Saturday, September 13, 2014

கடவுளுக்கு தூக்கம் வருமா?


கடவுளுக்கு தூக்கம் வருமா?
சீடன் ஒருவன் தனது குருவிடம், சுவாமி! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? எனக் கேட்டான். குரு புன்னகைத்தவாறே ஒரு அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி. சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சி களைக் கையாண்டும் பலன் அளிக்கவில்லை. தன்னை மறந்து ஒரு வினாடி கண்ணயர்ந்தான். கண்ணாடி கீழே விழுந்து துண்டு துண்டாய் சிதறியது. பதறிப்போன சீடன் கலவரத்துடன் குருவை பார்த்தான். பயப்படாதே சீடனே! நீ ஒரு வினாடி கண் அயர்ந்தாய். உன் பொறுப்பில் இருந்த கண்ணாடி சின்னாபின்னமாகியது. இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும்? என்று யோசித்துப் பார் என்று கூறியதும் சீடனின் சந்தேகம் தெளிந்தது.

No comments:

Post a Comment