Tuesday, June 24, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 33

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 33

கேட்பது என்பது வேறு; உணர்வது என்பது வேறு! கேட்டதை உணர்வதாக, உணர்ந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உணர்ந்ததையும் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல், வேறுவிதமாகக் கற்பனை செய்துகொள்கிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருநெல்வேலி அல்வா ரொம்பச் சுவையாக இருக்கும் என்று ஒருவர் சொன்னால்… அதைக் கேட்டுக் கொள்ளலாம். ‘அந்தச் சுவை என்ன? உண்மையில், நெல்லை அல்வாவுக்கு இணையா வேறு எதுவும் இல்லையா?’ என்பதையெல்லாம் வெறுமே கேட்டுவிட்டுச் சொல்லமுடியாது. ஒரு விள்ளலேனும் சாப்பிட்டுப் பார்த்தால்தான், அதன் ருசியை அறிந்து நம்மால் உணரமுடியும்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்த சத்காரியங்களை உபன்யாசமாகக் கேட்கலாம். புத்தகங்களைப் படித்தும் தெரிந்து கொள்ளலாம். கேட்பதும் படிப்பதும் ஒருவித தாக்கத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தும். ‘கிருஷ்ணா… கிருஷ்ணா’ என முணுமுணுக்கச் செய்யும். ஆனால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மதுராபுரிக்கே சென்று வந்தால், இன்னும் முழுமையாக அந்தக் கோபாலனை அறிந்து உணரலாம்.
ஸ்ரீராமரின் அருமை பெருமைகளை, அவரின் சாந்நித்தியத்தை உணர வேண்டும் என்றால் அயோத்தி மாநகருக்கும், ஸ்ரீகிருஷ்ணரின் லீலாவிநோதங்களை அறிந்து தெளிய வேண்டும் எனில் மதுராபுரிக்கும் செல்லவேண்டும் என்பார்கள்.

உண்மைதான். ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதம் பட்ட பூமியில், அவன் ஓடியாடி விளையாடிய மண்ணில், நம் பாதம் படுவது எவ்வளவு விசேஷம் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பெருமைக்கு உரிய அந்தப் பூமியில் நமது காலடி பட்டால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் எத்தனைப் புண்ணியம் என்பதை உங்களால் உணரமுடிகிறதுதானே? அதனால்தான், முக்கியத் தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று ஸ்வாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் முன்னோர்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு ‘ப்ரக்ரஹ:’ எனும் திருநாமம் உண்டு. ப்ரக்ரஹ: என்றால், கடிவாளம் போட்டு, தனக்குக் கட்டுப்பட்டு வைத்திருந்தவன் என்று அர்த்தம். மதுராபுரியை அப்படித்தானே வைத்திருந்தான்! அவனுடைய ராஜாங்கமும் லீலா விநோதங்களும் விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நடந்த பூமி அல்லவா அது!

அதுமட்டுமா? மொத்த உலகையும் கட்டிக் காபந்து செய்யும் கண்ண பரமாத்மாவின் திருப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமியில், நம் கால் பட்டதும் நம் பாவங்களெல்லாம் பறந்தோடிவிடும்.

மதுராபுரியை மட்டுமா கட்டுக்குள் வைத்திருந்தான்! தன் அடியவர்கள் அனைவரையும் அன்பு எனும் கட்டுக்குள் வைத்திருப்பவன் அல்லவா, அவன்! அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து, அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்து, யுத்தத்தை நிகழ்த்தினான் பகவான். ஸ்ரீகிருஷ்ணரிடம், ‘நீ நேரடியாக யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் கிருஷ்ணா! எனக்குப் பக்கபலமாக இரு; அது போதும்!’ என்று கோரிக்கை விடுத்தான் அர்ஜுனன். ‘அப்படியே ஆகட்டும்’ என்று அதனை ஏற்றுச் செயல்பட்டார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

பிறகு, யுத்தம் எல்லாம் முடிந்து, பரமபதத்துக்குச் சென்றுவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். அதையடுத்து அர்ஜுனன் தனது காண்டீபத்தை எடுக்க முனைந்தபோது, அதை நகர்த்தக்கூட முடியவில்லையாம்! அதேபோல், அர்ஜுனனின் தேரும் நகரவில்லை. எந்தச் செயல்பாட்டையும் செய்யமுடியாது தவித்து மருகினானாம் அர்ஜுனன்.

அந்த அளவுக்கு அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்ததால்தான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரக்ரஹ: என்றும், மிக்ரஹ: என்றும் திருநாமங்கள் அமைந்தன. மிக்ரஹ: என்றால் மிகுந்த சாமர்த்தியங்கள் கொண்டவன் என்று அர்த்தம்.

ஆயுதம் ஏந்தாமல் சண்டை செய்தவன் அல்லவா ஸ்ரீகிருஷ்ணன்! அத்தனை வியூகங்களையும் தன் சாதுர்யத்தாலும் சாமர்த்தியத்தாலும் அல்லவா தவிடுபொடியாக்கினான்.

ஆனாலும் என்ன… எத்தனை சாமர்த்தியங்கள் இருந்தாலும், கண்ணனிடம் பொறுமை என்பது துளியும் இல்லை. எந்நேரமும் பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் ஸ்ரீகண்ணபிரான். ஒரு பக்கம் அர்ஜுனனையும் அவனுடைய சகோதரர்களையும் வழிநடத்திக்கொண்டு, திரௌபதிக்குச் சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு, தேரைச் செலுத்தியபடியே பீஷ்மாச்சார்யர் முதல் சகலரையும் ஒருகண் பார்த்துக்கொண்டு… என மின்னல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டே இருந்தான் பகவான். அதனால் ‘வியக்ரஹ:’ என்கிற திருநாமம் அவனுக்கு அமைந்தது. வியக்ரஹ: என்றால் பொறுமை இல்லாதவன் என்று அர்த்தம்.

சரி… மகாபாரத யுத்தத்தில் ஆயுதங்கள் ஏதும் வைத்திருந்தானா பகவான்? இல்லைதானே! அதனால்தான் அவனுக்கு ‘ஏக சிருங்கஹ:’ என்கிற திருநாமம் அமைந்தது. அதாவது ‘ஒரு ஆயுதமும் இல்லாதவன்’ என்று பொருள்.

ஆனால், இந்த யுத்தத்துக்காகவும் பஞ்சபாண்டவர்களுக்காகவும் என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்? பாண்டவ தூதனாகச் செயல்பட்டான். அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து தேரோட்டினான். சதுர்த்தசி நாளில், அமாவாசை என்று பொய் சொல்லித் தர்ப்பணம் செய்தான். ‘அட… இன்னிக்குதான் அமாவாசைபோல! கிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் பண்றாரே…. வாங்க, நாமளும் தர்ப்பணம் பண்ணிடுவோம்!’ என்று எல்லோரையும் அமாவாசை என நம்ப வைத்தான்.

அதாவது, பாண்டவ சகோதரர்களுக்காக, தருமம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக… சாம, தான, பேத, தண்டம் என சகலத்தையும் பயன்படுத்தினான் கண்ணன். வியூகம் அமைத்து வெற்றி தேடித் தந்தான். ‘எப்பாடு பட்டாவது தனது அடியவர்களை, தன்னை நம்பியவர்களை ரட்சிக்க வேண்டும்’ என்பது மட்டுமே அவனுடைய நோக்கம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, என்ன செய்வதற்கும் அவன் தயாராக இருந்தான். அவ்விதமாகவே செயல்பட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அப்படித்தான்! தன்னுடைய அடியவர்களை அவன் ஒருபோதும் கலங்கவிடமாட்டான். கலங்கித் தவிக்கிற அடியவர்களை எந்நாளும் கைவிடமாட்டான். அர்ஜுன சகோதரர்களுக்காக அத்தனை செய்த பகவான், தனது அடியார்களுக்காக, அந்த அடியவர்களில் ஒருவராக இருக்கிற நமக்காக, எனக்காக, உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

‘நைக சிருங்கஹ’ என்கிற திருநாமம் அதனால்தான் அவனுக்கு வந்தது. அதாவது ‘எப்பாடு பட்டாலும் ரட்சிப்பவன் ஸ்ரீகிருஷ்ணன்!’

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவும் ஓடி வருவான்; ஏமாற்றுபவர்களின் கொட்டத்தை ஒடுக்கவும் ஓடி வருவான்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒன்றே ஒன்றுதான்… பகவான் ஸ்ரீகண்ணனை மனதார நினைக்கவேண்டும்!

No comments:

Post a Comment