Thursday, May 29, 2014

அட்சயத் திருதியை அன்று தங்கம் தானம் கொடுக்கலாமா?

அட்சயத் திருதியை என்றதுமே நகைக் கடைக்கு போய் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மனதில் உருவாகியுள்ளது. அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பது பெண்கள் மனதில் ஒரு வைராக்கியமாகவே மாறி விட்டது.

ஆனால் உண்மையில் அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு உரிய நாள் அல்ல. அன்று கண்டிப்பாக தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. பிறகு ஏன் தங்கம் வாங்கும் பழக்கமும், மோகமும் ஏற்பட்டது என்று கேட்கலாம்.

தங்கம் என்ற பொன், லட்சுமியைக் குறிக்கும். எனவே லட்சுமி வழிபாட்டில் தங்கத்தை வைத்து பிரார்த்தனை செய்தால், அது அட்சயமாக வளர்ந்து செல்வ செழிப்பைத் தரும் என்று கூறப்படுவதன் பேரில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் யாரும் தங்கம் வாங்கியதே இல்லை.

அதற்கு மாறாக தங்கத்தை தானம் செய்தார்கள். அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை அவசியம் தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதாவது தங்கம் என்பது ஒரு உயிருக்கு பிரதிநிதியாக, சம அந்தஸ்து கொண்டது. நமது உயிரை மற்றவருக்கு தானமாக தர இயலாது என்பதால் உயிருக்கு சமமான தங்கத்தை தானம் செய்வதால் நம்மையே தானம் செய்த உயர்வும், பலனும் கிடைக்கும்.

ஏழைகளுக்கு தங்கம் கொடுத்தால் அளவிடற்கரிய பலன்கள் வந்து சேரும். அது முடியாத பட்சத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, மகன், மகள் போன்ற உறவினர்களுக்காவது தங்கம் தானம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் கொடுக்க முடியவில்லையா? கவலையேப்படாதீர்கள். உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும். ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம். உணவு செய்து கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிரும் போது உங்கள் வாழ்வு குளிர்ச்சி பெறும். இப்போது கோடைகாலம்.

உச்சக்கட்ட வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே ஏழை-எளியவர்களுக்கு செருப்பு, குடை, குளிர்பானம் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. அன்று ஆடு, மாடு போன்றவற்றுக்குக் கூட உணவு கொடுத்தும், தண்ணீர் கொடுத்தும் உதவலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

இத்தகைய தானத்தால், நமது மறைந்த முன்னோர்களுக்கு ஏற்படும் தாகம் தீர்க்கப்படும். அதோடு அவர்களுக்கு மேல் உலகில் நற்கதி உண்டாகும். எனவே அட்சய திருதியை தினத்தன்று தானம், உதவிகள் செய்ய தவறாதீர்கள். தெரு ஓரங்களில் எத்தனையோ கஷ்டப்பட்டவர்களைப் பார்த்து இருப்போம்.

அவர்களில் 5 பேருக்கு நம்மால் உதவ முடியாதா? அந்த 5 பேருக்கு பசியாற உணவு கொடுத்து தாகம் தீர்க்கும் போது, அந்த பலன்கள் பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். குறைந்த பட்சம் சுய நலம் கருதியாவது இந்த தான-தர்மங்களை செய்யலாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எதுவெல்லாம் தேவை, அவசியம் என்று நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது, ஆசைப்படுவது பல மடங்கு பெருகி, உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 

No comments:

Post a Comment