Monday, September 15, 2014

நெஞ்சாறப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்'-- சாட்சி சொல்லாத சத்தியசீலர்

நெஞ்சாறப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு.
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று'' என்று அழுத்தமாகச் சொல்வார் திருவள்ளுவர்.
பொய்யால் வரும் கேடுகளை ஞானநூல்கள் பல விதமாகக் கூறுகின்றன. அதே சமயம், பொய் சொல்ல மறுப்பதால் விளையும் நன்மைகளையும் விரிவாக சொல்கின்றன. நம்மால் அப்படி நடக்க முடியாவிட்டாலும் தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே!
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஏழை அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். மனதால் கூட பிறருக்குத் தீங்கு நினைக்காத அவர், தினமும் ராமரை வழிபட்ட பின்பே சாப்பிடுவார். ஒருசமயம், கிராமத்தின் ஜமீன்தார்
ராமானந்த ராய் என்பவர், அந்த அந்தணரை வீட்டுக்கு வரவழைத்தார்.
வந்தவரிடம், ""நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்,'' என்றார்.
""நானோ ஏழை. எப்படி என்னால் உங்களுக்கு உதவ முடியும்,'' என்றார்.
ஜமீன்தார் அவரிடம்,""நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்கள் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். நீங்கள் சொல்வதை அனைவரும் நம்புவார்கள். அதனால் தான் உங்களிடம் கேட்டேன்,'' என்று சொல்ல, அதைக் கேட்ட அந்தணர், "புரியவில்லை' என்பது போலப் பார்த்தார்.
ஜமீன்தார், ""எனக்கு எதிராக ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என் பக்கத்து சாட்சியாக ஒரு சின்ன பொய் மட்டும் சொல்ல வேண்டும்,'' என வேண்டினார்.
அதைக் கேட்ட அந்தணர் கொதித்துப் போனார். ""பொய்யில் சிறுபொய் என்ன? பெரிய பொய் என்ன? தீ என்றால் சுடத்தானே செய்யும்,'' என மறுத்தார்.
ஜமீன்தாருக்கும் கோபம் வந்துவிட்டது.
""எனக்காக நீங்கள் பொய் சொல்லாவிட்டால், உங்கள் மீதும் பொய் வழக்கு தொடுப்பேன்'' என மிரட்டினார்.
பொய்சாட்சி சொல்ல மறுப்பதன் மூலம் தானும் தன் குடும்பமும் நின்று பிச்சையேற்கும் நிலை வந்தாலும் கூட கவலையில்லை என்ற மனஉறுதியுடன் அந்தணர் தன் நிலையில் தளராமல் உறுதியாக இருந்தார்.
தான் சொன்னபடியே, ஜமீன்தார் அந்தணர் மீது பொய் வழக்கு தொடுத்து அந்தணருக்கு கொடுமை செய்யத் தொடங்கினார். அந்தணரோ சிறிதும் கலங்கவில்லை. ஜமீன்தாரின் நிர்பந்தத்தால், அந்தணர் வழிபட்டு வந்த ராம விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிராமத்தை விட்டே வெளியேறி விட்டார். ஒரு சிறு பொய் கூட சொல்ல மாட்டேன் என்று மறுத்த அந்த உத்தமரின் பெயர் "க்ஷிதிராம்'. அந்த சத்தியசந்தரின் புதல்வர் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
உண்மை என்று சொன்னாலே ராஜா அரிச்சந்திரன் தான், நம் நினைவுக்கு வருவார். அதுபுராண காலக்கதை. நாம் வாழும் இந்த கலிகாலத்திலும் உண்மையை உயிராக மதித்த உத்தமர்கள் இருக்கத் தான் செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment