Monday, April 21, 2014

சப்த கன்னிகைகள் யார்

சப்த கன்னிகைகள் யார்
பல ஆலயங்களிலும் நாம் சப்த கன்னிகைகள் என்ற ஏழு கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள சப்த கன்னிகைகளையும் துதித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன். பார்வதி, விஷ்ணு, பிருமா, முருகன், துர்க்கை போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே . அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள் . தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை.
அவர்கள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சிலவற்றில் அவர்கள் ஏழு கன்னிகைகள் இல்லை, அவர்கள் எட்டு (அஷ்ட ) கன்னிகாக்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுவாக உள்ள ஏழு கன்னிகைகள் சாமுண்ட, இந்திராணி, வைராலி அல்லது வராஹி , வைஷ்ணவி, கெளமாரி, மகேஸ்வரி மற்றும் பிரம்மி என்பவர்களே . அவர்கள் தோன்றியது எப்படி? அது குறித்து கூறப்படும் கதைகள் இவை.
சூரபத்மனை அழிக்க அதி சக்தி வாய்ந்த குழந்தையை பிறப்பிக்க நினைத்த சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து தெறித்த கனலில் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்களை அப்போது அங்கு வந்த ஆறு கன்னிகைகள் கவனித்துக் கொண்டனர். அதைக் கண்ட பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குழந்தையாக- முருகனாக - ஆக்கினாள். அந்த ஆறு குழந்தைகளையும் கவனித்துக் கொண்ட கன்னிகைகளை நட்ஷத்திரங்களாக மாற்றினாள். மேலும் அவர்கள் முருகன் பிற்காலத்தில் செய்ய உள்ள ஒரு யுத்தத்தில் அவருக்கு துணையாகப் போராடும் யுத்த கன்னிகைகளாக இருப்பார்கள் என்பதற்காக அவர்களை அப்படியாக மாற்றினாளாம். அவர்களே பார்வதியினால் ஏற்படுத்தப்பட்ட ஏழு கன்னிகைகள்.
இன்னொரு கதையின்படி கார்த்திகேயர் (முருகன் ) பிறந்ததும் அவரைக் கொல்ல இந்திரன் ஏழு பெண்களை அனுப்பினார். அந்த குழந்தையின் அருகில் வந்த அந்த கன்னிகைகளின் மார்பில் இருந்து பால் சுரக்கத் துவங்கி வெளியில் வழிய குழந்தைப் பாசம் சுரந்த அவர்கள் தாம் கொல்ல வந்த அந்த குழந்தைக்கு பாலூட்டி அவரை பாதுகாத்தனர். அவர்களே பின்னர் முருகன் புரிந்த போரில் அவருக்கு துணை இருந்தவர்கள்.
மூன்றாம் கதையின்படி அந்தகாரா என்ற அசுரனுடன் சிவபெருமான் புரிந்த போரில் அவருக்கு துணை புரிய அவர் ஏழு பயங்கரமான நெருப்புக் கக்கும் கன்னிகைகளையும் படைத்தாராம். அந்தகாராவின் ரத்தம் பூமியில் விழ விழ அதில் இருந்து மேலும் மேலும் அவனுக்கு துணை புரிய அசுரர்கள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள் என்பதினால் அந்த ரத்தம் பூமியில் விழாமல் அதை ஆகாயத்திலேயே அந்த ஏழு கன்னிகைகளும் குடித்து மேலும் அசுரர்கள் உயிர் எழாமல் இருக்க வைக்க சிவபெருமான் வெற்றி பெற்றார். இப்படியாக அந்த கன்னிகைகள் சிவபெருமானுக்கு அந்த யுத்தத்தில் உதவினார்களாம்.
வாமன புராணத்தில் காணப்படும் இன்னொரு கதை இது. ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமானப் போர் மூண்டது . ராஜபிக்ஷா என்ற அசுரன் 21870 தேர்கள் மற்றும் 65610 குதிரைகள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினரை கொண்டு வந்து யுத்தம் செய்தான். அதைக் கண்ட கௌசிக்கி, காளி மற்றும் மகேஸ்வரி பயங்கர கர்ஜனை செய்தனர். அப்போது மகேஸ்வரியின் வாயில் இருந்து அன்னத்தில் அமர்ந்தபடி பிராமணி, கண்களில் இருந்து மூன்று கண்களைக் கொண்டு காளை மீது அமர்ந்து வந்த ஒருவள் , தொடையில் இருந்து மயிலில் அமர்ந்து கௌமாரி, கைகளில் இருந்து கருடனில் அமர்ந்து வைஷாலி, புட்டத்தில் இருந்து பன்றித் தலையைக் கொண்ட நாகத்தின் மீது அமர்ந்து இருந்த பயங்கரமான வராஹி, இதயத்தில் இருந்து நரசிம்ஹை , காலில் இருந்து சாமுண்டி என கன்னிகைகள் வெளி வந்தனர். அவர்களே சப்த தேவதைகள் எனப்பட்டவர்கள். ஆனால் பின்னர் அந்த தேவதைகளைப் பற்றி கூறப்படும் காட்சிகள் மற்றும் அவர்களைக் குறிப்பிடும் பெயர்களில் சில வேறாக இருந்தன .
எது உண்மையோ நமக்குத் தெரியவில்லை ,ஆனால் ஏழு கன்னிகைகளின் சிலைகள் பல ஆலயங்களில், முக்கியமாக தேவி ஆலயங்களில் சாந்தமான ரூபங்களில் ஒரே இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன. நம்பிக்கையின்படி அந்த தேவிகள் ஆலயங்களில் உள்ள அந்தந்த கடவுட்களுக்கு துணைப் புரியவே அங்கு ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்கள் எனக் கருதுகிறார்கள். ஆனால் போரில் யுத்த தேவதைகளாக அந்த கன்னிகைகள் கலந்து கொண்ட போது அவர்களின் உருவங்கள் வெவ்வேறானவையாக இருந்தன .
அவை என்ன?
பத்து கைகளைக் கொண்ட சாமுண்டா என்பவள் மனிதத் தலையை ( கபாலம்) கையில் வைத்து கொண்டு பாம்புகளை மாலையாக அணிந்து மூன்று கண்களுடனும், நரியின் மீது அமர்ந்து கொண்டு பயங்கரமாகக் காட்சி அளிப்பவள். வைராலி என்பவளுக்கு மனித உடம்பு, ஆனால் பன்றித் தலை. வஜ்ராயுதம், வாள் போன்றவற்றை கைகளில் ஏந்தியவள். வாகனம் எருமைக் கடா மாடு. இந்திராணியும் கையில் அங்குசம், மற்றும் கதையை ஏந்திக் கொண்டு யானை மீது அமர்ந்துகொண்டு வருபவள். அவளுக்கு ஆயிரம் கண்களாம். ஆறு கைகளைக் கொண்ட வைஷாலி என்பவள் கருடன் மீது அமர்ந்து கைகளில் சங்கு சக்கரம் கொண்டு கருத்த உருவில் காணப்பட்டவள். மகேஸ்வரியோ வெளுத்து காணப்படுபவள். கையில் கோடாலி, திரிசூலம் மற்றும் மத்தளத்தை வைத்து இருந்தாள். மூன்று கண்கள் மற்றும் பத்து கைகள் உண்டு. பிரம்மியோ அன்னப் பறவை மீது அமர்ந்து வராக மற்றும் அபாய முத்திரை காட்டுபவள். அவள் உடலின் நிறம் மஞ்சள்.கைகளோ நான்கு. கவுமாரியும் மஞ்சள் நிறத்தவள். ஆறு தலைகளைக் கொண்டவள். பதிமூன்று கண்களைக் கொண்டவள். ஒரு முகத்தில் மூன்று கண்கள், மற்றதில் இரண்டு கண்கள். அவளும் அபய மற்றும் வராக முத்திரை காட்டுபவள். ஆயுதத்தை தன்னுடன் வைத்து இருப்பவள்.

No comments:

Post a Comment