Monday, November 17, 2014

உயர்ந்தவரென்ன! தாழ்ந்தவரென்ன!

கங்கைக்கரையில் பண்டிதர் ஒருவர் இருந்தார். சாஸ்திர ஞானம் மிக்க அவருக்கு மற்றவர்களைக் கண்டால் பிடிக்காது. தான் மட்டுமே கடவுள் வழிபாட்டுக்குத் தகுதியானவர் என்ற அகங்காரம் அவருக்கு உண்டு.
ஒருநாள் கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். வழியில் பண்டிதரின் செருப்பு அறுந்து விட்டது. உடனே, செருப்பு தைக்கும் தொழிலாளியை நாடினார்.
""ஏய்! இதை உடனே தைத்துக் கொடு'' என்றார் அதிகாரமாக.
அவனும் கச்சிதமாகத் தைத்துக் கொடுத்தான்.
காலில் அணிந்த பண்டிதர், கூலிக் காசை விட்டெறிந்தார்.
""ஐயா! எனக்கு காசு தேவையில்லை,'' என்றான்.
""காசில்லாமல் குடும்பம் எப்படி நடத்துவாய்?'' என்றார் பண்டிதர் அலட்சியமாக.
""இதை நீங்களே எடுத்துக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக எனக்கொரு உதவி மட்டும் செய்தால் போதும்''.
""சொல்லேன் பார்க்கலாம்!'' என்றார் பண்டிதர்.
""நீங்கள் நீராடும் போது கங்கா மாதாவுக்கு இந்த வெற்றிலை,பாக்குகளை என் சார்பாக அர்ப்பணியுங்கள். காசை எறிந்தது போல வீசி விடாதீர்கள். அன்னையின் கையில் சேர்த்து விடுங்கள்,'' என்று வேண்டினான் தொழிலாளி.
பண்டிதர் வெற்றிலை பாக்குடன் கங்கையில் இறங்கினார். என்ன அதிசயம்! கங்கா மாதா நேரில் தோன்றி, தன் கைகளை நீட்டி, ""என் பக்தன் எனக்கு அன்புடன் அளித்த வெற்றிலை பாக்கைத்தாருங்கள்,'' எனக் கேட்டு வாங்கிக் கொண்டாள். பிரமித்துப் போனார் பண்டிதர்.
இன்னொரு ஆச்சரியமும் நடந்தது. தான் அணிந்திருந்த ஒரு நவரத்தின வளையலை, பண்டிதரிடம் கொடுத்து, இதை செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து விடுங்கள்,'' என சொல்லி மறைந்தாள்.
அதைப் பெற்றுக்கொண்ட பண்டிதரின் புத்தி மாறியது.
""வேலைப்பாடு மிக்க இந்த வளையல் அந்த தொழிலாளிக்கு எந்த வகையில் பெருமை தரப் போகிறது? நம் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் கொடுத்தாலாவது மனம் மகிழ்வாள்'' என்று எண்ணினார். அதன்படியே அவரது மனைவியிடம் கொடுத்து விட்டார்.
பண்டிதரின் மனைவி, அதைஅணிந்து கண்ணாடியில் அழகு பார்த்தாள். அதேநேரம் பண்டிதரிடம், "" ஊரில் உள்ளவர்கள் எப்படி இந்த வளையல் கிடைத்தது என்று கேட்டால் என்ன செய்வது? அதனால், இதை உடனே விற்று பணமாக்குங்கள்,'' என்றாள்.
ராஜாவுக்கு ஆபரணம் செய்யும் அரண்மனைப் பொற்கொல்லரிடம் சென்றால் அதிக விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்துடன் புறப்பட்டார் பண்டிதர். பொற்கொல்லர் மூலம் வளையலைப் பெற்ற ராணிக்கு மிகவும் பிடித்துப் போனது.
""இரண்டு வளையல்களாக இருந்தால் அணிந்து கொள்ள வசதியாக இருக்குமே!'' என்றாள் ராணி.
ராஜாவும் வளையலை விற்க வந்த பண்டிதரை அழைத்து, "" ஜோடி வளையலையும் இப்போதே கொண்டு வா! இல்லாவிட்டால் தண்டனைக்கு ஆளாவாய்!'' என்று கட்டளையிட்டான்.
வேறு வழி தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியின் உதவியை நாடினார் பண்டிதர். "பாவம் பண்டிதர் பிழைத்து விட்டுப் போகட்டும்' என்று இரக்கப்பட்ட தொழிலாளி, மீண்டும் வெற்றிலை, பாக்கை அளித்து கங்கைக்கு அர்ப்பணிக்க கூறினார். அதன்படியே செய்ய கங்கையும் நேரில் தோன்றி இன்னொரு வளையலையும் வழங்கி மறைந்தாள். பண்டிதர்அதை மன்னரிடம் கொடுத்து தண்டனையில் இருந்து தப்பினார்.
மனம் திருந்திய பண்டிதர், தன்னை மன்னிக்கும்படி தொழிலாளியிடம் வேண்டினார். அதற்கு தொழிலாளி,"" பண்டிதரே! பிறப்பாலும், படிப்பாலும் ஒருவருக்கு பெருமை உண்டாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

No comments:

Post a Comment