Monday, April 6, 2015

அடையாளம் கண்டுகொள்

முப்பதே வயதான சிங்க்லானுக்கு திடீரென்று இப்படி ஓர் ஆர்வம் எப்படி எழுந்தது என்பது அவனுக்கே தெரியாது. சில மாதங்கள் முன்வரை சீன ராணுவத்தில் இருந்த அவனுக்கு திடீரென்று ஆன்மிகம் என்றால் என்ன என்று அறியும் ஆர்வம் வந்து விட்டது. வேலையைத் துறந்து, ஒரு மாதமாக திபெத்தில் இதற்காகவே அலைந்து திரிந்தான். அங்கிருந்த சிலரது அறிவுரையின்படி, ஓர் மலை உச்சியில் இருந்த அந்த புத்த மடாலயத்தைச் சென்றடைந்தான். அந்த புத்த மடாலயமும், மலையின் இயற்கை அழகும் அவனைக்
கவர்ந்தது. மடாலயத்திற்குள் நுழைய முற்பட்டவனை, ஓர் இளம் துறவி தடுத்து நிறுத்தி, ""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என வினவினார்.
""அய்யா, நான்காயிரம் கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள ஷாங்காயிலிருந்து வருகிறேன். ஆன்மிகம் என்றால் என்ன என்று அறியும் ஆர்வம் கொண்டுள்ளேன். இங்கே ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். அதில் கலந்து கொள்ள அனுமதியுங்கள்'' என்றான்.
""தம்பி! அதில் பங்கேற்க கடுமையான விதிமுறைகள் உள்ளன. உங்கள் அடையாளச்சான்றிதழின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கனவே வந்துள்ளன. அவற்றிலிருந்து தலைமை குரு இருபது பேரை மட்டுமே தேர்ந்தெடுப்பார். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்றார்.
""அய்யா, விதிமுறைப்படி விண்ணப்பிக்கக் கூடிய நிலையில் நான் இல்லை. மடாலயத்தின் உள்ளே சென்று, அரை மணி நேரம் கண்மூடி அமர்ந்து செல்ல விரும்புகிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்'' என்று வேண்டினான்.
""அடையாளச்சான்றிதழ் ஏதேனும் இருப்பின் அதனை காட்டுங்கள்; பிறகு நான் அனுமதிக்கிறேன்''.
""என் அடையாளங்களைத் துறக்கவே நான் இங்கு வந்தேன். தயவு செய்து அனுமதி கொடுங்கள்''
""அது இயலாது. அதுவே எங்கள் விதிமுறை. நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்'' என்ற துறவி கதவுகளை அடைத்தார். அந்த இளைஞன்,
மடாலயத்தின் வெளியே இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்து விட்டான்.
மடாலயத்தின் உள்ளே குரு தியானத்தில் இருந்தார். விழிப்புணர்வின் உச்சத்தில் வாழும் அந்த தலைமை குருவுக்கு வாசலில் நடந்ததை உணர்வது பெரிய விஷயமாக இருக்கவில்லை. அனுமதி மறுத்த துறவியை வரவழைத்து நடந்ததைக் கேட்டார். அவரும் விதிமுறைப்படி அனுமதி மறுத்ததைச் சொன்னார்.
""மாபெரும் தவறிழைத்து விட்டீர். நமது ஆன்மிகப் பயிற்சியின் நோக்கமே "ஒருவன் தனது அனைத்து அடையாளங்களையும்
துறப்பது தான். அடையாளங்களைத் துறக்காமல் ஆன்மிகத்தின் உச்சத்தை யாராலும் உணர முடியாது. எப்போது அவன் அடையாளங்களைத் துறக்க விரும்பி நம் வாயிலில் நுழைந்தானோ. அப்போதே அவன் நமது ஆன்மிக வகுப்பின் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டான். அடையாளங்களைத் துறக்க விரும்புபவனை அடையாளம் கண்டுகொள். வெளியே மரத்தடியில்தான் அவன் கண் அயர்ந்துகொண்டிருக்கிறான். அவனை அழைத்து வந்து இங்கு தங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்யும்,'' என்றார்.
தவறினை உணர்ந்த அந்த இளம் துறவி, அவனை அழைத்துவர ஒரு குழந்தையைப்போல் ஓடினார்.

No comments:

Post a Comment