Monday, September 15, 2014

ஆடி அமாவாசை நாளில் பித்ருகளுக்கு வேண்டிய கடமையைச் செய்து துயர் நீங்கப் பெறுவோம்

இந்தக் கோயிலில் இந்தப் பரிகாரம்!
அந்தக் கோயிலில் அந்தப் பரிகாரம்! என்று முனைப்புடன் செய்தாலும், பிரச்னை தீர்வதற்கான வழியைக் காணோம். காரணம் என்ன?
அனைவருமே வெளியில் தெரியும் மரத்தையும், அதன் பகுதிகளையும் கவனித்துப் பராமரிக்கிறோமே தவிர, மிக முக்கியமான- அடிப்படையான வேர்களைக் கவனிப்பதில்லை. வேர் இல்லாவிட்டால் மரம் ஏது? அது போல...
வெளியில் தெரியும் மரமும், அதன் பகுதிகளும், நாமும் நமது குடும்பமும். வெளியில் தெரியாத வேர்கள் என்பது நம் முன்னோர்கள்.
நம் முன்னோர்கள் இல்லாவிட்டால் நாம் ஏது?
இதனால் தான், என்ன செய்தாலும் நம் பிரச்னை தீரவில்லையே என்று ஜோசியர்களிடம் போனால், ""பித்ருக்களுக்கு செய்ய வேண்டியதச் செய்யல! அதனால தான் இந்தப் பாடு! உங்க முன்னோருக்குச் செய்ய வேண்டியதைச் செய்யுங்க!'' என்பார்கள்.
முன்னோர்களின் அருளும், ஆசியும் பெற நாம் செய்ய வேண்டியது அமாவாசை தர்ப்பணம்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மூன்றும் முக்கியமானது. இதில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம். ஏன்? சற்று ஆராயலாம்.
முன்னோர்கள் ஓராண்டு காலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்தார்கள்.
அவற்றில்...
ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தை தட்சிணாயணம், என்றும் தை முதல் ஆனி வரையுள்ள காலத்தை உத்தராயணம் என்றும் குறிப்பிட்டார்கள். இந்த இரண்டில்.....
தட்சிணாயணம் என்பது தேவர்களுக்கு இரவுக்காலம். நமக்குப் பகல் என்றால் அமெரிக்காவில் இரவு என்கிறோமே அது போலத்தான்!
ஆடி முதல் மார்கழி வரையுள்ள இரவுக்காலத்தில், ஆடி என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுது. மாலை நேரத்தில் இருள் கவியத் தொடங்கும். விளக்கேற்றி வைத்து இருளை ஓட்டுகிறோமல்லவா? அது போல..
தேவர்களின் மாலை வேளையான ஆடியில், அமாவாசை தர்ப்பணம் என்ற பெயரில் நாம் விளக்கேற்றி வைக்கிறோம். அதனால், முன்னோர்கள் மகிழ்ந்து நமக்கு அருள்மழை பொழிகிறார்கள். அதனால், நம்மைப் பீடித்திருக்கும் துயரங்கள் விலகுகின்றன.
இதை முன்னிட்டே, கடல்,நதி தீரங்களில் நீராடுவதும், அங்கேயே அமாவாசை தர்ப்பணம் அளிப்பதும் விசேஷம் என குறிப்பிட்டனர்.
கடலில் நீராட முடிகிறதோ இல்லையோ, ஆடி அமாவாசை நாளில் பித்ருகளுக்கு வேண்டிய கடமையைச் செய்து துயர் நீங்கப் பெறுவோம்

No comments:

Post a Comment