Monday, September 22, 2014

மஹாபாரதம் - விரிவாக பகுதி -1

மஹாபாரதம் - விரிவாக பகுதி -1
இராமாயணத்தைவிட மகாபாரதம் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு...அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு.

இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது. மகாபாரதப்போரில் ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு. பதினெட்டு நாட்கள் போருக்குப்பின்...10 பேர் தவிர..அனைவரும் மாண்டனர்..
இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை. அனைவரும் படிக்கலாம். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு...அற்றதை விட்டு விடலாம்.
இப்பதிவின் நோக்கமே ..எளிமையாக...மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான். அனைத்து பதிவர்கள் ஆதரவையும்...அனைத்து..தமிழ் திரட்டிகளின் ஆதரவையும் வேண்டுகிறோம்...

உள்ளே புகுமுன்....
பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர். வேதங்களை தொகுத்தளித்தவர். இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக் கதையைக் கொடுத்தவர்.

பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார். பிரம்மனை தியானித்தார். பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும்.  அவரிடம்..'பகவானே. இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!'என்றார்.
பிரம்மனும்..'உம்முடைய நூலை எழுத..கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார்..
வியாசர் கணபதியை தியானிக்க..கணபதி தோன்றினார். வியாசர் அவரிடம். 'பாரதத்தை நான் சொல்லச் சொல்ல. நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.
வினாயகரும்..ஒப்புக்கொண்டு 'சரி...ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது..எழுதிக்கொண்டே போகும். இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார்.
இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் என்றார்.
வினாயகரும் சம்மதிக்க..வியாசர் சொல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்...

அத்தியாயம்-1
இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த "மகாபிஷக்" என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான். அவனது புண்ணியச் செயல்களால்,  அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான்.  தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான். அப்போது கங்கை நதி. கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.

கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக..அதைக்கண்ட தேவர்களும். ரிஷிகளும். நாணத்தால் தலைக் குனிய.. மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும். அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான்.
இச் சம்பவத்தால். கடும் கோபம் அடைந்த பிரம்மன். மகாபிஷக்கை 'பூ உலகில் மனிதனாகப் பிறந்து. கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து. துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து. நல்லுலகை அடைவாயாக'என சபித்தார்.
பின் அவன் "பிரதீப" மன்னனின் மகனாகப் பிறந்தான்.
பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள். அவள் திரும்பி வரும்போது. அஷ்ட வசுக்களை சந்தித்தாள். அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.
'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார். ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.
'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால். அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.
'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான். அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து. நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம். என்றனர் வசுக்கள். இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.
மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது. ஆகவே நாங்கள் பிறந்ததும். உடனே எங்களை தண்ணீரில் எறிந்து. ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.
'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை. புத்திரப்பேறு கருதி. ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு. மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை. வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.

அத்தியாயம்-2...சந்தனு
பிரதீப மன்னன் கங்கைக்கரையில் தியானத்தில் இருந்தான். அப்போது கங்காதேவி, நீரிலிருந்து கரையேறி மன்னன் முன் நின்றாள்' மன்னா. உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு. மனைவியாக விரும்புகிறேன்' என்றாள். மன்னனும், 'அவ்வாறே ஆகட்டும்..' என்றான்.
பிரதிபனின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான். அது பிரம்ம தேவன் சாபப்படி பிறந்த மகாபிஷக் ஆகும். அவனுக்கு சந்தனு எனப் பெயரிட்டனர். சந்தனு...வாலிபப்பருவம் அடைந்ததும்...அனைத்துக் கலைகளிலும் வல்லவன் ஆனான். ஒரு நாள் மன்னன் அவனை அழைத்து, 'மகனே! முன்னர் ஒரு பெண் என் முன்னே தோன்றினாள். தேவலோகத்துப் பெண்ணான அவள்; என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள். அவள் உன்னிடம் வரும் போது, அவள் யார் என்று கேட்காதே! அவளை அப்படியே ஏற்றுக்கொள்! இது என் கட்டளை' என்றான்.
பின்னர், பிரதீபன்..அவனுக்கு முடி சூட்டி விட்டு, காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டான்'. வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட சந்தனு, ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ஒரு அழகிய பெண் நேரில் வருவதைப் பார்த்தான். இருவரும் ஒருவர் இதயத்துள் ஒருவர் புகுந்து ஆனந்தம் அடைந்தனர்.
சந்தனு 'நீ யாராயிருந்தாலும், உன்னை மணக்க விரும்புகிறேன்' என்றான். அந்த பெண்...கங்காதேவி. அவள் தன் நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தாள். தன்னைப் பற்றி ஏதும் கேட்கக் கூடாது. தன் செயல்களில் தலையிடக் கூடாது. நல்லதாய் இருந்தாலும், தீதாயிருந்தாலும் தன் போக்கில் விடவேண்டும். அவ்வாறு நடந்துக் கொண்டால். அவனது மனையியாக சம்மதம் என்றாள்.
காம வயப்பட்டிருந்த சந்தனு, அந்த நிபந்தனைகளை ஏற்றான்.திருமணம் நடந்தது. தேவசுகம் கண்டான் மன்னன். பல ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். உடன், அக்குழந்தையை கங்கையில் வீசும்படிச் சொல்ல, திடுக்கிட்ட மன்னனுக்கு நிபந்தனைகள் ஞாபகம் வர அப்படியே செய்தான். இது போல தொடர்ந்து ஏழு குழந்தைகளை செய்தான். எட்டாவது குழந்தை பிறந்த போது. பொறுமை இழந்த மன்னன்.'இதைக் கொல்லாதே நீ யார்? ஏன் இப்படி செய்கிறாய்? இக் குழந்தையாவது கொல்லாதே!' என்றான்.
உடன்..கங்காதேவி, 'மன்னா. இம்மகனைக் கொல்லமாட்டேன். ஆனால், நிபந்தனைப் படி நடக்காமல். என்னை யார்? எனக் கேட்டதால் இனி உன்னுடன் வாழ மாட்டேன். ஆனால். நான் யார் என்பதை சொல்கிறேன்' என்றாள்.
'நான் ஜன்கு மகரிஷியின் மகள்.என் பெயர் கங்காதேவி. தேவர்களுக்கு உதவவே. நான் உன்னுடன் இருந்தேன். நமக்குக் குழந்தைகளாக பிறந்த இவர்கள். புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். வசிஷ்டரின் சாபத்தால். இங்கு வந்து பிறந்தனர். உம்மைத் தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர். அவர் விருப்பமும் நிறைவேறியது. சாப விமோசனமும் அடைந்தனர். எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான். இவனைப் பெற்ற என் கடமை முடிந்தது. எனக்கு விடை தருக' என்றாள்.
கங்காதேவியின் பேச்சைக் கேட்ட சந்தனு. 'ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் ஏன் சாபம் இட்டார்? இவன் மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும். அனைத்தையும் விளக்கமாக சொல்' என்றான்.
கங்காதேவி..கூறத் தொடங்கினாள்.


தேவவிரதன்....அத்தியாயம்-3
'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர். மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது. ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு. தனக்கு அது வேண்டும் என்றாள். மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது. இது தெய்வத்தன்மை வாய்ந்தது. இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.

உடனே அவன் மனைவி மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள். அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க. இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன்.  மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான். வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது பசுவும். கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.
என் பசுவையும், கன்றையும் களவாடிய வசுக்கள். மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார். வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து. பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர். பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர். பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான். அவன் பெண் இன்பத்தைத் துறப்பான். சந்ததியின்றி திகழ்வான். சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான், எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர்.
வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி. 'பிரபாசன் என்னும் வசுவாகிய இவனை. நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன். நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன் என்று கூறிவிட்டு மறைந்தாள். தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன் மேலான குணங்களுடன் வளர்ந்தான். மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான்.
பின், மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான். அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான். இந்திரனுக்கு இணையானவனாகவும், சத்தியம் தவறாதவனாகவும், விருப்பு. வெறுப்பு அற்றவனாகவும். வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும். அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான்

4.மகனைக் கண்ட மன்னன்
சந்தனு, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது. கங்கை நதியைக் கண்டான். இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது. பெருக்கெடுத்து ஓடவில்லையே என்று எண்ணியபடியே நின்றான். அப்போது ஒரு வாலிபன்,  தன் அம்பு செலுத்தும் திறமையால் கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான். உடன் கங்காதேவியை அழைத்தான். கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி, மன்னர் முன் தோன்றினாள்.

மன்னா. இவன் தான் நமது எட்டாவது மகன். இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன். வசிஷ்டரின் வேதங்களையும், வேத அங்கங்களையும் கற்றவன். தேவேந்திரனுக்கு இணையான இவனை. இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள். தன் மகனுக்கு சந்தனு இளவரசு பட்டம் சூட்டினான். தன் மகனுடன். நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில். மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது; ஒரு அழகிய பெண்ணைக் கண்டான். பெண்ணே. நீ யார்? யாருடைய மகள்? என்ன செய்கிறாய்?' என்றான். அதற்கு அவள், நான் செம்படவப் பெண். என் தந்தை செம்படவர்களின் அரசன். நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள்.
அவள் அழகில் மயங்கிய அரசன். அவளுடன் வாழ விரும்பி. அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான். செம்படவன். மன்னனை நோக்கி' இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றுவதாக இருந்தால்; மணம் முடித்துத் தருகிறேன் என்றான். அந்த நிபந்தனை என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன். என்றான் மன்னன்.
மன்னா. என் மகளுக்கு பிறக்கும். மகனே. உன் நாட்டை ஆள வேண்டும் என்றான் செம்படவன். நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான். ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான். தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன். அவனிடம் போய். தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன? என்றான்.
மகனிடம்  தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல; நாணிய மன்னன், மறைமுகமாக மகனே! இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய். யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா? நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்?  நம் குலம் சந்ததி அற்றுப் போகும். ஒரு மகன் இறந்தால்.  குலத்திற்கு அழிவு என சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால் சந்ததி எண்ணி மனம் ஏங்குகிறேன் என்றான். செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை.
மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான். மன்னனின். தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என. தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். தேரோட்டி உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார். அவளை மணந்தால்; அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள். அதற்கு மன்னன் இணங்கவில்லை. அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை என்றான்.


5.பீஷ்மர்
தந்தையை எண்ணி. சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன் பின் எப்படியாவது அந்த பெண்ணை தன் தந்தைக்கு மணமுடிக்க எண்ணினான். யமுனைக் கரையை நோக்கி விரைந்தான். செம்படவ அரசன் தேவவிரதனை மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்றான். தேவவிரதன் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான். செம்படவ மன்னனோ தன் நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினான் என் மகளுக்குப் பிறக்கும் மகனே... சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டும்  என்றான். உடனே தேவவிரதன் இவளுக்குப் பிறக்கும் மகனே அரசுரிமை ஏற்பான் வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று உறுதியாகக் கூறினான்.  நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்'என்றான்.

செம்படவ அரசன் தேவவிரதனே! அரச குலத்தில் பிறந்தவன் கூறாததை நீர் கூறினீர். .நீர் சொல்வதை உம்மால் காப்பாற்ற இயலும். நீங்கள் சத்தியம் தவறாதவர் என்பதில்.எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது. ஆனால் உமக்கு உண்டாகும் சந்ததிப் பற்றி. எனக்கு சந்தேகம் உண்டு நீங்கள் இப்போது தரும் வாக்குறுதியை உம் சந்ததியினர் மீறலாம் இல்லையா? என வினவினான்.
உடன் தேவவிரதன் கூறுகிறான்...
செம்படவ அரசே! எனது சபதத்தை கேளுங்கள் இங்குள்ள புலனாகாத பூதங்களும் பலர் அறிய வீற்றிருப்போரும் இந்த சபதத்தை கேட்கட்டும் அரசுரிமையை சற்றுமுன் துறந்து விட்டேன். சந்ததியையும் துறக்க நான் மேற்கொள்ளும் சபததைக் கேளுங்கள் இன்று முதல் நான் பிரமசரிய விரதத்தை மேற்கொள்கிறேன். நான் பொய் சொன்னதில்லை. என் உயிர் உள்ளவரை புத்திர உற்பத்தி செய்யேன். இது சத்தியம். என் தந்தைக்காக இந்த தியாகம் செய்கிறேன். இனியாவது சந்தேகம் இல்லாமல் உம் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து கொடுங்கள்' என்றார்
தேவவிரதனின் இந்த சபதத்தைக் கேட்டு செயற்கரிய சபதம் செய்த அவன் மன உறுதியை அனைவரும் புகழ்ந்தனர். அனைவரும் அவரை பீஷ்மர் (யாவரும் அஞ்சத்தக்க சபதம் மேர்கொண்டவர்) எனப் போற்றினர்.

6. அம்பை..அம்பிகை..அம்பாலிகை..
பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு சந்தனுவிடம் வந்தார் பீஷ்மர். அவரின் சபதத்தை கேள்விப்பட்டு சந்தனு வருத்தமுற்றான். பின் மகனுக்கு ஒரு வரம் அளித்தான் "இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வாழ்வாய். எமன் உன்னை அணுகமாட்டான்" என்றான்.

சத்தியவதி உண்மையில் சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள். செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள்.
சந்தனுவிற்கும், அவளுக்கும் முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான். பின் விசித்திரவீரியன் பிறந்தான். சந்தனு மரணம் அடைந்ததும் பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார். ஒருசமயம் அவன் கந்தர்வ நாட்டு அரசனுடன் போர் செய்ய நேர்ந்தது. அந்த கந்தர்வ அரசன் பெயரும் சித்திராங்கதன்" உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான் கந்தர்வ மன்னன். இல்லாவிட்டால் போரிட வா" என சவால் விட்டான்.போரில் சந்தனுவின் மகன் மரணம் அடைந்தான்.
பீஷ்மர் அடுத்து..விசித்திரவீரனை அரசனாக்கினார். அவனுக்கு மணம் முடிக்க எண்ணினார். அந்த சமயம் காசி நாட்டு மன்னன் அவனது மூன்று மகளுக்கும் சுயம்வரம் நடத்துவது அறிந்து பீஷ்மர் காசியை அடைந்தார். சுயம்வரத்தில் பல அரசர்கள் கூடியிருந்தனர். அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பது அவர்களது பெயர். பீஷ்மரின் வயது கண்டு அவர்கள் விலகினர். சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து "நரை கூடிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா...உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று" என்று சிரித்தனர்.
பீஷ்மர் கடும் கோபம் அடைந்தார். மூன்று பெண்களையும் பலவந்தமாக தேரில் ஏற்றிக்கொண்டு வந்தார். மன்னர்கள் முறையடிக்கப் பார்த்து தோற்றனர். ஆயினும், சௌபல நாட்டு மன்னன் சால்வன். கடும் போர் செய்து தோற்று ஓடினான்.
பின்..பீஷ்மர் மூன்று பெண்களையும் தன் மகள் போல..மருமகள்கள் போல அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தார். அப்பெண்களை விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பெண்களில் மூத்தவள் அம்பை..'என் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் சென்றுவிட்டது.அவனையே மணாளனாக அடைவேன் என்றாள்.
உடன் பீஷ்மரும் பெண்ணே! உன் மனம் அவனை நாடினால் தடையேதும் இல்லை இப்பொழுதே நீ அவனிடம் செல்லலாம் என்றார். அம்பையும்..சௌபல நாடு நோக்கி சென்றாள்.
7. அம்பையின் தவம்
சால்வனை சந்தித்த அம்பை மன்னா..நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம் . இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம் என்றாள். அதற்கு சால்வன் 'பெண்ணே..மன்னர் பலர் இருந்த அவையிலிருந்து பலந்தமாக பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார். மற்றவரால் கவரப்பட்டு. பின் அவர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன். நீ திரும்ப செல் என்றான்.

சால்வனின் இந்த முடிவினால் என்ன செய்வது என்று அறியாத அம்பை மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள்..பீஷ்மரை நோக்கி  சுயம்வர மண்டபத்திலிருந்து என்னை கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப் படிஎன்னை மணம் புரிய வேண்டும்  என்றாள். ஆனால், பீஷ்மரோ  நான் பிரமசரிய விரதம் பூண்டுள்ளேன்  எனக்கூறி மறுத்தார்.
மாறி மாறி கண்ணீருடன் சால்வனிடமும், பீஷ்மரிடமும் முறையிட்டபடியே ஆறு வருடங்களைக் கழித்தாள் அம்பை. பின் இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்..கட்டை விரலை ஊன்றி நின்று கடுந் தவம் செய்தாள்.  பன்னிரெண்டு ஆண்டுகள். முருகப்பெருமான் அவளுக்குக் காட்சி அளித்து அழகிய மாலை ஒன்றை கொடுத்து "இனி உன் துன்பம் தொலையும்" அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் மரணமடைவார்  என்று கூறி மறைந்தார்.
பின் அம்பை பல அரசர்களிடம் சென்று  இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார். யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ அவருக்கு நான் மனைவி ஆவேன். யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள். பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன் வரா நிலையில் ஆண்டுகள் பல கடந்தன. ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை. பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து துயரக்கடலில் மூழ்கி யுள்ள என்னை கை தூக்கி விடுங்கள்' என்றாள்.
அவனும்..பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை என்று ஒதுங்கினான். இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு  "பெண்ணே!மாலை எடுத்துச் செல்" என்று கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பை.
துருபதனும் அம்மாலையை காத்து வந்தான். அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று. அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள். அவர் அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார். அம்பையும் பரசுராமரை சந்தித்து. தன் நிலமையை சொன்னாள். பரசுராமர் பீஷ்மரை சந்தித்து. அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை. ஆகவே இருவருக்குள் போர் மூண்டது.
இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார்..எனக் கூற இயலாத நிலையில். பரசுராமர் விலகிச் சென்றார். மீண்டும் தோல்வியுற்ற அம்பை, சிவனை நோக்கி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி அளித்து "பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்த பிறவியில் அது நடக்கும். உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்" என்றார்

8- சிகண்டி
மறுபிறவி எடுக்க நினைத்த அம்பை உடனே தீயில் விழுந்து மாண்டு போனாள். துருபதனின் மகளாக பிறந்தாள். சிகண்டி என்ற பெயர் தாங்கினாள். ஒருநாள் அரண்மணை வாயிலில் மாட்டப்பட்டிருந்த அந்த அழகிய தாமரை மாலையைக் கண்டு அதை எடுத்து அணிந்துக் கொண்டாள். இதை அறிந்த துருபதன் பீஷ்மருக்கு பயந்து. தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.

பின் சிகண்டி தவ வாழ்க்கை மேற்கொண்டாள். இஷிகர் என்னும் முனிவருக்கு பணிவிடை செய்யும் போது அம்முனிவர் கங்கை ஆற்றின் உற்பத்தி இடத்தில் விபஜனம் என்னும் விழா நடை பெறப்போகிறது. அதற்கு வரும் "தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால். உன் எண்ணம் ஈடேறும்" என்றார்.
சிகண்டி அங்குப் போனாள். அங்கு பல கந்தர்வர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் சிகண்டியைப் பார்த்து நாம் இருவரும் உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா? அதாவது உன் பெண் வடிவத்தை எனக்குத் தா. நான் என் ஆண் வடிவத்தை உனக்குத் தருகிறேன்' என்றான். சிகண்டியும், அதற்கு சம்மதித்து ஆணாக மாறினாள்.
பின் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு நிகரற்ற வீரனாக திகழ்ந்தாள். பாஞ்சாலத்திற்கு திரும்பச் சென்று. தந்தை. துருபதனை சந்தித்து நடந்த விஷயங்களைக் கூறி இனி பீஷ்மருக்கு பயப்பட வேண்டாம் என்றாள். துருபதனும்..மகிழ்ந்து அவனை(ளை) ஏற்றுக்கொண்டான்.

9. சத்யவதியின் கதை:
அம்பை வெளியேறியபின் பீஷ்மர்; விசித்திரவீரியனுக்கு அம்பிகை, அம்பாலிகையை மணம் செய்வித்தார். இவர்களுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த விசித்திரவீரியன் காச நோயால் இறந்தான்.

நாட்கள் சில சென்றதும் சத்யவதி பீஷ்மரிடம் 'மகனே! உன் தம்பி மக்கள் பேறின்றி இறந்தான். சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும். தருமசாத்திரம் தெரிந்தவன் நீ புத்திரர் இல்லா குலம் எப்படி தழைக்கும். ஆகவே நீ அம்பிகை அம்பாலிகையுடன் கூடிப் புத்திர சந்ததியை உண்டாக்கு..' என்றாள்.
ஆனால் பீஷ்மரோ "அன்னையே! நீங்கள் உரைத்தது  மேலான தர்மமே...ஆனாலும் என் சபதத்தை நான் மீறமாட்டேன்" என உறுதியாக உரைத்தார். அதற்கு சத்யவதி "ஆபத்துக் காலங்களில்..சாத்திரம் பார்க்க வேண்டியதில்லை..நெருக்கடியான நேரங்களில் ..தர்மத்தில் இருந்து..விலகுதல் பாவம் இல்லை. ஆகவே நான் சொல்வது போல செய்"' என்றாள்.
ஆனால் பீஷ்மரோ "அன்னையே. நம் குலம் தழைக்க. வேறு ஏதேனும் யோசியுங்கள்.  என்றார். பின் சத்யவதி பீஷ்மரிடம். தன் கதையைக் கூறலானாள். "கங்கை மைந்தனே! இன்று ஒரு உண்மையை உன்னிடம் தெரிவிக்கிறேன். அது ரகசியமாகவே இருக்கட்டும். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை. ஒரு மீன் தன் வயிற்றில் கர்ப்பமாக தாங்கியிருந்தது. அந்த மீன் வயிற்றில் வளர்ந்தவள் நான்தான். ஒருநாள் ஒரு செம்படவன் அம்மீனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான். அங்கு நான் பிறந்தேன். அவர் பின் என்னை தன் மகளாய் வளர்த்தார். நானும் வளர்ந்து கன்னிப்பருவம் எய்தினேன். யமுனை ஆற்றில் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.
அப்போது ஒரு நாள். பராசர முனிவர் என் படகில் ஏறினார். என்னைப் பார்த்து காமவயப் பட்டார். ஆனால் நானோ பயந்தேன். அப்போது அவர் 'நான் செம்படவப் பெண் இல்லை என்று உணர்த்தினார். உடன் நான் இந்த பகல் நேரத்திலா என்றேன். அவர் உடனே சூரியனை மறைத்து இருளாக்கினார்.
என் உடலில் மீன் நாற்றம் வீசுகிறதே. என்றேன்..உடன் என் உடலில் நறுமணம் வீச வைத்தார். இந்த நதிக்கரையிலேயே. நீ கர்ப்பம் அடைந்து. குழந்தை பிறந்து மீண்டும் கன்னியாகி விடுவாய் என்றார். பின். அவர் என்னைச் சேர்ந்து ஒரு மகனை உண்டாக்கிவிட்டார்.
எனக்குப் பிறந்த அந்த மகன். 'த்வைபாயனன்' என்றழைக்கப்பட்டான். அவன் யோக சக்தியால். மகரிஷி ஆனான். வேதங்களை நான்காக வகுத்தான். அதனால் வேதவியாசன் என்ற பெயர் பெற்றான். நீ சம்மதித்தால் நான் அவனுக்கு கட்டளை இடுகிறேன் உடன் அந்த மகரிஷி இங்கு தோன்றி அம்பிகை, அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் அளிப்பான்' என்றாள்.


10 - வியாசர் வந்தார்
பீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும். சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை. உடனே சத்யவதி வியாசரை நினைக்க மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.

அன்னையே..என்னை அழைத்தது ஏன்? என அவர் வினவ. சத்யவதியும். 'தவத்தோனே நீ எனக்கு மூத்த மகனாய்  உண்டாக்கப்பட்டிருக்கிறாய். விசித்திர வீரியன் எனது இளைய மகன். பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார். பீஷ்மர். குல சந்ததி விருத்திக்கு. அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார். ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று. உன் இளைய சகோதரனின் மனைவி யர்தேவமகளிர் போன்றவர்கள். அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும்  என்றாள்.
அதற்கு வியாசர், தாயே!. புத்திரதானத்தை  சாத்திரங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால். அம்மகளிர் இருவரும் என் விகாரத் தோற்றத்தைக் கண்டு. அருவருப்புக் கொள்ளக்கூடாது. என் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது. அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின். அவளுக்குப் பிறக்கும் மகன். நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.
சத்யவதி, அம்பிகையை அழைத்து  நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும். இது அரச தர்மம்தான். மறுக்காதே என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி. இதற்கு சம்மதித்தாள். அன்றிரவு. வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார். அவரது, செம்பட்டையான சடை முடி, விகாரமான தோற்றம், நாற்றம். எல்லாம் பார்த்து. அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள். அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை. வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.
பின் தாயிடம் வந்தவர்  'தாயே! வீரமிக்க மகன் பிறப்பான். ஆனால். அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால், பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான்  என்றார்.  மகனே, குரு வம்சத்தில் குருடனாக இருப்பவன் அரசாள தகுதியற்றவன். அதனால் சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள். சத்யவதி.
வியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது. அதுவே..'திருதிராட்டினன்'.  பின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார். ஆனால் அம்பாலிகை வியாசரின் கோரத்தோற்றம் கண்டு பயந்து..உடல் வெளுத்தாள். உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான். பாண்டு அவன் பெயர். அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார். அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.
இரு குழந்தைகளும். குறைபாடுடன் இருந்ததால். 'அம்பிகைக்கு இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள். ஆனால் அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள். பணிப்பெண்ணும் வியாசரும். மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர். 'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும், அவளுக்கு பிறக்கும் குழந்தை. சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி. அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.
வியாசர் மூலமாக..அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகியோருக்கு..திருதிராட்டினன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

11 - சகோதரர்கள் திருமணம்
திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும். பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார். போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார். அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால். நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.

மைந்தர்கள் மூவரும் மணப்பருவம் அடைய  பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்து வைத்தார். கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும் கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள். (காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது). காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர். கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி. காந்தாரியின் சகோதரன் ஆவான்.

யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான். அவனுக்கு பிரிதா, என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர். (இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்) சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு, வளர்ப்பு மகனாகக் கொடுத்தான். இதனால் பிரிதாவிற்கு. குந்தி என்ற பெயர் உண்டானது. ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார். அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.
மந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான். இந் நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி. பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள். இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது.. ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.
கண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன் அரசாளும் தகுதியை இழந்தான். பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி. அவனுக்கு முடி சூட்னார். திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான். பாண்டுவிற்கு...மணம் முடித்து வைக்க நினைத்தார் பீஷ்மர். குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.
சில காலத்திற்குப் பிறகு. மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள். விதுரர். தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார். இவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு
அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி அவர்களை கப்பம் கட்ட வைத்தான். நாட்டில் நல்லாட்சி செய்தான். பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட பீஷ்மரும் மகிழ்ந்தார். ஒருநாள் வேட்டையாட பாண்டு தன் மனைவியர். பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான். அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது சற்றும் யோசனையின்றி அம்பு செலுத்தினான். ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவிற்கு இல்லற ”இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார். இதனால்..மகப்பேறு இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி..தனது இளமைப்பருவத்தில்..துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள். அதைக் கேட்டு பாண்டு மகிழ்ந்தான். பின் குந்தி, தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத யுதிஷ்டிரனை (தருமரை) பெற்றாள். வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.
பாண்டுவின் விருப்பப்படி. மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க மாத்ரியும் அம்மந்திரத்தை. இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள். அதனால் நகுலன்,சகாதேவன்பிறந்தனர். ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.
அஸ்தினாபுரத்தில் திருதிராட்டினன்; பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி. அவனுக்கு மகப்பேறு இல்லை என மகிழ்வுடன் இருந்தான். நாடாளும் உரிமை தன் சந்ததிக்கே என்றிருந்தான். அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான். அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள். குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து. ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதன் விளைவாக. மாமிச பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால்...அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம் நூறு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நூற்றொருவரைப் பெற நூற்றொரு நாட்கள் ஆயிற்று. காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.
துரியோதனன், பேராசையும். பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன் தீமையில் அண்னனை மிஞ்சினான். கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே. காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும்; ரிஷிகளிடம் கல்வி கற்று அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஒரு நாள் காமவயப்பட்டு. பாண்டு மாத்ரியை அணுகிய போது. பண்டைய சாபத்தால். உயிரிழந்தான். மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால். குந்தியும் பாண்டவர்களும் பீஷ்மரிடம்  வந்தனர். திருதிராட்டினனும். அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான். சத்யவதியும், அம்பிகையும், அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர். குரு வம்சத்திற்குரிய மன்னனை நியமிக்கும் பொறுப்பு பீஷ்மரிடம் வந்தது.


13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்

ஆரம்பத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான். ஆனால் அர்ச்சுனனும், பீமனுமே சிறந்து காணப்பட்டனர். பீமனது ஆற்றல் துரியோதனனுக்கு. அச்சத்தையும். பொறாமையையும் கொடுத்தது. அதுவே காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது. தானே அரசராக வேண்டும் என துரியோதனன்  எண்ணினான். ஆனால்; யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான். மனம் வெதும்பிய துரியோதனன்  பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.

ஒரு சமயம் ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது  பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன். அதனால் மயக்க முற்றான் பீமன். துரியோதனன் உடனே அவன் கை, கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான். விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள். துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள் விதுரரிடம் அதை தெரிவித்தாள். சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும். தெரிந்தால் பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.
ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன. விஷம். விஷத்தை முறித்தது. பீமன் எழுந்தான். பாம்புகளை உதறித் தள்ளினான். பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி. அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது. புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.
பீஷ்மர் அனைவருக்கும் விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும், துரோணாசாரியாரும்.  அப்பொறுப்பை ஏற்றனர். அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர். ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான். ஒரு மரம் அடர்ந்த கிளைகள். அவற்றின் ஒன்றில் ஒரு குருவி அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும். இச் சோதனையில் சீடர்கள். மரம் தெரிகிறது. கிளை தெரிகிறது. இலை தெரிகிறது என்றனர். ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான். அதை நோக்கி அம்பெய்தினான். அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.
குந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா? அந்த பெட்டியை. திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான். மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான். அவனே கர்ணனாவான். கௌரவர், பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன். அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால் துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.
ஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன. போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர். துரோணரின் கட்டளைப்படி பீமனும், துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர். போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால். கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். விளையாட்டு. வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.
அடுத்து. விற்போட்டி. அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான். உடன் கர்ணன். அவனை  தன்னுடன் போட்டியிட அழைத்தான். ஆனால் கிருபாசாரியார். கர்ணனை அவமானப்படுத்தும் வகையில். 'தேர்ப்பாகன் மகன் அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன் என்றார். பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான். நண்பனுக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன் அங்கேயே  கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.

14- துரோணர் கேட்ட குருதட்சணை
துரியோதனின் அன்பைக் கண்டு. கர்ணன் மகிழ்ந்தான். இனி எப்போதும் துரியோதனனை விட்டுப் பிரிவதில்லை என விரதம் மேற்கொண்டான். கர்ணன்  தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று அறிந்த  பீமன்  அர்ச்சுனனுடன் போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என ஏசினான்.

உடன் கோபம் அடைந்த துரியோதனன் பீமனை நோக்கி பிறப்புப் பற்றி பேசுகிறாயா? நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. துரோணர், கிருபர் ஆகியோர் பிறப்பு பற்றி யாராவது ஆராய்வர்களா?  பீமா..உன் தந்தையின் பிறப்பையும், என் தந்தையின் பிறப்பையும் எண்ணிப்பார். பிறப்பில் பெருமை இல்லை செய்யும் தொழிலில் தான் இருக்கிறது. உண்மையில் அர்ச்சுனனிடம் வீரம் இருக்குமேயானால் கர்ணனிடம் மோதி பார்க்கட்டும். என்றான். ஆனால் போட்டி தொடரவில்லை.
பயிற்சியும்,போட்டியும் முடிந்தபின். குருவான துரோணருக்கு. அரசகுமாரர்கள் குருதட்சணை தர விரும்பினர். ஆனால் துரோணர் எதிர்ப்பார்த்த தட்சணை வேறு. பழம் பகை ஒன்றை தீர்த்துக் கொள்ள விரும்பினார்.
அவரது இளமைக்காலத்தில் அவரது தந்தையான பரத்துவாச முனிவரிடம் பல விதக் கலைகளைக் கற்று வந்தார். அந்த சமயம் பாஞ்சால நாட்டு மன்னன் புருஷதனின் மகன் துருபதனும் பரத்துவாசரிடம் பயின்று வந்தான். நாள் ஆக. ஆக இருவரின் நட்பும் நெருக்கமாக. தான் மன்னனாக ஆனதும் நாட்டில் பாதியை துரோணருக்கு கொடுப்பதாக. துருபதன் வாக்களித்தான்.
பின் துருபதன் மன்னனாக ஆனான். அந்த சமயம் துரோணர் வறுமையில் வாடினார். துருபதனைக் காண அவர் சென்றபோது துருபதன் அவரை அலட்சியப் படுத்தினான். அரசனுக்கும்,  ஆண்டிக்கும் நட்பா  என்றான். துரோணரை அவமானப்படுத்தினான். துரோணர் அவனை பழிவாங்க காத்திருந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்ததாக எண்ணினார். தன் மாணவர்களை நோக்கி 'பாஞ்சால நாட்டு மன்னனை சிறை எடுத்து கொண்டு வருக. அதுவே நான் விரும்பும் குருதட்சணை' என்றார்.
துரியோதனன் படை கொண்டு துருபதனிடம் போரிட்டு தோற்று திரும்பினான். பின் அர்ச்சுனன் சென்று அவனை வென்று சிறைப் படுத்தி துரோணர் முன் நிறுத்தினான்.
துரோணர் துருபதனை நோக்கி' செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே  இப்போது உன் நிலையைப் பார். செல்வம் நில்லாது. என உணர். ஆணவத்தை விட்டு அடக்கத்தை கடைப்பிடி. உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு மறு பாதியை உனக்குத் தருகிறேன். நம் நட்பைத் தொடரலாம்' என்று கூறி அவனை ஆரத் தழுவி நாட்டுக்கு அனுப்பினார்.

ஆனால் துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான். அவரைக் கொல்ல மாபெரும் வீரனை மகனாகப் பெற வேண்டும் என உறுதி பூண்டான். பெரும் வேள்வி செய்தான். அந்த வேள்வியிலிருந்து அவனுக்கு ஒரு மகனும்  ஒரு மகளும் தோன்றினர். எதிர்காலத்தில் துரோணரை அழிக்கப் பிறந்த அந்த மகன் பெயர் 'திட்டத்துய்மன்'. மகளின் பெயர் 'திரௌபதி'.
தன் மகளை பார்த்தனுக்கு மணம் முடிக்க சரியான காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் துருபதன்.

15 - துரியோதனின் சதி

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த காடணத்தினால் குருகுலத்து ஆட்சியை பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால். பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது. இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால். இளவரசர் பட்டத்துக்கு அவரே உரியவர் ஆனார். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.

இவர்  சத்தியத்திற்கும், பொறுமைக்கும். இருப்பிடமாக இருந்தார். அவரது தம்பிகளும் நாட்டின் எல்லை விரிவடைய உதவினர். பாண்டவர்கள் உயர்வு கண்டு  துரியோதனன் மனம் புழுங்கினான். விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான். தன் மனக்குமுறலை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் வெளிப்படுத்தினான். அதற்கு சகுனி,  'பாண்டவர்களை சூதில் வெல்லலாம்' என்றான். நீண்ட யோசனைக்குப் பிறகு..எப்படியாவது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து  வெளியேற்ற தீர்மானித்தனர்.
துரியோதனன் தன் தந்தையிடம் சென்று. 'தந்தையே. யுதிஷ்டிரனை. இளவரசனாக நியமித்து  தவறு செய்து விட்டீர். அதனால் பாண்டவர் இப்போது  ஆட்சியுரிமைக்கு முயல்கின்றனர். ஆகவே என்மீதும்,  தம்பியர் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்குமேயாயின், பாண்டவர்களை சிறிது காலமாவது வேறு இடம் செல்லக் கூறுங்கள்' என்றான்.
அவன் மேலும் கூறினான். 'கதா யுத்தத்தில் என்னை பீமன் தாக்கிய போதும், எங்கள் சார்பில் யாரும் பேசவில்லை. பாட்டனாரும், துரோணரும், கிருபரும் கூட மனம் மாறி பாண்டவர் பக்கம் போனாலும்  போவார்கள். விதுரர். பாண்டவர்  பக்கமே. இப்போதே. பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அதன் பின் மக்களை நம் பக்கம் திருப்பி  நம் ஆட்சியை நிலை பெறச் செய்யலாம்' என்றான். மகனைப்பற்றி நன்கு அறிந்த திருதிராட்டிரன். அவனுக்கு பல நீதிகளைக் கூறி 'உனது துரோக எண்ணத்தை விட்டுவிடு' என்று அறிவுரை கூறினான்.
எந்த நீதியும். துரியோதனன் காதில் விழவில்லை. கடைசியில் மகன் மீது இருந்த பாசத்தால் பாண்டவர்களை வாரணாவதம் அனுப்ப ஒப்புக்கொண்டான். துரியோதனன் மூளை குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பித்தது.  அவன் நாட்டில் சிறந்த சிற்பியும். அமைச்சனும் ஆன புரோசனனைக் கொண்டு வாரணாவதத்தில் ரகசியமாக அரக்கு மாளிகை ஒன்றை அமைக்க தீர்மானித்தான்.
அது எளிதில் தீப்பற்றி எறியக்கூடியதாய் இருக்க வேண்டும். அதில் குந்தியையும்.பாண்டவர்களையும் தங்கச் செய்து. அவர்கள் தூங்கும் போது அம்மாளிகையை தீயிட்டு கொளுத்தி அவர்களை சாம்பலாக்க வேண்டும் என்று தீர்மானித்து,  புரோசனனைக் கூப்பிட்டு வேண்டிய பொருள்களைக் கொடுத்து.. அரக்கு மாளிகை அமைக்க வாரணாவதம் அனுப்பினான்.

16- அரக்கு மாளிகை எரிந்தது

திருதராட்டிரன் யுதிஷ்டிரரை அழைத்து 'வாழ்வதற்கு ஏற்ற இடம் வாரணாவதம். நீ உன் தாய், தம்பிகளுடன் சென்று, சில காலம் தங்கி விடு' என்றார். புத்திசாலியான யுதிஷ்டிரருக்கு அவரது எண்ணம் புரிந்தது. பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்கள் செல்லலாயினர்.

பாண்டவர்களுடன்  விதுரர். நெடுந்தூரம் சென்றார்.  துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக 'காடு தீப் பற்றி எரியும் போது எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார். இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர். பின் விதுரர் நகரம் திரும்பிவிட்டார்.
வாரணாவதத்து மக்கள் பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புரோசனன் அவர்களை அணுகி தான் அமைத்திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு வேண்டினான். பாண்டவர்கள் ஏதும் அறியாதவர்கள் போல அங்கு தங்கினர். அந்த மாளிகை அரக்கு, மெழுகு போன்ற பொருள்கள் கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
துரியோதனன் எண்னத்தைப் புரிந்துக்கொண்ட பீமன் 'இப்போதே அஸ்தினாபுரம் சென்று. துரியோதனனுடன் போர் புரிய வேண்டும் என துடித்தான். 'துரியோதனனின் சூழ்ச்சியை முறியடிப்போம் பொறுமையாய் இரு' என யுதிஷ்டிரர் கூறினார்.
பகலில் வேட்டையாடச் செல்வது போல மாளிகையைச் சுற்றி ரகசிய வழிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள். விதுரர். பாண்டவர்கள்  இருக்கும் இடத்திற்கு  ஒருவனை அனுப்பினார். பகல் நேரத்தில். புரோசனனை அழைத்துக் கொண்டு. காட்டுக்கு அவர்கள் செல்லும் போது அந்த ஆள். மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான்.
குந்தியும்,பாண்டவர்களும் தூங்கும் போது இரவில் அரக்கு மாளிகையை தீயிட புரோசனன் எண்னினான்.  குந்தியைக் காண ஒரு வேட்டுவச்சி. தனது. ஐந்து மகன்களுடன் வந்தாள். அவர்களுடன் விருந்து உண்டு. அங்கேயே அன்றிரவு தங்கினாள் வேடுவச்சி.
பீமன் நள்ளிரவில் தாயையும், சகோதரர்களையும். சுரங்க வழியாக சென்றுவிடுமாறு கூறிவிட்டு. மாளிகையின் அனைத்து பகுதிகளிலும் தீ வைத்து விட்டு.. தப்பினான். பாண்டவர்கள் குந்தியுடன் சுரங்கம் வழியே வெளியேறி ஒரு காட்டை அடைந்தனர். விதுரரால் அனுப்பப்பட்ட ஒரு படகோட்டி அவர்கள் கங்கையைக் கடக்க உதவினான். பாண்டவர்கள் முன் பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர்.
இதற்கிடையே அரக்கு மாளிகை எரிந்து  ஏழு சடலங்களையும் கண்டவர்கள் குந்தி, பாண்டவர்கள், புரோசனன் ஆகியோர் இறந்தனர் என எண்ணினர். பீஷ்மரும் இது கேட்டு பெரிதும் துக்கம் அடைந்தார். திருதராட்டிரனும் துயருற்றவன் போல நடித்தான். பாண்டவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்து முடித்தனர்.

17 - கடோத்கஜன் பிறந்தான்

வாராணாவதத்து மாளிகையிலிருந்து தப்பியவர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர். மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் குந்தி இருந்தாள். பீமன் அனைவருக்கும் தண்ணீர் கொண்டுவர தேடிச் சென்றான். அவன் தண்ணீரைக் கொண்டு வந்த போது தாயும் சகோதரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் பீமன் அவர்களுக்கு காவல் காத்து விழித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் தங்கியிருந்த காடு இடிம்பன் என்னும் அரக்கனுக்கு சொந்தமானதாகும். இடிம்பன் காட்டில் மனித வாடை வீசுவது அறிந்து. அவர்களைக் கொன்று தனக்கு உணவாக எடுத்து வரும்படி தன் தங்கை இடிம்பைக்கு கட்டளை இட்டான். அழகிய பெண் வேடம் போட்டு வந்த இடிம்பை அங்கு பீமனைக் கண்டு. அவன் மேல் காதல் கொண்டாள். பீமனோ தன் தாய் சகோதரர் அனுமதி இல்லாமல் அவளை மணக்க முடியாது என்றான்.
நேரமானபடியால் தங்கையைத் தேடி இடிம்பன் அங்கே வந்தான்.பீமனைக் கண்டதும் அவனுடன் கடுமையாக மோதினான். அதில் இடிம்பன் மாண்டான்.
இடிம்பி. பீமனுடன் சென்று குந்தியிடம் பீமன் மீது தனக்குள்ள காதலை தெரிவித்தாள். பின் குந்தி மற்ற சகோதரர்கள் சம்மதிக்க. பீமன் அவளை மணந்தான். அவர்களுக்கு கடோத்கஜன் என்ற மா வீரன் பிறந்தான். பின்னால் நடக்கும் பாரதப்போரில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு.
பின் பீமன் இடிம்பியிடம் தன்னைவிட்டு சிலகாலம் அவள் பிரிந்திருக்க வேண்டும் என்று கூற அவளும் அவ்வாறே மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
இந்நிலையில் அவர்கள் முன் வியாசர் ஒரு நாள் தோன்றி கஷ்டங்களை சிறிது காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவரையும் தவ வேடம் தாங்கிய பிராமணர்கள் போல ஏகசக்கர நகரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும். நல்ல காலம் பிறக்கும் என்றும் நல்லாசி கூறினார்.
பின் பாண்டவர்கள் அந்தணர் வேடம் தாங்கி ஒரு பிராமணர் வீட்டில் தங்கினர். பகலில் வெளியே சென்று பிட்சை ஏற்று கிடைத்ததை உண்டனர். ஆனால் அவர்கள் கோலத்தைக் கண்ட ஊரார் இவர்கள் ஏதோ காரணத்துக்காக இப்படி இருக்கிறார்கள் என அறிந்து தாராளமாகவே பிட்சை இட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு நாள். அழு குரல் கேட்க. அந்த ஊர் மக்கள் பகன் என்னும் அசுரனால் துன்புறுவதாகவும். அந்த ஊரில் ஒவ்வொருநாள் ஒரு வீட்டிலிருந்து உணவும் நரபலியும் கொடுக்க வேண்டும் என்றும் அறிந்தனர். அன்று அந்த வீட்டிலிருந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குந்தி வண்டியில் உணவுடன் பீமனை அனுப்புவதாகக் கூறி அவளை அனுப்பினாள். பீமன் சென்று. பகாசூரனை அழித்து வண்டியில் அவன் உடலைப் போட்டு ஊர்வலமாக வந்தான்.
எகசக்கர நகரம் பகாசூரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.


18 - திரௌபதியின் சுயம்வரம்
மாறு வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்குப் பாஞ்சாலத்தில் நடைபெற உள்ள திரௌபதியின் சுயம்வரம் பற்றி செய்தி கிடைத்தது. உடன் அவர்கள் பாஞ்சால தலைநகரமான காம்பிலியாவிற்கு  செல்ல நினைத்தனர். அப்போது அவர்கள் முன் வியாசர் தோன்றி 'உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. அந்த நகரத்திற்கு செல்லுங்கள்' என ஆசி கூறி சென்றார். குந்தியும் பாண்டவர்களும் பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கினர்.

சுயம்வரத்தன்று. பல நாட்டு மன்னர்கள் வந்திருந்தனர். பாண்டவர்கள் அந்தணர்களுக்கான இடத்தில் தனித் தனியாக அமர்ந்தனர். கண்ணனும், பலராமனும் அவையில் இருந்தனர். திரௌபதி. மாலையுடன். தேவதை போல மண்டபத்திற்குள் வந்தாள். சுயம்வரம் பற்றி திட்டத்துய்மன் விளக்கினான்.
'அரசர்களே!  இதோ வில்லும் அம்புகளும் உள்ளன. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்றுக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலே மீன் வடிவத்தில் ஒரு இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் உள்ளது. இந்த நிழலைப் பார்த்தவாறு. மேலே உள்ள மீன் இலக்கை சுழலும் சக்கரத்தின் துவாரம் வழியே. அம்பை செலுத்தி வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்துவோர்க்கு திரௌபதி மாலையிடுவாள்' என்றான்.
பல அரசர்கள் முயன்று தோற்றனர். தோற்றவர் பட்டியலில். ஜராசந்தன், சிசுபாலன், சல்லியன், கர்ணன், துரியோதனன். ஆகியோர் அடங்குவர். மன்னர்கள் யாரும் வெற்றிப் பெறாததால் திட்டத்துய்மன் நிபந்தனையை தளர்த்தினான். 'போட்டியில் மன்னர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். துருபதன் உள்ளத்தில் அர்ச்சுனன் கலந்துக் கொள்ளமாட்டானா என்ற ஏக்கம் இருந்தது.(பாண்டவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது அவன் நம்பிக்கை)
அப்போது அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு அந்தணன் எழுந்து நின்றான். கண்ணன் உடன் அவன் அர்ச்சுனன் என்பதை தெரிந்து கொண்டார். அந்த வாலிபன் நேராக வந்து மீன் வடிவ இலக்கை வீழ்த்த திரௌபதி அவனுக்கு மாலையிட்டாள். திரௌபதியுடன் பாண்டவர்கள் வீடு திரும்பினர். தாங்கள் கொண்டுவந்த பிட்சைப் பற்றி வீட்டினுள் இருந்த குந்தியின் காதில் விழுமாறு கூறினர்.
குந்தியும் கொண்டுவந்ததை ஐவரும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றாள். குந்தி வெளியே வந்து பார்த்த போதுதான் திரௌபதியைக் கண்டாள். மனக்குழப்பம் அடைந்தாள். யுடிஷ்டிரர்' அர்ச்சுனனே திரௌபதியை மணக்கட்டும்' என்றார். ஆனால் தாய் சொல்லை தட்டாத அர்ச்சுனன் 'திரௌபதி ஐவருக்கும் உரியவள்' என்றான். தாயின் சொல்லையும் ஊழ்வினையின் பயனையும் எண்ணி அனைவரும் இதற்கு உடன்பட குழப்பம் தீர்ந்தது.


19 - இந்திரபிரஸ்தம்
திரௌபதி விவகாரத்தில் பாண்டவர் குழப்பம் தீர்ந்தாலும் துருபதன் யாரோ ஒரு வாலிபன் பந்தயத்தில் வென்று. திரௌபதியை அழைத்துச் சென்றுவிட்டானே என கலக்கம் அடைந்து திட்டத்துய்மனை அவர்கள் பின்னே  அவர்கள் யார் என அறிந்து வர அனுப்பினான். சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன் என்பதை அறிந்து மகிழ்ந்தவன் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்தான். ஆனாலும்  ஐவரும் திரௌபதியை மணப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.

இச்சிக்கலை தீர்க்க வியாசர் தோன்றி 'திரௌபதி ஐவரை மணத்தல் தெய்வக்கட்டளை. அவர்கள் ஐவரும் தெய்வாம்சம் கொண்டவர்கள். முற்பிறவியில்  திரௌபதி. நல்ல கணவன் வேண்டும் என தவம் இருந்து சிவனை. ஐந்து முறை வேண்டினாள். அந்த வினைப்பயன் இப்பிறவியில் நிறைவேறுகிறது. இதனால் இவள் கற்புக்கு மாசு இல்லை. என துருபதனிடம் கூற. அவனும் சமாதானமடைந்தான்.
இதனிடையே..பாண்டவர் உயிருடன் இருப்பதை அஸ்தினாபுரத்தில் அனைவரும் அறிந்தனர். மேலும். அவர்கள் திரௌபதியை மணந்த செய்தியையும் கேட்டு. பொறாமை அடைந்தான் துரியோதனன். திருதிராட்டினனுக்கோ..இது ஒரு பேரிடியாய் இருந்தது.
பீஷ்மர், விதுரர்..கருத்துக்கு ஏற்ப..பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யம் அளிக்க திருதிராட்டினன் சம்மதித்தான். விதுரர்..பாண்டவர்களை அழைத்துவர பாஞ்சாலம் சென்றார்.
அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள் பீஷ்மரையும் திருதிராட்டினனையும் வணங்கி ஆசி பெற்றனர். திருதிராட்டினன் யுதிஷ்டிரனுக்கு பாதி ராஜ்யம் அளித்து மன்னனாக முடி சூட்டினான். காண்டப்பிரஸ்தம். அவர்களுக்கு..ஒதுக்கப்பட்டது. பாகப்பிரிவினை சரியாக இல்லையெனினும் பாண்டவர் இதை ஏற்றனர்.
பாண்டவர்களும் கௌரவர்களும் ஒற்றுமையாக இருக்க திருதிராட்டினன் ஆசி கூறினான்.  காண்டப்பிரஸ்தம் அடைந்தனர் பாண்டவர்கள். தேவேந்திரன் கட்டளைப்படி விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான். அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது. பாண்டவர்கள்..இந்திரபிரஸ்தத்தில் இருந்து நாட்டை நன்கு ஆட்சிபுரிந்தனர். இதனிடையே நாரதர் திரௌபதி விஷயத்தில் பாண்டவர்களிடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தினார்.
பாண்டவர்கள்  ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருவர் என்ற முறையில் திரௌபதியுடன் வாழவேண்டும் அப்படியிருக்கும் போது நால்வரின் குறுக்கீடோ இன்னலோ இருக்கக்கூடாது. இந்த உடன்பாட்டை மீறுவோர்  ஓராண்டு நாட்டைவிட்டு விலக வேண்டும் என்பதே அந்த உடன்பாடு.


20-அர்ச்சுனன்-சுபத்திரை திருமணம்
ஒரு சமயம் யுதிஷ்டிரரும், திரௌபதியும் ஒரு மண்டபத்தில் தனித்து இருந்த போது நள்ளிரவில் ஒரு அந்தணன் என் பசுக்களை யாரோ களவாடிவிட்டார்கள் 'என் கூவியவாறு அம்மண்டபம் நோக்கி ஒட அவனை தடுத்த அர்ச்சுனன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் திருடர்களைப் பிடித்து பசுக்களை மீட்டு அந்தணனிடம் ஒப்படத்தான்.

யுதிஷ்டிரரும், திரௌபதியும் இருந்த மண்டபத்தருகே சென்றபின்  உடன்படிக்கையை மீறிவிட்டதாக அர்ச்சுனன் எண்ணினான். யுதிஷ்டிரர் தடுத்தும் ஒரு ஆண்டு நாட்டைவிட்டு விலகி இருக்க தீர்மானித்தான். புண்ணியதலங்கள் பலவற்றிற்குச் சென்றான். தென்திசை வந்து கோதாவரியிலும்,  காவிரியிலும் புனித நீராடினான். பின், துவாரகை சென்று பிரபாசா என்னும் தலத்தை அடைந்தான். கிருஷ்ணரின் தங்கை சுபத்திரையை மணக்கும் ஆசை அவனுக்கு இருந்தது. அதற்கு பலராமன் சம்மதிக்காவிடினும். கண்ணன் உதவி புரிய முன் வந்தார்.
துறவிபோல அர்ச்சுனன் வேடம் பூண்டு வர பலராமன் துறவியை வணங்கி  சுபத்திரையை அவருக்கு பணிவிடை செய்ய பணித்தான். வந்திருப்பது அர்ச்சுனன் என்பதை அறிந்த அவளும்  அவன் மீது காதல் கொண்டாள். இதை அறிந்த பலராமர். அர்ச்சுனனுடன் போரிட முயல கண்ணன் பலராமன் சினத்தை தணித்தார். அர்ச்சுனன் சுபத்திரை திருமணம் இனிதே முடிய அர்ச்சுனன் இந்திரபிரஸ்தம் திரும்பினான்.
சில காலத்திற்குப்பின் சுபத்திரை அபிமன்யுவை பெற்றாள்.  திரௌபதி தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள்.
யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் ஒன்று இருந்தது. இந்த பயங்கர காட்டில் இரக்கமில்லா அரக்கர்களும் கொடிய விலங்குகளும், விஷப்பாம்புகளும்  இருந்தன. அக்கினித்தேவன் அக்காட்டை அழிக்க நினைத்து தோற்றான். அவன் அர்ச்சுனனிடமும் கண்ணனிடம் வந்து முறையிட்டான். காட்டை அழிக்க தேவையான கருவிகளையும் அவர்களுக்கு அளித்தான். அர்ச்சுனனுக்கு நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக தேர் கிடைத்தது. அதில் வானரக் கொடி பறந்தது. மேலும் காண்டீபம் என்னும் புகழ் வாய்ந்த வில்லும் இரண்டு அம்பறாத்தூணிகளும் கிடைத்தன.
கண்ணனுக்கு சுதர்சனம் என்ற சக்கர ஆயுதமும் கௌமோதகி என்னும் கதாயுதமும் கிடைத்தன. இவற்றின் உதவியால் .காண்டவ வனம் தீப் பற்றி  எரிந்தது.அக்காட்டில் இருந்த தீயவை அழிந்தன.அக்கினித்தேவன் மகிழ்ந்தான்.
(ஆதி பருவம் முற்றிற்று இனி சபாபருவம்)

21.ஜராசந்தன் மறைவு
காண்டவவனம் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனாலும் மயன் என்னும் அசுர சிற்பி மட்டும் தப்பிப்பிழைத்தான். அவன் அர்ச்சுனனுக்கு தகுந்த கைமாறு செய்ய விரும்பினான். அர்ச்சுனனும் கண்ணனும் செய்யும் உதவிக்கு கைமாற்றாக எதுவும் ஏற்பதில்லை என்றனர். மயன் யுதிஷ்டிரரை அணுகி "தான் ஒரு அசுர சிற்பி என்றும். தன்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும் என்றும் அதை இந்திரபிரஸ்தத்தில் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டினான்.அனுமதி கிடைத்தது.

மயன் இமயமலைக்கு அப்பால் சென்று பொன்னையும், மணியையும் இரத்தினங்களையும் கொண்டு வந்து சபா மண்டபம் அமைத்தான். சுவர்களும், தூண்களும் தங்கத்தால் அமைக்கப்பட்டன. அவற்றுள் இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன. பளிங்குகற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. தடாகங்களில் தங்கத்தாமரை மலர்கள் சுற்றிலும் செய்குன்றுகளும் நீர்வீழ்ச்சிகளும் காணப்பட்டன. தரை இருக்குமிடம், நீரிருக்குமிடம் போலவும் .நீர் இருக்குமிடம் தரை போலவும் அமைத்திருந்தான்.பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.
அம்மண்டபத்தை பார்வையிட்ட நாரதர் "மூவுலகிலும் இதற்கு இணையான மண்டபத்தை பார்க்கவில்லை" என்றார். மேலும் யுத்ஷ்டிரரிடம் இராஜசூய யாகம் செய்யச்சொன்னார். இராஜசூய யாகம் செய்ய சில தகுதிகள் வேண்டும் பிறநாட்டு மன்னர் அந்த மன்னனின் தலைமையை ஏற்கவேண்டும். அதனால் கிருஷ்ணன் யுதிஷ்டிரரிடம் "மகத நாட்டு மன்னன் ஜராசந்தன். உன் தலைமையை ஏற்கமாட்டான். அவன் ஏற்கனவே 86 நாட்டு அரசர்களை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான். மேலும் 14 பேரை சிறைப்படுத்தி அவர்களைக்கொல்வதே அவன் திட்டம். நீ அவனை வென்றால் சக்கரவர்த்தி ஆகலாம் " என்றார்.
மாயாவியான ஜராசந்தனைக் கொல்ல பீமனை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இரு வீரர்களும் கடுமையாக மோதினர். பீமன் ஜராசந்தனை .பனைமட்டையை கிழித்தெறிவதுபோல இறண்டாக கிழித்தெறிந்தான். மாயக்காரனான ஜராசந்தன் மீண்டும் உயிர் பெற்று போர்புரிந்தான். பீமன் களைப்புற்று என்ன செய்வது என அறியாது திகைத்தான். கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து கால்மாடு தலைமாடாகப் போடுமாறு செய்கை செய்தார். (மாடு- பக்கம் ) .பீமனும் அவ்வாறே செய்ய ஜராசந்தன் அழிந்தான். சிறையில் இருந்த மன்னர்கள் விடுதலை அடைந்தனர். யுதிஷ்டிரர் மன்னாதி மன்னனாக ஆனான்.

22 - ராஜசூயயாகம்
சக்கரவர்த்தியாகிவிட்ட யுதிஷ்டிரர் தலைமையை எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தம்பியர் நால்வரும்  நான்கு திக்குகளிலும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றனர். மாமுனிவர்களும் .பீஷ்மரும் துரோணரும், கௌரவரும், இந்திரபிரஸ்தம் வந்தனர். கண்ணபிரானிடம் வெறுப்பு கொண்டிருந்த சிசுபாலனும் வந்திருந்தான். இந்திரபிரஸ்தம் ஒரு சொர்க்கலோகம் போல திகழ்ந்தது.

நாரதர் சொன்னாற்போல ராஜசூயயாகம் இனிதே நடந்தது. துரியோதனன் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மரையும், யுதிஷ்டிரரையும் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான்.(கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்)
குந்தியின் மந்திர சக்தியால் யமதர்மனை நினைத்து பெற்ற மகன் யுதிஷ்டிரர் என்பதால் அவரும் சிசுபாலனின் தாக்குதலுக்கு ஆளானார். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனைக் கொல்லும் காலம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது. அவன் மேனியிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு கண்ணனின் பாதங்களில் வந்து சேர்ந்தது. சிசுபாலன் சாப விமோசனம் பெற்றான்.


23 - சகுனியும்...துரியோதனனும்..
ராஜசூயயாகம் முடிந்தபின்  துரியோதனன் பொறாமையால் மனம் புழங்கினான். பாண்டவர் ஆட்சியிருக்கும் வரை என் ஆட்சியும் ஒரு ஆட்சியா? அர்ச்சுனனின் காண்டீபம் என்ற வில்லும், பீமனின் கதாயுதமும் என்னை இகழ்ச்சி ஆக்கிவிடும் போல இருக்கிறது. ராஜசூயயாகத்திற்கு எவ்வளவு மன்னர்கள் வந்தனர் எவ்வளவு பரிசுகளை கொண்டுவந்து கொட்டினார்கள் அந்த தர்மனிடம் அப்படி என்ன இருக்கிறது? என்று பொறாமைத் தீ கொழிந்துவிட்டு எரிய ஏங்கினான்.

பாண்டவர் வாழ்வை அழித்துவிட வேண்டும்..என தன் மாமனாகிய சகுனியை சரண் அடைந்தான்.
மாமனே! அவர்கள் செய்த யாகத்தை மறக்கமுடிய வில்லை அங்கு வந்த பொருட்குவியலைப் பற்றிக்கூட எனக்கு கவலையில்லை. ஆனால் அவ்வேள்வியில் என்னை கேலி செய்தனர். எள்ளி நகையாடினர்  என்றெல்லாம் சொல்லி என் தந்தையை பொறாமை கொள்ளச் செய் என்றான்.
உடன் சகுனி 'நீ ஒப்பற்ற தெய்வமண்டபம் ஒன்று செய். அதன் அழகைக் காண பாண்டவரை அழைப்போம். மெல்லப் பேசிக்கொண்டே சூதாட்டம் ஆட தர்மனை சம்மதிக்க வைப்போம். என் சூதாட்டத்தின் திறமையை நீ அறிவாய். அதன் மூலம் அவர்களை உனக்கு அடிமை ஆக்குவேன்' என்றான். இருவரும் திருதிராட்டினனிடம் சென்று உரைத்தனர். ஆனால் அவன் சம்மதிக்கவில்லை.ஆனால் சகுனி சொல்கிறான்..
'உன் மகன் நன்கு சிந்திக்கிறான் ஆனால் பேசும்போதுதான் தடுமாறுகிறான். அவன் நீதியை இயல்பாகவே அறிந்துள்ளான். அரச நீதியில் தலை சிறந்து விளங்குகிறான். பிற மன்னர்களின் செல்வமும் புகழும் வளர்வதுதான் ஒரு மன்னனுக்கு ஆபத்து. அந்த பாண்டவர் வேள்வியில் நம்மை கேலி செய்தனர். மாதரும் நகைத்திட்டாள் சூரியன் இருக்கையில்  மின்மினிப் பூச்சிகளைத் தொழுவது போல ஆயிரம் பலம் கொண்ட உன் மகன் இருக்கையில் அவனுக்கு வேள்வியில் முக்கியத்துவம் இல்லாமல் கண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.'
இதைக் கேட்ட திருதிராட்டினன் "என் பிள்ளையை நாசம் செய்ய சகுனியே நீ பேயாய் வந்திருக்கிறாய்.சகோதரர்களிடையே பகை ஏன்? பாண்டவர்கள் இவன் செய்த பிழை எல்லாம் பொறுத்தனர். பொறுமையாக உள்ளனர். அவர்கள் இவனைப் பார்த்து சிரித்ததாக அற்பத்தனமாய் பேசுகிறாய் .துரியோதனன் தரை எது தண்ணீர் எது என தடுமாறியது கண்டு நங்கை நகைத்தாள் இது தவறா? தவறி விழுபவரைக் கண்டு நகைப்பது மனிதர்கள் மரபல்லவா? என்றான்.
துரியோதனன் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு கடும் சினம் கொண்டான். இறுதியாக தந்தையிடம் 'நான் வாதாட விரும்பவில்லை. நீ ஒரு வார்த்தை சொல்லி பாண்டவர்களை இங்கு வரவழைப்பாயாக ஒரு சூதாட்டத்தில் அவர்கள் சொத்துக்களை நாம் கவர்ந்து விடலாம் இதுவே என் இறுதி முடிவு' என்றிட்டான்.


24- தருமபுத்திரர் முடிவு

துரியோதனன் பேச்சைக்கேட்டு திருதிராட்டினன் துயரத்துடன் சொன்னான்  'மகனே உன் செயலை வீரர்கள் ஒரு போதும் செய்யார். உலகில் பிறர் செல்வத்தைக்கவர விரும்புவோர் பதரினும் பதராவர்.வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரக்கூடாது. இதெல்லாம் உனக்குத் தெரியவில்லை. பாண்டவரும் எனக்கு உயிராவர். உன் எண்ணத்தை மாற்றிக்கொள்'

ஆனால் .துரியோதனன் மனம் மாறவில்லை..'வெற்றிதான் என் குறிக்கோள் அது வரும் வழி நல்வழியா...தீய வழியா என்ற கவலை எனக்கில்லை.என் மாமன் சகுனி சூதாட்டத்தில் நாட்டைக் கவர்ந்து தருவான் தந்தையே நீ அவர்களை இங்கு அழைக்கவில்லையெனில் என் உயிரை இங்கேயே போக்கிக்கொள்வேன்'என்றான்.
'விதி மகனே விதி இதைத்தவிர வேறு என்ன சொல்ல உன் கொள்கைப்படியே பாண்டவர்களை அழைக்கிறேன்' என்றான் திருதிராட்டினன். தந்தையின் அனுமதி கிடைத்ததும்...துரியோதனன் ஒரு அற்புதமான மண்டபத்தை அமைத்தான். திருதிராட்டினன் விதுரரை அழைத்து 'நீ பாண்டவர்களை சந்தித்து .துரியோதனன் அமைத்திடும் மண்டபத்தைக் கண்டு களிக்க திரௌபதியுடன் வருமாறு நான் அழைத்ததாக கூறுவாயாக பேசும்போதே சகுனியின் திட்டத்தையும் குறிப்பால் உணர்த்துவாயாக' என்றான்.
விதுரரும் துயரத்துடன் இந்திரபிரஸ்தம் சென்று பாண்டவரை சந்தித்து 'அஸ்தினாபுரத்தில் துரியோதனன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண வருமாறு வேந்தன் அழைத்தான்.சகுனியின் யோசனைப்படி துரியோதனன் விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளான் விருந்துக்குப்பின் ..சூதாடும் எண்ணமும் உண்டு 'என்றார். இதைக்கேட்டு தருமர் மனம் கலங்கினார்.'துரியோதனன் நமக்கு நன்மை நினைப்பவன் இல்லை. முன்பு எங்களை கொல்லக் கருதினான். இப்போது சூதாட்டமா? இது தகாத செயலல்லவா? என்றார்.
துரியோதனனிடம் சூதாட்டத்தின் தீமைப் பற்றி எடுத்துக் கூறியும் அவன் மாறவில்லை. திருதிராட்டினனும் கூறினான் பயனில்லை என்றார் விதுரர். தருமரோ' தந்தை மண்டபம் காண அழைத்துள்ளார். சிறிய தந்தை நீங்கள் வந்து அழைத்துள்ளீர்கள். எது நேரிடினும் அங்கு செல்வதே முறையாகும்' என்றார்.
இதைக்கேட்ட பீமன் அர்ச்சுனனை நோக்கி ' அந்தத் தந்தையும் மகனும் செய்யும் சூழ்ச்சியை முறியடிப்போம் அழிவு காலம் வரும் வரை ஒரு சிறிய கிருமியைக் கூட உலகில் யாரும் அழிக்க முடியாது. இப்போது அவர்களின் அழியும் காலம் வந்துவிட்டது. எனவே அவர்களுடன் போரிடுவோம். அவர்கள் செய்யும் தீமையை எத்த்னைக் காலம்தான் பொறுப்பது? ' என்றான்.
விஜயனும் மற்ற தம்பிகளும் இது போலவே உரைக்க..தம்பியரின் மனநிலையை உணர்ந்த தருமர் புன்னகையுடன் 'முன்பு துரியோதனன் செய்ததும் இன்று மூண்டிருக்கும் தீமையும்..நாளை நடக்க இருப்பதும் நான் அறிவேன் சங்கிலித் தொடர் போல விதியின் வழியே இது.நம்மால் ஆவது ஒன்றுமில்லை தந்தையின் கட்டளைப்படி இராமபிரான் காட்டுக்கு சென்றது போல நாமும் நம் தந்தையின் கட்டளைப்படி நடப்போம்' என்றார்.

25-சூதாட்டம் தொடங்கியது

தம்பிகள் கோபம் தணிந்து  தருமரின் அறிவுரைப்படி அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர். அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களைக் காண சந்திகள்,வீதிகள், சாலைகள் என எத்திசை நோக்கினும் மக்கள் சூழ்ந்தனர். அவர்கள் அரண்மனை அடைந்து திருதிராட்டினனையும், பீஷ்மரையும், கிருபாசாரியாரையும், துரோணாசாரியாரையும் அவர் மகன் அசுவத்தாமனனையும் கர்ணனையும், துரியோதனனையும் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கினர். மாயச் சகுனியை மகிழ்வுடன் தழுவினர். குந்தியும், திரௌபதியும் அனைவருடனும் அளவளாவினர்.

அவை கூடியது..அப்போது சகுனி தருமரை நோக்கி  'தருமரே  உமது குலப்பெருமையை உயர்த்தியுள்ளீர் இப்போது சூதாட்டத்தில் உங்கள் ஆற்றலைக் காண்போமா?' என்றார்.  தருமரோ 'சதி செய்து என்னை சூதுக்கு அழைத்தீர் இதில் பெருமையுண்டா..? அறம் உண்டா? வீரம் உண்டா? எங்கள் நல்வாழ்வை நீ விரும்பவில்லை என நான் அறிவேன். இச்சூதாட்டம் மூலம் எங்களை அழிக்க நினைக்கிறாய்' என்றார்.
உடன் சகுனி சிரித்தான். 'உன்னை மாமன்னன் என்று அழைத்து விட்டேன். பண்டை மன்னர்கள் சூதாடவில்லையா அச்சம் கொள்ளாதே  நீ சூதாட்டத்தில் வெல்வாய் வெற்றி பெறுவது உன் இயல்பு வா ஆடுவோம் 'என்றான். தருமர் பதிலுக்கு 'சான்றோர் சூதாட்டத்தை விஷம் என கண்டித்துள்ளனர் ஆதலின் இந்த சூதினை வேண்டேன் என்னை வஞ்சித்து என் செல்வத்தைக்கொள்வோர் எனக்கு துன்பம் தருபவர் அல்லர், நான்கு வேதங்களையே அழித்தவர் ஆவர் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் வேண்டாம் சூது' என்றார்.
மன்னர் பலர் கூடியுள்ள இம்மாபெரும் சபையில் மறுத்து பேசுதல் அழகோ வல்லவனே வெல்வான் அல்லாதவன் தோற்றிடுவான். வருவதானால் வா மனத்துணிவில்லையெனில் செல்'என்றான் சகுனி. விதியின் வலிமையை உணர்ந்த தருமர்  'மதியினும் விதி பெரிது. பிறர் செய்யும் கர்மப்பயனும் நம்மை வந்து அடைவதுண்டு. ஆகவே விதி இச்செயலுக்கு என்னை தூண்டுமானால் அதைத்தடுக்க என்னால் முடியுமா?'என்று சூதுக்கு இணங்கினார்.
சூதாட்டம் தொடங்கியது. தாயம் உருட்டப்பட்டது. விதுரரைப்போன்றோர் மௌனியானார். 'பந்தயம் என்ன?'என்றார் தருமர். 'அளவிலா செல்வம் என்னிடம் உண்டு. ஒரு மடங்கு நீ வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன்'என்றான் துரியோதனன். 'ஒருவர் ஆடப் பணயம்' வேறொருவர் வைப்பதா 'என்றார் தருமர்.
'மாமன் ஆடப் பணயம் மருமகன் வைக்கக்கூடாதா ?இதில் என்னததவறு ?'என எதிவாதம் புரிந்தான் சகுனி. பரபரப்பான ஆட்டத்தில் படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர். மாடிழந்தார் மந்தை மந்தையாக ஆடிழந்தார்.. ஆளிழந்து விட்டார்.. நாடிழைக்கவில்லை தருமா.நாட்டை வைத்து ஆடு. என்று தூண்டினான் சகுனி


26.- விதுரரின் அறிவுரை
சூதாட்டத்தை நிறுத்த விதுரர் எவ்வளவோ முயன்றார். 'சந்தர குலத்திலே பிறந்த நாமா இந்த தீய செயலைச் செய்வது. இன்று பாண்டவர் பொறுமை காக்கின்றனர். குலம் அழிவெய்த விதி துரியோதனனைப் படைத்துள்ளது. குலம் முழுவதும் துரியோதனன் என்னும் மூடனுக்காக அழிய வேண்டுமா? என்றவர் திருதிராட்டிரனை நோக்கி 'சூதாட்டத்தில் துரியோதனன் வெற்றிக்கண்டு மகிழ்கிறாய். கற்ற கல்வியும் கேள்வியும் கடலிற் காயம் கரைத்தது போல் ஆயிற்றே வீட்டுக்குள்ளேயே நரியையும் விஷப்பாம்பையும் பிள்ளைகளாய் வளர்த்திட்டோம். சாகும் வயதில் தம்பி மக்கள் பொருளை விரும்புகிறாயா 'நாட்டைத் தா' எனக் கேட்டிருந்தால் தந்திருப்பார்களே அப்படியிருக்க சூதாட்டத்தை நிறுத்துவாயாக'என வேண்டினார்.

விதுரரின் கூற்றைக்கேட்டு துரியோதனன் நெஞ்சம் கொதித்தது. கண்களில் தீப்பொறி புருவங்கள் துடித்தன. சினத்தின் விளிம்புக்கே சென்றான். நன்றி கெட்ட விதுரா. .நாணயமற்ற விதுரா. தின்ற உப்பினுக்கே. நாசம் தேடும் விதுரா.. எங்கள் அழிவைத்தேடும் நீ இன்பம் எங்கு உண்டோ அங்கே செல்'என்று விதுரரை ஏசினான்.
ஆனால் விதுரரோ சிறிதும் குழம்பாமல் தெளிவாகக்கூறினார் 'நான் எங்கு சென்றாலென்ன அழிவுப்பாதையிலிருந்து உன்னைத்தடுக்கப்பார்த்தேன். ஆனால் பொல்லாத விதி என்னை வென்றுவிட்டது. என் அறிவுரை எடுபடாது உன்னிடம்..நெடும் பச்சை மரம் போல வளர்ந்து விட்டாய். இங்கு யாரும் உனக்கு அறிவுரை கூறார். உன் அவையில் நல்லோர் இருப்பது தகாது. உன் இஷ்டம் போல் செய்'என்று கூறி இருக்கையில் அமர்ந்தார்.
இது வேளை சகுனி .'நீ இழப்பதெல்லாம் மீண்டும் வரும். காயுருட்டலாமா, ?என்றார்.  தருமர் நிலை தடுமாற..'நாட்டை இழந்த நீ இனி என்ன இருக்கிறது என எண்ணாதே. உன் தம்பிகளை பணயமாக வைத்து இழந்தது அனைத்தையும் மீட்டுக்கொள் என்றான் சகுனி. அவையோர் கண்ணீர்விட்டனர். கர்ணன் மகிழ்ந்தான், துரியோதனனோ..'தம்பிமாரைவைத்து நீ ஆடி வென்றிடின். இழந்த பொருட்களை மீண்டுமளிப்போம். 'என்றான்.
.பீமன் அடிபட்ட நாகம் போலக் காணப்பட்டான். பார்த்தன் முகக்களையிழந்தான்.நகுலனோ நினைவிழந்தான். முற்றுணர்ந்த சகாதேவன் ஊமையானான். பீஷ்மர் நெருப்பில் வீ ழ்ந்தாற்போல்துடித்தார். விதுரர் பெரும் துன்பமுற்றார்.


27-சூதாட்டத்தில் அனைவரையும் இழத்தல்
ஆட்டம் தொடர்ந்தது.சகாதேவனைப் பணயம் வைத்தார் தருமர். இழந்தார். பின் நகுலனையும் இழந்தார். இருவரையும் இழந்ததும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல 'நகுலனும். சகாதேவனும். வேறொரு தாய்க்கு பிறந்தவர்கள் என்பதால். அவர்களை வைத்து ஆடினாய் போலும். ஏன் பார்த்தனையும், பீமனையும் வைத்து ஆடவில்லை?' என சகுனி தருமனைத் தூண்டினான்.

'சூதாட்டத்தில் நாட்டை இழந்தாலும். எங்கள் ஒற்றுமையை யாரும் குலைக்க முடியாது' என்ற தருமர். அடுத்தடுத்து அர்ச்சுனனையும், பீமனையும் இழந்தார். துரியோதனனோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். சகுனி தருமரை நோக்கி. 'வேறென்ன பந்தயப் பொருள்?' எனக் கேட்க. தருமரோ தம்மைத் தாம் பணயம் என்றார். மீண்டும் சகுனி வென்றார்.
துரியோதனனின் மகிழ்ச்சியைக் கண்ட சகுனி தந்திரத்துடன். அவனிடம்..'துரியோதனா. புண்ணை கோல் கொண்டு குத்தாதே. அவர்களே நொந்துப் போய் உள்ளனர். இவர்கள் உன் சகோதரர்கள். அவர்கள் நாணும் படி பேச வேண்டாம். இவர்கள் வெற்றி பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியாக ஒரு பொருள் இவர்களிடம் இருக்கிறது. அதை வைத்து ஆடினால். தோற்ற பொருள் அனைத்தும் மீண்டும் பெறலாம். 'என திரௌபதியை வைத்து ஆட தருமரைத் தூண்டினார்.
துரியோதனனும். 'இந்த யோசனை அருமை' என மகிழ்ந்தான். சிறிதும்..சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர். திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள். கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆணவத்துடன் துரியோதனன் விதுரரைப் பார்த்து 'திரௌபதியிடம் சென்று நம் மனையில் பணி புரிய அழைத்து வருக' என கட்டளையிட்டான்.
விதுரர் சினம் கொண்டு 'மூடனே! பாண்டவர் நாளை பழி தீர்த்துடுவர். தரை மீது மாண்டு நீ கிடப்பாய். தனக்குத்தானே அழிவைத் தேடுவதுதான் ஆண்மையா? நொந்தவர் மனம் வருந்த சொல்லும் சொல். அவர் நெஞ்சில் நீண்ட நாட்கள் அகலாது. அது நம்மை நரகத்தில் சேர்த்துவிடும். உன் நன்மைக்கே இதைச் சொல்கிறேன்' என்றார். 'கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கிறீர். பாண்டவர் பாதம் பணிந்து. அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள். இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லையெனில் மகாபாரதப்போர் வரும். நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்" என்றும் கூறினார்.
விதுரர் சொல் கேட்டு துரியோதனன் 'ஏப்போதும் எம்மை சபித்தல் உம் இயல்பு.' என்று கூறிவிட்டு. தேர்ப்பாகனை கூப்பிட்டு. 'நீ பாஞ்சாலி இருக்குமிடம் சென்று, எமது ஆணையைக் கூறி. அவளை இங்கு அழைத்து வா. ' என்றான்.


28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்

தேர்ப்பாகன் பாஞ்சாலி வாழ் இடத்திற்குச்சென்றான். அவளிடம் 'அம்மா தருமர் .மாமன் சகுனியிடம் மாயச்சூதாடி பொருளைஎல்லாம் இழ்ந்து  .நாட்டையிழந்து தம்பியரை இழந்து, பந்தைய பொருளாக வைத்து தம்மையும் இழந்தார் தாயே! உன்னையும் பணயம் வைத்து தோற்றார். எல்லோரும் கூடியிருக்கும் அவைக்கு உன்னை அழைத்து வருமாறு எம் அரசன் என்னை பணித்தான்' என்றான்.

தேர்பாகன் கூறிய வார்த்தைகளைகேட்ட பாஞ்சாலி .'சூதர் சபையில் மறக்குலத்து மாதர் வருதல் மரபோ .? யார் கட்டளையால் என்னை அழைத்தாய்..'என்றாள், அதற்கு அவன், 'துரியோதன மன்னன் கட்டளை'என்றான்.
'நீ சென்று நடந்ததை என்ன என்று கேட்டு வா சகுனியிடம்.. சூதாடியபோது ...தர்மர். என்னை முன்னே கூறி இழந்தாரா? அல்லது தம்மையே முன்னம் இழந்து பின் என்னைத் தோற்றாரா? இச்செய்தி தெரிந்து வா'என்று திரௌபதி தேர்பாகனை திருப்பி அனுப்பினாள். தேர்ப்பாகனும் சபை சென்று 'அரசே. 'என்னை முதலில் வைத்திழந்த பின்பு மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னர் எனைத்தோற்றாரா? என்று பேரவையில் கேட்டு வரச்சொல்லி அப்பொன்னரசி பணித்தாள். அதன்படி இங்கு வந்துள்ளேன்' என்றான்.
இது கேட்டு பாண்டவர் மனம் நொந்தனர்.மற்ற மன்னர்களும் ஊமையராயினர். பாகன் உரைத்ததைக் கேட்டு துரியோதனன் சினத்தில் சீறினான். 'என் பெருமையை அறியா தேர்ப்பாகனே, அவள் சொன்னதை இங்கு வந்து உளறுகிறாய். அந்தப் பாஞ்சாலி இங்கு வந்து பேசட்டும். 'என்றான்.
தேர்ப்பாகனும்  மீண்டும் பாஞ்சாலியிடம் சென்றான். ஆனால் திரௌபதியோ 'தர்மர் தன்னை இழந்த பின்னால் என்னை இழந்திருந்தால் அது தவறு அதற்கு அவருக்கு உரிமையில்லை நீ மீண்டும் சென்று அதற்கான பதிலை அறிந்து வா என்றாள்.
வருத்தத்துடன் தேர்ப்பாகன் 'எனனைக் கொன்றாலும். இதற்கான விளக்கம் தெரியாது. நான் திரும்ப இங்கே வரப்போவதில்லை'என உறுதி கொண்டான். துரியோதனனிடம் நடந்ததைக்கூறியதுடன். பாஞ்சாலி மாதவிடாயிலிருக்கிறாள் என்ற செய்தியையும் சொன்னான். செய்தி கேட்ட துரியோதனன் 'மீண்டும் போ...அவளை ஏழு கணத்தில் அழைத்துவா 'என்றான்.
தேர்ப்பாகன் தெளிவாக சபைக்குக்கூறினான் .'நான் இதுநாள்வரை மன்னன் கட்டளையை மீறியதில்லை. அம்மாதரசி கேட்ட கேள்விக்கு ஆறுதலாக ஒரு சொல் சொன்னால் சென்று அழைத்து வருகிறேன்' என்றான். பாகனின் மொழி கேட்ட் துரியோதனன் துச்சாதனனை நோக்கி. இவன் பீமனைப் பார்த்து பயந்து விட்டான். இவன் அச்சத்தை பிறகு போக்குகிறேன். இப்போது நீ சென்று அவளை அழைத்து வா. 'என ஆணையிட்டான்


29-திரௌபதி நீதி கேட்டல்

தீய எண்ணத்தில் அண்ணனை விஞ்சிய துச்சாதனன் பாஞ்சாலி இருக்குமிடம் நோக்கி விரைந்தான். பாஞ்சாலி அவனைக் கண்டு ஒதுங்க. 'அடீ. எங்கே செல்கிறாய்?' என கூச்சலிட்டான். திரௌபதியும் 'நான் பாண்டவர் மனைவி. துருபதன் மகள். இதுவரை யாரும் இதனை மறந்ததில்லை.. ஆனால். தம்பி...நீயோ வரம்பின்றி பேசுகிறாய்' என்றாள்.

அதற்கு துச்சாதனன். 'இனி நீ பாண்டவர் தேவியும் அல்ல .பாஞ்சாலத்தான் மகளும் அல்ல, என் அண்ணனின் அடிமை. மன்னர் நிறைந்த அவையில் எங்கள் மாமனுடன் சூதாடி உன்னை தருமன் இழந்துட்டான். இனி உன்னை ஆள்பவன் துரியோதனனே. அம்மன்னன். உன்னை அழைத்து வருமாறு சொல்ல வந்தேன். பேடி மகனான பாகனிடம் உரைத்தது போல என்னிடமும் சொல்லாது புறப்படு'என்றான்.
அவன் சொல் கேட்ட பாஞ்சாலி 'மாதவிலக்கு ஆதலால் ஒராடையுடன் இருக்கிறேன். மன்னர் அவைக்கு என்னை அழைத்தல் முறையல்ல. மேலும் உடன்பிறந்தார் மனைவியை சூதில் வசமாக்கி. ஆதரவை நீக்கி. அருமையை குலைத்திடுதல் மன்னர் குல மரபா?  உன் அண்ணனிடம் என் நிலையைஸ் சொல்' என்றாள்.
இதுகேட்ட துச்சாதனன். கோபம் தலைக்கேற.. பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். 'ஐயோ' என அவள் அலற. அந்தக் கருங்கூந்தலை கரம் பற்றி இழுத்துச்சென்றான். வழிநெடுக மக்கள் வாய் மூடிப் பார்த்திருந்தனர். அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி விம்மி அழுதாள். பாண்டவரை நோக்கி 'அம்மி மிதித்து. அருந்ததி காட்டி வேதஸ் சுடர்த்தீ முன் விரும்பி மணம் செய்து கொண்டீரே. இன்று இதைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே. இது தகுமா ' என்றாள்.
பார்த்தனும். பீமனும். செயலற்று இருந்தனர். தருமர் தலை குனிந்தார்.  பாஞ்சாலி மேலும் கூறுகிறாள் 'இப்பேரவையில் சான்றோர் பலர் இருக்கின்றன்ர். வேத விற்பன்னர்கள் உள்ளனர். வேறுபல சிறப்புமிக்க மேலோர் உள்ளனர். ஆயினும் வெஞ்சினம் கொண்டு யாரும் வாய்திறக்கவில்லையே' என்றவள் துச்சாதனனை நோக்கி ;அற்ப புத்தியுடையவனே. மன்னர் அவையில் என்னை பிடித்து இழுத்து ஏசுகிறாயே. உன்னைப் பார்த்து 'நிறுத்துடா'எனக்கூற அவையில் யாரும் இல்லையே' என புலம்பினாள்.
வெறிகொண்ட துச்சாதனனோ. 'நீ இப்போது வெறும் தாதி' என தீதுரைகள் பல சொன்னான். கர்ணன் சிரிக்க.   துரியோதனன் ஆணவசிரிப்பு சிரிக்க  சகுனி மனம் மகிழ. அவையினரோ  வாளாயிருக்க. பிதாமகன் பீஷ்மரோ எழுந்து பேச ஆரம்பித்தார்.

30-பீஷ்மர் உரை....திரௌபதி மறுப்பு
பீஷ்மர் எழுந்து திரௌபதிக்கு கூற ஆரம்பித்தார் .'தருமன் சூதாட்டத்தில் உன்னை இழந்து விட்டான். நீயோ அவன் செய்கையை மறுக்கின்றாய். சூதிலே சகுனி தருமனை வென்றான். பின் உன்னை பந்தயமாக்கி தருமன் இழந்தான். அப்படி தருமன் தன்னை இழந்தபின் உன்னை வைத்து ஆடியது குற்றம் என்கிறாய். விதிப்படி அது நியாயம். ஆனால் பழைய காலத்தில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்றே கருதினர். ஆனால் பிற்காலத்தில் அக்கருத்து மாறிவிட்டது.

'இப்போதுள்ள நீதி சாஸ்திரங்களை நோக்குகையில்  ஆணுக்கு இணையாகப் பெண்ணை கருதமுடியாது. ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம். தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு. சாத்திரத்தில் சான்று உள்ளது. ஆனால் உண்மையில் இது அநீதி தான். ஆனாலும் நீதி சாத்திரத்தில் இதற்கு இடமிருக்கிறது. உன் சார்பில் சாத்திரம் இல்லை. தையலே. முறையோ என நீ முறையிட்டதால். இதனை நான் சொன்னேன். இன்று தீங்கை தடுக்கும் திறமில்லாதவனாக இருக்கிறேன்' என்று கூறி தலை கவிழ்ந்தார்.
'பிதாமகரே தர்ம நெறியை நன்கு உரைத்தீர்.ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்தபின்  .சான்றோர் நிறைந்த சபையில் அச்செய்தியைக் கூறியபோது  'நீ செய்தது சரி என்றனராம். அதைப்போலவே இருக்கிறது இந்த அவை. பேய் ஆட்சி செய்தால், பிணத்தைத் தின்பதை  போற்றும் சாத்திரங்கள்.
என் கணவரை சூதாட வற்புறுத்தியது தவறல்லவா. அது நேர்மையா. திட்டமிட்ட சதி அல்லவா. .மண்டபம் ஒன்று அமைத்து அதைக்காண அழைத்து.  நாட்டைக்கவர நினைப்பது முறையா? பெண்களுடன் பிறந்த உங்கள் செய்கை பெண்பாவம் அல்லவா' என்று கையெடுத்து கும்பிட்டு அழுது துடித்தாள் பாஞ்சாலி.
அழும் பாஞ்சாலியை நோக்கி,துச்சாதனன் தகாதா வார்த்தைகளை உரைத்தான். அவள் ஆடை குலைய நின்றாள். துச்சாதனன் அவள் குழல் பற்றி இழுத்தான். இது கண்டு பீமன் கோபம் அடைந்தான். தருமரை நோக்கி'அண்ணா. மாதர்குல விளக்கை ஆடி இழந்துவிட்டாய். தருமத்தை கொன்றுவிட்டாய். சக்கரவர்த்தி என்ற மேலான நிலை பெற்ற நம்மை. ஒரு கணத்தில் தொலைத்துவிட்டாய் .துருபதன் மகளையும் அடிமையாக்கினாய்  'என்று கனல் கக்க பேசி தம்பி சகாதேவா 'எரி தழல் கொண்டுவா-அண்ணன் கையை எரித்திடுவோம்' என்றான்.
பீமன் உரையை மறுத்தான் பார்த்தன்(அரிச்சுணன்).'சினம் என்னும் தீ உன்அறிவை சுட்டெரிக்கிறது.
'தருமத்தின் வாழ்வுதனைஸ் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..'என்றும்
கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்.காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்'
என்றும் பீமனிடம் கூறினான் பார்த்தன்.


31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.
அர்ச்சுனனின் பேச்சைக்கேட்டு பீமன் அமைதியானான். அப்போது விகர்ணன் எழுந்து பேசலானான். 'திரௌபதிக்கு பீஷ்மர் கூறிய பதிலை நான் ஏற்கமாட்டேன். பெண்களை விலங்குகள் போல கணவன்மார்கள் எதுவும் செய்யலாம்'என்றார் பீஷ்மர். 'நம் மூதாதையர் மனைவியை விற்றதுண்டோ? இதுவரை சூதாட்டத்தில் அரசியரை யாரும் இழந்ததில்லை. சூதாட்டத்தில் அடிமைகளைக் கூடப் பணயமாக வைத்து யாரும் இழந்ததில்லை. தன்னையே தருமர் சூதாட்டத்தில் இழந்து அடிமையான பின் வேறு உடமை ஏது? திரௌபதிக்கு பாட்டனாரின் விடை பொருந்தாது' என்றான்.

விகர்ணனின் பேச்சைக் கேட்டு அவனுக்கு ஆதரவாக சில வேந்தர்கள் குரல் கொடுத்தனர். 'சகுனியின் கொடிய செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நாளும் உலகு இதை மறக்காது. செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயப் போர்களத்தில் பழி தீர்க்கப்படும் என்றனர்.
விகர்ணனின் சொல் கேட்டு கர்ணன் ஆத்திரமடைந்தான். 'அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறாய். ஆற்றலற்றவனே. அழிவற்றவனே. இப்பெண்ணின் பேச்சால் தூண்டப்பட்டு ஏதோதோ பிதற்றுகிறாய்' என்றவன், ஒரு பணியாளனை நோக்கி. 'அடிமைகள் மார்பிலே ஆடை உடுத்தும் வழக்கம் இல்லை. ஆதலால் பாண்டவர் மார்பில் உள்ள துணியை அகற்று! பாஞ்சாலியின் சேலையையும் அகற்று' என்றான்.
அப்பணியாள் தங்களை நெருங்குவதற்கு முன் பாண்டவர் தம் மாாபில் உள்ள ஆடையை வீசி எறிந்தனர்.பாஞ்சாலியோ செய்வது அறியாது மயங்கினாள். அந்நிலையில் துச்சாதனன். பாஞ்சாலியின் துகிலை உரியலுற்றான். பாஞ்சாலி கண்ணனை நினத்து  இருகரம் கூப்பி தொழுதாள். 'கண்ணா.. அபயம் .. அபயம்..என்றாள். உலக நினைவிலிருந்து விலகித் தெய்வ நினைவில் ஆழ்ந்தாள்.
அன்று..முதலையிடம் சிக்கிய யானைக்கு அருள் புரிந்தாய். காளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய்.  கண்ணா..உன்னை நம்பி நின் அடி தொழுதேன்..என் மானத்தை காத்து அருள்புரி..உன்னை சரண் அடைந்தேன் என்றாள்.
கண்ணபிரான் அருள் கிடைத்து ..துச்சாதனன் துகில் உரிய உரிய சேலை வளர்ந்து கொண்டே இருந்தது.  ஒரு நிலையில் துச்சாதனன் மயங்கி கீழே விழுந்தான்.
'தீங்கு தடுக்கும் நிலையில் இல்லை' என்று முன்னர் உரைத்த பீஷ்மர் எழுந்து கை தொழுது வணங்கினார்... துரியோதனன் தலை கவிழ்ந்தான்.

32- வனவாசம் கிளம்புதல்
பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை.. பராசக்தி ஆணை..கண்ணன் மேல் ஆணை.. எங்கள் மனைவி திரௌபதியை...தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து உயிர் மாப்பேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன்.. இது கண்ணன் மீதும்... திரௌபதி மீதும் .. காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.
பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.
சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன். பாஞ்சாலியோ...துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன்..என்றாள்.
அவளது சூளுரையைக் கேட்டு ..விண்ணகம் மலர் மாரி பொழிந்தது. மண்னகம் அதிர்ந்தது. திருதிராட்டிரன் நடுங்கினான்.  பின்..திருதிராட்டிரன் துரியோதனனையும், துச்சாதனனையும் கண்டித்தான். பின் திரௌபதியிடம் வேண்டும் வரம் தருவதாகக் கூறினான்.
தருமரையும்...எனைய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்றாள் திரௌபதி. சரி என்று அவர்களை விடுவித்த திருதிராட்டிரன். நடந்தவற்றை கெட்டக் கனவாகக் கருதி மறந்துவிடச் சொன்னான். இந்திரப்பிரஸ்தத்தைப் பாண்டவர்களுக்கு திருப்பி அளித்தான். அனைவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.
துரியோதனன் தந்தையின் முடிவுக் கண்டு அதிர்ச்சியுற்றான். 'எப்படியும் பாண்டவர்கள். தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அழிப்பர். ஆதலால் அவர்களை மீண்டும் சூதாட அழைக்க வேண்டும்' என திருதிராட்டிரனிடம் புலம்பினான்.
அவன் கூற்றில் உண்மை இருக்கக்கூடும் என எண்ணிய. திருதிராட்டிரன். பாண்டவர்களை மீண்டும் சூதாட அழைக்க ஒப்புக் கொண்டான். துரியோதனன்  பாண்டவர்களிடம் சென்று. இதைத் தெரிவித்து. தருமரை மீண்டும் சூதாட ஒப்புக் கொள்ளவைத்தான்.
விதி...இது விதியின் செயல் என்றுதான் கூற வேண்டும்.

துரியோதனன் இம்முறை ஒரு சூழ்ச்சி செய்தான். 'சூதாட்டத்தில் தோற்பவர். துறவு பூண்டு 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் (மறைந்து வாழுதல்) செய்ய வேண்டும்' என்றும். 'இந் நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே தோற்றவர்க்கு நாடு திருப்பி அளிக்கப் படும்' என்றும், நிபந்தனை தவறினால் மீண்டும் 13 ஆண்டுகள் இதே முறையில் செல்ல வேண்டும்' என்றும் கூறினான்.
இம்முறையும் சகுனி வெல்ல. நாடு, நகரங்களை இழந்த பாண்டவர்கள். பீஷ்மர் முதலியவர்களிடம் விடைபெற்று காடு செல்ல தீர்மானித்தனர். வயதாகி விட்டதால் குந்தி விதுரர் வீட்டில் தங்கினாள்.
பாண்டவர் வனவாச சேதி அறிந்து. அஸ்தினாபுர மக்கள் அழுது. துடித்தனர். அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர். தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.
(சபா பருவம் முற்றும்...இனி அடுத்து வனபருவம்)

33.மைத்ரேயர் சாபம்
கானகத்தில் அவர்களைக்காண ரிஷிகளும், மற்றவர்களும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது என அறியா தருமார் சூரியனை நோக்கி முறையிட்டார். உன் அட்சய பாத்திரம் கிடைத்தது. அதில் சிறிதளவு உணவை இட்டாலும் பெருகி. எத்தனை பேர் வந்தாலும்  அனைவருக்கும் உணவு கிடைத்தது. எல்லோரும் உணவு அருந்திய பின் பாஞ்சாலி உணவு கொள்வாள். பிறகு பாத்திரம் காலியாகி விடும். அன்று உணவு பெறும் சக்தி அவ்வளவு தான்.மீண்டும் மறுனாள்தான். இப்படியே வனவாசம் கழிய அருள் கிடைத்தது.

பான்டாவர்கள் காடு சென்றதும் திருதிராட்டினன் மனம் சஞ்சலம் அடைந்தது.குற்ற உணர்வு அவனை வறுத்தியது.விதுரரை அழைத்து மக்கள் மனநிலை எப்படி என் வினவினார்.
'மக்கள்'துயரால் வாடுகின்றனர் என்றும் அவர்களைத்திரும்ப அழித்துக்கொள்ளுதலே சிறந்தது என்றும் இல்லையேல் துரியோதனன் முதலானோர் அழிந்து போவார்கள்'என்றும் விதுரர் கூற..அதை திருதிராட்டிரன் ஏற்காது விதுரர் மீது சீறிப்பாய்ந்தான். என்னால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பாண்டவர்களிடத்தில் தான் உனது உள்ளம் இருக்கிறது நீயும் அவர்களிடத்தில் சென்று தங்கு  இனி அரண்மணையில் இருக்கவேண்டாம்' என்றார்.
விதுரர் உடன் வனத்திற்குச்சென்று பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தார். செய்தி அறிந்த பீஷ்மர் திருதிராட்டிரனிடம் சென்று ' விதுரரை நீ காட்டுக்கு அனுப்பவில்லை. அறத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டாய். இனி அஸ்தினாபுரத்தில் இருல் சூழும்'என்றார்.
திருதிராட்டினன் மீண்டும் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்ப  விதுரர் திரும்பினார். விதுரர் காடு சென்று திரும்பியது அறிந்த துரியோதனன். அவர்கள் ஏதோ சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக எண்ணி. திருதிராட்டினிடம் சென்று'பாண்டவர்கள் இங்கு திரும்பி வந்தால். நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்றான்.
அப்போது வியாசர் தோன்றி  திருதிராட்டிரனிடம் 'துரியொதனனின் தீய செயல்களை தடுத்து நிறுத்தாவிடின் பேரழிவு ஏற்படும் என எச்சரித்து மறைந்தார்.
மைத்ரேய மாமுனிவர் காட்டில் சந்தித்தார்.சூதாட்டத்தில் தான் இந்த விலை என உணர்ந்தார். பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர் ஆகியோர் இருந்தும் இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என வியந்தார். மனம் வருந்தினார்.நாடு சென்று துரியோதனனை சந்தித்து அவனை வன்மையாகக் கண்டித்தார். ஆனால் துரியோதனனோ அவரை எதிர்த்து பேசினான். கோபமுற்ற முனி. 'பீமனால் மாண்டு தரையில் கிடப்பாய். இது உறுதி'என்றார்.
துவாரகையில் கண்ணனுக்கு வனம் சென்ற செய்தி எட்டியது. அவர் காட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார். 'பகைவரிடம் க்ஷத்திரியர் இப்படி அடங்கிக்கிடப்பதா. அவர்களிடம் மோதி அழித்திடவேண்டாமா'என சகோதரர்கள் எண்ணினர். திரௌபதியும் இக்கருத்தைக் கொண்டிருந்தாள். ஆனால் தருமர். தாம் கொண்ட கொள்கையில் இருந்த மாறுபட விரும்பவில்லை. 'உயிர் போவதாய் இருந்தாலும்  சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை. பெரியப்பாவின் கட்டளையை 13 ஆண்டுகள் நிறைவேற்றியே தீரவேண்டும். 'என தம்பியரிடம்  உறுதியாகக்கூறினார். நிபந்தனைக்குறிய காலம் முடிந்தபின் என்ன செய்வது எனத்தீர்மானிப்போம்' என அவர்களை அமைதிப்படுத்தினார்


34.அர்ச்சுனன் தவம்
தருமர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது.வியாசர் அங்கு தோன்றினார். பாரதத்தில் சிக்கல் தோன்றும் போதெல்லாம் வியாசர் தோன்றி அதனை விலக்கியுள்ளார். அதுபோல இப்பவும் வந்து சில ஆலோசனைகளைக் கூறினார்.

'இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக்கொள்வான்.ஏற்கனவே.பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலியோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்பதால் பயன் இல்லை. நீங்களும் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன். அர்ச்சுனன் இமயம் சென்று. இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும், தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக. சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார். அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்'என்று கூறி மறைந்தார்.
உடன் அர்ச்சுனன். இமயமலையில் இருக்கும் இந்திரகிலம் பகுதியை அடைந்து தவம் மேற்கொண்டான். அவனைச் சுற்றி புற்று வளர்ந்தது. ஆனாலும் அவன் அசையாது தவத்தில் இருந்தான்.
அவனது தவத்தின் கடுமை அறிந்த சிவன் உமாமகேஸ்வரியிடம் 'அர்ச்சுனன் தவத்தை அறிந்துக்கொண்ட துரியோதனன் அதை குலைக்க மூகாசுரனை ஏவுவான். அந்த அசுரனை. என் ஒருத்தனால் மட்டுமே கொல்ல இயலும். அந்த அசுரன் காட்டுபன்றி வடிவம் தாங்கி..அர்ச்சுனனை கொல்ல வருவான். நான் வேடனாகப்போய் அவனைக் காப்பாற்றுவேன்'என்றார்.
அதே போல மூகாசுரன் காட்டு பன்றியாய் வந்தான்.
அர்சுனன் மீது அக்காட்டுப் பன்றி மோதியது. அர்ச்சுனன் தவக்கோலம் நீங்கி தற்காப்புக்காக ஒரு அம்பு கொண்டு அவ்விலங்கை தாக்கினான். அப்போது ஒரு வேடன் தன் அம்பை அந்த பன்றியின் மேல் செலுத்த பன்றி வீழ்ந்தது. யாருடைய அம்பால் அப்படி நேர்ந்தது என்று சர்ச்சை எழ. இருவரும் விற்போரில் ஈடுபட்டனர். அர்ச்சுனன் தோற்றான். உடன் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை அமைத்து பூமாலை ஒன்றை அணிவித்து பூஜித்தான். ஆனால் அம்மாலை வேடன் கழுத்தில் இருப்பதை அறிந்த அர்ச்சுனன் வேடனாக வந்தது சிவனே என்று அறிந்து வணங்கினான். சிவனும் அவனுக்கு பாசுபதக் கணையை வழங்கினார்.அந்த அற்புதக் காட்சியைக் கண்ட தேவர்கள் பல்வேறு கருவிகளை அர்ச்சுனனுக்கு அளித்தனர்,
தன் மைந்தனின் பெருமை அறிந்த தேவேந்திரன் அவனைத் தேவர் உலகத்திற்கு அழைத்தான். இந்திரன் கட்டளையால் அவனது சாரதி மாதலி அர்ச்சுனனை தேரில் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து  அமராவதி நகருக்கு அழைத்துச் சென்றான்.
இந்திரன். தன் மகனை அரியணையில் அமர்த்தி சிறப்பு செய்தான். தெய்வீகக்கருவிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி அறிய ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்கவேண்டும் என கட்டளையிட்டான் இந்திரன். நுண்கலைகளான நடனம்,இசை ஆகியவற்றிலும் அர்ச்சுனன் ஆற்றல் பெற அவனைசித்திரசேனனிடம் அனுப்பி வைத்தான்.
அனைத்துக் கலைகளிலும் பயிற்சி பெற்று நிகரற்று விளங்கினான் தனஞ்செயன்.


35.பார்த்தனின் ஆன்ம பலம்
அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அர்ச்சுனன் ஆன்ம பலத்திலும் சிறந்தவன் ஆனான்.

அவன் மன வலிமையைச் சோதிக்கக் கருதிய சித்திரசேனன் ஊர்வசியை அனுப்பி அவனை மயக்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அழகிய அந்த தெய்வமங்கையின் சாகசம் அர்ச்சுனனிடம் எடுபடவில்லை.அவளால் அவனை வசப்படுத்த முடியவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவள்..'பேடியாகப் போவாய்' என சாபமிட்டாள்.தனக்கு நேர்ந்த துர்பாக்கிய நிலையை இந்திரனிடம் கூறிப் புலம்பினான் அர்ச்சுனன்.
ஊர்வசியின் சாபத்தை முழுவதுமாக விலக்க முடியாது என அறிந்த இந்திரன். அதில் சிறிது மாற்றம் செய்தான். அந்த சாபம் ஓராண்டுக்கு மட்டும் நிலைத்திருக்கும். அதனை அர்ச்சுனன் தன் நன்மைக்காக அஞ்ஞாத வாசத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினான்.
தீமையும் நன்மையே என அமைதியானான் அர்ச்சுனன்.
அர்ச்சுனன் அங்கு இருந்த போது கடல் நடுவே வசித்துவந்த அசுரர்கள் மூன்று கோடி பேர் தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை அழிக்குமாறு இந்திரன் அர்ச்சுனனுக்குக் கட்டளையிட்டான். மாதலி தேர் செலுத்த அசுரர்களுடன் போரிட்டான் அர்ச்சுனன். அசுரர்கள் விஷம் போன்ற கருவிகளை அர்ச்சுனன் மேல் பொழிய  அவன் எதிர்த்து நின்றான்.
தனி மனிதனாக அத்தனை பேரையும் கதி கலங்கச் செய்தான். அசுரர்கள் இப்போது மாயப்போரில் ஈடுபட்டனர். ஆனால் தனஞ்சயனோ அனைவரையும் அழித்தான். நிவாத கலசர்களான அந்த அசுரர்களை வென்று வெற்றியுடன் திரும்புகையில் விண்ணகத்தே ஒரு நகரத்தை கண்டான். மாதலியை அதுபற்றி வினவினான்.
'பூலோமை, காலகை என்னும் அரக்கியர் இருவர் கடும் தவம் செய்து பிரமதேவன் அருளால் வரம் பெற்றனர். அந்த வர பலத்தால் பிறந்த புதல்வர்களான காலகேயர்கள் இந்த நகரத்தில் வாழ்கின்றனர். இதன் பெயர் இரணியபுரம் என்பதாகும். இந்த காலகேயர்களால் தேவர்கள் மிகவும் துன்பம் அடைகின்றனர்' என்றான் மாதலி.
அர்ச்சுனன் அவர்களை அவர்களது நகரத்துடன் பாசுபதக் கணையை ஏவி அழித்தான். வெற்றி வீரனான மகனை இந்திரன் ஆரத்தழுவினான். யாராலும் பிளக்க மிடியா கவசத்தையும், மணிமகுடத்தையும், தேவதத்தம் எனும் சங்கையும் பரிசாக அளித்தான்.
இந்நிலையில்..காட்டில் மற்ற சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.


36- பீமன்...அனுமன் சந்திப்பு
தருமர் தன் மூத்த சகோதரர்களுடன் நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். 'கடத்தற்கரிய வழியில் அனைவரையும் நான் தூக்கிச் செல்வேன்' என்றான் பீமன். ஆனாலும்...நடைப்பயணத்திலேயே ..கந்தமாதன மலை மேல் அவர்கள் சென்றபோது இடியும், மின்னலும், மழையும் படாதபாடு படுத்தின.

திரௌபதி மயங்கி விழுந்தாள். அப்போது கடோத்கஜன் தோன்றி திரௌபதியை தூக்கிச் சென்றான். கடோத்கஜனுடன் வந்த மற்ற அசுரர்கள்...தருமர்,நகுலன்,சகாதேவனை தூக்கி உரிய இடத்தில் சேர்த்தனர்.
அனைவரும் கயிலைமலை சென்று கடவுளை வணங்கினர் .பத்ரிகாச்ரமத்தை அடைந்து சித்தர்களை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது ஒருநாள் திரௌபதி அங்கு காணப்பட்ட ஆயிரம் இதழ்களுடன் கூடிய மணம் மிக்க 'சௌகந்திகம்' என்ற மலரின் எழிலில் மனத்தை பறிகொடுத்தாள். அது போன்ற மலர்கள் வேண்டும் என பீமனிடம் வேண்டினாள். அம்மலர்கள் குபேரன் நாட்டில் மட்டுமே உள்ளது என அறிந்து பீமன் குபேரபுரி நோக்கி நடந்தான்.
பீமன் செல்லும் வழியில் குரங்கு ஒன்று பெரிய உருவத்துடன் வாழை மரங்களிடையே படுத்திருப்பதைக் கண்டான். அதை எழுப்ப பேரொலி செய்தான். கண் விழித்த குரங்கு 'இங்கு தேவர்களும் வர அஞ்சுவர். இதற்குமேல் உன் பயணத்தைத் தொடராது திரும்பிப் போ' என்றது.
இது கேட்ட பீமன் 'என்னையா. திரும்பிப்போகச் சொல்கிறாய். நான் பாண்டுவின் மைந்தன். உன் வாலை மடக்கி. எனக்கு வழி விடு' எனக் கூச்சலிட்டான். உடன் குரங்கு 'உன் ஆணவப் பேச்சை நிறுத்து. உனக்கு வலிமை இருந்தால். .என்னைத் தாண்டிச் செல்' எனக்கூற. 'முதியோரை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை' என்றான் பீமன்.
அப்படியானால் என் வாலை ஒரு புறமாக நகர்த்தி விட்டுப் போ .என்றது குரங்கு. ஆனால்...பிமனால்...குரங்கின் வாலை அசைக்க முடியவில்லை. பீமன் தன் இயலாமையை எண்ணி வருந்தினான். 'என்னைத் தோல்வியுறச் செய்த நீர் யார்? சர்வ வல்லமை படைத்த நாராயணனா? அல்லது சிவபெருமானா?' என பீமன் கேட்டான்.
விரைந்து எழுந்த மாருதி...பீமனை ஆரத்தழுவி...'தம்பி...நானும் வாயுவின் குமரந்தான்..' என அனுமன் தன்னைப் பற்றிக் கூறினான். ராமாவதாரக் காலத்தில்..அஞ்சனைக்குப் பிறந்த வாயுமகன் அனுமன்...தன் தம்பி முறையான பீமனை தழுவிக் கொண்டான். பீமன் புதியதோர் ஆற்றல் பெற்றான்.
'உன் எதிரிகளால்..உன்னை ஒன்றும் செய்ய முடியாது.' என்று அனுமன் ஆசி கூற பீமன் மலர்களுக்கான பயணத்தைத் தொடர்ந்து...குபேரனது தோட்டத்தில் அம்மலர்களைக் கண்டு..அதைப் பறிக்க முயன்ற போது...அங்கிருந்த அரக்கர்கள் அவனை தடுக்க...அனைவரையும் பீமன் தோற்கடித்தான்.
குபேரனுக்கு தகவல் பறந்தது.

37-பீமனும் மலைப்பாம்பும்
தம்மைப் பிரிந்து சென்ற பீமன் வராததால் தருமர் கவலையில் மூழ்கினார்.பீமனின் மகன் கடோத்கஜனை நினைக்க அவன் தருமர் முன் தோன்றினான். 'உன் தந்தை இருக்குமிடத்திற்கு எங்களையும் அழைத்துப் போ'என்று அவர் கூற. கடோத்கஜன் அனைவரையும் தன் தந்தை இருக்குமிடம் தூக்கிச்சென்றான்.தம்பியைக் கண்ட தருமர் அமைதியானார்.

அவர்களைக் காண குபேரன் தானே மலர்களுடன் வந்து சேர்ந்தான்.
பின் அனைவரும் பத்ரிகாச்ரமத்திற்குத் திரும்பினர். சடாசரன் என்னும் அரக்கன் திரௌபதியைக் கவரும் எண்ணத்துடன் அவர்களிடம் வந்தான். ஒரு சமயம் பீமன் வெளியே சென்றபோது. அவ்வரக்கன் தன் சுயரூபத்தை எடுத்துக்கொண்டு தருமர், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோரைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.அப்போது வந்த பீமன் இது கண்டு அவனுடன் போர் புரிந்து அவைத் தூக்கித்தரையில் எறிந்து தேய்த்துக் கொன்றான்.
சடாசுரனை வதைத்தபின். பாண்டவர்கள். முனிவர்களுடன் இமய உச்சியை அடைந்தனர். அங்கு சாரணர்,சித்தர் ஆகியவர்களைக் கண்டு வணங்கினர். அப்போது ஐந்து நிறமுடைய அழகிய மலரை திரௌபதி கண்டாள். இது போன்று மலர் வேண்டும் என்று கேட்க. இதுவும் குபேரனின் நாட்டில்தான் கிடைக்கும் கொண்டுவருகிறேன்'என பீமன் புறப்பட்டான்.
அங்கு மணிமான் என்ற யட்சத்தளபதியுடன் போரிட்டு...மணிமானை வீழ்த்தினான்.தம்பியைக் கண்டு தருமர் குபேரன் பகை தேவையற்றது எனக் கூறினார்.
இதற்கிடையே மானுடன் ஒருவனால் மணிமான் கொல்லப்பட்ட செய்தியறிந்து குபேரன் அங்கு வர. அவரை வணங்கிய தருமரைக்கண்டு குபேரன் சீற்றம் தணிந்தான்.'மணிமான் மரணம் பண்டை சாபத்தால் நேர்ந்தது 'என அறிந்த குபேரன் தருமருக்கு பல பரிசுபொருட்களைக் கொடுத்து வழி அனுப்பினான்.
பீமன் ஒருநாள் காட்டுக்குச்சென்றான். புதர்களைக் காலால் மிதித்து அழித்தான். அப்போது ஒரு மலைப்பாம்பு பீமனைப் பற்றிஸ் சுற்றிக்கொண்டது. பீமனால் விடுபட முடியவில்லை. பராசுராமனையும், இடும்பனையும் ஜராசந்தனனையும் கிர்மீரனையும், மணிமானையும் வீழ்த்தியவனுக்கு அப்போதுதான் தெளிவு பிறந்தது, மனிதனின் ஆற்றலை விட விதியின் வலிமை புரிந்தது.
அப்போது பீமனைத் தேடி வந்த தருமர். பீமன் இருக்கும் நிலை கண்டார். பின் பாம்பினை நோக்கி'நீ யார்..? தேவனா? அசுரனா? என்றார். உடன் பாம்பு...'நான் நகுஷன் என்னும் மன்னன்.அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாகியுள்ளேன். நீ என்னுடன் விவாதம் செய். அதுவே என் சாப விமோசனம்'என்றது.
தன் முன்னோருள் ஒருவர் தான் நகுஷன் என அறிந்த தருமர் அப்பாம்பை வணங்க .சாப விமோசன நேரமும் வந்ததால். நகுஷன் தருமரை ஆசீர்வதித்துவிட்டு விண்ணுலகு சென்றார்.
பீமன். .தருமருடன்..மனித வாழ்க்கை அனுபவங்களைப்பேசிய படியே தங்கும் இடம் வந்து சேர்ந்தான்.


38-மார்க்கண்டேயர் வருகை
அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர். அப்போது  இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது. அதில் வந்திறங்கிய அர்ச்சுனன் ...தன் தேவலோக அனுபவங்களை ...சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது...நிவாத கவசர்களைக் கொன்றது..காலக்கேயர்களை அழித்தது என எல்லாவற்றையும் சொன்னான். அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது..மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.
அப்போது அவர்களைச் சந்திக்க சத்திய பாமாவுடன் கண்ணன் வந்தார்.அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். பாண்டவர்கள்.. பாஞ்சால நாட்டில் இருக்கும் உப பாண்டவர்களின் நலனையும். துவாரகையில் இருக்கும் சுபத்திரை...அபிமன்யு நலத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டு அறிந்தனர்.
அத்தருணத்தில் ...தவ முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்...தொடர்ந்து நாரதரும் வந்தார். மார்ககண்டேயர் புண்ணியக் கதைகளைக் கூறினார்.'ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை ...தீவினைப் பயன்களை அனுபவிக்கின்றன. வினையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க இயலாது. எத்தனை பிறவி எடுத்தாலும் வினைப்பயன் தொடர்ந்து வந்து பயனைத் தரும்.
வரும் காலத்தில் பன்னிரு சூரியர்களின் வெப்பத்தைத் தாங்காது உயிரினங்கள் துன்புறும்  கடல் நீர் நிலைகள்.. அனைத்தும் வற்றிவிடும். புல் பூண்டு .. மரம் ஆகியவை அனைத்தும் தீயால் கருகி விடும். ஓயாது மழை பொழியும். ஊழிக்காற்று எழுந்து பிரளயத்தை ஏற்படுத்தும்.. உலகு அழியும்.பின் கண்ணபிரான் மீண்டும் உலகையும் உயிரினங்களையும் படைப்பார். காப்பார்.
மறுபடியும் ஒரு ஊழிக்காலத்தில் உலகை அழிப்பார். இப்படிப் படைப்பதும்.. காப்பதும்.. அழிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதுதான் இறைவனின் மகிமை'என பல கதைகளைக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டு அனைவரும் இன்பம் அடைந்தனர். எல்லோரும் அறநெறியில் நிற்கவேண்டும் என மார்க்கண்டேயர் எடுத்துரைத்தார்.
காம்யக வனத்தில் பல நாட்கள் தங்கியிருந்தபின் கிருஷ்ணர் பாண்டவர்க்கு நல்லாசி வழங்கிச் சத்தியபாமாவுடன் துவாரகை திரும்பினார். மார்க்கண்டேயரும் விடைபெற்றார்.
பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன்...காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான். அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்.


39-கௌரவர் மானபங்கம்
அந்தணன் கூற்றைக்கேட்ட திருதிராட்டிரன்...பாண்டவர்கள் மேன்மேலும் சிறப்புறுவது நல்லதல்ல..என எண்ணினான். வெளிப்பார்வைக்கு பாண்டவர் நன்மையை விரும்புவது போல பேசினாலும்.உள்ளத்தால் வெறுத்தான். காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து. நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான். திருதிராட்டினனிடம்.. 'பசுக்குலங்கள் காட்டில் கொடிய மிருகங்களால் அவதிப்படுகின்றன. அவற்றைக் காக்க கானகம் போகிறோம்' என்றான் துரியோதனன்.
பின் துரியோதனன் முதலானோர். மனைவி மக்களுடன். உயர்தர ஆடை..அணிகலன்கள். அணிந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர். அருகில் இருந்த தடாகத்தில். கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது. கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க. கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.
இதனால். கந்தர்வர்களுக்கும். .துரியோதனன் கூட்டத்திற்கும் இடையே போர் மூண்டது. சித்திர சேனன் தலைமையில்.. கந்தர்வர்கள் போரிட..சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட..கர்ணனின் தேர் உடைந்தது. அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான்.துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர். எஞ்சிய. துரியோதனன்..மற்றும் சிலரை..கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.
கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர். தர்மரிடம் வந்து. 'துரியோதனனைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டனர். ஆனால் பீமனோ 'அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கட்டும்' என்றான். தம்பி..ஆபத்தில்..யார் இருந்தாலும் உதவ வேண்டுவது உலக இயல்பு.. மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும்..என்றார் தருமர்.
இப்படி.. இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது...துரியோதனனின்..அபயக் குரல் கேட்டது. 'சகோதரர்களே..எங்களையும்..எங்கள் மனைவியரையும். கந்தர்வர்கள் கட்டி இழுத்துச் செல்கிறார்கள். உடனேவந்து காப்பாற்றுங்கள்'
உடன்...பாண்டவர்கள். கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி..பலரை அழித்தனர். அப்போது...அர்ச்சுனனுக்கு...சித்திரசேனன்..தனக்கு..இந்திர லோகத்தில்..பல நுணுக்கங்களை போதித்தவன் என்ற உணர்வு வர..அவன் பாதம் பணிந்து...நடந்த விவரங்களை அறிந்தான்.
'அர்ச்சுனா...இந்த துரியோதனன்..உங்களை அவமானப் படுத்த வந்தான். அதை அறிந்த தேவர்கோமான்... அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்' என்றான் சித்திரசேனன். பின்னர் தருமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. துரியோதனன் கூட்டம் விடுவிக்கப்பட்டது.
போரில். இறந்த கந்தர்வர்களை. இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான். நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் 'நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக' என்றார். புறங்கொடாப் போர் வீரன் என்ற பெருமித வாழ்வு பறிப்போக. கர்ணனிடம் துரியோதனன் புலம்பினான். பின்..துச்சாதனனை நோக்கி'தம்பி..நீ ஆட்சியை மேற்கொள்..நான் உயிர் துறக்கப்போகிறேன்' என்றான்.
பதிலுக்கு, கர்ணன்'இதுவா க்ஷத்திரியர் இயல்பு..நாம் இப்போது சந்தித்தது..இறுதிப்போர் அல்ல' என்றான். கர்ணன்..மேலும் துரியோதனனுக்கு..உற்சாகம் ஊட்டினான். போரில்..அர்ச்சுனனை தான் கொல்வேன் என்றான். அசுரர்களும்...போரில்.. தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவினால்.. அசுரர்கள் துரியோதனனுக்கு உதவுவதாகக் கூறினர்.
இதனால்...துரியோதனன் மனம் மாறி..அஸ்தினாபுரம் வந்தான். காட்டில்..நடந்தவற்றை அறிந்த பீஷ்மர். துரியோதனனிடம். .'இனியும் கர்ணனைப் போன்றோரை நம்பாதே.தான் தப்பித்தால் போதும் என கந்தர்வப் போரில் உன்னை விட்டு ஒடியவன் அவன். அர்ச்சுனனே உன்னை வந்து காத்தான்' என்றார். ஆனால்...துரியோதனன்..அவர் பேச்சை புறக்கணித்தான்.


40-கர்ணன் சபதம்
தருமர் முன் செய்த ராஜசூயயாகம் போல ஒரு யாகம் செய்ய விரும்பிய துரியோதனன் அதை கர்ணனிடம் தெரிவித்தான்.

ராஜசூயயாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு.பல நாட்டு மன்னர்களும் அந்த யாகம் செய்பவரது தலைமையை ஏற்க வேண்டும். அதன்படி பல நாடுகளுக்குச் சென்று. அம்மன்னர்களை வென்று. உன் தலைமையை ஏற்கச் சொல்கிறேன் என துரியோதனனிடம் கூறிவிட்டு. கர்ணன் புறப்பட்டான்.
அங்கம்,வங்கம்,கலிங்கம் ஆகிய நாடுகளை வென்றான். துருபதன், சுகதத்தன் ஆகியோரை அடக்கினான். நான்கு திசைகளிலும் மன்னர்களை வென்றான்.வெற்றி வீரனாக திரும்பிய கர்ணனை துரியோதனன் ஆரத்தழுவி வரவேற்றான். ஆனால் புரோகிதர்கள். ராஜசூயயாகம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் முன்னர் அந்த யாகத்தைச் செய்த தருமர் இன்னமும் இருக்கிறார். அந்த யாகம் செய்த ஒருவர் உயிருடன் இருக்கையில் வேறு ஒருவர் செய்வது மரபல்ல. மேலும் தந்தை திருதிராட்டினன் முன் மகன் அதைச் செய்யக்கூடாது என்றும் கூறினர்.
ஆனால். அதற்கு பதிலாக வைஷ்ணவ வேள்வி செய்யலாம்.என்றனர். பொன் கலப்பையால் நிலத்தை உழுது இயற்றும் வேள்வி அது. இவ் வேள்வியில் கலந்துக் கொள்ள பல மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.துரியோதனன்.  பாண்டவர்களிடமும் தூதுவனை அனுப்பினான்.
பதின்மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரே அஸ்தினாபுரம் திரும்புவோம் என தூதுவனிடம் தருமர் உரைத்தார். ஆனால். பீமனோ.. 'எங்கள் வனவாசம் முடிந்ததும் நாங்கள் செய்யும் வேள்வியில் துரியோதனன் முதலானோர் ஆஹூதி (வேள்விப்பொருள்) களாகப் பயன்படுவார்கள்' என்றான். விதுரர் முதலியோர் கலந்துக் கொள்ள வைஷ்ணவ வேள்வியை சிறப்பாகச் செய்தான்.  துரியோதனன். மேலும் அதற்கு கர்ணனே காரணம் என துரியோதனன் எண்ணினான்.
துரியோதனன் கர்ணனை நோக்கி 'கர்ணா..நீ எனக்கு மற்றொரு உதவியும் செய்ய வேண்டும். .பாண்டவர்கள் போரில் மடிந்ததும்..எனக்காக நீ ராஜசூயயாகத்தை நிறைவேற்ற வேண்டும். அப்போது என் புகழ் மேலும் உயரும்' என்றான். கர்ணன் அப்போது ஒரு சபதம் செய்தான்..
'மன்னா..அர்ச்சுனனை கொல்லும் வரை..நான் மது, மாமிசங்களைத் தீண்டமாட்டேன்..இல்லை என்பார்க்கு இல்லை எனக் கூறமாட்டேன்' கர்ணனின் இந்த சபதம். தருமர் காதுக்கும் எட்டியது. கவச  குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை வெல்வது அரிதாயிற்றே என அவர் கவலையுற்றார். அப்போது வியாசர் தோன்றி. தான தர்மப் பலன் பற்றி தருமரிடம் விரிவாக எடுத்துரைத்து மறைந்தார்.


41-அட்சயபாத்திரம்
பாண்டவர்களது வனவாசம் முடிவுக்கு வரும் காலம் நெருங்குவதை உணர்ந்த துரியோதனன் அவர்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான். அப்போது துர்வாசர் பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதனன் இருக்கும் இடம் வந்தார். துர்வாசரின் மந்திர சக்தி அனைவரும் அறிந்ததே. அவர் அருளிய மந்திர சக்திதான் கன்னிப்பருவத்தில் குந்தி கர்ணனை பெற்று எடுக்க காரணமாய் அமைந்தது.

அவருக்கு அருளும் சக்தியும் உண்டு. பிறரை மருளச் செய்யும் சக்தியும் உண்டு.
தன் சூழ்ச்சிக்கு துர்வாசரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் துரியோதனன். அதனால் அவரை நன்கு உபசரித்து வணங்கினான், அவனது உபசரிப்பைக் கண்டு மகிழ்ந்தவர் 'உனக்கு வேண்டும் வரம் கேள்' என்றார். துர்வாசர் சினம் கொண்டால் அதைத் தடுத்து நிறுத்தவும் யாராலும் முடியாது.
தவமுனிவரே! நீங்கள் பாண்டவர் இருக்குமிடம் செல்ல வேண்டும்.அங்கு அவர்கள் அனைவரும் உணவு உண்டபின் செல்ல வேண்டும்'' என வேண்டினான்.(எல்லோரும் உணவு உண்டதும் சென்றால். அட்சயபாத்திரத்தில் உணவு பெருகாது. துர்வாசருக்கு உணவு அளிக்கமுடியாது. அதனால் அவர் சினம் கொண்டு அவர்களுக்கு சாபமிட்டு அழித்து விடுவார் என எண்ணினான்.)
துர்வாசரும். பாண்டவர் இருக்குமிடம், தன் சீடர்களுடன் சென்றார். அவர்களை பாண்டவர்கள் முறைப்படி வரவேற்றனர். நீராடிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு,சீடர்களுடன் தடாகம் சென்றார் அவர். 'அட்சயபாத்திரத்தில்..இனி உணவு பெருகாதே' என திரௌபதி கலக்கமுற்றாள்.கண்ணனை பிரார்த்தித்தாள்.கண்ணனும் அவள் முன் தோன்றி..தன் பசியை போக்கக் கோரினார். திகைத்தாள் திரௌபதி.
கண்ணன் அந்த அட்சயபாத்திரத்தை கொண்டுவருமாறு பணித்தார்.
அதில் ஒன்றும் இல்லை என்றவாறு..அப்பாத்திரத்தை கொணர்ந்தாள் பாஞ்சாலி. ஆனால் அதன் மூலையில். ஓரத்தில்..ஒரு சோற்று பருக்கை இருந்தது. அதை எடுத்து கண்ணன் வாயில் போட..பாரதம் முழுதும்..பசி அடங்கியது. நீராட சென்ற முனிவருக்கும். பரிவாரங்களுக்கும் அவர்கள் இதுவரை சுவைத்தறியா உணவு உண்ட திருப்தி ஏற்பட்டது.
அப்போதுதான்..முனிவரும்..காலமில்லா காலத்தில் தருமரின் ஆசிரம் சென்று, அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது தவறு என உணர்ந்தார். இப்படியாக..துரியோதனனின் இம் முயற்சி தோல்வி அடைந்தது.


42-ஜயத்ரதனின் தவம்
காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றனர். திரௌபதி சில பணியாளர்களுடன் தனித்து இருந்தாள். அப்போது சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கி அக்காட்டு வழி சென்றான். அவனுடன் கோடிகாச்யன் முதலிய அரசர்களும் சென்றனர்.

ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை ஜயத்ரதன் கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான். திரௌபதி ..அது கொடிய செயல் என்றும்..தனது வரலாற்றையும் கூறினாள். 'தருமர் வடக்கேயும், பீமன் தெற்கேயும், அர்ச்சுனன் மேற்கேயும், நகுல,சகாதேவர்கள் கிழக்கேயும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு சென்றுவிடு .இல்லையேல் அவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும்.' என்றாள்.
அந்த முரடன் எதையும் கேட்பதாய் இல்லை..காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவளது மேலாடையைப்பற்றி இழுத்து தேர் மீது ஏற்ற நினைத்தான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஓரிடத்தில் கூடினர்.அப்போது..'ஆச்ரமத்தில் ஏதோ ஆபத்து நேர்ந்ததற்கான அபசகுனம் தோன்றுகிறது' என்றார் தருமர். விரைவில் ஐவரும் ஆச்ரமத்திற்கு விரைந்தனர். ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடை வைத்து. சென்று..ஜயத்ரதனுடன் போரிட்டனர். அவனுடன் வந்த அரசர்கள் தோற்று ஓடினர். ஓட முயன்ற ஜயத்ரதனை பீமன் கடுமையாக தாக்கினான். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன்.
'தம்பி..இவனை விட்டு விடு. இவன் நமக்கு மைத்துனன். துரியோதனின் தங்கையான துச்சலையின் கணவன்' என்றார். நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்..கங்கைக் கரைக்குச் சென்று கடும் தவம் இருந்தான்.
சிவன் காட்சியளித்து..'என்ன வரம் வேண்டும்?' என்றார். பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை எனக்கு அருள வேண்டும்..என வேண்டினான்.
'கண்ணனின் துணையிருப்பதால். உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது. ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை உனக்கு அளிக்கிறேன். ஆனால்..அதனால் அவர்களை அழித்தொழிக்கமுடியும் என எண்ணாதே..' என்று கூறி மறைந்தார்.
அதுவே போதும் என்ற ஜயத்ரதன்..நகரம் போய்ச் சேர்ந்தான். இந்த ஜயத்ரதன் தான் 13ம் நாள் போரில் மாவீரன் அபிமன்யுவைக் கொன்றவன்.


43-யட்சன்
பன்னிரண்டு கால வனவாசம் நெருங்கியது. அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது. வேள்விக்கு உதவும். அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார். அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள...மருண்ட மான்..அதனுடன் ஓட்டம் பிடித்தது.தமது வேள்வி தடைபடாமல் இருக்க..அதை மீட்டுத்தரும்படி..பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து..பாண்டவர்களும் ஓடினர்.ஆயினும் மானைப் பிடிக்க இயலவில்லை.மானும் ஓடி மறைந்தது. முனிவருக்கு உதவ முடியவில்லையே..ஏன் இந்த இழிவு நமக்கு..என பாண்டவர்கள் எண்ணினர். பாஞ்சாலியை அவையில் அவமானப் படுத்தினவனை ..அன்றே கொன்றிருக்க வேண்டும்..அதனால்தான் இந்த இழிவு...என்றான் பீமன்.
அன்று நாக்கில் நரம்பின்றி பேசினானே கர்ணன். அவனை அன்றே கொன்றிருக்க வேண்டும். அதனால்தான் இந்த இழிவு என்றான் பார்த்தன். சகுனி மாயச் சூதாடும்போது. அப்போதே அவனை கொன்றிருக்க வேண்டும். அதனால் தான் இந்த இழிவு என்றான் சகாதேவன்.
இந்நிலையில் தாகம் ஏற்பட. நகுலனை தண்ணீர் எடுத்துவரக் கூறினார் தருமர். தண்ணீரைத் தேடி அலைந்த நகுலன். வெகு தொலைவில். ஒரு தோப்புக்கு நடுவே ஒரு குளம் இருப்பதைக் கண்டான்.  அதன் அருகே சென்று. நீரை மொண்டு பருக ஆரம்பிக்கையில் 'நில்' என்ற குரல் கேட்டது. அதை அலட்சியம் செய்துவிட்டு. நகுலன் நீரைப் பருக அவன் சுருண்டு வீழ்ந்து மாண்டான். நீண்ட நேரம் ஆகியும் நகுலன் வராததால். சகாதேவனை. தருமர் அனுப்ப..அவனுக்கும்..நகுலனுக்கு ஆன கதியே ஆயிற்று.
பின்னர் அனுப்பப்பட்ட பார்த்தன் .பீமன் ஆகியோரும் இக்கதிக்கு ஆளாகினர். நீண்ட நேரம் எவரும் திரும்பாததால்..தருமர்..அனைவரையும் தேடிச் சென்றார்.
அவர்களுக்கு ஆனக் கதியை எண்ணி..புலம்பி..அழுதார். நாக்கு வரண்டது. தண்ணீர் அருந்த நினைத்த போது...'நில்' என்றது ஒரு குரல்.. இத் தடாகம் என்னுடையது. என் அனுமதியின்றி இவர்கள் இறங்கியதால்..இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. என் கேள்விகளுக்கு பதில் தராவிடின்... உன் முடிவும் இப்படித்தான் ஆகும்.நான் கேட்கும் கேள்விகளுக்கு...தகுந்த விடை அளித்தால்...நீ நீர் பருகலாம்' என்றது.
இது யட்சன் குரல் என அறிந்த தருமர்.. 'கேளுங்கள்..என்னால் இயன்றவரை பதில் தருகிறேன்' என்றார்

1 comment: