Friday, April 24, 2015

அன்றைய திருடன் இன்றைய தபஸ்வி

இமயமலைப் பகுதிகளில் சுவாமிஜி மகான் ஒருவரை சந்திக்க நேர்ந்தது .அவர் ஆன்மீக சாதனைகளில் உயர்நிலைகளை எட்டியவர் என்பதை புரிந்து கொண்டார் சுவாமிஜி . அவரோடு தமது பரிவராஜகப் பயணத்தைப் பற்றிக் கூறி தாம் காஸ்ப்பூரில் பவஹாரி பாபா என்ற மஹானை சந்திக்க போவதாக கூறினார் .

உடனே அந்த தபஸ்வி "ஆமாம் நான் கூட அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் "என்றார் .சுவாமிஜி பவஹாரி பாபாவின் உயர்வைப் பற்றி யச் சம்பவத்தைக் குறிப்பிட்டார் .

"ஒருநாள் பவஹாரி பாபாவின் ஆசிரமத்தில் ,ஒரு திருடன் திருட முயன்றான் . பொருட்களை எடுத்துக் கொண்டு நழுவ முயன்றான் உறங்கி கொண்டிருந்த பாபா விழித்துக் கொண்டு விட்டார் . அதனால் பதட்டப்பட்ட திருடன் பொருட்களை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தான் . பாபா அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து ஓடினார் .

ஒடிக் களைத்த திருடன் ஓரிடத்தில் நின்றான் . துரத்தி வந்த பாபா அந்தப் பொருட்களை அவனிடம் தந்து "நாராயண இவையெல்லாம் தங்களுடையவை . எடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்போடு சொன்ன பாபா திரும்பி வந்த வழியே சென்று விட்டார் . பாபா கூறியதை நம்ப இயலாத திருடன் பிரமிப்புடன் பார்த்தான் . தன்னிடத்தில் திருடிய பொருட்களைக் கூடத் திருடனைத் துரத்திப் போய் அவனிடம் தந்த அற்புத மனிதர் பாபா "என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னார் சுவாமிஜி .

அப்போது அந்த மகான் கண்களில் நீர் கசிந்தது."நீங்கள் கூறிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த திருடன் நான்தான் சுவாமிஜி "என்று அந்த மகான் கூறியதும் சுவாமிஜி திகைத்து போனார் .

No comments:

Post a Comment