Friday, February 21, 2014

வீண் பேச்சு பேச மாட்டேன்


வீண் பேச்சு பேச மாட்டேன்

சோமபுரி என்னும் நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் காரணம் இல்லாமல் வளவளவென்று பேசுவார். வீண் பேச்சுப் பேசுவதால் நன்மை விளையாது, தீமைதான் விளையும் என்பதை அரசரிடம், எப்படிச் சொல்வது? என்று தயங்கினார் அமைச்சர்.
வழக்கம் போல அமைச்சர், அரசருடன் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது, பறவைக் குஞ்சு ஒன்று கத்திய படியே மரத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்தக் குஞ்சு ஏன் கீழே விழுந்தது? என்று அண்ணாந்து பார்த்தார் அரசர். கூடு ஒன்றில் தாய்ப் பறவை இருப்பது ...தெரிந்தது. வியப்பு அடைந்த அவர், அமைச்சரே தாய்ப் பறவை இந்தக் குஞ்சை ஏன் கீழே தள்ளியது? என்று கேட்டார். வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்த அமைச்சர், அரசே! இந்த பறவை குஞ்சு, தேவை இல்லாமல் பேசியது. வீண் பேச்சுப் பேசியதால், இந்த நிலைக்கு ஆளானது, என்றார். நீர் சொல்வது எனக்கு விளங்கவில்லையே... என்றார் அரசர்.

அரசே! கீழே விழுந்தது குயில் குஞ்சு. அது காக்கையின் கூடு. காக்கைக்குத் தெரியாமல் குயில் ஒன்று அந்தக் கூட்டில் முட்டை இட்டது. காக்கை தன் முட்டைகளுடன் சேர்ந்து குயிலின் முட்டையையும் அடைகாத்தது. முட்டைகளில் இருந்து காக்கைக் குஞ்சுகளுடன், குயில் குஞ்சும் வெளியே வந்தது. குயில் குஞ்சையும், தன் குஞ்சு என்று நினைத்தது காக்கை. அதற்கும் உணவு தந்து காப்பாற்றி வந்தது. இந்தக் குயில் குஞ்சு பேசாமல் இருந்திருந்தால் இந்தத் துன்பம் வந்திருக்காது. தேவை இல்லாமல் பேசியது. குரலைக் கேட்டதும் குயிலின் குஞ்சு என்ற உண்மை காக்கைக்குத் தெரிந்தது. கூட்டைவிட்டுக் கீழே தள்ளி விட்டது. இனி இந்தக் குஞ்சால் காக்கையின் கூட்டிற்கு மீண்டும் செல்ல முடியாது. இப்படியே துன்பப்பட வேண்டியதுதான். தேவை இல்லாமல் வீணாக யார் பேசினாலும் இப்படித் தான் துன்பப்படுவர், என்றார். தன்னைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது அரசருக்குப் புரிந்தது. அமைச்சரே! இனி நான் வீண் பேச்சு பேச மாட்டேன், என்றார். அவர் சொன்னதை கேட்ட அமைச்சர் மகிழ்ச்சி அடைந்தார்




No comments:

Post a Comment