Tuesday, June 17, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

இந்த உலகிலேயே மிகப்பெரிய பொய்யைச் சொல்லி, உலகத்து மக்களை நம்ப வைத்தவன் யார் தெரியுமா?

வேறு யார்? சாட்ஷாத் கண்ணபிரான்தான்.

அடேங்கப்பா... இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும், உண்மையைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் எடுத்துரைப்பதில் வல்லவனாயிற்றே அவன்!

சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால், துரியோதனன் அவனிடம் வந்து, 'யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீதான் தேதி குறித்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்து, 'வெற்றி உங்களுக்கே!' என்றான் சகாதேவன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு வந்ததே கடும் கோபம்..! ''துரியோதனன், நம்மிடம் போர் செய்வதற்காகத்தான் தேதி குறிக்கச் சொல்கிறான். நம்மை வெல்வதற்காகத்தான் நல்ல நாள் பார்த்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது, எப்படித் தேதி குறித்துக் கொடுக்கலாம் நீ? சரி... அந்தத் தேதி பொய்யான நாள்தானே?! தப்பான நேரத்தைத்தானே குறித்துக் கொடுத்தாய்?'' என்று கண்ணபிரான் கேட்டான்.

சகாதேவன் மெல்லியதாகச் சிரித்தபடி... ''ஜோதிட சாஸ்திரத்தைப் பொய்யாக எடுத்துரைப்பது பாவம்! அப்படிச் சொல்வது ஜோதிடத்தையே அவமதிப்பதாகிவிடும். ஒருநாளும் அப்படியொரு தவற்றை நான் செய்யமாட்டேன். எனவே, நான் குறித்துக் கொடுத்த தேதியில், அமாவாசை திதியில் யுத்தம் செய்தால்... துரியோதனன் நிச்சயம் வெல்வான். நானும் என் சகோதரர்களும் தோற்கலாம். ஆனால், ஜோதிடத்தை நம் லாப - நட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து வழுவாமல் இருப்பது இந்த சகா தேவனின் வேலை. கள்ளத்தனம் செய்து, தகிடுதத்தம் பண்ணி, ஜெயிக்கச் செய்வது உன்னுடைய வேலை! அதை நீ பார்த்துக் கொள்!'' என்று பளிச்சென்று முகத்துக்கு நேராகச் சொன்னான் சகாதேவன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே வந்த கண்ணபிரான், 14-ஆம் நாளான சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டான். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். 'இதென்ன குழப்பம்! நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம் செய்கிறாரே...' என்று பிரகஸ்பதியிடம் கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள். புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது... ஒன்றுமே புரியவில்லையே..?' எனத் தவித்து மருகினார்கள்.

இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணரிடமே சென்று, ''அமாவாசையன்றல்லவா தர்ப்பணம் செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். உடனே, ஸ்ரீகிருஷ்ணர், 'முதலில் அமாவாசை என்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்?' என்று கேட்டார் சிரித்தபடி. ''இதென்ன கேள்வி... சூரிய பகவானாகிய அவரும் சந்திரனாகிய நானும் சந்தித்துக் கொள்வதுதான் அமாவாசை திதி'' என்றார் சந்திர பகவான்.

''அதானே அமாவாசை? இதோ... சூரியன் - சந்திரன், நீங்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? எனவே, இந்தத் திதி அமாவாசை திதிதானே? அதனால்தான் தர்ப்பணம் செய்கிறேன்'' என்று குறும்புப் பார்வையுடன் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். அதுமட்டுமா? ''என் அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்யாதீர்கள். நான் அமாவாசை தர்ப்பணம் செய்யவேண்டும்'' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென தர்ப்பணம் செய்வதில் ஈடுபட்டார் கிருஷ்ண பரமாத்மா.

அடேங்கப்பா... ஒரு பொய்யை அழகிய நாடகத்தின் மூலம் எப்படி உண்மையாக்கிவிட்டார்! பஞ்ச பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, எப்படி எல்லாம் தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார்!

இவை அனைத்துக்கும் ஒரே காரணம்...

பாஞ்சாலிதான்! துகில் உறியும் தருணத்தில், கதறியபடி... 'கோவிந்தா’ என்று ஒரேயரு திருநாமத்தைச் சொல்லி அழைத்தாள் அல்லவா! அந்த ஒற்றைத் திருநாமம் சொன்னதற்காக, கண்ணன் பட்டபாடு கொஞ்சமா, நஞ்சமா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒற்றைத் திருநாமத்தைச் சொன்னதற்காக, கண்ணன் எப்படியெல்லாம் அன்பு செலுத்தி, வெற்றிக்கு வித்திட்டான். அப்படியெனில், சகஸ்ர நாமங்களையும் நாம் பாராயணம் செய்தால், நமக்குக் கண்ண பரமாத்மா என்னென்ன நன்மைகளையெல்லாம் செய்வான்? நன்றாக யோசியுங்கள். பகவானின் திவ்விய நாமத்தை உச்சரித்தால், அளப்பரிய பலன்களைப் பெறலாம். மறந்துவிடாதீர்கள்!

இந்த உலகம் நன்றாக இருக்கவும், உலகத்து மனிதர்கள் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று அனவரதமும் நினைத்துச் செயல்படுபவன் பகவான். இதனால்தான் அவனுக்கு லோகபந்து எனத் திருநாமம் அமைந்தது. அம்மா, அப்பா, மாமன், மைத்துனன், மனைவி, மக்கள்... என உறவுகள் எல்லோர்க்கும் உண்டு என்றாலும், அவை எதுவும் நிரந்தரமில்லை. ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இந்த லோகத்துக்குமான பந்தம், உலகம் இருக்கும் வரைக்குமான பந்தம்; என்றுமே பிரியாத பந்தம்; எல்லோர்க்கும் அனுக்கிரகிக்கிற அற்புதமான பந்தம்!

உலக மாந்தர்கள் அனைவருக்கும் பந்தமாக, சொந்தக்காரனாக இருப்பவன் என்பதால் லோகபந்து! அப்படியெனில் லோக நாயகனும் அவன்தானே! அழகிய மணவாளனாக, செங்கோல் ஏந்தியபடி இந்த உலகத்துக்கே நாயகனாக, உலகநாயகனாக இருந்து ஆட்சி செய்து வருபவன் அல்லவா, பரந்தாமன்! உலகை ஆள்பவன் கையில் செங்கோல் வைத்து ராஜ பரிபாலனம் செய்திருப்பான். ஸ்ரீரங்கத்தில் செங்கோலுடன் காட்சி தருகிறான் ஸ்ரீஅழகிய மணவாளன்! இதனால் பரம்பொருளுக்கு ஸ்ரீலோகநாதஹ: எனும் திருநாமம் அமைந்தது.

ஆக, லோகபந்து, லோகநாதன் என்று திருநாமங்களுக்கான காரணங்களைப் பார்த்தோம்.

கையில் செங்கோலுடன் பரந்து விரிந்த உலகை ஆள்பவன், எத்தனை கவலைகளுடனும் ஆவேசத்துடனும் பரபரப்புடனும் இருப்பான்? அவனிடம் கருணையை எவ்விதம் எதிர்பார்க்க முடியும்?

''அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவருடனேயே இருந்து உங்களுக்கெல்லாம் கருணையையும் அருளையும் வாரி வழங்க நானிருக்கிறேன்'' என்கிறாள் பெரியபிராட்டி.

அதுவும் எப்படி? பக்கத்திலோ அருகிலோ எதிரிலோ இருந்தால் கூட, அடியவர்களைப் பற்றி எடுத்துச்
சொல்ல சற்றே தாமதமாகும் என்று நினைத்தவள், திருமாலின் திருமார்பிலேயே குடியமர்ந்தாள். என்னே ஒரு கருணைத் தெய்வம் அவள்!

பெண்ணின் குணநலன்களால்தான் ஒரு ஆண் உயர்வு பெறுவான்; பெறமுடியும். அப்படியொரு உயர்வைப் பரந்தாமன் பெற்றதால், அவனுக்கு மாதவஹ: எனும் திருநாமம் அமைந்தது.

No comments:

Post a Comment