Thursday, February 19, 2015

யுகங்களில் அன்பு:

யுகங்களில் அன்பு:
முதல் யுகமான கிருத யுகத்தில் அன்பே பிரதானமாக இருந்த காரணத்தினால், சத்தியத்தால் நான்கு கால் பாய்ச்சலுடன் செல்ல முடிந்தது.
இரண்டாம் யுகமான, திரேதா யுகத்தில் பொறாமை நுழைந்து சத்தியத்தின் ஒரு காலை உடைத்தது.
சுயநலம் தனது ஒரு காலை அடியெடுத்து வைத்தது. அதனால், சுயநலத்தின் காரணமாய் கைகேயி “பரதன் நாடாள வேண்டும். இராமன் காடேற வேண்டும்” வரம் கேட்டாள். தனது கணவனை இழந்தாள். இராவணனும், தனது சுகமே பிரதானம் என்று கருதி சீதையை கவர்ந்து சென்றான். சுயநலத்தின் காரணமாய், அறிவுரை கூறிய அன்புத்தம்பியை விரட்டினான். மற்றொரு தம்பியை இழந்து, மகனை இழந்து, அனைத்தும் இழந்து தன் இன்னுயிரையும் இழந்தான்!
மூன்றாம் யுகமான, துவாபரயுகத்தில் பொறாமை சத்தியத்தின் இன்னொரு காலையும் உடைத்தது.
ஒரே குடும்பத்தினுள்ளே பொறாமை புகுந்து, சுயநலம் இரண்டு கால்களுடன் நின்றது. “ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன்.” என்று துரியோதனனை கூற வைத்தது, சுயநலமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தம்பிகள், நண்பன், உறவினர்கள் இழந்து தனிமையில் தன் இன்னுயிரையும் இழந்தான்.
நான்காம் யுகமான, துன்ப யுகமான கலியுகத்தில், தூய அன்பும் சத்தியமும் ஒற்றைக்காலுடன் நொண்டியடிக்கின்றன.
சுயநலம், பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியன மூன்று காலுடன், முக்காலியில் அமர்ந்தது போல தீர்க்கமாய் உட்கார்ந்து உள்ளன. அதனால், கணவன் – மனைவிக்கிடையே, உடன்பிறந்த சகோதரர்க்கு இடையே, (சில குடும்பங்களில்) பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே, நண்பர்களுக்கிடையே அன்பு குறைந்து, சுயநலம் மேலோங்கியுள்ளது.
சுயநலத்தினால், இராவணன், துரியோதனன் அழிந்தது அறிவோம். அப்பாதை விடுத்து,
பிறரிடத்தில் தூய அன்பு செலுத்துவோம். 
ஆனந்தமாய் வாழ்வோம்.

No comments:

Post a Comment