Sunday, March 9, 2014

உங்கள் முகத்தில் தான் முதன்முதலாக இன்று விழித்தேன்

மன்னர் மார்த்தாண்டவர்மன், உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்தான். அரண்மனை வாசலைக் கடந்த ஒரு பிச்சைக்காரனைக் கண்ட மன்னன், வெறுப்புடன் முகத்தை வேகமாகத் திருப்பினான்.
அதனால், உப்பரிகையில் இருந்த கல்தூண் மீது தலை இடித்து ரத்தம் கசிந்தது. அவனுக்கு கோபம் கொப்பளித்தது. பிச்சைக்காரனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்ற எண்ணம் உண்டாக, அரண்மனை சேவகர்களை நோக்கி, ""தெருவில் செல்லும்
பிச்சைக்காரனை பிடித்து வாருங்கள்!'' என உத்தரவிட்டான். அவர்களும் இழுத்து வந்தனர்.
அவர்களிடம், ""இந்த பிச்சைக்காரன் முகத்தில் விழித்ததால், தான் எனக்கு இந்த கதி நேர்ந்தது. இவனை உடனே சிரச்சேதம் செய்யுங்கள்,'' என கர்ஜித்தான்.
பிச்சைக்காரனோ கடகடவென சிரித்தான்.
மன்னனுக்கு கோபம் தலைக்கேறியது.
""ஏன் சிரிக்கிறாய்? பைத்தியம் பிடித்து விட்டதா?'' என்று கேட்டான்.
""மன்னா! தாங்கள் என் முகத்தில் விழித்ததால், தூணில் இடித்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால், நானோ உப்பரிகையில் நின்றிருந்த உங்கள் முகத்தில் தான் முதன்முதலாக இன்று விழித்தேன். அதனால், உயிரையே விடப் போகிறேன்,'' என்றான் ரொம்பவும் சாதாரணமாக.
மன்னனுக்கு சுருக்கென்றது. மனமும் மாறியது. அவனுக்கு நல்ல உணவும், உடையும் வழங்க ஆணையிட்டான்.

No comments:

Post a Comment