Tuesday, February 10, 2015

நமசிவாய’ என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும்.

நமசிவாய’ என்பது பகவான் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும்.
ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பற்றி தனது இரண்டு பதிகங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். அதைப் பற்றி அறியும் முன் ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழலைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஐந்தெழுத்து மந்திரம் உருவான சூழல்
பொது திருப்பதிகம்
பல தலங்கள் தோரும் சென்றடைந்து சிபபெருமானைத் தொழுத வண்ணம் இருந்த ஆளுடைப் பிள்ளைக்கு திருமணம் செய்விக்க எண்ணிய அவரது பெற்றோர் திருநல்லூர் பெருமணத்தில் நம்பியாண்டார் நம்பி என்ற சிவனடியாரின் திருமகளான சொக்கியை நிச்சயம் புரிந்தனர். எந்நேரமும் சிவனையே தொழுத வண்ணம் இருந்த திருஞானசம்பந்தருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லையெனினும், அனைத்தும் இறைவனது சித்தம் என்று பெற்றோரது முடிவிற்கு இசைந்தார். மண்ணோரும் விண்ணோரும் மற்ற யாவரும் இத்திருமணத்தை காண வந்திருந்தனர். அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தியதால், மனிதரும் தேவராகத் திகழ்ந்தனர். பிறகு, இறைவனது சித்தப்படி, திருஞானசம்பந்தர் சொக்கியைக் கரம் பிடித்தவுடன், ‘இவளொடும் சிவனடி சேர்வள்’ என்று கூறி பொது திருப்பதிகத்தினைப் பாடி திருவைந்தெழுத்து மந்திரத்தின் மகிமையைப் பரைசாற்றினார். அதன் பயனாய் திருமணம் காண வந்த அனைவரும் பிறவி பிணி நீங்கி ஈசனது திருவடியில் அழியா இன்பத்தை எய்தினர். பின்பு, திருஞானசம்பந்தரும் அவரது துணைவியாரோடு இறைவனடி சரன் புகுந்தார்.
பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்ய விரும்பினார் சிவபாத இருதயார். அந்த உபநயனச் சடங்கில் ‘மறை நான்கும் தந்தோம்’ என்றனர் அந்தனர். அப்பொழுது மந்திரங்களுக்கெல்லாம் முதன்மையுடையது உலகின் முழுமுதற் கடவுளின் திருவைந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரமே என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் இப்பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடினார் ஆளுடைப் பிள்ளையார்.

No comments:

Post a Comment