Tuesday, June 17, 2014

இறைவனை அலங்கரிக்க...

இறைவனை அலங்கரிக்க...
வஸ்திரத்தின் தன்மை.

தெய்வங்களுக்கு மிருதுவானதும், கெட்டியானதும், சுத்தமானதுமான அழகான அங்கவஸ்திரம் சாத்தினால் அந்த அங்கவஸ்திரத்தில் எவ்வளவு இழை நூல் இருக்கிறதோ அவ்வளவு வருடத்திற்கு சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறலாம் என்று சிவ தருமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

பட்டு வஸ்திரம் (ஆடை), பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட வஸ்திரங்கள் போன்றவைகளைக் கொண்டே இறைவனை அலங்கரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய வஸ்திரத்தை மறுமுறை உபயோகிப்பதாயின் நீரில் நனைத்து காய வைக்காமல் உபயோகிக்கக்கூடாது. சிலர் சலவை செய்துவந்த வஸ்திரத்தை திரும்பவும் நனைக்காமல் பயன்படுத்துகிறார்கள். அது சாஸ்திரத்திற்கு எதிரானது மட்டுமன்றி சாத்துபவருக்கு கெடுதியையும் கொடுக்கும். மேலும் கிழிந்த, பழைய வஸ்திரம் எலி அல்லது பூச்சி கடித்த வஸ்திரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

முற்பகலில் வெண்மையான வஸ்திரமும் பகலில் சிவப்பு வஸ்திரமும் சாயங்காலத்தில் (மாலையில்) மஞ்சள் வஸ்திரமும் அர்த்தஜாமத்தில் கறுப்பு நீலநிற வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விசேட தினங்களில் பலவித நிற வஸ்திரங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

சந்தனம்

சந்தனம், அகில், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் இவைகளுடன் பன்னீர் கலந்த சந்தனத்தையே இறைவனுக்குச் சாத்தவேண்டும்.

ரத்தினங்கள்.

எல்லாவித ரத்தினங்களை தினந்தோறும் சாத்தி அலங்கரித்தாலும் ஒவ்வொரு தினமும் அதற்கான ரத்தினங்களையும் அணிவித்து அலங்கரிப்பதால் அபரிமிதமான சாந்நியத்தை மூர்த்தங்கள் அடைவதாக சுப்ரபேத ஆகமம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும்,

ஞாயிறு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - இந்திரநீலம்

இவ்வாறு இறைவனை அலங்கரிக்க வேண்டும் என்றும், அதுவே மிகச்சிறப்பைக் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment