Tuesday, November 18, 2014

ஓண பூமியின் வீரமங்கை

கேரளாவில், ஆரோமல் சேகவர் என்ற பெயர் கொண்ட வாள்சண்டை வீரர் இருந்தார். அவரது தங்கை உண்ணியார்ச்சை. மிகச்சிறந்த பக்தை. அவளுக்கு அண்ணன் சேகவர் வாள் வித்தையைக் கற்றுக் கொடுத்தார்.
அவளும் வீராங்கனையானாள். அவளை குஞ்ஞிராமன் என்பவர் திருமணம் செய்தார். கணவர் வீட்டில் மாமியார் கடும் கண்டிப்புக்காரியாக இருந்தாள். கோயிலுக்கு போகக்கூட மருமகளை அனுமதிக்க மாட்டாள்.
ஆனால், உண்ணியார்ச்சை தன் கணவரிடம், ""நான் நம் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு போயாக வேண்டும்,'' என்று அடம் பிடித்தாள். அம்மாவுக்கு கட்டுப்பட்ட அந்தப் பிள்ளை, யாருக்கு பரிந்து பேசுவதென தெரியாமல் விழித்தார். கணவரின் தயக்கம் கண்ட, உண்ணியார்ச்சைக்கு கோபம் தலைக்கேறிவிட்டது.
""அப்படியானால், உங்கள் அம்மா சொன்னது தான் இந்த வீட்டில் நடக்குமா? மனைவி என்பவள் வெறும் இயந்திரம் தானா? என்னை மட்டும் கோயிலுக்கு அனுப்பவில்லையோ... நடப்பதே வேறு,'' என்றவள், வாளைக்கையில் தூக்கி விட்டாள்.
குஞ்ஞிராமன் நடுங்கி விட்டார்.
மருமகள் கையில் வாளைப் பார்த்த மாமியாரும் வாலைச் சுருட்டிக் கொண்டாள். புகுந்த வீட்டில், பெண்களின் நியாயமான சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது என்பதில் உண்ணியார்ச்சை உறுதியாக இருந்தாள்.
அந்த கிராமத்திலுள்ள பெண்களை, அப்பகுதியிலுள்ள ஒரு இனத்தின் தலைவன் பலவந்தப்படுத்தி தன் ஆசைக்கு அடிமைப்படுத்தி வந்தான். ஒரு சமயம், உண்ணியார்ச்சையின் மீதும் அவனது பார்வை விழுந்தது. அவளைக் கடத்தி வர தன் ஆட்களை அனுப்பினான்.
உண்ணியார்ச்சை ஐயப்பனின் பக்தையல்லவா! அவர் பந்தளநாட்டிற்கு இடையூறு செய்த கொள்ளையர்களை, வாள் போரில் வென்றது போல, தலைவனின் ஆட்களையெல்லாம் வாளால் வெட்டி, குறை உடலுடன் அனுப்பினாள் உண்ணியார்ச்சை. இதனால், அந்தத் தலைவனே ஆத்திரத்துடன் நேரில் வந்து விட்டான். வந்த பிறகு தான் அவள், வாள்சண்டை வீரன் ஆரோமலின் தங்கை என்றும், பெரிய வீராங்கனை என்றும் தெரிந்தது. அவன் ஓட்டம் பிடித்தான்.
அவனை விரட்டிப் பிடித்த உண்ணியார்ச்சை, ""இனியும் இந்த கிராமத்து பெண்களிடம் வாலாட்ட மாட்டேன் என சத்தியம் செய். இல்லாவிட்டால் உன்னை எமலோகம் அனுப்பி விடுவேன்,'' என்று கர்ஜித்தாள். தலைவனும் சத்தியம் செய்தான். அந்த கிராமப் பெண்களுக்கு அதன்பின் ஆபத்து ஏதும் வரவில்லை.
வாலாட்டும் ஆண்களை ஒடுக்க பெண்கள் பயப்படக் கூடாது. பலாத்காரங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மாமியாருக்கும், கணவருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றாலும், நியாயமான ஆசைகளுக்கு தடைபோட்டால் எதிர்த்து நிற்க தயங்கக்கூடாது. இதுவே உண்ணியார்ச்சையின் வாழ்க்கை, பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம்

No comments:

Post a Comment