Monday, April 27, 2015

ஸ்ரீ ரமண மகரிஷி


ஸ்ரீ ரமண மகரிஷி
பருத்தியூர் டாக்டர் K.சந்தானராமன், M.A.,D.Litt.,Ph.D.,
தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், “திருச்சுழியல்” என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது.
செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் சுந்தரமய்யர் திருச்சுழியில் குடியேறினார். அங்கு மணியம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். சுந்தரமய்யர் தொடர்ந்து படித்து, பதிவு பெறாத வழக்கறிஞராகத் திகழ்ந்தார். நல்ல வருமானம் கிடைத்து வந்தது. மனைவி அழகம்மையுடன் வளமான வாழ்க்கை நடத்தி வந்தார்.
நடராஜப் பெருமான் ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் கொள்கிறார். அவற்றுள் முதன்மை பெற்றது மார்கழி மாத ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம். அத்தகு பெருமை வாய்ந்த மார்கழித் திருவாதிரை நாளில் பகவான் ஸ்ரீரமணர் திருவவதாரம் செய்தார்.
மார்கழி மாதம் பதினாறாராம் நாள், 1879-ஆம் ஆண்டு டிசம்பர் முப்பதாம் நாள் பகவான் அவதாரம் செய்தார். அழகம்மைக்குப் பிரசவம் பார்க்க வந்த வயதான கிழவி ஒருத்தி பகவான் அவதார நேரத்தில் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றாள்! தான் உலகிற்கு ஒளி கொடுக்க வந்தவர் என்பதை இந்த நிகழ்ச்சியே உணர்த்தியது.
குழந்தைக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர். அழகம்மை-சுந்தரமய்யர் தம்பதிக்கு முன்னரே ஒரு மகன் உண்டு. அவன் பெயர் நாகசாமி என்பதாகும். வேங்கடராமனை திருச்சுழி, தொடக்கப் பள்ளியிலும், பிறகு திண்டுக்கல் பள்ளியிலும் கல்வி பயில அனுப்பி வைத்தனர். சிறுவன் வேங்கடராமனுக்குப் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. நீச்சல், பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது.
வேங்கடராமனின் அண்ணன் நாகசாமி நன்றாகப் படித்து வந்தார். வேங்கடராமன் பள்ளிக் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்ததைக் கண்டு பெற்றோர் வருந்தினர். அந்த நிலையில் சுந்தரமய்யர் காலமானார்.
தந்தையின் மரணம் வேங்கடராமனைப் பெரிதும் பாதித்தது. வருத்தத்தை விட, மரணம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தான் சிறுவன் வேங்கடராமன். அழகம்மை, நாகசாமி, வேங்கடராமன் ஆகியோர் மதுரையில் இருந்த, சுந்தரமய்யரின் தம்பி சுப்பையரின் இல்லத்திற்கு வந்தனர். கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்கால கட்டத்தில் சுப்பையர் தன் அண்ணனின் குடும்பத்திற்கு உதவியாக இருந்தார். ஆகவே, அழகம்மையும் மகன்களும் மதுரைக்கு வந்தனர். வேங்கடராமன் பதினாறாவது வயதை அடைந்தான்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது! மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதனையும் தியாகம் செய்யத் துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை, சிறுவன் வேங்கடராமனின் மனத்தில் ஆழப் பதிந்தது. பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை திருமுறை நூல் ஒன்று கவர்ந்தது விந்தைதான்!
தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது வேங்கடராமன் மரணத்தைக் குறித்துச் சிந்திக்கலானான். ஒரு நாள் மூர்ச்சையாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பினான். அது முதல் மரண பயம் நீங்கியது.
திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத் திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் சிற்றப்பா சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன், "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டான். சொக்குப் பட்டர், "நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன்" என்றார். முன்னரே அண்ணாமலை குறித்து, பெரிய புராணத்தில் படித்திருந்த வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்!
1896-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தொன்பதாம் நாள் வீட்டை விட்டு வெளியேறத் தீர்மானம் செய்தான் வேங்கடராமன். அன்று "ஸ்பெஷல் கிளாஸ்" இருப்பதாக அண்ணன் நாகசாமியிடம் கூறினான். அண்ணாமலைக்குச் செல்லப் பணம் வேண்டுமே? அண்ணாமலையார் அதற்கும் வழி காட்டினார்! அன்று அண்ணன் நாகசாமிக்குக் கல்லூரிச் சம்பளம் கட்ட வேண்டியிருந்தது. பெட்டியிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்துச் சென்று கட்டி விட்டு ஸ்பெஷல் கிளாசிற்குச் செல்லும்படி அண்ணன் கூறினார்.
தான் தகப்பனாரைத் தேடிச் செல்வதாகவும், மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு, இரண்டு ரூபாயை வைத்து விட்டதாகவும் கடிதம் எழுதி வைத்த வேங்கடராமன், மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு இரண்டு ரூபாய் பன்னிரண்டு அணா கொடுத்துச் சீட்டு வாங்கி, ரயிலில் ஏறி அமர்ந்தான். விழுப்புரத்தில் இறங்கி, காட்பாடி செல்லும் வண்டியில் திருவண்ணமாலைக்குச் செல்லலாம் என்று சக பயணி ஒருவர் கூறினார்.
அதன்படியே வேங்கடராமன் விழுப்புரத்தில் இறங்கினான். அப்போது இரவு மூன்று மணி. திருவண்ணாமலைக்குச் செல்லும் வண்டி வரும் நேரம் குறித்து விசாரிக்க ஓர் உணவு விடுதியில் நுழைந்தான். அப்போது நன்றாகப் பசியெடுத்தது. உணவுக்காகச் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. உணவு உண்ட பிறகு, வேங்கடராமனின் முகத்தைக் கண்ட உணவு விடுதி முதலாளி பணம் வாங்க மறுத்து விட்டார். மீதமிருந்த சில்லறை அறையணிநல்லூர் வரை செல்லும் அளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான். மாலை நேரத்தில் அறையணிநல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன். அங்கு ஒரு ஜோதி தோன்றியது! சந்நிதியிலிருந்த திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!
மலைக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வந்த வேங்கடராமன் அர்ச்சகரிடம் பிரசாதம் கேட்டான். அவர் கண்டிப்பாக மறுத்தார். ஆனால், கோயில் நாதசுவர வித்துவான் தனக்குரிய பிரசாதப் பட்டையை வேங்கடராமனிடம் கொடுத்து உதவினார். பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகு ஒரு சாஸ்திரிகளின் வீட்டில் தண்ணீர் வாங்கிப் பருகினான். அப்போது வேங்கடராமன் திடீரென உணர்விழந்து விழுந்தான். அதனைக் கண்டு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவர் வேங்கடராமனைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பாகவதரின் மனைவியும் வேங்கடராமனை உபசரித்தாள். அன்று கோகுலாஷ்டமி நாள். பாகவதரின் மனைவி வேங்கடராமனை, தன் இல்லத்திற்கு எழுந்தருளிய கண்ணனாகக் கருதி இனிப்புகள் வழங்கினார்.
பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயில் ஏறித் திருவண்ணாமலைக்குப் பயணமானான். அண்ணாமலையை நெருங்கிய உடனே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான். உடல் சிலிர்த்தது!
“அருணாசல சிவ! அருணாசல சிவ!” என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி, 1886-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பால ரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்! ஆனால், பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.
தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கிழித்து, கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதிச் சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த சுத்த புருஷனாக ஆயிரக்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.
பால் வடியும் முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர். எனினும், விஷமிகள் சிலர், அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர். இருள் நிறைந்த பாதாளலிங்கக் குகையைப் பாலரமணர் தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இன்றிக் கடுந்தவம் இயற்றினார். உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும், பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப் பகுதி அரிக்கப்பட்டது! ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை! சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்து, உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார்.
அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணர், "குருமூர்த்தம்" என்ற இடத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார். அங்கு, பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் பாலரமணரிடம் பக்தி கொண்டார். அவர் பால ரமணரைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றார். பால ரமணரின் முன் உண்ணாவிரதமே மேற்கொண்டார்.
மௌனத்தில் இருந்த யோகி, "வேங்கடராமன், திருச்சுழி" என்று எழுதிக் காட்டினார். திருச்சுழி ஒரு தேவாரத் திருத்தலம் என்று உணர்த்த ரமணர், தன்னுடன் வைத்திருந்த பெரியபுராணப் புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.
தமக்குப் பந்த பாசங்கள் அறுந்துவிட்டன என்று பகவான் தாய் அழகம்மைக்கு எழுதிக் காட்டினார். அப்போது மானாமதுரை திரும்பிய அழகம்மை தன் ஞானக்குழந்தையைக் காண அவ்வப்பொழுது வந்தார். ஆசிரமத்தில் தங்கி, பக்தர்களுக்கு உணவு சமைக்கும் பணியை மேற்கொண்டார். மகரிஷியும் அதனை அனுமதித்தார். எனினும், தனிப்பட்ட முறையில் தாய்க்கு எந்தச் சலுகையும் அளிக்கவில்லை. சில சமயங்களில் பக்தர்களுடன் பேசிய ரமணர் தாயுடன் பேசுவதில்லை.
1914-ஆம் ஆண்டு அழகம்மை நோயுற்று இருபது நாள்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்தார். ரமணர் அப்போது தாய்க்கு மிகவும் அன்புடன் பணிவிடைகள் செய்தார். உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அன்னை அண்ணாமலைக்கு வந்தார். ஆசிரமச் சமையல் பணிகளை மேற்கொண்டார். 1922-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் அழகம்மை வீடுபேறு எய்தினார். பாலி தீர்த்தம் என்ற இடத்தில் அன்னையின் சமாதிக் கோயில் உள்ளது.
ரமணரின் மேலை நாட்டு பக்தர் எஃப்.எச். ஹம்ப்ரீஸ் என்பவர் காவல்துறையில் பணியாற்றியவர். இவர் கணபதி முனிவர் வழியே பகவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். ஹம்ப்ரீஸ் தனது கட்டுரைகளின் வழியே இங்கிலாந்தில் பகவானின் புகழைப் பரவச் செய்தார்.
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் மகரிஷியின் வாழ்க்கை வரலாற்று நூலை ஆர்தர் ஆஸ்போர்ன் என்பவர் எழுதினார்.
இலண்டனில் பிறந்த பால் பிரண்டன் ஸ்வீடிஷ் பிரஜை. சிறந்த பத்திரிகையாளர். நூலாசிரியர். ரமணர் இவருடைய ஐயங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் அளித்தார். இன்றும் பகவானின் புகழை அறிந்து கொள்ள விரும்புவோர் இவருடைய நூல்களையே நாடுகின்றனர்.
1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் பகவான் பரிபூணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து, புன்னகை மலர்ந்து, விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தியடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரி நட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்! "அருணாசல சிவ" என்று பக்தர்கள் முழங்கினர்.
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த கவியோகி சுத்தானந்த பாரதியாரை அனைவரும் அறிவர். அவர் ரமணாசிரமத்தில் தங்கியிருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை, "ரமண விஜயம்" என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார். அதுவே, பகவான் குறித்து எழுதுவோர் அனைவருக்கும் அடிப்படை நூலாகத் திகழ்கிறது.
ரமணாசிரமம், சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது. ரமணாசிரமத்தில் முதலில் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறும். பிறகுதான் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் உணவு அருந்துவார்கள். இது ரமண மகரிஷி தோற்றுவித்த புதிய மரபு. மக்கள் நலனில் மகரிஷி கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு இதுவே எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment