Monday, April 6, 2015

பழசை நினைச்சு பாருங்க!

சிவராத்திரியை ஒட்டி பழைய கதை ஒன்றைக் கேட்போமே!
மனப்பூர்வமான விருப்பங்கள் நடை பெறுமா என்றால் கட்டாயம் நடக்கும்; ஒவ்வொரு ஜீவ ராசியும் நம்மை சேர்ந்தவர்களே என்று மனத்தில் நிறுத்தி "அன்பே சிவம்' என்ற தத்துவத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறியே தீரும்.
பூசலார் நாயனார் என்றொரு சிவபக்தர். அவர் செல்வந்தர் அல்ல; சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய ஆசைப்பட்டார். கோயில் கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன! பெரும் பணம் வேண்டுமே! எல்லாமே அவனிடம் விட்டு விட்டு, மும்முரமாக கோவில் கட்ட ஆரம்பித்து விட்டார். எங்கே? அவருடைய மனத்திலேயே. ஒவ்வொரு நாளும், கற்களையும், தேவையான மற்ற பொருட்களையும் மானசீகமாக கொண்டு வந்து, மதில் சுவர் எழுப்பி, குளம் வெட்டி, ஆவன காரியங்களை முறையாக செய்ய ஆரம்பித்தார். இதுவரை நடந்த கட்டடத்தையும் தானே ஒவ்வொரு நாளும் மேற்பார்வை செய்தார். கோயில் எல்லா விதத்திலும் தயார் ஆனவுடன், பஞ்சாங்கத்தைப் பார்த்து, கும்பாபிஷேகத்திற்கு நாளும் பார்த்து விட்டார். இந்தப்பணியில் அவருக்கு ஒரு இடையூறும் வரவில்லை.
அதே சமயத்தில் அந்த பிரதேச ராஜா ராஜ சிம்ம பல்லவன், காஞ்சிபுரத்தில், கோயில் கட்டிக் கொண்டிருந்தார்.
அவரும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து இருந்தார். அதற்கு முன், ஒரு இரவில் சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றி, ""நீ கும்பாபிஷேகத்திற்கு குறித்த நாளை தள்ளிப்போடு, ஏனென்றால் அதே நாளில், உன் பிரஜையான என்னுடைய இன்னொரு
பக்தன், பூசலார், எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறான்; அங்கே நான் சென்றாக வேண்டும்,'' என்றார்.
மன்னன் கனவிலிருந்து விழித்தார். ஒன்றும் விளங்கவில்லை; யார் இந்த பூசலார் என்பதை அறிய, ஆட்களை அனுப்பி தேடினார். கடைசியில், பூசலார் என்று ஒரு சாமானியர் திருநின்றவூரில் இருப்பதாக ஒரு ஊழியர் கூறியதைக் கேட்டு, அவரை சபைக்கு அழைத்து வர ஆணையிட்டார்.
""கும்பாபிஷேக நாள் நெருங்கி விட்டதால், என்னால் சபைக்கு வர முடியவில்லை. மன்னிக்கவேண்டும், பிறகு வருகிறேன்,'' என்று சொல்லிவிட்டார்.
இதைக் கேட்ட அரசன், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாலும், சிவனே கனவில் வந்ததால், பூசலாரை நேரே பார்க்க சென்றார்.
பூசலார் எப்பொழுதும் அமர்ந்து தியானிக்கும் இலுப்பை மரத்தடியில் கண் திறந்து பார்க்கும் பொழுது, அரசரையும் அவருடன் சேர்ந்த மனிதர்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். .
""நீ கோயில் கட்டுகிறாயாமே? ''
""மன்னிக்கவும்....நீங்கள் கட்டுவது மாதிரி ஒரு கோயிலை நான் கட்டவில்லை. என் மனதிற்குள் கோயில் கட்டியிருக்கிறேன். நாளை கும்பாபிஷேகம். அதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது''
அரசருக்கு கண்கள் திறந்தன. ஆழ்ந்த பக்தி இருந்தால், மனத்திலே கோயில் காட்டலாம்; சிவன் கனவில் வந்தது நிஜம் தான்,'' என்று உணர்ந்து, அரசரும், அவருடன் சேர்ந்தவர்களும் பூசலார் நாயனாரின் மானசீக கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்டு, சிவனின் ஆசிகளைப் பெற்றனர்.
சிவராத்திரி விரதம் என்பது ஒரே நாளில் முடிந்து விடுவதல்ல. எல்லா நாளையும் சிவராத்திரியாகக் கருதி வாழ்ந்தால், சிவன் நம் மனக்கோயிலில் நிரந்தரமாக குடி வந்து விடுவார்.

No comments:

Post a Comment