Wednesday, February 19, 2014

ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர்





நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.

ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகை...யில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

"அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"
- அகத்தியர் -

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
நம்ம்பிக்கையும், ஆர்வமும், அவசியமும் உள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சித்துப் பார்க்கலாமே!

No comments:

Post a Comment