Thursday, November 13, 2014

பிரதோஷமும் இன்றைய நிலையும்

அமாவாசையில் இருந்து வளர்பிறை பதின்மூன்றாம் நாளிலும், பவுர்ணமியில் இருந்து தேய்பிறை பதின்மூன்றாம் நாளிலும் வரும் திரயோதசி திதியில் மாலைநேரத்தில் சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடக்கும்.
துர்வாச முனிவரின் சாபத்தால் வாழ்வை இழந்த தேவர்கள், அசுரர்களின் உதவியோடு பாற்கடலில் மறைந்து போன செல்வங்களை மீட்க முடிவுஎடுத்தனர். திருமாலே ஆமையாக உருவெடுத்து, மந்திரமலையை மத்தாகத் தாங்கி நின்றார். வாசுகி பாம்பு கயிறாக மலையைச் சுற்றிக் கொண்டதும், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். வலி தாள முடியாமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. எங்கும் விஷம் பரவியதால், செய்வதறியாமல் அனைவரும் ஓடினர். சிவன் அதைக் குடித்தபோது, அம்பிகை ஈசனின் கழுத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டாள். இதனால் சிவபெருமான் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.
அதன் பின் திரும்பவும் கடைய காமதேனு, கற்பக மரம், ஐராவதயானை, குதிரை, ஒளி கொடுக்கும் மணிகள், தேவதைகள், திருமகள், தன்வந்திரி, அமிர்தகலசம் என வரிசையாக வெளிவந்தன. அமிர்தத்தைப் பிரிப்பதில் தேவர், அசுரர் இடையே சச்சரவு உண்டானது. சமாதானப்படுத்த நந்திதேவர் கைலாயம் அழைத்துச் சென்றார். அங்கு திரயோதசி திதியில் சிவன் நடனம் புரிய அனைவரும் கண்டு களித்தனர்.அதுவே பிரதோஷ பூஜையானது.
இயற்கை வளத்தை தேவர்களும், அசுரர்களும் வரையின்றி அனுபவித்ததால் காற்று, நீர் என அனைத்தும் நஞ்சாக மாறியது. அதுபோல, இன்றைய உலகத்திலும் மனித இனம் அதே சூழ்நிலையில் உள்ளது. அறிவும் திறம் கொண்ட வெள்ளை இன மக்களும், உழைப்பின் திறம் கொண்ட மஞ்சள், கருப்பு இன மக்களும் ஒன்று சேர்ந்து இயற்கை வளத்தை அனுபவித்து வருவதால், எல்லாம் நஞ்சாக மாறி பூமியில் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போது மனித சமூகமே அலைக்கழியும் நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பாற்கடலைக் கடைந்து பெற்ற பயன் போல, உலகில் ரயில், விமானம், கப்பல், ஏவுகணைகள், கம்ப்யூட்டர், குளோனிங் முறையில் புதிய உயிர்கள், அனல், அணு மின்சாரம் என எத்தனையோ நன்மைகளை உலகம் பெற்று விட்டது. அதை விட அதிகமாக பறவை, பன்றிக்காய்ச்சல் என தீமைகளும் வரத் தொடங்கி விட்டன. நீர், காற்று, மண் என அனைத்தும் மாசு பட்டு விட்டது. பெட்ரோல், டீசல், எண்ணெய் வளம் என அமுதகலசமும் வந்து சேர்ந்தது. இதைப் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கிடையே போட்டி உருவாகி விட்டது. இது தேவ அசுர யுத்தத்தோடு ஒப்பிடலாம்.
இந்த சமயத்தில் திருமால் கருமேனி கொண்டும், சிவன் நீலகண்டனாகவும், கருணையே வடிவான அம்பிகையும் உலகைக் காக்க வர வேண்டுவோம். பிரதோஷ வழிபாட்டால் மாசடைந்த சுற்றுச்சூழல் சீர் பெற்று எங்கும் வளம் பெருகட்டும்.

No comments:

Post a Comment