Monday, October 20, 2014

என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,......

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிவிட்டனர். அவர்களின் அரசாட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சிலரது மனதில் சில குழப்பமான கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன.

அவற்றுள் ஒன்றாக கிருஷ்ணரிடம், அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ‘கிருஷ்ணா.. நீ பாண்டவர்கள் மேல் அளவில்லாத அன்பு கொண்டவன். அவர்களின் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட, அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறாய்.

அப்படி இருக்க பாண்டவர்கள் சூதாடி நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்திருந்தால், இதை தடுத்திருக்க முடியாதா?’ என்று தங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வியை கேட்டனர். ‘சூதாடுவது என்பது அரச தர்மம்.

அந்த தர்மத்தின்படி சூதாடியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சூதாட அழைத்தபோது, ‘என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்’ என்று துரியோதனன் கூறினான். ஆனால் தர்மனோ, ‘தான்’ என்ற எண்ணம் கொண்டு ஆட முனைந்தான்.

என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைக்கு காரணம்’ என்றார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், அனைத்தையும் இறைவன் பெயரால் செய்வதே நிஷ்காமிய கர்மம் (பலனை கருதாத கர்மம்). அதனால் ஏற்படும் விளைவுகளையும் இறைவனே ஏற்றுக்கொள்கிறான். இறைவனை சிந்தனை செய்யாமல், எல்லாமே நான் தான் என்னும் போக்கில் செயல்பட்டால், அதனால் வரும் துன்பங்களையும் நாமே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment