Friday, December 19, 2014

ஐயப்ப பக்தர்கள் பூஜை அறையில் மாலை அணியலாமா?

முத்திரை மாலையை நாமே அணியக்கூடாது. ஆலயத்தின் அர்ச்சகர்களிடம் கொடுத்து, இறைவன் முன்னர் வைக்கப்பட்டு முறையான பூஜைகள் செய்விக்கப்பட்ட பின்னரே அணிந்து கொள்ள வேண்டும்.

தக்க குருநாதர் கிடைக்காதவர்கள் இறைவனையே மானசீகக் குருவாகவும்... அவருடைய பிரதிநிதியாக ஆலய அர்ச்சகரையும் கருதி அவர் கையாலேயே, இறைவனின் திருச்சந்தியில் அவர் முன்னர் தரித்துக் கொள்ளலாம். சிலர் தங்களுடைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கி மாலை அணிந்து கொள்வார்கள்.

வீட்டில் பூஜை அறையில் வைத்து, வணங்கி மாலை அணிபவர்கள் தினந்தோறும் பூஜைகள் செய்து இறைவனை வணங்குபவர்களாக இருப்பார்கள். தினமும் வணங்காதவர்களும், பூஜை செய்யாதவர்களும், வீட்டில் வைத்து முத்திரை மாலை அணியக் கூடாது. இறைவனின் தலம் புனிதமானது. அங்கே இறைவனின் அருள் ஆற்றல் அலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே ஆலயத்தில் மாலை அணிவதே சிறந்தது. பெரும்பாலும் மாலை அணிவிக்க சற்குரு ஒருவர் அவசியம். இந்த சற்குரு என்பவர் பல முறை ஐயப்பனின் ஆலயம் சென்று வந்தவராக இருக்க வேண்டும். ஸ்ரீபரமேஸ்வரர் தகப்பனாக இல்லாமல், குருவாக நின்று உபதேசித்து உயர்ந்த மணிகளை உடைய மாலையை தர்ம சாஸ்தாவின் கழுத்திலே அணிவித்த நிகழ்ச்சியை நினைவூட்டவே இப்படி குருமார்களினால் மாலை அணிவிக்கப்படும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

சிலர் முத்திரை மாலையை பெற்றோரின் மூலம் அணிந்து கொள்வதுண்டு. அதுவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பதற்குத்தான். குருவாகவும் தந்தையாகவும் நிற்பவன் அவன்தானே! மாலை அணிந்தவுடன் தான் ஏற்றுக் கொண்ட குருநாதருக்கு இயன்ற காணிக்கைகளைத் தர வேண்டும். மாலையுடன் தோன்றிய மணிகண்டன் ராஜசேகரனுக்கு மகிழ்வை கொடுத்தான்.

மஹிஷியைக் கொன்றதன் மூலம் தேவர்கள் புலிகளாக மாறி காணிக்கைகள் ஆயினர். முனிவர்களுக்குத் தானே காணிக்கையாகி பொன்னம் பலமேட்டில் ஒளிர்ந்தான். பக்தர்களுக்கும் தன்னை ஈன்றவர்களுக்கும் காணிக்கை ஆனான். இதனை நினைவு கூரவே குருநாதருக்கு காணிக்கை கொடுப்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.

மாலை அணிந்தவுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து, தேங்காயை விடலையாக உடைக்க வேண்டும். இது மணிகண்டனின் பூதங்களைத் திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது. மாலை அணிந்த அத்திருநாளில் ஏழைகளும், ஆதரவற்றவர்களும் அத் தேங்காய்களை எடுப்பதால் திருப்தியுற்று ஆசீர்வதிப்பவர்களாக மாறுகின்றனர்

No comments:

Post a Comment