Monday, April 6, 2015

பகவானால் அளிக்கப்பட்ட பகுத்தறிவையும், மூளையையும் நன்கு யோசித்து உபயோகப்படுத்தினால், நம்மால் என்னதான் சாதிக்க முடியாது?

நாம் என்றைக்குமே கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை, ஒழுக்கத்தை, மனிதாபிமானத்தை அன்றைக்கே பெரியவர்கள் ஸ்லோகம் வடிவில் சொல்லியுள்ளனர். அவற்றைத் தெரிந்து கொண்டால், நாமும் வாழ்வில் மின்னலாம்.

சாணக்ய நீதியில் ஒரு ஸ்லோகம்.
நிர் - விஷேண அபி சர்பேண க்ர்தவ்யா மஹதீ பணா!
விஷம் அஸ்து ந ச அபி அஸ்து கடாடோப: பயங்கர: !
இதன் விளக்கத்தைக் கேளுங்கள்.
பகவானுடைய படைப்பில் உபயோகமற்றது என்று ஒன்றுமே கிடையாது. தங்கத்தை விட அதிக மதிப்புள்ளது பாம்பின் விஷம். பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சில பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை.
நாம் பாம்பின் விஷத்தை பற்றி ஆராயப்போவதில்லை. இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது என்ன என்றால், பாம்புக்கு விஷம் இருக்கிறதோ, இல்லையோ, "உஸ்' என்ற சத்தத்துடன் கழுத்தைத் தூக்கி படம் எடுத்தால் எதிரிகள் பயப்படுவார்கள்.
இதை விளக்குவதற்கு, பெரியவர்கள் ஒரு கதை சொல்லுவார்கள்.
ஒரு பாம்பு வழியில் செல்பவர்களை கடித்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ஒருநாள், தான் செய்வது தவறு என்று உணர்ந்த பாம்பு, ஒரு முனிவரிடம் சரணடைந்து, பாவ மன்னிப்புக்கு என்ன செய்யலாம் என்று கேட்டது. நீ தவறு செய்கிறேன் என்று உணர்ந்து, அதற்கு ஏற்ற பரிகாரம் செய்ய நினைத்ததே உன்னை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இனிமேல் தவறு செய்யாமல் இருந்தாலே போதும்,'' என்றார்.
பாம்பு அதன் பிறகு எவரையும் கடிக்கவில்லை. ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தது. ஆனால், வழியில் போகிறவர்கள் சுருண்டு படுத்திருக்கும் பாம்பின் மீது கற்களை எறிந்து காயப்படுத்தினர். அதனால், பாம்பு மிகவும் சோர்ந்து விட்டது.
மறுபடியும் முனிவரிடம் சென்று பாம்பு முறையிட்டது. முனிவர் கூறினார் :
""நான் எவரையும் கடிக்காதே என்று தானே சொன்னேன். பகவான் உனக்கு வரும் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்ள உனக்கு அளித்திருக்கும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லவில்லையே? உன்னை யாராவது தொந்தரவு பண்ணினால், "உஸ்' என்று சத்தப்படுத்தி படமெடு; அவர்கள் பயந்து ஓடி விடுவார்கள்,'' என்றார்.
நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் இந்த கொள்கை பயன் கொடுக்கும். பகவான் நமக்கு பகுத்தறிவையும், மூளையையும், யோசித்து முடிவு எடுக்கும் சக்தியையும் அளித்திருக்கிறான். பயந்து ஒளியாமல், தைரியமாக நம்முடைய மூளையை உபயோகப்படுத்தி எந்த சங்கடத்திலிருந்தும் நாம் வெளிவரமுடியும் என்ற நம்பிக்கையை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதேநேரம், இதைப் பயன்படுத்திக் கொண்டு, யாருக்கும் தீங்கு இழைத்து விடக்கூடாது.
சீதையை தேடி கடல் தாவிச் சென்ற ஆஞ்சநேயருக்கே அவருடைய திறமை தெரியவில்லையே! நாம் எல்லோருமே அவர் மாதிரி தான். நமக்கு பகவானால் அளிக்கப்பட்ட பகுத்தறிவையும், மூளையையும் நன்கு யோசித்து உபயோகப்படுத்தினால், நம்மால் என்னதான் சாதிக்க முடியாது?

No comments:

Post a Comment