Friday, December 12, 2014

கந்த சஷ்டி கவசம் விளக்கம்


கந்த சஷ்டி கவசம் விளக்கம்
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா ...
கந்த சஷ்டி கவசம் விளக்கம்........................கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள்.
போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது
. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.
அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.
சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும்.
செவ்வாய் ரோகக் காரகன்.
இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த் திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.
வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பதுப இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்குஎல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார்,
வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன. அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள்

No comments:

Post a Comment