Wednesday, April 9, 2014

நன்மை யாருக்கு செய்ய வேண்டும்..

நன்மை யாருக்கு செய்ய வேண்டும்..
=================================
**தருமர் கங்கை மைந்தனை நோக்கி, “நன்மை செய்ய வேண்டும் என்று கூறுகிறது தருமம். எப்படி பட்டவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்?” என்று வினவினார். அதற்க்கு பீஷ்மர் ஒரு கதையை கூறி விளக்குகிறார்.
நன்மை செய்யும் போதும் பண்பு அறிந்து செய்ய வேண்டும் என்பதை விளக்கும் கதை இது. மனித நடமாட்டம் அற்ற காட்டில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். கிழங்கு வகைகளையும், காய்களையும், கனியையுமே உண்டு முனிவருக்குரிய நியமங்களுடன் திகழ்ந்தார். கொடிய விலங்குகள் கூட அவர் தவ வலிமை அறிந்து அவருக்கு அருகில் அமைதியாகவே இருந்து விட்டுச் செல்லும். சிங்கம், புலி, கரடி போன்றவை கூட அவர் தவத்தை வியந்து அன்புடன் நடந்து கொள்ளும். இந்நிலையில் ஒரு நாய் மட்டும் அவரை பிரிய மனமின்றி அவருடனே இருந்தது முனிவரிடம் பக்தியுடன் நடந்து கொண்டது. அவருக்கு எது உணவோ அதுவே நாய்க்கும் உணவு. முனிவரிடம் அந்த நாய் சிநேக பாவத்துடன் நடந்து கொண்டது. அப்போது பசியும், தாகமும் ரத்த வெறியும் பிடித்த ஒரு சிறுத்தைப் புலி அந்த நாயை நோக்கிப் பாய்ந்து வந்தது. அது கண்டு அஞ்சிய நாய் முனிவரை தஞ்சம் அடைந்தது. “மாமுனியே! தாங்கள் தான் என்னை இந்த புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்” என வேண்டிக்கொண்டது.
முனிவர் அந்த நாயைப் பார்த்து, “அஞ்சாதே! நீ இந்த புலியிடமிருந்து தப்பி பிழைக்க ஒரு வழி சொல்கிறேன். சற்று நேரத்தில் நீ ஒரு சிறுத்தை புலியாக மாறுவாய்” என்று கூறினார். உடன் நாய் புலியாக மாறியது. சீறி வந்த சிறுத்தைப்புலி இதை கண்டு விலகி சென்றது. சிறிது நேரம் கழித்து. பெரும் புலி ஒன்று இந்த சிறுத்தை புலியை கண்டு கொல்ல வந்தது. பெரும் புலியை கண்ட அஞ்சிய சிறுத்தை முனிவரிடம் சென்று முறையிட்டது. உடன் முனிவர் அச்சிறுத்தை புலியை பெரும் புலியாக ஆக்கி அதன் அச்சத்தை போக்கினார். நாயாக இருந்து, சிறுத்தை புலியாகி பின் பெரும் புலியாக மாறியதும் அந்நாய் மாமிசத்தை உணவாக உட்கொண்டது. காய் கனிகளை அறவே விலக்கியது. கொடிய விலங்காய் மாறியது. உணவுக்காக வெளியில் சென்று விலங்குகளை கொன்று தின்று பசியாறிய பிறகு முனிவரின் ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு யானை ஆசிரமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது கண்டு புலி மீண்டும் முனிவரிடம் முறையிட்டது. கருணை கொண்ட அவரும் அதனை வலிமை மிக்க யானையாக்கினார். வந்த யானை இதை கண்டு திரும்பியது. ஆனால் யானையான நாயோ அஞ்சாமல் காடு முழுதும் உல்லாசமாக திரிந்து வந்தது. அப்படியிருக்கையில் ஒரு நாள் சிங்கம் ஒன்று மலைக்குகையில் இருந்து காடு நடுங்குமாறு கர்ஜனையுடன் வெளிப்பட்டது. சிங்கத்தைக் கண்ட யானை முனிவரை நாடியது. இப்போது மாமுனிவர் யானையை சிங்கமாக மாற்றினார். இந்த சிங்கத்தை கண்ட வந்த சிங்கம் திரும்பியது. புதிய சிங்கம் காட்டு விலங்குகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது. அதை கண்டு அஞ்சிய விலங்குகள் அந்த ஆசிரமத்தின் பக்கமே வருவதில்லை. ஆனால் வனவிலங்குகளில் வலிமை மிக்க சரபம் என்னும் மிருகம் ஆசிரமத்தின் அருகே வந்தது. அதனை எதிர்க்கும் ஆற்றல் சிங்கத்துக்குக் கூட கிடையாது. எட்டுக் கால்களுடன் நடை போட்டு அது வரும் போது அனைத்து மிருகங்களும் பயந்து ஓடும். நாயாக இருந்து சிங்கமாக மாறிய விலங்கையும் பயம் விடவில்லை. சரபத்தை கண்டதும் அது மீண்டும் முனிவரை நாடியது. முனிவரும் அதையும் வலிமை மிக்க சரபமாக்கினார். புதிய சரபம் புது தோற்றத்துடன் நிகரற்று திகழ்ந்தது. ரத்த வேட்டையாடியது. அதை கண்டு அனைத்து விலங்குகளும் பயந்து ஓடின.
புதுப்பிறவி எடுத்த சரபம், திடமான ஒரு முடிவுக்கு வந்தது. இறுமாப்புடன் தன்னையே ஒருமுறை சுற்றிப்பார்த்து கொண்டது. அந்த காட்டில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கருதிய அதற்கு ஒரு ஐயம் எழுந்தது. ஐயம் வஞ்சனையானது. வஞ்சனை கொடுமையானது. “இந்த முனிவரின் கருணையால் பல ஆபத்துகளிலிருந்து தப்பினேன். நாயாக இருந்து படிப்படியாக சர்பமாக மாறினேன். இப்போது என்னைவிட பலம் மிகுந்த விலங்கு இல்லை. இந்த முனிவர் கருணை மிக்கவர். இந்த கருணையே எனக்கு ஆபத்தாக முடியலாம். இரக்கம் உள்ள இவர் மற்ற விலங்குகள், பறவைகளைக் கூட என்னைப்போல மாற்றலாம். அப்போது எனக்கு அதிக எதிரிகள் உண்டாவார்கள். அப்படி ஏற்பாமல் இருக்க ஒரே வழி. இந்த முனிவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான். இவரைக் கொல்வது தவிர வேறு வழியில்லை.” என்று நினைத்தது.
சர்பத்தின் வஞ்ச எண்ணத்தை தன் தவ வலிமையால் முனிவர் அறிந்தார். அந்த சரபத்தை நோக்கி “தவத்தால் உயர்ந்த என் ஆற்றலை நீ உணர மாட்டாய். அனைத்து உலகும் என்னை கண்டு அச்சம் கொள்ளும். தரும நெறியிலிருந்து விலகும் யாரையும் நான் அழித்து விடுவேன். நாயாக கிடந்த நீ, சிறுத்தைப் புலியாக, பெரும் புலியாக, யானையாக, சிங்கமாக, சரபமாக மாறினாயே, அதெல்லாம் நானெல்லவா மாற்றி உன்னை ஆபத்திலிருந்து காத்தேன். கொஞ்சமும் நன்றியின்றி என்னை கொலை செய்ய தீர்மானித்தாயே! நீ மீண்டும் நாயாவாய்” என்று சபித்தார். சரபம் மீண்டும் நாயானது. ஒருவரைப் புரிந்துக் கொள்ளாமல் அவருக்கு நன்மை செய்யும் போது கூடத் தவறு நேரிடலாம். எனவே ஒருவருக்கு நன்மை செய்யும் போதும் அவரின் குணம் மற்றும் பண்புகளை ஆராய்ந்து உதவ வேண்டும் என்று கூறினார் பீஷ்மர்.
நல்லதை விரும்பாதோரும் உண்டு
================================
** “அப்படியானால் நல்லதை விரும்பாதவர்களும் உண்டா? அவர்களின் கதி என்னவாக முடியும்?” என்று தருமர் வினவ, நல்லதை விரும்புவோரும் இந்த உலகத்தில் உண்டு என்பதை விளக்க பீஷ்மர் சொன்ன கதை...
முன்னொரு காலத்தில் புரிகை என்னும் நகரில் பௌரிகன் என்னும் மன்னன் இருந்தான். முற்பிறவியில் செய்த கர்மப் பயனால் அடுத்த பிறவியில், ஒரு சுடுகாட்டில் நரியாக பிறந்தான். நரி தன் முற்பிறவியை பற்றி எண்ணி வருத்தம் கொண்டது. அது பிறர் தரும் மாமிசத்தை உண்பதில்லை. பிற உயிர்களுக்கு துன்பம் தருவதில்லை. வாய்மையே பேசி வந்தது. விரதம் நியமங்களை தவறாமல் நிறைவேற்றி வந்தது. மரத்திலிருந்து தாமே உதிர்ந்த கனிகள் தான் அதற்கு உணவு. அது விலங்காக பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சாதுக்களைப் போல் விளங்கிற்று. தான் பிறந்த சுடுகாட்டை விட்டு வேறிடம் சென்று வசிக்க அது விரும்பவில்லை.
இந்த நரியின் போக்கை கண்ட மற்ற நரிகள், நரிகளுக்கு உள்ள பொதுவான வாழ்க்கை முறையையே அது மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி கூறின. சாதுக்களுக்கு விதிக்க பட்ட ஒழுக்கத்தை விட்டுவிட்டு நீ நரிக்குரிய பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். மயானத்தில் இருந்து கொண்டு மாமிசத்தை வெறுக்க கூடாது. நாங்கள் உண்பதை உனக்கு தருகிறோம்.” என்றன. மன அடக்கமும் பொறுமையும் உள்ள அந்த நரி இனிய சொற்களால் பதில் உரைத்தது. “பிறப்புக்காரணமாக நான் நரிகளுக்கு விதிக்கப் பட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ள மாட்டேன். எந்த பிறப்பாய் இருந்தாலும் ஒழுக்கத்தை போற்ற வேண்டும். எதை செய்தால் நம் இனத்தின் புகழ் பெருகுமோ அதையே நான் செய்ய விரும்புகிறேன். சுடுகாட்டில் நான் வசிப்பது குற்றமாகாது. ஆத்மாதான் நல்ல செயல்களுக்கு காரணமாக இருக்கிறது. ஒருவர் வாழும் இடத்திற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்பு இல்லை. பிறப்பு ஒருவருடைய ஒழுக்கத்திற்கு காரணம் அன்று. ஒழுக்கம் தான் குலத்தை உயர்த்துகிறது. ஆத்மாதான் நல்ல காரியங்கலையும் கெட்ட காரியங்களையும் செய்ய தூண்டுகிறது. வசிக்கும் இடம் அன்று. ஆசிரமத்தில் இருக்கும் ஒருவன் அடாத செயல் புரிகிறான். ஆசிரமத்தில் இல்லாத ஒருவன் அறம் செய்கிறான். ஆகவே இருக்குமிடம் முக்கியமில்லை. நரியாக பிறந்ததால், சுடுகாட்டில் வசிப்பதால், மாமிசம் உண்ண வேண்டும் என்பதில்லை. ஆதலால் உங்கள் ஆலோசனைகளை என்னால் ஏற்கமுடியாது' என்று கூறிற்று.
அந்த நரியின் ஒழுக்கம் மிக்க வாழ்க்கை காடெங்கும் உள்ள விலங்குகளால் பாராட்டப்பட்டது. ஒரு அரச புலி அந்த நரியை பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்றது. அதகைய ஞானம் நிறைந்த நரியை அமைச்சராக ஏற்க விரும்பியது. நரியை நோக்கி, “நண்பனே! உன் புகழை நான் அறிவேன், என்னுடன் இருந்து விடு. எனக்கு நல்வழி காட்டு. உனக்கு என்ன வேண்டுமோ அதை உண்ணலாம். நான் பிறந்த புலி ஜாதி கொடூரமானது. ஆயினும் நீ என் இதயத்தில் இடம் பெற்று விட்டாய். என் சொல்லை மறுக்காமல் ஏற்றுக் கொள்” என்று கேட்டு கொண்டது. வலிமை மிக்க புலியை நோக்கி நரி பணிவுடன் “வேந்தனே! உன் பெருமைக்கு ஏற்ப பேசினாய். தருமத்தில் விருப்பம் உள்ளவரை நீ தேர்ந்தெடுப்பது நியாயமானதே! நீதியில் அன்பும் தருமத்தில் பற்றும் நன்மையில் விருப்பமும் உள்ளவர்களை நீ கண் போல போற்ற வேண்டும். தந்தையை போல கருத வேண்டும். உன்னுடைய செல்வத்தில் திளைத்து இன்பம் பெற நான் விரும்பவில்லை. என்னுடைய போக்கு உன்னுடைய சேவகர்களுக்கு பிடிக்காது. அவர்கள் கொடுமை செய்பவர்கள். நம்மிடையே மோதலை உண்டாக்குவார்கள். நீ நல்ல மனம் கொண்டு பாவிகளைக் கூட மன்னித்து விடுகிறாய். எல்லா நன்மைகளும் உன்னிடம் இருக்கின்றன.
ஆனால் என் நிலைமையில் நான் திருப்தியடைகிறேன். எனக்கு பதவி ஆசையில்லை. அரச சேவையையும் நான் அறியேன். அரச சேவையில் இருப்போர் பலவகையான நிந்தனைகளுக்கு ஆளாக நேரிடும். காட்டில் வசிப்பது விரத நியமங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. எனது வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. நல்ல தண்ணீர், நல்ல காய், கனி, கிழங்கு ஆகியவற்றை உண்டு விரதமேற்றிருக்கும் எனக்கு அச்சத்துடன் கூடிய அரச வாழ்வு வேண்டாம். அரச சேவையில் ஈடுபட்டு வீண் அபவாதத்திற்கு ஆளாகி நாசம் அடைந்தோர் பலர்.எனக்கு அந்த பதவி வேண்டாம்" என்றது நரி. ஆனால் புலியோ வற்புறுத்தி வேண்டிக்கொண்டது. அதனால் நரி ஒரு நிபந்தனை விதித்தது. புலியை நோக்கி, “நீ உரிய மரியாதையை என்னை சார்ந்தவருக்குத் தர வேண்டும். எனது வாழ்க்கைமுறையை நான் தொடர்ந்து மேற்கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும். நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்க மாட்டேன். காரணம் பொறாமை உள்ளவர்கள் என் ஆலோசனையைத் திரித்து கூறுவார்கள். உன் இனத்தாரின் நடவடிக்கை பற்றி என்னிடம் நீ கேட்காமல் இருக்க வேண்டும். என் யோசனைகளை புறக்கணிக்கும் அமைச்சர்களை நீ தண்டிக்கக் கூடாது. அதுபோலவே சினம் கொண்டு என்னை சார்ந்தவர்களையும் நீ எதுவும் செய்யக்கூடாது” என்று கூறியது நரி. புலியும் நரி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. பின்னர் நரி அமைச்சர் பதவியை ஏற்றது.
அமைச்சர் அவையில் இடம் பெற்ற நரி புகழத்தக்க செயல்களை செய்து வந்தது. அதனால் அமைச்சர் அவையில் இருந்த மற்ற புலிகள் பொறாமையில் புழுங்கின. கொஞ்சம், கொஞ்சமாக நரியின் செயல்களை குறை கூறத் தொடங்கின. உள்ளத்தில் பகையும், உதட்டில் நட்பும் கொண்டு பழக தொடங்கின. எப்படியேனும் நரியின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என கருதிய அவை பலப்பல கதைகளை கூறி பொருள் ஆசை காட்டி மனத்தை மாற்ற முயற்சி செய்தன. முடியவில்லை. எப்படியும் நரியை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தன. அவை அரசனான புலிக்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த மாமிசத்தை தந்திரமாக நரியின் வீட்டில் வைத்து விட்டன. அதனால் பசியுடன் இருந்த அரசனுக்கு உரிய நேரத்தில் மாமிச உணவு கிடைக்கவில்லை. அரச புலியும் திருடனை தேடி வருமாறு ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் நரியின் பகை புலிகள் அதன் மீது பழியை சுமத்தின. மாமிச உணவை, மிகச் சிறந்த மேதாவி என்று தன்னை கருதிக் கொண்டிருக்கும் உம் அமைச்சனான நரி திருடிக்கொண்டு போய் தன்னிடத்தில் வைத்துக்கொண்டது என்று கூறின.
நரியின் திருட்டுச் செயல் கேட்ட அரசப் புலி சினம் கொண்டது. உடன் நரியின் பகைப்புலிகள் “இத்தகைய அற்பத்தனமான திருட்டு நரி எதைத்தான் செய்யாது? நீங்கள் நினைப்பது போல அந்த நரி அறிவு மிக்கது அல்ல. நாணயமானதும் அல்ல. தருமம் என்னும் பெயரில் அதருமம் செய்வதில் வல்லமை மிக்க நரியை எப்படித்தான் அமைச்சராக தேர்ந்தெடுத்தீரோ!. தங்களுக்குரிய மாமிசத்தை தன் வீட்டில் வைத்திருக்கும் அந்த நரிக்கு விரதம் ஒரு கேடா? அந்த நரிதான் மாமிசத்தைத் திருடியது என்பதை நிரூபிக்க இப்போதே போய் அதனை கொண்டு வருகிறோம்” என்று கூறி அப்படியே கொண்டு வந்தன. அது கண்ட அரசப் புலி நரியை கொல்ல தீர்மானித்தது.
இதனை அறிந்த புலியின் தாய் தன் மகனை நோக்கி “மகனே, நன்கு ஆலோசித்து பார். வஞ்சனையாளர்களின் பேச்சை நம்பாதே. ஒரு வேலையை செய்பவரிடையே பொறாமை ஏற்படும். அந்த பொறாமை படிப்படியாக குரோத எண்ணத்தை வளர்க்கும். அதன் விளைவுதான் இப்போது நடப்பதும். நன்கு யோசித்துப் பார். விரத சீலமுள்ள நரியா மாமிச உணவை நாடும். திருடும். பொய், மெய் போலவும், மெய் பொய் போலவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கும். அவற்றை ஆராய்ந்து அறிதல் மன்னனின் கடமை. ஆகாயம், கவிழ்ந்த வாணலியின் உள்பாகம் போலக் காட்சியளிக்கும். மின்மினி பூச்சிகள் நெருப்பு பொறிகள் போல் தோன்றும், உண்மையில் ஆகாயத்தில் வாணலியின் தோற்றமும் இல்லை. மின்மினி பூச்சிகளிடம் நெருப்பும் இல்லை. எதையும் எண்ணி பார்த்து உண்மையை காண வேண்டும். அரசன் தன் மக்களில் யாரையும் கொல்ல முடியும். இது பெரிய காரியம் அன்று. உண்மை காண்பது தான் பெரிய செயல். உண்மையை கண்டுபிடி. பாவிகளான மற்ற அமைச்சர்களின் பேச்சை கேட்காதே. பழுது எண்ணும் மந்திரிகளின் பேச்சை கேட்டால் உனக்கு அழிவு நிச்சயம் ஏற்படும். மேலான நரியை பகைக்காதே” என்று கூறிற்று.
அரசப் புலி ஆலோசித்து பார்த்தது. நரியின் மீது பழி சுமத்துதல் தவறு என உணர்ந்து கொண்டது. நரியை அணைத்து கொண்டது. நீதி நெறி உணர்ந்த நரிக்கு மான உணர்வு மிகுந்தது. பழிக்கு பின் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்க விருப்பம் கொண்டது. ஆனால் புலி நட்பு முறையில் கண்ணீர் பெருக்கி நரியை அவ்வாறு செய்யாமல் தடுக்க முயன்றது. ஆனால் நரியோ தான் கொண்ட கொள்கையில் உறிதியாய் இருந்தது. அது புலியை நோக்கி "ஆரம்பத்தில் நீ என்னை நன்கு மதித்தாய். பிறகு பிறரின் சொல் கேட்டு பழி சுமத்தி அவமானப்படுத்தினாய். பதவியிலிருந்து நீக்கினாய். மீண்டும் பதவி பெற்றால் என் மீது உனக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? நானும் எப்படி பழையபடி நம்பிக்கை கொள்ளமுடியும்? முதலில் பாராட்டி பதவியில் அமர்த்திய பின் குறை கண்டு பழி சுமத்துதல் அரச நீதி ஆகாது. இனிமேல் நீயும் என்னிடம் பழையபடி இருக்க முடியாது. நானும் மனம் கலந்து பழக முடியாது. நண்பர்களும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். பிளவு ஏற்பட்ட பிறகு ஒன்று கூடுதல் கடினம்” என்பன போன்ற நீதிகளை கூறிய பின் புலியிடம் விடை பெற்று சென்றது நரி. ஆயினும் மன நிம்மதி இழந்து, உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்து சுவர்க்கம் அடைந்தது என்று கூறினார் பீஷ்மர். அந்த புலிகளை போல் நாம் வாழும் இந்த உலகிலும் நன்மையை விரும்பாத பலர் உள்ளனர். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தருமரின் சந்தேகத்திற்கு உரிய விடை அளித்தார் பீஷ்மர்.

No comments:

Post a Comment