Thursday, November 13, 2014

அம்பாளுக்கு பிரணவம் உபதேசித்த ஈசன்

சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் எண்ணிலடங்காதவை. அவரது திருவிளையாடல்களில் சிக்கி அவதிப்பட்டவர்களில் பார்வதிதேவியும் விதிவிலக்கல்ல. ஒரு முறை கயிலாயத்தில் பூத கணங்களின் வேண்டுகோளுங்கிணங்க, காரணம், காரியம், தூலம், சூட்சமம், முக்தி எனப்படும் ஐந்து பஞ்சாட்சரங்களில், முக்தி பஞ்சாட்சரத்தின் பொருளை சிவபெருமான் அனைவருக்கும் உபதேசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த உபதேசத்தை கேட்க நாட்டமில்லாதவராக இருந்த பார்வதிதேவியைக் கண்டு வெகுண்டெழுந்த ஈசன், அம்பாளுக்கு சாபம் அளித்தார். தன் தவறை உணர்ந்த பார்வதிதேவி, சாப விமோசனத்திற்கு வழி கேட்க, ‘என்னை நினைத்து தவமியற்றி, மீண்டும் என்னை வந்து சேர்வாயாக!’ என்று கூறினார் ஈசன். அதன்படி ஓமாம்புலியூர் என்னும் பகுதியில் பெண்ணாக அவதரித்தார் பார்வதிதேவி.

பின்னர் இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டதுடன், பத்ர காரண்யமாக (இலந்தை மரக்காடு) இருந்த இவ்வூரில் சுயம்புவாக தோன்றிய லிங்கத்திற்கு பூஜை, ஹோமங்கள் நடத்தி வழிபட்டு வந்தார். அவரை அடியொற்றி, பலரும் யாகம் செய்து லிங்கத்தை வணங்க, ஊரெங்கும் ஹோமப் புகை நிரம்பியது. அந்த புகையானது கயிலாயத்தில் இருந்த சிவபெருமானின் ஞானக் கண் மீதும் பட்டது.

தேவியை ஆட்கொள்ளும் நேரம் வந்து விட்டதை உணர்ந்த சிவபெருமான், மலைமகள் வணங்கிய லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, பிரணவத்தின் உட்பொருளை தேவிக்கு உரைத்து அவளை ஆட்கொண்டார். மேலும் அங்கே கூடியிருந்தவர்களுக்கு தேவி சமேதராய் காட்சி அளித்து அருளினார்.

இறைக்காட்சியை கண்டவர்கள் அங்கே ஓர் ஆலயத்தை ஸ்தாபனம் செய்து, பிரணவத்தன் பொருளுரைத்ததால், அந்த இறைவனுக்கு பிரணவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டினர்.

ஓ(ஹோ)மங்கள் மூலம் இறைவியும், மற்றவர்களும் இறைவனது தரிசனத்தைப் பெற்ற வரலாற்றின் அடிப்படையில் இந்த ஊரை ஓமாம்புலியூர் என்று அப்பர் தம் தேவாரத்திலும், ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளை இறைவன் உபதேசிக்க, அதை ஆம் போட்டு இறைவி கேட்ட வரலாற்றின் அடிப்படையில் இவ்வூரை ஓமாம்புலியூர் என திருஞானசம்பந்தர் தம் தேவாரத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி சிவனே, குருவாக தோன்றி பிரணவத்தின் பொருளுரைத்ததால் இது குருமூர்த்த தலமாகவும் போற்றப்படுகிறது.

No comments:

Post a Comment