Sunday, November 23, 2014

அன்னைத் தெய்வம்-மாதாவின் சிறப்பு!

அன்னைத் தெய்வம்-மாதாவின் சிறப்பு!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக 'அன்னை'யைச் சொல்லியிருக்கிறாள். தைத்திரியோபநிஷதமும், 'மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக' என்கிறது. இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது.
தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது 'அம்பாள்' என்கிறோம்.
எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.
பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, 'அம்மா' என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment