Saturday, February 22, 2014

இக்கரைக்கு அக்கரை பச்சை!

சவுபரி என்ற முனிவருக்கு உலகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மெய்யான இறைவனைக் காண வேண்டும் என, கடலுக்கடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார். பத்தாயிரம் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வந்து, பழங்கள், கிழங்குகளை சாப்பிட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் போய்விடுவார். ஒருமுறை, அவர் கண் விழித்த போது, பெரியதும், சிறியதுமாக 200 மீன்கள் கொண்ட கூட்டம் அவர் இருந்த இடத்தைக் கடந்தது.
<உடனே சவுபரிக்கு, ""ஆகா! இந்த மீன்கள் குடும்பமாக செல்லும் அழகே அழகு. நாமும் இல்லறத்தில் இருந்திருந்தால், மனைவி, குழந்தை, பேரன், பேத்திகள் என சந்தோஷமாக இருந்திருக்கலாமே!'' என எண்ணினார். கடலை விட்டு வெளியே வந்து, மாந்தாதா என்ற மன்னனிடம் போய் பெண் கேட்டார். அந்த மன்னனுக்கு 50 பெண்கள். வயதான அவருக்கு பெண் கொடுக்க விரும்பாத அவன், ""சுயம்வரம் நடத்தியே என் பெண்களுக்கு திருமணம் முடிப்பேன். அதுவே, எங்கள் மரபு'' என்று தட்டிக்கழித்தான்.
அதற்கு தயார் என்ற சவுபரி, மன்மதனைப் போன்ற இளைஞனாக உருமாறி, அந்தப் பெண்கள் முன் வந்தார். ஐம்பது பேருமே அவர் அழகில் மயங்கி, திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தலா 50 பிள்ளைகள் பிறந்தனர். அவர் பார்த்த மீன் கூட்டத்தை விட, பத்து மடங்கு அதிகமாகவே பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்தார்.
திடீரென ஒருநாள், இல்லற வாழ்வில் வெறுப்பு வந்தது. ""அடடா...பெண்டாட்டி...பிள்ளைகள் என இது என்ன வாழ்க்கை! கடலிலேயே இருந்திருக்கலாம். இதற்குள் கடவுளின் காட்சி கிடைத்து மோட்சம் போயிருக்கலாம்,'' என நினைத்தவர், திரும்பவும் கடலுக்கே போய்விட்டார்.
ஓரிடத்தில் இருக்கும் போது, இன்னொரு இடம் சுகமாய் இருக்கும். இன்னொரு இடத்திற்குப் போனால், பழைய இடமே தேவலை என்ற மனம் அலைபாயும். இது தான் மனசு! கஷ்டநஷ்டம் இருந்தாலும், ஒரே இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது என்றைக்குமே நல்லது.

No comments:

Post a Comment