர்கள், தாங்களும் பார்க்காமல் இருக்க வேண்டுமல்லவா!

No comments:

Post a Comment