Sunday, March 30, 2014

தியானம்

தியா என்றால் ஒளி, விளக்கு, பிரகாசம் என்று பொருள். அயானம் என்றால் சுபாவம், இயற்கை அல்லது இயல்பு என்று பொருள். ஒளியை இயல்பாக உடைய ஆன்மாவை அடைதல் அல்லது ஒளியை இயல்பாக அடைதல் என்பதே பொருள். பரம்பொருளாகிய இறைவன் ஒளிமயமானவர் என்று அனைத்து மதங்களும் சொல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். எனவே... பொதுவான பொருள் என்னவென்றால் நம் இயல்பான சுபாவமான ஒளியை அடைதல் என்பதே. ஆன்மாவை விட்டு விலகி இருப்பது அஞ்ஞானமாகிய இருளாகும். ஆன்ம ஒளி நம் அறிவில் பிரகாசிப்பது ஞானமாகும். உலகில் மற்ற எல்லா இடங்களிலும் ஜெபம், பிரார்த்தனை மூலமாகவே ஒளியாகிய இறைவனை அடைய முயற்சி செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் தோன்றிய ரிஷிகளே மனதை ஒடுக்கி அதன் மூலம் தியானத்தை அடையும் உபாயத்தை கண்டறிந்து கடைபிடித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மேல் நாட்டினர் கூட நம் தியானத்தின் அருமையை உணர்ந்து அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதைக்குறித்து அவர்கள் நிறையவே ஆராய்ச்சி செய்கிறார்கள். தியானம் செய்யும் போது உடல் ஆரோக்யத்திற்கும், மன ஆரோக்யத்திற்கும் உகந்த அலைகள் நம் உடலில் உருவாகி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த அலைகள் மூளையிலிருந்து உருவாகி எழுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மூளையில் இருந்து உருவாகும் அலையை அவர்கள் நான்காக வகைப்படுத்தியுள்ளனர்.
டெல்டா - 0.5 to 4 Hz/Sec. இந்த அலை ஆழ்ந்த தூக்கத்தின் போது உருவாவது.
தீட்டா - 4 to 7 Hz. இந்த அலை கனவுநிலையில் தோன்றுவது.
ஆல்பா - 8 to13 Hz. இந்த அலை தியானத்தின் போது தோன்றுவது. இந்த அலைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்க முடிகிறது.
பீட்டா - 13 to 30 Hz. இந்த அலை ஆழ்ந்த தியானத்தில் தோன்றுவது. இதுவும் சக்திவாய்ந்த அலையாகும்.
தியானம் செய்யும் போது இந்த ஆல்பா அலை உருவாவதையும், பின்னர் விழித்த பிறகும் தொடர்ந்து இந்த அலை வந்து கொண்டே இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர். தன்னை அறிவதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் உதவுவனவாக இந்த ஆல்பா அலைகள் இருப்பதை கண்டறிந்தனர். கண்ணைத் திறந்து தியானம் செய்தால் இடது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும், கண்ணைமூடி தியானம் செய்தால் வலது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும் கண்டனர். பீனியல் சுரப்பி நன்றாக செயல்படுவதையும் கண்டு சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலில் மனித மூளையில் அலை உருவாவதை கான்ஸ் பர்ஜர் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். இந்த அலைகளை அளக்க 'இலக்ட்ரோ செபலோகிராபி' என்ற இயந்திரத்தை பயன்படுத்தினர். தியானத்தால் ஆன்மீக சக்தி வளர்வதோடு, ஆரோக்யமும், மனவளமும் மேம்படுவதை விஞ்ஞானமும் இப்போது ஒத்துக் கொள்கிறது.

சகல நோய்களும் மன வித்தியாசத்தால் உருவாகின்றன என்றும் மனநிலை மாற்றத்தால் அவைகளை குணப்படுத்தமுடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை மாற்றம் என்கிற பொழுது மனதில் எழும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து எப்பொழுதும் பரபரப்பாகக் கடல் அலைகளைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனதை அமைதியடையச் செய்வதேயாகும். எனவே முதலில் புலன்களில் வழியே கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரியும் மனதைப் பிரித்து உள் முகமாகத் திருப்பி விட வேண்டியது அவசியமாகும். பிறகு உள் முகமாகத் திரும்பிய மனதை ஒரு புள்ளியில் குவிப்பது அடுத்த கட்டமாகும். இதற்காக முதலில் வெளி முகமான பயிற்சி அவசியமாகும். இதற்காக தீபம், சுவற்றில் உள்ள சிறிய புள்ளி மற்றும் கண்ணாடிப் பயிற்சிகள் மேற்கொள்வது எளிதில் மனதின் குவிந்த நிலையை உருவாக்கித் தரும். இதைத் தாரணை என்று சொல்வார்கள். பொதுவாக தற்காலங்களில் நமக்குத் தரப்படும் தியானப் பயிற்சிகள் அனைத்துமே தாரணைதான். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் தியானம் என்பது ஒரு பாதையோ, நெறியோ அல்ல. அதையெல்லாம் கடந்த ஒரு நிலை. மனதில் எழுகின்ற எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சி தாரணை என்றால், தியானத்தில் எந்த முயற்சியும் கிடையாது என்பதை உணருங்கள்.
எனவே தியானம் என்பது உயரிய நிலை என்பதை உணர்ந்து, கடைபிடித்து உய்வோமாக.





No comments:

Post a Comment