Wednesday, February 19, 2014





அகங்காரத்தின் கதை

ஒரு மனிதன் தன் பிறப்பிலிருந்து தன்னை ஏதோவொன்றுடன் அடையாளப்படுத்த முனைகிறான்! ஏனேனில் பிறப்பு வெளியுலகத்துடன் தொடர்பு பட்டது! ஏதோவொன்றுடன் நாம் தொடர்புகொள்ளும் போது நம்மை அதிலிருந்து பிரிந்து காண முனைகிறோம், அங்கு நான் வேறு, இது வேறு எனும் நிலை உண்டாகிறது அந்தப் புள்ளியில் நான் எனும் அகங்காரம் ஆரம்பமாகிறது. இந்த அகங்காரம் உண்மையான நான் எனும் ஆத்மாவின் பிம்பமாகிறது, இதுவே மனிதனை ஆ...ளத்தொடங்குகிறது. அதிலிருந்து தன்னை சூழ உள்ளவற்றுடனும், சுய அனுபவத்துடனும், புலனறிவுடனும் ஒப்பீட்டு தனது பார்வையினை (Perception) வடிவமைத்து கொள்கிறது. பின்பு மற்றப்பொருட்களை தன்னுடன் தன் அனுபவத்துடன் ஒப்பீட்டு அனுமானித்துக் கொள்கிறது.

குழந்தையை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படுதிறது, பின்பு அந்தக்குழந்தை அந்தப்பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறது, அந்தப்பெயரினைக் கூப்பிட்டால் தீரும்பிப்பார்க்கிறது. சுய அஹங்காரத்தினை பெயரின் மூலம் அடையாளப்படுத்துகிறோம். பின்பு அந்த குழந்தை மற்றவர்களால் அன்பு, பாராட்டு, கவனிப்பு என்பவற்றால் தன்னை மதிப்புடையவனாக உயர்ந்தவனாக உயர்கிறது. இவ்வாறு தனது சுய அஹங்காரத்தினை நல்லது கெட்டது என்று குணத்துடன் அடையாளப்படுத்தி, நான் நல்லவன், நீ கெட்டவன் என்று மையங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த மையங்களில் நின்றுகொண்டு எமது சூழலை, மற்றவர்களை, அறிவை எமது மனத்தின் மூலம் அறிகிறோம், கற்கிறோம், இதன் மூலம் எம்மை சுற்றி ஒரு வட்டத்தின் ஆரையை உருவாக்கிறோம், அறிவு கூடக்கூட ஆரை கூடுகிறது, அந்த மையத்திலிருந்து தூர செல்ல செல்ல அஹங்காரம் எனது பெயர், ஜாதி, மதம், இனம், கல்வி, ஆறிவு, செல்வம், புகழ், அதிகாரம் என பல அடுக்குகளை உருவாக்குகிறது. இப்படி உருவாக்கிய பின் நாம் ஒருவித தற்காலிக திருப்தியுடையவர்களாகிறோம். பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாகிறோம். அஹங்காரத்தின் அடிப்படை பயம்! இனி உருவாக்கிய வட்டத்தினை பாதுகாக்க வேண்டும், யாராவது அசைத்துப்பார்த்தால் அதை எதிர்க்க, பாதுகாக்க வேண்டும்.

இதற்காக இனி எம்மைப்போல் யார் இருக்கின்றார்கள் எனத்தேடல் தொடங்குகிறது! குழுக்கள் சேரத்தொடங்குகிறோம், நான் இந்த ஜாதியை சேர்ந்தவன், நான் இந்த மதத்தை சேர்ந்தவன், நான் இந்த இனத்தை சேர்ந்தவன், நான் இந்தக்கருத்தை சேர்ந்தவன் என நான் - நாம் ஆகிறது. இப்படி சேர்ந்த கூட்டம் தமக்குள் ஒரு ஒற்றுமையிருப்பதாகவும் மற்றையவர்கள் தமக்கு எதிரானவர்களாகவும் தமக்குள்ளே கற்பித்து , கட்டியெழுப்பபட்ட அஹங்காரம் உடை பட்டுவிடும் என்ற சுயபயத்தினை குழும பயங்களாக்குகிறது, மேலும் அதிகரிக்க செய்கின்றது. இப்போது தாக்குதல்கள் ஆரம்பிக்கிறது! குழுக்கழுக்கிடையே மோதல், இனங்களுக்கிடையே மோதல், மொழிகளுகிடையே மோதல், கருத்து மோதல் என பிளவுகள் ஆரம்பிக்கின்றது. இது அஹங்காரத்தின் ஒருபக்கம்!

மறுபக்கம் பணிவு, அன்பு, ஒழுக்கம் என வேறுபடுகின்றது. இந்த அகங்காரம் ஆக்கபூர்வ அகங்காரம். சில நேரங்களில் இதுவும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லைத்தான்!

இப்படியாக ஒவ்வொரு அடுக்குகள் கூடிக்கொண்டு போக நாம் சுயமாகிய ஆத்மாவிலிருந்து அதன் பிம்பமாகிய அகங்காரத்தினை நாமாக எண்ணி எமது உண்மை சொருபத்தினை மறக்கிறோம்.

மேலே பந்தியில் அகங்காரத்தின் அடுக்குகளைப்பற்றி பார்த்தோம், அதை விளங்குவதற்கு கீழே உள்ள படம் உதவியாக இருக்கும்.

அப்படியென்றால் அகங்காரம் தேவையா? இல்லையா? எல்ல மதங்களும் ஆணவத்தினை அழி என்கிறது! சைவ சித்தந்தம் ஆணவம், கன்மம், மாயை மும்மலங்கள் என்கிறது! சித்தர் பாடல்கள் ஆணவம் அழிதல் பற்றியல்லவா பேசுகிறது!

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.
(வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் )

ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன் காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? (பத்திரகிரியார்- மெய்ஞ்ஞானப் புலம்பல்)

இப்போது அகங்காரம் தேவையா? இல்லையா என்ற கேள்விக்கு வருவோம்? அகங்காரம் இல்லாமல் ஆக்கமுமில்லை, அழிவும் இல்லை! அதுதான் உண்மை! ஒரு சிறு செயலை செய்யவேண்டுமாயின் கூட நான் என்ற நிலையின்றி செய்யமுடியாது. அப்படியிருக்க அகங்காரமின்றி எந்தக்காரியமும் செய்யமுடியாது! அப்படியானால் சித்தர்கள் ஏன் ஆணவத்தினை விட்டொழிக்கச்சொன்னார்கள்?எப்படித்தான் விட்டொழிப்பது?

ஒருவன் வேற்று நாட்டிற்கு சென்று செல்வம் சேர்த்து, குடும்பத்தினை காப்பாற்றி, தன் கடமைகளை முடித்து விட்டான் என்றால் தனது ஊரிற்கு திரும்ப நினைக்கும் போது என்ன செய்கிறான், தனது சொத்துக்களை விற்கிறான், செய்ய வேண்டிய கடமைகளை முடிக்கிறான். பின் தனது வங்கி நிலுவையுடன் ஊரிற்கு திரும்புகிறான்.

அதுபோல் உலகில் பிறந்த ஆன்மாக்கள் தமது கடமையினை முடித்துவிட்டு அகங்காரத்தின் ஒவ்வொரு அடுக்குகளாக கழற்றி தனது சுயமான "நான்" எனும் ஆன்ம சொருபத்தினை அடைதலே யோகம் (இணைதல்) எனப்படுகிறது. இதனை சாதிக்க கூறிய முறைகளே தியானம், யோகம் எல்லாம்

No comments:

Post a Comment