Friday, April 3, 2015

பதஞ்சலி முனிவர் :

பதஞ்சலி முனிவர் : 
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாக ஆதிசேடனின் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது. இராமாயணத்தில் ஆதிசேடனே இலக்குவணனாகத் தோன்றினார் என்பது நாம் அறிந்ததே. பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். பதஞ்சலி முனிவர் மூலமாக நாம் சைவ வைணவ ஒற்றுமையையும் உணரலாம். ஆம், ஸ்ரீஹரியின் தூண்டுதலின் பேராலாயே ஆதிசேடனின் ஆடல்வல்லானான நடராசப்பெருமானின் நடனத்தைக் காணும் பொருட்டு பதஞ்சலி முனிவராகத் தோன்றினார்.
ஒருசமயம் மகாவிஷ்ணு ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அதற்கான காரணமென்ன என்று கேட்க, அதற்கு மகாவிஷ்ணு, "ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது " என்றார். தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்'' என்று ஆதிசேஷன் இறைஞ்சினார். அதே சமயம் பகவானை விட்டுப் பிரியவும் விரும்பாமல் தவித்தார். இதை அறிந்த பகவான் "ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும். நீ எம்மை விட்டுப் பிரியாமல் மாய உருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்'' என்றார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் பலகாலம் தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், தவம் கண்டு மெச்சி " . நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது நீ பூலோகத்தில் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய். யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்குப் பல வியாக்கியானங் களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவ தரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்கிரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்'' என்று அருளினார். ஈசனார் அருளியவாறே அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக் தில்லையில் கண்டுமகிழ்ந்தார்கள். ஸ்ரீநடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவது மாகக் கலந்தார்கள்.
பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்திரத்திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர். அகப்பார்வையின் மூலம் ஆன்ம உய்வு பெறலாம் என்ற தத்துவத்தை பின்பற்றி ரிஷிகளால் இயற்றப் பட்ட பல சாஸ்திரங்களிலே ஒப்பற்றதும், நடைமுறைக்கு ஏற்றதுமான யோகக் கலை பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்று நமக்களித்ததாகும்.
பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலிமுனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்திரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் கலைத்து மகாவிஷ்ணுவோடு கலந்தார்.
ஆடவல்ல பெருமானாகிய ஸ்ரீமத் நடராஜமூர்த்தி திருநடனம் செய்யும் இடத்தில், நந்தி, ப்ருங்கி என்கிற தேவாம்சமுடையவர்களும், வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற மாமுனிவர்களும் இருப்பதாக ஐதீகம். "நடேச மஹிமா" , "நடேச அஷ்டகம்" அல்லது சம்பு நடனம்” எ/ன அழைக்கப்படும் ஸ்தோத்திரம் பதஞ்சலி முனிவர் கூத்தபிரானின் நடனத்தைக் கண்டு இன்புற்றுப் பாடியதாகும்.இந்த ஸ்லோகத்தைக் கூறி சிவபெருமானை வழிபட ஆரோக்கியம், , ஸம்பத்து முதலான சகல பாக்கியங்களும் உண்டாகும்.

No comments:

Post a Comment