Monday, April 6, 2015

குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும், எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான்

வாழ்நாளெல்லாம் பெருமாளுக்கு சேவை செய்த மூதாட்டி ஒருத்தியின் கனவில் பெருமாள் தோன்றினார்.
""பாட்டி! உன் இளமை முதலே நீ என் மீது கொண்ட பக்தியை மெச்சினேன். விரும்பிய வரம் தருகிறேன், கேள்!'' என்றார்.
உடல் தளர்ந்திருந்தாலும் பாட்டிக்கு மனம் இளமையாகவே இருந்தது. அவள்,""ஏழாவது மாடியில் நின்று, என் எள்ளுப்பேரன் தங்கக்கிண்ணியில் பால் சாதம் சாப்பிடுவதை கண்களால் காண வேண்டும்,'' என்றாள்.
பெருமாளும் "பலே பாட்டி! பலே!' என்று மகிழ்ந்து வரம் கொடுத்து விட்டார். காரணம் பாட்டி, தன்னுடைய எல்லா விதமான ஆசைகளையும் ஒரேயடியாகச் சொல்லி விட்டது தான்.
""நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறாய். அதுவும் மாடியில் படியேறிச் சென்று பார்க்கும்
விதத்தில் உடலில் பலம் இருக்க எண்ணுகிறாய். ஏழுமாடி வீட்டுக்குச் சொந்தக்காரியாக வாழும் விதத்தில் செல்வ வளமும், எள்ளுப்பேரன் தங்கக்கிண்ணியில் பால்சாதம் சாப்பிடும் அளவுக்கு சுபிட்சமும் வீட்டில் நிலவ ஆசைப்படுகிறாய். கீழ் தளத்தில் நடப்பதை, ஏழாவது தளத்தில் நின்று பார்க்கும் விதத்தில் கண்பார்வை தெளிவாக இருக்க விரும்புகிறாய்!
இத்தனையையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டாயே!'' என்று பாராட்டி வரத்தையும் கொடுத்து விட்டார்.
குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும், எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான்.

No comments:

Post a Comment