Thursday, November 13, 2014

திருமூலராக மாறிய சிவயோகியார்

கயிலைநாதனின் முதல் பெரும் காவலரான திருநந்தி தேவரின் மாணாக்கரில், எண் வகை சித்திகளும் கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடம் கொண்ட நட்பின் காரணமாக, அவரோடு சில காலம் தங்க எண்ணினார்.

இதையடுத்து அந்த சிவயோகியார், அகத்திய முனிவர் தங்கி அருள் புரியும் பொதிகை மலையை அடையும் பொருட்டு, திருக்கயிலையில் இருந்து புறப்பட்டார். வழியில் உள்ள சிவாலயங்களை தரிசித்து விட்டு, இறுதியில் திருவாவடுதுறையை அடைந்தார்.

சில காலம் அங்கேயே தங்கியிருந்தார். சிறிது நாட்கள் கழித்து அங்கிருந்து புறப்பட திட்டமிட்டார். அப்போது அவரை அந்த காட்சி தடுத்து நிறுத்தியது. காவிரிக் கரையில் சோலைகளாக இருந்த இடத்தில் மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த பசுக்கூட்டம் கதறி அழுவதைக் கண்டு திகைத்துப் போனார் அந்த சிவயோகியார்.

பசுக்களின் இந்த பெரும் துயரத்தை அறிய முற்பட்டார் சிவயோகியார். அதற்கு பதிலும் கிடைத்தது. அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வரும் இடையரான மூலன் என்பவர் இறந்து விட்டார்.

அவர் இறப்பை தாங்க முடியாத பசுக்கள், அந்த மூலனின் உடலைச் சுற்றி சுழன்று வந்து நாக்கால் நக்கியபடியும், மோப்பம் பிடித்தபடியும் வருந்திக் கொண்டிருந்தன. மேய்ப்பான் இறந்தமையால் பசுக்கள் அடைந்த துயரத்தினைக் கண்ட சிவயோகியார், அந்தப் பசுக்களின் துயர் துடைக்க முன்வந்தார்.

எண் வகை சித்திகளையும் கற்றுத் தேர்ந்திருந்த அவர், அவற்றுள் ஒன்றான பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டு கூடு பாய்தல்) என்ற சித்தியை கையாண்டார். அதன்படி தன் உடலை மறைவாக இருக்கும்படி செய்து விட்டு, மந்திரத்தை பிரயோகம் செய்து, தன் உடலில் இருந்து, இறந்து கிடந்த மூலனின் உடலுக்கு தன் உயிரை மாற்றம் செய்தார்.

மூலன் எழுந்தார். மூலனின் உடலில் தன் உயிரை செலுத்தியதன் காரணமாக அவர் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். தன் மேய்ப்பாளன் எழுந்த மகிழ்ச்சியில், அவரைச் சுற்றியிருந்த பசுக்கள், நாவால் நக்கியும், மோந்தும், கனைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. பின்னர் மகிழ்வில் மேய்ச்சலை தொடர்ந்தன.

வயிறார மேய்ந்த பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றில் நன்னீர் பருகிக் கரையேறின. அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார் திருமூலர். மாலை பொழுது வந்ததும், பசுக்கள் தம்தம் கன்றுகளை நினைத்து, தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன.

பசுக்கள் செல்லும் வழியில் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் யாவும் தம் தமது வீடுகளுக்கு செல்வதை வழியில் நின்று கவனித்தார். இந்த நிலையில் மாலைப் பொழுது கடந்தும் தன் கணவர் வராததை எண்ணி வருந்திய, மூலனின் மனைவி, கணவனைத் தேடி சிவயோகியார் நின்ற இடத்திற்கு வந்தாள்.

அங்கு தன் உணர்வற்று நின்ற தன் கணவனை கண்டு அவரை தொட முயன்றாள். அப்போது திருமூலர் உருவில் இருந்த சிவயோகியார் சற்று பின் வாங்கி, அந்தப் பெண்மணியை தடுத்து நிறுத்தினார். கணவர் தன்னைக் கண்டு அஞ்சி பின்வாங்குவதை பார்த்து அந்தப் பெண் கலங்கி நின்றாள்.

திருமூலரோ, ‘பெண்ணே! நீ எண்ணியவாறு இங்கு உனக்கு, என்னுடன் எத்தகைய உறவும் இல்லை’ என்று கூறிவிட்டு, அந்த ஊரில் இருந்த பொது மடத்தில் புகுந்து சிவயோகத்தில் ஆழ்ந்தார். மூலனின் மனைவி, ஊர் பெரியவர்கள் பலரையும் அழைத்துச் சென்று பார்த்தும், சிவயோகியார் அசைவற்று இருந்தார்.

அவரது உடல் யோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஊர் பெரியவர்கள், மூலனின் மனைவியிடம், ‘அவர் பற்றற்ற நிலைக்கு சென்றுவிட்டார். இனி திரும்ப மாட்டார்’ என்று கூறி அழைத்துச் சென்றனர். மூலனின் மனைவி கதறியபடி அவ்விடம் விட்டு அகன்றாள்.

மறுநாள் தன் உடலை மறைத்து வைத்த இடத்திற்கு சென்ற சிவயோகியார், உடலைக் காணாது கலக்கமுற்றார். அப்போது இது ஈசனின் எண்ணம் என்பதையும், சிவாகமங்களின் அரும்பொருளை திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதியதால் போடப்பட்ட திருவிளையாடல் என்பதையும் அவர் தெளிந்து உணர்ந்து கொண்டார்.

இதையடுத்து திருவாவடுதுறை கோவிலை அடைந்த திருமூலர் அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்து, ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை எழுதினார். பின்னர் கயிலைநாதர் இருப்பிடம் சென்றடைந்தார்.

No comments:

Post a Comment