Monday, October 20, 2014

ராகு பகவான் தலையை வெட்டிய மோகினி

அமிர்தம் கிடைக்க வேண்டி அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது தன்வந்திரி பகவான், அமிர்த கலசத்தை ஏந்தியபடி தோன்றினார். அவரிடம் இருந்து அசுரர்கள் அமிர்தத்தை பறித்துக் கொண்டு சென்றனர்.

இதைக் கண்ட மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். அவரைக் கண்டு மயங்கிய அசுரர்கள், அமிர்தத்தை தேவர்களுக்கும் தங்களுக்கும் பங்கிட்டுத் தருமாறு மோகினியிடமே வேண்டினர். மோகினி தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை அளித்து வந்தாள்.

அப்போது சிம்ஹிகையின் புத்திரர்களான ராகு–கேது என்ற இரு அசுரர்கள் தேவர்களைப் போல உருவம் கொண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் உள்ள இடத்தில் அமர்ந்தனர். மோகினி கொடுத்த அமிர்தத்தை இறைவழிபாடு செய்யாமல் அப்படியே உண்ண ஆரம்பித்தனர்.

எனவே இவர்கள் அசுரர்கள் என சந்திரனும், சூரியனும் சுட்டிக்காட்டினர். இதைக் கண்ட மோகினி, கரண்டியால் ராகுவின் தலையை வெட்டினாள். ராகுவின் தலை ஆகாயத்தில் சென்றது. வெட்டும்போது கேதுவுக்கு இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி துண்டானது. பிரம்மன் தந்த வரத்தால் ராகு கிரக அந்தஸ்து பெற்றார்.

கேது அமிர்தம் பெற்ற காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்று சிவனருளால் கிரக அந்தஸ்து பெற்றார். ராகு சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். சூலம், கத்தி, கேடயம், வரத முத்திரை ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியிருக்கிறார்.

ராகு அலிக் கிரகம் ஆகும். இவர் தாமஸ குணம் கொண்டவர். தென்மேற்கு திசைக்கு உரியவர். பஞ்ச பூதங்களில் வானம் ஆவார். இவருக்கு புளிப்புச் சுவை மிகவும் பிடித்தமாகும். உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு, ரிஷபம் நீச்ச வீடு, கன்னி சொந்த வீடு. ராகு மனிதன் உடலில் எலும்பு ஆவார்.

No comments:

Post a Comment