Friday, April 25, 2014

ராம ராஜ்யம்.........

ராம ராஜ்யம்.........
ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் 76 ஸ்லோகங்கள் உள்ளன. அற்புதமான இந்த ஸ்லோகங்களில் ஸ்ரீராமர் தனது தம்பி பரதனைக் குசலம் விசாரித்து கேட்கும் போது கேட்கப்பட்ட கேள்விகளைக் காணலாம். ராம ராஜ்யம் எப்படி அமைய வேண்டும் என்பதில் ராமரது உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்கும் ஸ்லோகங்களாக இவை அமைந்துள்ளன.
பரதனை நோக்கி ராமர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இது:-...
கச்சித் அஷ்டாதசான்யேஷு ஸ்வபக்ஷே தச பஞ்ச ச I
த்ரிபித்ரிபிரவிஞாதை வேத்ஸி தீர்த்தானி சாரகை: II
– நூறாவது ஸர்க்கம், 36வது ஸ்லோகம்.

அன்யேஷு – பிறர்களிடத்தில் அஷ்ட தச – பதினெட்டும் ஸ்வபக்ஷே – தன் பக்கத்தில் தச பஞ்ச ச – பதினைந்தும் (அதாவது மேற்சொன்ன பதினெட்டில் மந்திரி, புரோஹிதர், இளவரசு தவிர்த்து) உள்ள தீர்த்தானி – ராஜ்யாதிகாரிகளை அவிஞாதை: – ஒருவரை ஒருவர் அறியாதபடி த்ரிபி: த்ரிபி: – ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்றாக சாரகை: – வேவுகாரர்களைக் கொண்டு வேத்ஸி கச்சித் – அறிந்து வருகின்றாயா?
இங்கு ராமர் குறிப்பிடும் பதினெட்டு பேர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்:
1) மந்திரி 2) குலகுரு 3) இளவரசு 4) சேனாதிபதி 5) வாயில்காப்போன் 6) அந்தப்புர காரிய நிர்வாஹம் செய்பவன் 7) சிறைச்சாலையின் அதிகாரி 8) பணத்திற்கு அதிகாரி 9) அரசனின் ஆக்கினையை வெளியிடுவோன் 10) வியவகாரத்தைக் கேட்போன் 11) சேனைகளுக்குச் சம்பளம் முதலியவைகளைக் கொடுப்பவன் 12) நகரத்தைச் சோதித்தல், நகர பிராகாரத்தைக் காத்தல் முதலிய தொழில்களைப் புரிபவன் 13) சேனை தவிர மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதைத் தனித் தனியே பிரித்துக் கொடுப்போன் 14) அரசன், மந்திரி முதலியவர்களுக்குத் தக்க ஆசனம் அளித்தல், சபாசதர்களை வரவேற்றல், சபைக்கு வர அதிகாரமற்றவர்களைத் தடுத்தல், சபையைச் சத்தமில்லாமல் செய்தல், சபையைக் காத்தல் முதலியவற்றைப் புரிபவர்களின் தலைவன் 15) தாயாதிகளின் பாக விஷயத்தில் நேரும் வழக்கைத் தர்ம சாஸ்திரப்படி தீர்ப்பவன் 16) அரசனின் ஆணைப்படி தண்டனைகளை ஏவுபவன் 17)மலையரண், நீரரண், காட்டரண் முதலியவைகளைக் காப்பவன் 18) ராஜ்யத்தின் எல்லையைக் காப்பவன்
மிகுந்த ஆச்சரியத்திற்குரிய இந்த நிர்வாக அமைப்பு (administration set up) இன்றைய நவீன காலத்திற்கும் பொருந்துகிறது அல்லவா?
Cabinet Ministers, advisor, Minister of State, Commander, treasury, Defence, Security Judicial Officer, Prison Warder என்று இப்படி சரிக்குச் சரியான ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தால் இன்று நாம் காணும் அரசியல் நடைமுறையும், சமூக நடைமுறையும் ஒரு லட்சிய நாட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக அமைகிறதல்லவா?
நிர்வாகம் செம்மையுற நடை பெறுகிறதா, லஞ்ச லாவண்யம் இல்லாமல் நடை பெறுகிறதா என்பதைச் சரிபார்க்க மூன்று மூன்று பேரை வைத்து உளவு பார்க்கும் முறையும் சொல்லப்பட்டு இருப்பதை நோக்கும் போது லஞ்சமில்லா நாடு என்ற லட்சிய நாட்டையே நாம் பார்க்க முடிகிறது.
இது ராமராஜ்யத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டும் ஒரே ஒரு ஸ்லோகம் தான்!

No comments:

Post a Comment