Monday, April 27, 2015

ஸ்ரீ இராமானுஜரின் தீர்ப்பு


ஸ்ரீ இராமானுஜரின் தீர்ப்பு
தஞ்சை கே.சுவர்ணா
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை அகளங்கன் என்ற சோழசிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய மெய்காப்பாளன் உறங்காமல் விழித்திருந்து காக்கும் உறங்காவில்லி என்பவன். அவன் திருவள்ளறையில் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி பேரழகுடைய பொன்னாச்சி. மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த உறங்காவில்லி அவள் கால் நோகாமலும், உடலை வெயில் பாதிக்காதவாறும், அவளை கண்ணை இமை காப்பது போல் அன்புடன் பேணி வந்தான்.
திருவரங்கத்தில் வசந்த விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. உறங்காவில்லி பொன்னாச்சியுடன் திருவிழாவைக் கண்டுகளிக்கப் புறப்பட்டான். மற்றவர்கள் பரிகசிப்பார்களே என்று கூட எண்ணாமல் அவளுக்காகத் தரையில் நடை பாவாடை விரித்து, வெயிலுக்குக் குடைபிடித்து அவளை மெதுவாக அழைத்துச் சென்றான். இந்தக் காட்சியைக் கண்ணுற்ற ஸ்ரீஇராமானுஜர் அவன் பேதைமையைப் போக்க மனம் கொண்டார். அழியக்கூடிய அழகின் மேல் அவனுக்கிருந்த ஈடுபாட்டை அழியா அழகுடைய அரங்கனிடம் திரும்ப எண்ணினார்.
விழாக்கோலம் பூண்டு அலங்கார அழகுடன் காட்சியளித்த அரங்கனின் உற்சவமூர்த்தி இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார். அரங்கனின் உண்மையான அழகைக் கண்ட வில்லி தன் கடந்த காலத்தைப் பாழாக்கி விட்டோமே என வருந்தினான். அழியா அழகனைக் காட்டிய இராமானுஜரைத் தாங்கள் உய்ய வழிகாட்டும்படி வேண்டினான். திருவரங்கம் கோவிலில் அவனுக்குப் பொறுப்பான பணியைக் கொடுத்தார்.
ஒருவனின் தூய்மை அவன் குணத்தால் தான் மதிக்கப்படுகிறது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய சந்தர்ப்பம் ஒரு முறை வந்தபோது அதை நிரூபித்துக் காட்டினார்.
தினந்தோறும் காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பி வரும்போது உறங்காவில்லியின் கையைப் பிடித்துக் கொண்டுதான் இராமானுஜர் மடத்துக்குத் திரும்புவார். நீராடியபின் “வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவன் கையைப் பிடித்துக் கொண்டு வருவது முறையாகுமா?” எனச் சீடர்கள் கேட்டபோது, அவர்களின் குலச் செருக்கை அடக்க விரும்பினார்.
இராமானுஜர் தன்னுடைய நம்பிக்கையான பணியாள் ஒருவனை அழைத்து யாரும் அறியாவண்ணம் சீடர்களின் துணிகளிலிருந்து ஒரு சாண் துணியைக் கிழித்துக்கொண்டு வரும்படி சொன்னார். பணியாள் அவ்வாறே செய்தான். மறுநாள் தங்கள் சீடர்கள் துணிகள் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சீடர்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு சண்டையிட்டனர். அற்ப விஷயத்திற்காக சண்டையிட்டதைக் கண்ட இராமானுஜர் அவர்களைக் கண்டித்தார்.
ஒரு நாள் சில சீடர்களை அழைத்து உறங்காவில்லி இரவு மடத்திற்கு வந்த பிறகு அவன் வீட்டிற்குச் சென்று, அவன் மனைவி அணிந்திருக்கும் நகைகளைக் களவாடி வரும்படி கூறினார்.
சீடர்கள் அங்கு சென்றபோது பொன்னாச்சி உறக்கம் இல்லாமல் ஏதோ சிந்தனையில் படுத்திருந்தாள். அவள் உறங்குவதாக நினைத்து சாய்ந்து படுத்திருந்த அவளது ஒரு பக்க நகைகளைக் கழற்றினர். மடத்து சீடர்கள் என்பதால் அவள் எதிர்ப்பு காட்டவில்லை. அடுத்த பக்கத்து நகைகளையும் அவர்கள் கழற்றிக் கொள்ளட்டும் என்று நினைத்து அவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். அவள் விழித்துக்கொண்டாள் என்று எண்ணிய சீடர்கள் ஓடிவிட்டனர்.
உறங்காவில்லி மடத்திலிருந்து வந்தபோது அவள் விழித்திருப்பதையும், அவளது ஒரு பக்கத்து நகைகள் மட்டுமே இருப்பதையும் கண்டு வியந்தான். அவள் நடந்தவற்றைக் கூறினாள். சீடர்களுக்கு அபசாரம் செய்துவிட்டதாக அவளைக் கடிந்து கொண்டான். மனம் வருந்திய பொன்னாச்சி, வில்லியின் அனுமதியுடன் மீதி நகைகளை எடுத்துச் சென்று இராமானுஜர் முன் வைத்து தன் கணவரின் கட்டளையையும் எடுத்துரைத்தாள்.
இராமானுஜர் தன் சீடர்களிடம் வேட்டுவத் தம்பதியின் பாகவத பக்தியையும், சீடர்கள் அற்ப விஷயத்திற்காக சண்டையிட்டுக் கொண்டதையும் எடுத்துக் கூறி குலத்தைவிட குணமே சிறந்தது என்பதை உணர்த்தினார்.
உறங்காவில்லிக்கு தன் மனைவி “என்னுடைய நகைகளை அடியார்கள் எடுத்துச் செல்ல நான் அனுமதித்தேன்.” என்று கூறியது மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. “யான், எனது” என்ற மமகாரம் அவளிடமிருந்து மறையவில்லையே என்று எண்ணினான். அவளுடன் வாழத் தனக்கு விருப்பமில்லை என்றும், அவள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம் என்றும் வெறுத்துக் கூறினான். பொன்னாச்சி தான் மமகாரமாகப் பேசவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டதையும் அவன் ஏற்கவில்லை.
இச் செய்தி இராமானுஜரை எட்டியது. அவருக்கு வில்லியின் கருத்து மகிழ்ச்சியைத் தந்தாலும், அவர்கள் பிரிந்து வாழ்வதில் அவருக்கு உடன்பாடில்லை. வில்லி தன் மனைவியின் மனத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து அவனுக்கு உண்மையை உண்ரத்த விரும்பினார். அவன் இராமானுஜர் முன்னிலையிலும் அவள் தன் மனைவியாய் இருக்கத் தகுதி யற்றவள் என்று தான் முன்பு கூறிய முடிவையே தெரிவித்தான்.
“தக்கவருக்கு அவளை மறுமணம் செய்து கொடுத்துவிடலாமா?” என்று இராமானுஜர் உறங்காவில்லியைக் கேட்டபோது அனைவரும் திடுக்கிட்டனர். பொன்னாச்சி வெட்கித் தலை குனிந்தாள். வில்லி, தான் தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினான். இராமானுஜர் தன் கருத்துப்படி செய்து கொள்ளலாம் என்று வில்லி கூறினான்.
இராமானுஜரின் தீர்ப்பை எதிர்நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். இராமானுஜர், “பொன்னாச்சிக்குத் தக்கவர் யாரென்று ஆராய்ந்ததில் உறங்காவில்லிதான் தகுதியானவர் என்று உணர்ந்தேன். எனவே அவளை வில்லிதாசருக்குத் தானம் செய்து மறுமணம் செய்விக்கிறேன்” என்று தம் முடிவைக் கூறினார்.
அவருடைய தீர்ப்பைக்கேட்ட அனைவரும் மகிழ்ந்து ஆரவாரித்து வாழ்த்தினர்.
“கணவன் மனைவி உறவு என்பது ஆன்மா ஆண்டவன் உறவு போன்றது. அதை ஒழிக்க இயலாது.” என்று கூறி அவர்களைச் சேர்த்து வைத்தார். அவர்களிருவரின் பாகவத நெறியையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார். மன மகிழ்ச்சியுடன் ஹேமாம்பாளாகிய பொன்னாச்சியும், வில்லிதாசர் என்றழைக்கப்பட்ட உறங்காவில்லியும் இராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கி அவருடைய ஆசி பெற்றனர்.

No comments:

Post a Comment