Monday, April 6, 2015

ராமன் தர்மத்தின் வடிவமாக நமக்கு அருள்பாலித்து வருகிறார்.

ராமன்' என்றால் ஆனந்தமாக இருப்பவர். மற்றவர்களுக்கு ஆனந்தம் தருபவர் என்பது பொருள். வாழ்வில் துன்பங்கள் குறுக்கிட்டாலும், தர்ம நெறி தவறாத ஒருவர் இருந்தார் என்றால் அது ராமன் மட்டும் தான். அவரைப் பற்றி காஞ்சி மகாப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள்.
தர்மத்தைக் கடைபிடித்தால் ஆனந்தமாக வாழலாம் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்ட, நாராயணனே ராமச்சந்திரனாக பூலோகத்தில் அவதரித்தார். ராமன் வாழ்வில் எந்த இடத்திலும், "இது என் அபிப்ராயம்' என்று சொல்லியதாக இருக்காது. "சாஸ்திரம் இப்படி சொல்கிறது; ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்' என்று அடக்கத்துடன் சொல்லியிருக்கிறார். தர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது என்பதை காட்ட, கடவுளே ஸ்ரீராமனாக வேஷமிட்டுக் கொண்டு வந்து நின்றார்.
""ராவணன் சீதையைத் தூக்கிப் போன போது, ஒரு மைல் தூரத்தில் இருந்த ராமனுக்கு, சீதையின் கூக்குரல் கேட்கவில்லையாம்.
அப்படிப்பட்டவனை பக்தர்கள் கூப்பிட்டால் கேட்கவா போகிறது?'' என்று கேலி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ராமன் மனிதனாக வாழ்ந்தான் என்பதை மறந்து விட்டு இவர்கள் பேசுகிறார்கள்.
ராமாயணம் முழுவதும் தர்மத்தின் பெருமையைப் பற்றி சொல்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கம் உண்டு. கவுசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களுக்கும் கெட்டுப் போகாத பட்சணமாக ஒன்றைக் கொடுத்தாள்.
அது என்ன தெரியுமா? தர்மம் என்னும் கட்டுச்சோறு.
""ராகவா எந்த தர்மத்தை மன உறுதிதோடு அனுசரிக்கிறாயோ, அதுவே உன்னைக் காப்பாற்றும்,'' என்று ஆசியளித்தாள்.
ராமன் காத்து நின்ற தர்மம் கடைசி வரை அவரைக் காத்தது. தர்மம் தலை காக்கும் என்பார்கள். ஆனால், ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் அத்தனையும் யுத்தத்தில் உருண்டன. இன்றும் ராமன் தர்மத்தின் வடிவமாக நமக்கு அருள்பாலித்து வருகிறார். ராமனை தியானித்து,"ராமா ராமா' என்று மனதாரச் சொல்லி வந்தால், தர்மத்தை விட்டு விலகாத ஆனந்த வாழ்வு கிடைக்கும்

No comments:

Post a Comment