Saturday, February 22, 2014

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம்.

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம். நெருக்கடி மிகுந்த விட்ட இந்தக் காலத்தில், பஸ்சில் செல்லும் போது, ஒருவன் தெரியாமல் நம்மை மிதித்து விட்டால் கடுமையாக வலிக்கத்தான் செய்கிறது. அதை அவனிடம் இதமாகச் சொல்லலாமே தவிர, அவன் மீது கை நீட்டினால், பிரச்னை பெரிதாகத்தான் செய்யும்.
ஒரு இளைஞன், குரு ஒருவரிடம் வந்து, ""ஐயனே! தாங்கள் எனக்கு கடவுளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்,'' என்றான்.
""சீடனே! இதுபற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், நான் சொல்லும் விதிமுறைகளின்படி, கடுமையான விரதம் இருக்க வேண்டும். அந்த விரதத்தை நீ சரியாகப் பூர்த்தி செய்து விட்டதாக நான் கருதினால், உபதேசம் செய்வேன்,'' என்றார். இளைஞனும் சம்மதித்தான்.
குரு சொன்னதற்கும் ஒரு படி மேலே போய், மிகுந்த சிரத்தையுடன் விரதமிருந்தான். விரதம் முடிந்த மறுநாள் காலை நதியில் நீராடினான். கரையேறிய போது, அவ்வழியே வந்த ஒருவன் தான் சுமந்து வந்த குப்பையை சீடன் மீது கொட்டி விட்டான். சீடனுக்கே வந்ததே ஆத்திரம்! பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அடி விட்டான். ""என்னை அசுத்தப்படுத்தி விட்டாயே, பாவி,'' என திட்டிவிட்டு, மீண்டும் நீராடி குருவிடம் வந்தான்.
குரு அவனிடம், ""இன்று நடந்தது என்பதைச் சொல்,'' என்றார். நடந்த விஷயத்தை அப்படியே தெரிவித்தான் சீடன்.
""சரி...நீ மேலும் மூன்று மாதம் விரதத்தை தொடர வேண்டும்...போய் வா,'' என்றார்.
சீடன் ஒன்றும் புரியாமல், அவர் சொன்னபடியே விரதம் இருந்து முடித்தான். முன்பு போல், நதியில் நீராடி விட்டு, கரையேறிய போது, முன்பு வந்த அதே நபர், அவன் மீது தற்செயலாக குப்பைக்கூடை விழுவது போல், கொட்டித் தீர்த்தான். இப்போதும் சீடனுக்கு ஆத்திரம்.
""முட்டாளே! முன்பு ஒருமுறை இப்படித்தான் செய்தாய். இப்போதும் இப்படியே செய்து விட்டாயே,'' என்று திட்டித்தீர்த்தான். ஆனால், அடிக்கவில்லை.
குருவிடம் வந்தான். அவர் அவனிடம் அன்றைய தின நிகழ்வை விசாரித்து விட்டு, விரதத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்தார்.
விரதம் முடிந்து, அன்றும் குளிக்கச் சென்றான். அன்றும் அதே நிகழ்வு...ஆனால், சீடன் குப்பைக்காரனைத் திட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை.
""அப்பனே! நீ எனக்கு பொறுமை என்றால் என்னதென்று கற்றுத்தர உதவியாக இருந்தாய். ,'' என்று சொல்லிவிட்டு, குருவிடம் சென்றான்.
நடந்ததை அறிந்த குரு,""சீடனே! குப்பையுடன் அனுப்பிய ஆள் என்னுடையவன். நான் தான் உன் மேல் குப்பையைக் கொட்டுமாறு செய்தேன். கடவுளை அறிய விரும்புபவனுக்கு கோபம் கூடாது. சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும். அதைக் கற்றுக்கொடுக்கவே இவ்வாறு தேர்வு வைத்தேன்,''என்றார்.
அன்று முதல் கடவுளைப் பற்றிய பாடத்தையும், அவனுக்கு ஆரம்பித்து விட்டார்

No comments:

Post a Comment