Tuesday, July 22, 2014

அவனின்றி ஒரு அணுவும் அசையாது.....

அவனின்றி ஒரு அணுவும் அசையாது.....
ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:
பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன்) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?
பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!
பரமசிவன்:- நீ ஒரு பெண்; கருணையின் வடிவம்; ‘பால் நினைந்தூட்டும் தாய்’! ஆகையால் பசியில் வாடும் உயிரினங்களின் மேல் எப்போதும் கருணை பொழிகிறாய். எனது நடனம்தான் இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. உனது கருணை அதை மறைக்கிறது போலும்!
இப்படி சிவன் கொடுத்த தத்துவ விளக்கம் எதுவும் பார்வதிக்கு நம்பிக்கை தரவில்லை. தன் கணவனை ‘’கையும் களவுமாகப்’’ பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்குத் திட்டம் போட்டாள். விறு விறு என்று வெளியே போய் அங்கே ஓடிக்கொண்டிருந்த சில எறும்புகளைப் பிடித்து ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடி வைத்தாள்.
மீண்டும் அதே நாளன்று பொழுது சாயும் நேரத்தில் சிவன் ஆடத் தொடங்கினார். பார்வதிக்கோ ஒரே ஆத்திரம். ஆட்டம் முடிந்தவுடன் சிவனை மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.
பார்வதி:– அன்பரே! இன்று எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?
பரமசிவன்:- ஆமாம், தேவி! ஒரு உயிரினத்தையும் விடவில்லை. எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டேன்.
பார்வதி:– ஓ,அப்படியா? இனி நீர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. காலை முதல் என் முந்தானைக்குள் முடித்துவைத்த இந்தச் சின்னப் பெட்டியில் எறும்புகள் இருக்கின்றன. நீர் இந்தப் பக்கமே வரவில்லையே! இவைகளுக்கு ஏனைய்யா உணவு படைக்கவில்லை?
பரமசிவன்:- தேவி! அவசரப் படாதே, ஆத்திரப் படாதே. பெட்டியைத் திறந்து பார். பார்வதி, பெட்டியைத் திறந்தாள். எறும்புகள் இன்பமாக அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. சிவன் வாயில் புன்சிரிப்பு நெளிந்தது. பார்வதி முகத்திலோ அசடு வழிந்தது. “எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த” இறைவனை வெறும் ஆட்டம் (நடராஜன்) போடுபவன் என்று நினைத்து விட்டோமே, உலகையெல்லாம் ஆட்டிப்படைக்கும் ஆட்டம அல்லவா தம் கணவனுடைய ஆட்டம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

No comments:

Post a Comment