Saturday, December 20, 2014

நெய் அபிஷேகம் செய்யும் முறை

சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டவர்கள், அதிகாலை பஸ்மகுளத்தில் குளித்து விட்டு உள்கால் சட்டை துண்டு அணிந்து கொண்டு அய்யப்பனின் சன்னதி கொடிமரத்தில் ஆரம்பித்து உருண்டு வந்து கொடிமரத்தை மீண்டும் அடைந்ததும் அய்யப்பனை வணங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.

அங்கப்பிரதட்சணம் செய்தவர் வேண்டிக் கொண்டது நடக்கும். நெய் அபிஷேகம் செய்கிறவர், நெய் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அய்யப்பனின் சன்னிதானம் வலது பக்கம் உள்ள அதற்கான அலுவலகத்தில் நெய் பாத்திரத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு திருக்கோவிலின் இடதுபுறம் வந்து தனது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் கொடுத்த நெய்யில் பாதிதான் கிடைக்கும். இந்த நெய்யைப் பிறகு குருசாமி, எல்லாச்சாமிகளுக்கும் பிரித்துத் தனித்தனி டப்பாவில் போட்டுக் கொடுப்பார். இப்படி நெய் அபிஷேகம் செய்வதற்கு முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். எங்கே தெரியுமாப மஞ்சமாதா கோவிலின் எதிரில் (கீழே) தேவஸ்தான போர்டு தனி அறை வைத்து செயல்படுகின்றது.

அங்கே போய், ஒரு இருமுடிக்கு ரூபாய் மூன்று வீதம் ஒரே நபர் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்த நெய் அபிஷேக டிக்கெட் காலை முதல் இரவு வரை தரப்படுகிறது. சபரிமலையில் அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை நடத்தப்படுகிறது.

அர்ச்சனை செய்ய விரும்புவோர் அர்ச்சனைச் சீட்டு ஆபீஸ் கவுண்டரில் பெற்று சீட்டின் பின் பக்கத்தில் உங்கள் பெயர், நட்சத்திரம் முதலியவற்றை ஆங்கிலத்தில் எழுதி, சன்னதியிலிருக்கும் அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் கொடுப்பார். விபதி, குங்குமம் முதலியன தனியாகவும் கிடைக்கும்.

சன்னிதானம் அருகில் உள்ள ஆபீஸ் கவுண்டர்களில் விபூதி, குங்குமம், அய்யப்பன் தகடு போன்றவை விற்கப்படுகிறது. நெய் அபிஷேகம் (நேரம்) முடிந்து விட்டபின் நமது நெய்யை அவசரமாக அபிஷேகம் செய்து விட்டு ஊர் திரும்ப எண்ணுபவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்களுக்காகக் கோவில் சன்னிதான மூலையில் (ஆபீஸ் ஒரமாக) நெய் தோணி உள்ளது.

இதில் தேங்காய் உடைத்து, நெய் தோணியில் நெய்யை ஊற்றி விட்டால் அந்த நெய் கோவிலின் அபிஷேக நெய்யுடன் சேர்ந்து விடும். உங்களுக்கு அபிஷேக நெய் தனியாக வேண்டியிருந்தால் மஞ்சமாதா கோவிலுக்கு போகும் வழியில் தேவஸ்தான அலுவலர் டப்பாவில் அடைத்து அபிஷேகம் செய்த நெய்யை விற்கிறார்கள்.

விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பதினெட்டாம் படிகளுக்கு முன்பாகவே இடதுபுறமாக ஒரு குண்டம் இரவு பகலாகத் தீக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும். நெய் அபிஷேகம் முடிந்தவுடன் ஒரு தேங்காய் மூடியைப் பக்தர்கள் இக்குண்டத்தில் வீசுவார்கள்.

நாம் வீட்டிலிருந்து கொண்டு செல்லும் இருமுடியில் ஒன்று ஆத்மா என்றும், இன்னொன்று ஜடம் என்றும் சொல்லப்படும். ஜடம் என்கிற மூடியை எரிந்து விட்டு ஆத்மா என்கிற மூடியை வீட்டிற்குக் கொண்டு போகிறோம் என்று இதற்கு அர்த்தம். பக்தர்கள் ஓம குண்டத்தில் போடுகின்ற தேங்காய் அக்னி தேவனால் அது கணபதி ஹோமமாக மாறுகின்றது.

No comments:

Post a Comment