Sunday, November 16, 2014

வாழ்வில் வெற்றி என்பது ஆயுதங்களாலும், அளப்பரிய செல்வத்தாலும் மட்டும் கிடைப்பது அல்ல

நவராத்திரி வைபவம் ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. "நவ' என்பதற்கு "ஒன்பது' என்று மட்டும் அல்ல... "புதுமை' என்றும் பொருள் உண்டு.
அறியாமை, மிருகத்தன்மை, மந்தபுத்தி என அசுரசக்திகள் அனைத்துமே புதுப்புது வடிவத்தில் படையெடுத்து மனிதவாழ்வை இருள் மயமாக்கி விடுகின்றன.
காட்டு எருமை போலக் கொழுத்து திரிந்த அந்த மகிஷனை மும்மூர்த்திகளாலும் அடக்க முடியவில்லை.
அதற்காக மும்மூர்த்திகளின் தேவிகள் சும்மா இருப்பார்களா? உலகத்திற்கே அன்னையரான பார்வதி,
லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்று சேர்ந்து ஒரே வடிவம் கொண்டு "துர்காதேவி' என திருநாமம் கொண்டார்கள்.
துர்காதேவி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அறிவையும், அருளையும் வளர்க்க வேண்டும் என ஒன்பது
நாட்கள் விரதமிருந்து ஆயுதபூஜை செய்தாள். பத்தாம் நாள் வளையல் அணிந்த கைகளில் வாளினைப் பிடித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தாள். அதையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
ஒன்பதாவது நாளே மகாநவமி. வெற்றி தரும் ஆயுதங்களை அந்நாளில் அம்பிகை பூஜித்ததால் "ஆயுதபூஜை' என பெயர் உண்டானது. இந்நாளில் அவரவர் தங்கள் தொழில் கருவிகளை வைத்து பூஜிப்பது வழக்கம்.
வாழ்வில் வெற்றி என்பது ஆயுதங்களாலும், அளப்பரிய செல்வத்தாலும் மட்டும் கிடைப்பது அல்ல. தூய தெளிந்த அறிவே வாழ்வில் வெற்றி அளிக்கும். அதன் காரணமாகவே, ஆயுதபூஜையை "சரஸ்வதிபூஜை' என்று விசேஷமாக குறிப்பிடுகிறோம்.
சரஸ்வதிபூஜையன்று புத்தகங்களை வைத்து பூஜிக்கிறோம். ஞான நூல்களே அறிவை அளிக்கக் கூடியவை. அந்த நூல்களை வெறுமனே வழிபாடு செய்வதோடு நின்று விடாமல்....
அவைகளைக் கற்றும்... கேட்டும்... சிந்தித்தும்... ஆராய்ந்தும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அறியாமை என்ற மகிஷனை ஆயுதங்களாலோ, செல்வத்தாலே வெல்ல முடியாது. அவனை வெல்லவல்ல ஆயுதம் அறிவு மட்டுமே! அதை அருள்பவள் சரஸ்வதி தேவி.
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின் ஒரே நோக்கம், அறியாமை என்னும் இருளை அறிவு ஒளியால் விரட்டுவது தான்.
இந்த நன்னாளில் அறியாமை நீங்கட்டும்! அன்னை சரஸ்வதியின் அருளால் அறிவும், அன்பும் ஓங்கட்டும்.

No comments:

Post a Comment